Showing posts with label sirappu. Show all posts
Showing posts with label sirappu. Show all posts

Friday, October 3, 2014

பகவன்  நாம  ஸ்மரணை :



            சாதனைகள்  எல்லாம்  கடவுளுடைய  எண்ணம்  இடைவிடாது  இருக்கும்  பொருட்டே. இவ்வாறு  இடைவிடாது  எண்ணிக்கொண்டு  இருப்பதே  ஒரு  தெய்வ  தரிசனம்  ஆகும்.


           பகவன்  நாம ஸ்மரணை  ஆனது  எல்லாம்  கடவுளின்  சொரூபமாகவே  பார்க்கின்ற  விஸ்வரூப  தரிசனத்தை  அளிக்க வல்லது. ராம நாமம்  தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன்  இனிமையான  ஓசை  நயம் சஞ்சலமான  மனதிற்கு  அமைதியை  அளிக்கும்  அபூர்வ சக்தி  உடையது.

           ராம நாமம் ...எப்படி  சிறு  கரையான்  ஆனது மரத்தை துளைத்து, துளைத்து  உள்ளே  இருக்கின்ற  கட்டையை  அரித்துவிடுகிறதோ .......அதைப்போல  ராம நாமமும்  நம்முள்  உள்ள  ஆசைகள் , வாசனைகளை  கொஞ்சம்  கொஞ்சமாக  அரித்து  துவம்சம்  செய்து  நம்மை  பரிசுத்தர்களாக்கிறது.

         நாமத்தின்  சப்தமே........நாதப்  பிரம்மம். சிறிது  காலம்  இடைவிடாது  ராம நாமத்தை  ஜபித்தால்  மனம்  மோன  நிலையை  அடையும். இடைவிடாது  ஜபித்தல்  என்ற  நிலை  வந்தால்  பின்பு  நாமம்  நம்மைப்  பற்றிக்கொள்ளும். திவ்ய  நாமத்தில்  மூழ்கி  பேரானந்தத்தையும், அமைதியையும்  அனுபவித்துக்கொண்டிருக்கும்.

       ஒரு  கிருஹஸ்த  சாதகனுக்கு  நாம  சங்கீர்த்தனமே  மிக முக்கியம்.
அவனுடைய  வீடு  முழுதும்  பகவானுடைய  திவ்ய  நாமமே  எதிரொலித்தல்  வேண்டும்.

      இப்படிப்பட்ட  வீடுகளில்  இந்த  தெய்வீக அலைகளினால், வீட்டில்  உள்ள  எல்லோருடைய  உடலும்,  உள்ளமும்  தூய்மையாக்கபடுவதுடன் 
பேரானந்த  வெள்ளம்  சதா  ஓடிகொண்டிருக்கும்.

     எங்கு  உள்ளன்புடன்  அவனது  திருநாமம்  பக்தியுடன்  பாடப்படுகிறதோ  அங்கு  அவன் உறைகின்றான்.

     "அவனின்றி  அணுவும்  அசைவதில்லை !" - இதுதான்  உண்மை. அப்படியென்றால்  நான் , நீ , எனது , உனது   என்ற  எண்ணங்களுக்கு  இடமேது ?  எல்லாம்  அவரே !

     இந்த  உண்மை  அனுபவித்து  அறிவதற்கு ......இடைவிடாது  செய்யும்  ராம நாம  ஜெபமே  தேவை. அவரை  அன்றி  எதுவும் , எவனும் உண்மையில்  இல்லை.

      எல்லாம்  இறைவனே ! 


          நன்றி :     ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்

                                                                                  ராமதாஸரின்    அமுத மொழிகள்
                                                                                           ஆனந்தாஸ்ரமம்  வெளியீடு

Saturday, September 27, 2014

காசியில்  விஸ்வநாதரின்  கருணை:



            கங்கைக்கரையில்   மாலை  ஆரதி          ( கங்காமாவுக்கு  வழிபாடு )


              இரவு  1.30 மணிக்கு  நாங்கள்  பயணம்  செய்த  பஸ்  காசிக்குள்  நுழைந்து, .....     லாட்ஜ்   வாசலில்  நின்றது.    ஏற்கனவே .....  புத்த  கயாவில்  புத்தர்  ஞானம்  பெற்ற  போதி  மரத்தை  தரிசித்த  நேரத்தில்  இருந்தே  எமது  உள்ளம்  ஒரு வித  தூய  உணர்வில்  திளைத்துக்கொண்டு  இருந்ததால் ......இரவு  முழுவதுமே  ராம  நாமாவை  உச்சரித்துக்கொண்டு  இருந்தோம். எங்களின்  வழிகாட்டி  அதிகாலை  3.00 மணிக்கு  கங்கை  கரைக்கு  மஹா  சங்கல்பம்  செய்து ,கங்கையில்  குளித்து  பின்னர்  அபிஷேகப்  பொருட்களை  கங்கா  தீர்த்ததுடன்  கலந்து  அதனை  எடுத்துச்  சென்று  விஸ்வநாதருக்கு  அபிஷேகம்  செய்தல்  வேண்டும்  என்றதால் .....  எமது  அறையினில்  தூங்காமல்  அதிகாலை  3.00 மணிக்காக  காத்துக்கொண்டு  இருந்த  நேரமும்  ராம நாமாவில்  கழிந்தது.

அதிகாலை  3.00 மணி  எல்லோரும்  கங்கைக்கரை  அடைந்தோம். எம்மை  முன்பும் ,  பின்பும்  இரண்டு  தம்பதியர்  அழைத்துச்  சென்றனர்.  ( எமக்கு  காசி  இதுவே  முதல் முறை  வருகிறோம் )  அவர்களை  காசி  விஸ்வநாதர்  மற்றும்  அன்னபூரணியாகவே  பாவித்து  அவர்களுடன்  மகா தச அஸ்வமேத  காட்  ( காட்  = படித்துறை) தச  என்றால்  பத்து  என்று  பொருள்படும்.


இங்கு  கங்கையில்  ஒருமுறை  மூழ்கினால்  பத்து  அஸ்வமேத  யாகம்  செய்த  பலன்  உண்டாம் .




எமக்கு  அங்கு  படிகளில்   இறங்க ,  இறங்க  ........கபீர் மற்றும்  ராமானந்தர்  நினைவு  வந்தது .....இதோ...இந்த ...படிக்கட்டுகளில்   தானே   கபீர்   படுத்துக்கொண்டு ...........குரு   ராமானந்தர்   கபீரின்    முதுகில்   கால்  வைத்து  மிதிக்க .......ராம   ராம   ....என   கூறிட ......அதனையே   தீட்சையாக  கபீர்   பெற்றார் ......இந்த படியில்   கபீர்   படுதிருப்பாரோ ?...... இங்கு   ராமானந்தர் நின்றிருப்பாரோ !.....கபீரை....தமது  திருவடியால் ... .மிதித்து      சீடருக்கு  .....ராம.....  ராம ....என்று  கூறி  அவரை  கருணையுடன்   பார்த்திருப்பாரோ?..........இந்த  உணர்வு  எம்மை  ஆட்கொள்ள  .....  அங்கு   தேடித்தேடி   நின்றேன் .



அங்கு  சிறிது  நேரத்தில்  ஒரு  சிவாச்சாரியார்  வந்தார்.  கங்கைக்கரையின்  சிறப்பு ,  காசி நகரின்  சிறப்பு ,  அந்த  தச  அஸ்வமேத  காட்  சிறப்பு  (  இதற்கே  தனியாக   ஒரு  பதிவு  போடலாம் )...........மஹா  சங்கல்பம் ..........அதாவது  இதுவரை   செய்த  பாவங்கள் .........பொய் , கோள்மூட்டுதல் , சாதுக்களை  நிந்தித்து , வறியோருக்கு  இல்லையென்றது ..........சிவ, விஷ்ணு , குரு  நிந்தனைகள்,  மற்றவர்களை  எண்ணம் , சொல் , செயலால்   அறிந்தோ .....அறியாமலோ   துன்புறுத்தியது ...... .......................அம்மா !  கங்கா  உன்னில்  மூழ்குவதால்   விலகிடும்.....ஆனாலும்  மீண்டும்  அவற்றை  செய்யாத  உறுதியும் , வைராக்கியமும்   தந்து  அருளி ,  அத்தகைய   சூழ்நிலைகளை  தராமல்  காத்து 

அருள   வேண்டும்   என்று  வேண்டி ..........இந்த  புண்ணிய  பயணம்  செய்ய  உதவிய  அனைவருக்கும் ...........(பின்பு  இந்த  அனுபவத்தை  படிக்கும்   அனைவருக்கும் ) உன்னில்  நீராடிய  பலனும்,  நற்பண்புகளும் ...........முக்தியை  அடைவதற்கு   தேவையான  அனைத்தும்  அவரவர்  பக்குவத்திற்கு  ஏற்ப  அருளி .........கடைத்தேற்ற  சூழ்நிலை  அமைத்துத்  தருமாறு  பிரார்த்தித்து ..........கங்கையில்   மூழ்க .........ராம ராம ராம .........

  உடல் ,  மனம் ,  ஆன்ம .........அனைத்தும்   இனம்  தெரியாத   உணர்வில் ......கங்காமா ....கங்காமா   எனக் .(.உடல்   இருப்பதே   உணரவில்லை ..)  கரைந்து ..........ஒரு   குழந்தையாகி....... அபிஷேகத் தீர்த்தக்  குவளையுடன்  விசாலாக்ஷி  சமேத  விஸ்வநாதரின்   பின்னே   அவர்களுடன்  சென்றோம் .


 இந்த   தம்பதியினர்   தங்களின்   குழந்தையைப்   போன்றே   யாத்திரை   முழுதும்  எம்மைப்    பார்த்துக்கொண்டனர்.




அந்த   அதிகாலையிலும்  சாதுக்கள் ......சிவ..சிவா...ஓம்  நமசிவாய ....சிவாய நம ....ராம  ராம  ராம ......என்றோ .......கங்கைக்கரை   இறை  உணர்வில்  திளைக்கிறது . கோவிலுக்கு   செல்லும்  வழி  மிக  குறுகலான  சந்துகள் .....முகலாயர்களின்   படையெடுப்பு  அடிக்கடி  நிகழ்ந்ததால் ..........உள்ளே   குதிரைகள் ...படைகள்   செல்ல   இயலா  வண்ணம்  மிக  நெருக்கமாக   அமைந்த   சந்துக்களே ..... அங்கு  தெருக்கள்.




வழியில்  4 அடுக்குகளாக  போலீஸ்  பாதுகாப்பு .......எல்லாம்  முடிந்து  உள்ளே  சென்றோம் ,...வலது, இடது   வரிசைகள்  சென்றன .  எம்மை  அழைத்துச்  சென்ற  தம்பதியர்  வலது  வரிசையில்  செல்ல .........அவர்களுடன்  யாமும்  நின்றோம்.



    குறுகலான   சந்துக்கள் .........விஸ்வநாதரை   நோக்கி  செல்லும்  வழி 

 .........இன்னும்   சிறிது  நேரத்தில்  நமது  கைகளாலேயே   விஸ்வநாதருக்கு   அபிஷேகம்   என்றிடும்  நிலை ........எத்தனை   எத்தனை  மகான்கள்  உன்னை  தொட்டு  ....எப்படி   எப்படி   உன்னை   உணர்ந்தனரோ ..இவனின்   குற்றங்களை   பொறுத்துக்கொண்டு   ...அழைத்து   வந்துள்ளாயே! ..சிவமே ....ராமா ...உன்னை   உள்ள  படி   உணரும்   உணர்வு   தந்து   அணைத்துக் கொள்ளேன் ..........கண்களில்   அருவியாய்   நீர்  வழிந்தன.

அப்போது   ஒரு   அந்தணர்   வந்தார் .........இது   ருத்ராபிஷேகம்  செய்யும்   வரிசை   எனவும் ........அவருக்கு   ரூபாய்  300  தந்தால்  எல்லாம்   சிறப்பாக   உடனிருந்து  செய்து  வைப்பதாகவும்  கூறினார்.



உடன்   வந்த  இரண்டு   தம்பதியர்  ரூ.600  கொடுக்க ........எமக்கோ ...அங்கு   பணம்  இல்லை .......விருப்பமும்  இல்லை . எமது   தந்தை ,  தாயை   பார்க்க .......பணமா ?......உள்ளே   கதறல்   வெளியேறியது ......எம்மை  வெளியேற்ற ......கண்ணீருடன்   எந்த  எண்ணமும்,  சலனமும்  அற்று  வெளியேறி  நிற்க ........ 

எங்கிருந்தோ   ஒருவர்  வந்தார் .......எமது  நிலையைக்   கண்டவர் .....கண்களில்   நீர்   வழிய ..........ஒன்றும்   சொல்ல   இயலாமை  கண்ட  அவர்   ......எமது   கைகளை  பற்றி   இடதுபுறம்   அழைத்துச்  சென்று ...........உள்ளே  காட்டினார் .

எம்மை   கைபிடித்து   விஸ்வநாதரின்   அருகினில்   அமரவைத்து ...........எமது  கைகளால்  அபிஷேகப்  பொருட்கள்  கலந்த  கங்கை  நீரை  .........விஸ்வநாதரின்   சிரசினில்   பொழிந்திடச்   செய்தார்.

எமக்கோ  ஹிந்தி  தெரியாது,  அவரோ  ஹிந்தியில்  ....கிட்டத்தட்ட   கட்டளை  இடுகிறார்!
அவர்  கூறியதை  புரிந்தாற்போல  அங்கு  செய்துள்ளேன் ......பெற்றோரிடம்  கட்டுண்ட  குழந்தையை  போல,  எந்த  கேள்வியும்  கேட்காமல்  அவர்  கட்டளையிட   கீழ்படிந்துள்ளேன் ............

ஊன், உயிர்   ஒடுங்க ............உள்ளே   எதுவோ ......   கரைந்து ,  கரைந்து ..........ஆனந்தமாய்   பொங்கிட ..............இன்னும்    இருமுறை   இதேபோல  ..........அதே  குவளையில்   வில்வம்  மற்றும்   நீரால்   அபிஷேகம்   நடந்தது . 


"  எம்மை   இழந்த  நலம் "  -   இது   ஒன்று தான்   சொல்ல முடியும் .   வெளியில்   வந்து   அவருக்கு   நன்றி  சொல்ல  கண்ணீருடன்  தேடினால்  ............அங்கு   அவர்   இல்லை .....மீண்டும்   சுற்றி   சுற்றி   வந்தேன் ........அவர்   இல்லை .


இப்போது ,.... இன்னும்   அந்த  தம்பதியினர்  அங்கு   வரிசையிலேயே  நின்றிருந்தனர் .  எம்மைப்   பார்த்ததும்  ,  அவர்களுக்கும்   ஆனந்தம் .......

"  என்னப்பா !   தரிஷனம்  ஆயிடுத்தோ !  உன்னை   அழைசிண்டு   போன   பெரியவர்   எங்கே? "  நாங்களும்   உன்கூடவே   வந்திருக்கலாம் !  "   என்று    சொல்லிக்கேட்க   ..........எமக்கோ    கண்களில்   நீர் ........என்ன   சொல்ல   இவர்களிடம் ?  ..........


  வந்த  பெரியவர்   யாரென்று   சொல்ல?..........விஸ்வனாதரே ! ..............என்றால்  புரியுமோ ?..............இல்லை ,  எங்களுக்கு  எல்லாம்   தெரியாதவர்   அதெப்படி   உனக்கு   மட்டும்  வருவார் ? ...இடக்கு,  மடக்காக  கேள்வி   வருமோ ?.... 


"  அவரைத்தான்   தேடிட்டு   இருக்கேன் "   என்று  கூறிவிட்டு  ,   ஓரிடத்தில்   அமர்ந்து  கண்களில்  வழியும்  நீரைத்  துடைத்துக்கொண்டு .... கண்களை   மூடிக்கொண்டோம்!  அமைதியாக ..!



Friday, September 12, 2014

பகவன் நாம ஸ்மரணை

ஸ்வாமி  ராமதாஸின்  அமுத  மொழிகள் : 

                             

               யார்  ஒருவர்     "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்"    என்னும்  மந்திரத்தை   பதிமூன்று  கோடி  தடவை   ஜபிக்கிறானோ,  அவன்  நிச்சயமாக  ஸ்ரீ ராமரின்  தரிசனத்தை  அடைவான்  என்று  ஸ்ரீ  சமர்த்த  ராமதாஸ்  உறுதி  கூறுகின்றார்.

             ஸ்ரீ சமர்த்த  ராமதாஸ்  சொன்ன  மந்திரத்தில்   " ஓம் "  என்ற  அக்ஷரம்  இல்லை.  ராமதாஸ்  உங்களுக்குக்   கொடுக்கும்  மந்திரம் ............

          " ஓம்  ஸ்ரீ ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம் "  

என்பதாகும்.  ஓம்  என்னும்  பதத்திற்கு  அளவில்லா  தெய்வீக  சக்தி  உள்ளது. ஆகையால்  ராமதாஸ்  தமது  சொந்த  அனுபவத்தின்  மூலம்  சொல்லுவது  என்னவென்றால்​​​​ ​​​ ------யார்  ஒருவன்  இந்த  ஓம்  அக்ஷரத்துடன்  கூடிய ஸ்ரீராம நாமத்தை   ஆறு  கோடி  தடவை  ஜபிக்கிறானோ  அவன்  மோக்ஷம்  அடைவான் .  ஒரு  குறிப்பிட்ட  எண்ணிக்கை  அடையும்வரை  எப்போதும்  இந்த  நாமத்தை  ஜபி .

         இதற்காக  எண்ணிக்கையைக்  குறித்து  வைத்துக்  கொண்டிருக்க வேண்டியதில்லை.  எப்பொழுது  இந்த  எண்ணிக்கை   ஆறு  கோடி  ஆகிறதோ  அப்பொழுது   உனக்குத்  தானாகவே  கடவுளுடைய  புருஷோத்தம  சொரூபமாகிய  ராமனின்  அநுபூதி  கிடைத்து  விடும்.

       ராம  நாம  ஜபம் தான்   அவனை  நம்  இதயத்தில்  தோன்றச் செய்து  காட்சி
அளிக்க  வழி செய்கிறது.  " ஓம்  ஸ்ரீ  ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம் "  என்ற  மந்திரத்தின்   பொருள்   பின்வருமாறு :-

         ஓம்  - நிர்குண  பிரம்மம்
          ஸ்ரீ   -- தெய்வீக  சக்தி

         ராம்  --   உண்மையாயும் ,  அனைத்தின்  ஆதார  சக்தியாயும்  இருக்கும்   சகுண ,  நிர்குண  கடவுள் .....  ' ராம் '  என்னும்  சொல்  பகவத்கீதையில்,  சொல்லப்பட்டுள்ள  புருஷோத்தமனைக்  குறிக்கிறது. அவன்  ஒரே  சமயத்தில்  புருஷனாகவும் ,  பிரகிருதியாகவும் ( சிவ ,  சக்தி )  இருக்கின்றான்;  அதற்கு  அப்பாற்பட்ட  புருஷோத்தமனாகவும்  ( பரப்ரம்மம் )  இருக்கின்றான்.

         ஜெய்  ராம்  --  ஸ்ரீ  ராமனுக்கு  வெற்றி
         ஜெய்  ஜெய்  ராம் -- வெற்றி  வெற்றி  ஸ்ரீ  ராமனுக்கு

  " ஒரே  சமயத்தில்  உண்மையாயும்,  அனைத்தின்  ஆதார  சக்தியாயும்  உள்ள  சகுண  ,  நிர்குணமாயும்   இருக்கும்   கடவுளுக்கு  வெற்றி, ...  வெற்றி,....வெற்றி ! "

         நமது  இதயத்தில்  இருக்கும்   கடவுளுக்கு  வெற்றி  ஏற்படும்  பொழுது,  அஹங்காரத்திலிருந்து   உதித்த   அந்தகாரம்  மறைகிறது .  அப்பொழுது  அளவற்ற   நித்யானந்தமும் ......சாந்தியும்   தவிர  அங்கு  வேறோன்றும்  இல்லை .

         எனவே,    சரீர  உழைப்பில்  ஈடுபட்டிருக்கும்   பொழுதும்  ஒரு  க்ஷண நேர  இடைவெளி கூட   இல்லாமல்  திவ்ய  நாமத்தைச்  சதா  ஜெபித்துக்  கொண்டு  இரு.  நாமத்தை  சதா  சர்வகாலமும்   ஜெபிக்கும்  பயிற்சி  இல்லாவிட்டால்  துன்பம்  உன்னை  வந்து   அடைவதை   தவிர்க்க  முடியாது . இதனை  எப்போதும்  உறுதியாக   அறிந்துகொள்.

                                                                                                  -----ஸ்வாமி  ராமதாஸ்

நன்றி :  ஆனந்தாஸ்ரமம்  பதிப்பு :  ராமதாஸரின்  அமுத  மொழிகள்.

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்

மனைவிக்கு  மகான்  செய்த  மரியாதை :



           பகவான்  ஸ்ரீ ராமகிருஷ்ணர்  தமது  மனைவியாகிய  அன்னை  சாரதா  தேவியை  அம்பிகையின்  அம்சமாகவே  கருதி , அன்னையின்   அன்பான  பணிவிடைகளை  ஏற்றுக்கொண்டு  கள்ளம்கபடமற்ற  சிறு  குழந்தையைப்  போன்றே  பழகி  வந்தார்.

         குருதேவரிடம்  உள்ள  சிறப்பு  என்னவென்றால்,  எந்த  உணர்வில்  இருந்தாலும்  அதில்  பரிபூரணமாக  இருப்பார். உள்ளும்,  புறமும்  ஒன்றானவர். அம்பிகை  எனபது  மட்டுமல்ல,  தமது  அவதாரத  நோக்கத்தின்  ஒரு பகுதியாகவே  அன்னையைப்  போற்றி வந்தார்.

     ஒருநாள்  குருதேவரின்  அறைக்குள்  உணவை  எடுத்துக்கொண்டு, 
அன்னை   நுழைந்தார்..  குருதேவர்  தன்னுடைய  அண்ணனின்  மகளான  லக்ஷ்மி  நுழைவதாக   எண்ணி , " துயி "  என்று  கூப்பிட்டு,  வெளியில்  போகும்போது  அறையின்  கதவைச்  சாத்திவிட்டு  போகுமாறு  கூறினார்.

      வங்காளத்தில்  " துயி "  எனபது  ' அடி '  என்ற  பொருள்படும்  மரியாதைக்குறைவான  சொல்லாகும் .

      " சரி,  அப்படியே  செய்கிறேன் "  என்று  கூறிய  அன்னையின்  குரலைக்  கேட்டதும் தான்   அறைக்குள்  நுழைந்ததே  யார் ?  என்று  தெரிந்தது.

        அன்னையை  மரியாதைக்குறைவாக  அழைத்ததை  எண்ணி  வெட்கமும்,
 வேதனையும்  அடைந்தார்.

        அவர்  அன்னையிடம்   " லக்ஷ்மி " என்று  எண்ணினேன்.  " தயவு செய்து  மன்னித்துவிடு "  என்று  கூறினார்  குருதேவர்.

        தம்மை  அப்படி  அழைத்ததில்  தவறு  ஒன்றுமில்லை  என்று  கூறி  அன்னை  அவரை  சமாதானப்படுத்தினார்.

          ஆனால்  மறுநாள்  காலை ,  " நான்  உன்னை  மரியாதைக்  குறைவாக  அழைத்துவிட்டதை  நினைத்து  எனக்கு   இரவெல்லாம்  தூக்கம்  இல்லாமல்  போய்விட்டது "  என்று  அன்னையிடம்  சிறு  குழந்தையைப்போல்    மிகவும்  வருத்தத்துடன்     கூறினார் .

  அதன்  பின்புதான் ,  குருதேவர்  சமாதானமடைந்தார் . 

அன்னை  நீண்ட  காலத்துக்கு  பின்னர்   இந்நிகழ்ச்சியை  நினைவு  கூர்ந்து ,
  " அடீ !  என்றுகூட  என்னை  அழைக்காத  ஒருவரை  நான்  கணவராகப்  பெற்றிருந்தேன்.  ஆஹா !  அவர்  என்னை  எப்படியெல்லாம்  போற்றினார்?  ஒருமுறை  கூட  என்னைக்  கடிந்துகொண்டதில்லை.   என்  உணர்வுகளை  மதித்து  நடந்துகொண்டார்.   சிறு  பூவினால்  கூட  அவர்  என்னை  அடித்தது இல்லை.  "  என்றார் .



குறிப்பு :  

            தமது  உரிமை  செல்லும்  இடத்திலும்  மகான்கள்  எவ்வளவு  பண்புடனும்,  அதே  நேரத்தில்    தவறுக்கு  எவ்வளவு  தூரம்  வருந்துகிறார்கள்.  . அப்படி  வருந்த  .....அந்த  இடத்தில்  கிளம்பும்  தூய  உணர்வே   இன்னும்  சித்த  சுத்தியினை  நல்கும்.  எனவே  இது  வணங்கிப்  பெற வேண்டிய  பண்பல்லவா  இது!

நன்றி : சின்ன  சின்ன  கதைகள் ,  விஜயா  பதிப்பகம்.  

Thursday, September 11, 2014

ஸ்ரீ ராமனின் குண நலன்கள் :

 சீதையிடம் ..... ஆஞ்சநேயர்  கூறியது ..



அசோகவனத்தில்' சீதையையைத்  தேடி  ஸ்ரீ ஆஞ்சநேயர்  சென்று , துயரிலிருந்த  அன்னைக்கு  நம்பிக்கை  அளிக்கும்  வண்ணம்  பேசும்போது  
அண்ணலின்  குண நலன்களாகக்  கூறியது .....

இந்த  உலகத்தில்  எது ..எது ?   மரியாதைக்கு  உரிய , நன்மைகள்  நல்கும்  தர்மங்கள்  உண்டோ .....அது  அத்தனையும்   தான்  முன்னின்று  செய்பவன்  ....மற்றவரை  செய்விப்பவனும்  ஸ்ரீ ராமன்.  தான்  தர்மத்தை  செய்வதில்  முதன்மையனவனாகவும் ...........மற்றவர்கள்  அந்த  தர்ம  வழியில்  நடக்கிறார்களா ....என  கவனிப்பவனாகவும், எப்போதும்  ஆனந்தம்  தருபவனாகவும் ........தன்னைச்   சரணடைந்தவர்களின்  துன்பத்தை  உடனே  நீக்குவதற்கு  துடிப்பவன்  ஸ்ரீ ராமன்.  

மற்றவர்களே  முதலில்  பேசவேண்டும்  என்று  இல்லாமல் .....தானே  முன்வந்து  மற்றவர்களின்  நலனை  விசாரிப்பவன்  .......மற்றவர்களின்  துக்கத்தில்  தானே  முழுதும்  துன்பமேற்பவன்!   கருணையே  பொங்கும்
கண்களை  உடையவன்.   

ஒருநாள்  எம்பெருமானின்  திருமுகத்தைக்  கண்ணுற்றவர்களையும் , தன்னையே  சுற்றிச்சுற்றி  வரவைக்கும்   தூய  வடிவினன்.  சத்தியத்தின்  வடிவமே  ஆனதால்  கேட்பவருக்கு  சாந்தி  அளிக்கும்  கம்பீரக்  குரலுடையவன் .....மிதமாக ....இதமாக ......குறைவாக ....... பேசுபவன். எதையும்  பிறரிடம்  வேண்டாதவன் .....  தன்னிலேயே  திருப்தியுடையவன் !



"யாரைப்  பார்த்தால்  என்பு  உருகி  அன்பு  பெருகுகிறதோ  அவரே  பிரம்மம்  என  அறிவாய் !." ....என  பிரம்மா   எனக்கு  கூறியிருந்தார் ......ஸ்ரீ ராமனை  பார்த்த  முதல்  சந்திப்பிலேயே  ......அந்த  நொடியிலேயே  ........அவரே  பரப்பிரம்மம்  என  அறிந்தேன் !

மேலும்  துன்பத்தை  நீக்கி ......எம உலகம்  உயிர்கள்  செல்லாமல் .....காத்து  ரட்சிக்க  வந்த  ஈஸ்வரனே .........ஸ்ரீ ராமர் !

                                                                                                       சுந்தர காண்டம் 


குறிப்பு :  
                         நண்பர்களே !   இதை  படிக்கும்போது  ......சிறுவயதில்  இருந்தே  இராமாயணம்  திரும்ப  திரும்ப  கேட்கும்  குழந்தைகளை ........இதனை  சிந்திக்கும்  குழந்தையின்  இயல்புகள்  பின்னாளில்  மிக  உறுதியாக  
ஸ்ரீ ராமரின்  பண்புகள்  அவர்களின்  மன  இயல்புகளை  மாற்றி  உத்தம  பண்புகளின் உறைவிடமாக்கும்.  ( நமக்கும்  கூட ......)

Monday, September 8, 2014

வேடனே ....முனிவராய் .....



தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்ப்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலித்து  காப்பது  உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர..... பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது  தர்மசுபத்தினியிடம்   வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? பாவத்தில்  பங்குண்டானால்  இப்போதே  உங்களை  விட்டு  விலகி  ஓடிவிடுகிறேன் - இது அவனது தர்மசுபத்தினி .
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என  அறிந்து கொண்டேன்.
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்பிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?
 புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, .....எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ......எந்த நாமம்  ஜனன ...மரணத்தை  ஒழிக்குமோ ......, எந்த நாமத்தை பரமேஸ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ .....அந்த தாரக  நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!


ராம  ராம  ராம   ---என்றே  சொல்லிவா ...நட ....சாப்பிடு ....மூச்சுவிடு ....ராம ... ராம.....ராம .....என்றே  தூங்கு .... சொல்லி சொல்லி ...ராம ராம  என்றே....ராமனில்  நிலையாக  அமர்ந்து விடு!

சொல்லி  பார்த்தான் ....வரவில்லை ....அவ்வளவு  பாவம்  
செய்துள்ளேனா ?   கதறினான் .....மீளவேண்டுமே!  உள்ளுக்குள்   தவித்தான் ....

இவனது  பரிதாபநிலை  நாரதரை  இரக்கம்  கொள்ளச்செய்தது.

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

மரா  மரா  மரா ....மரா  மரா   மரா


ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம  ராம  ராம ராம .........


நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது.  ராம
...ராம   என்று  சொல்ல  சொல்ல .....எண்ணங்கள்  குறைந்தன .......உடலில்  பசி  குறைந்தது ........மூன்று  வேளை  உணவு  தேவைப்படவில்லை.  ஒரு  வேளை  மட்டும்  சாப்பிட்டால்  போதும்  என்றானது .....இதனால்  உடலில்  ஜீரண சுரப்பிகளின் வேலை  குறைந்தது . உடல்  மிகவும்  லேசானது 

கண்களை  திறக்கத்  தோன்றவில்லை. புலன்கள்  வெளியில்  இழுக்கவில்லை. ராம ....ராம .....என்றே  ஒரே  புள்ளியில்  நிலைத்து .....வெளியுலகம்  மறந்தது.

ராம  நாமம்  சொல்லச்  சொல்ல  ....ஒரு கட்டத்தில்  காற்றே  போதுமானதாக  இருந்தது .

சிறிது  நாட்களில்  வேடனின்  உடலைச்  சுற்றிலும்  கரையான்கள்  புற்றினை   கட்டியது. ........அந்த  இடத்தில  ஒரு  தெய்வீக  அமைதி  தவழ்ந்தது . அந்த  அமைதியால்  ஈர்க்கப்பட்டு  காட்டு  விலங்குகள்  எல்லாம்  அங்கே  கூடின.

கொடிய  விலங்குகளும்  தமது  விலங்கு  இயல்பான  பகைமையை .....வேட்டையாடுதலை  மறந்தன. கிடைத்ததை  உண்டு  .....மீண்டும் , மீண்டும் ....அங்கே  அமைதியை  விரும்பி  கிடந்தன.

வேடன்  ரத்னாகர்  இப்போது  வால்மீகி  முனிவராய் ........தன்னை  மறந்து  தானே  அனைத்தும்  ஆன.......ஞானம்  கைவரபெற்று .....ராமாயண  இதிகாசத்தை  இயற்ற  முடிந்தது.



நன்றி : அம்மாஞ்சி 

Friday, September 5, 2014


புரந்தரகேசலு : மஹா  பெரியவரை  உருக  வைத்த தெலுங்கு சிறுவன்



ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது. கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. 'சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்'. ' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டுநடக்க முடியாதபடி மழை பலத்தது.

ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல, மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

ஏழு,எட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறுவென்று கொட்டகை போடப்பட்டது.

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று...

பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'சுவாமி ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார்.

பதினொன்னரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே'??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா.

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. '' யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

' ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா இசை பிரவசனம் பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? .

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் ' 'அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!' சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.

'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது.' ' யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்.

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான்.

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி??'

'அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு '' ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் பேசிக்கிட்டாங்க. சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புலகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

' சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்.




பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

''  அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல!  சித்த  முன்னாடிதான்  காலகதி  அடஞ்சுட்டான்.  நா  அவா  ஊருல போய்த்   தங்கியிருந்து  கிளம்பற  அன்னைக்கு,  'எனக்கு  நீங்க  மோட்ஷம்  வாங்கி  கொடுக்கணும்னு  கேட்டான்.'  . "சந்திரமௌலீஸ்வர  ஸ்வாமி   கிருபையால  உனக்கு  அது  கிடைக்கும்"னேன்.  திடீர்னு  அவனுக்கு ஏதோ  விஷக் காய்ச்சல்  ஏற்பட்ருக்கு.

மோட்ஷத்தையே   நெனச்சுண்டு   அவதிபட்ருக்கான். கிரமமா  அவன்  மோட்ஷத்துக்கு  போய்ச்சேருணும்னா    இன்னும்  ஆறு  ஜன்மா  ( பிறவி )
எடுத்தாகணும்.  எப்படியாவது  அவன்  மோட்ஷம்  அடையணும்னுருக்காகத்தான்   ஜபம்  பண்ணி  பிராத்திசேன்.  புரந்தரகேசலு  ஒரு  நல்ல  ஆத்மா! "  என்று  சொல்லிவிட்டு,  விடுவிடு  என்று  மடம்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தார்  மஹா  ஸ்வாமிகள்.

குளத்தின்  படிக்கட்டில்  நின்றிந்த  மடத்து   ஆசாமிகள்  பிரமித்து  போய்  இருந்தனர்.

Thursday, September 4, 2014

எறும்புகளின் சரணாகதி:



பெரியவாளோட வலதுகாலில் எப்படியோ சின்னக் காயம் உண்டாகி லேசான ரத்தக் கசிவு இருந்தது. அதில் ஒரு சொட்டு ரத்தம் மாதுளைமுத்துப் போல் இருந்தது. பெரியவாளோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒரு எறும்பு வந்தது. அந்த காயத்தின் மேல் ஊர்ந்தது. உடனே சங்கேத பாஷை மூலம் செய்தி அனுப்பி, கொஞ்ச நேரத்தில் ஒரு படையே சொந்த பந்தங்களோடு பெரியவாளுடைய சரணத்தில் இருந்த ரத்தக் கசிவை சுவை பார்த்தன. "எறும்புகளை தட்டி விடுங்கோ பெரியவா" என்று சொல்ல முடியுமா? சுற்றி இருந்த சிஷ்யர்களுக்கோ ஒரே அவஸ்தை!

அப்போது பெரியவாளிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடிய ஒரு பக்தர் வந்தார். உடனே அவரிடம் ரகசியமாக எறும்பைக் காட்டினார்கள் சிஷ்யர்கள். "பெரியவா கால்ல எறும்பு மொய்க்கறதே?" என்று பணிவோடு கூறினார் பக்தர்.

ஒரு செகண்ட் அருள் நிறைந்த பார்வை பார்த்தார் பெரியவா. "விபீஷணன் ராமசந்த்ரமூர்த்தியை சரணாகதி பண்ணினான்ன்னு படிக்கறோம். வாயால "சரணாகதி" ன்னு சொன்னான். ஆனா, ராமனோட பாதங்களை இறுகக் கட்டிக்கலை. அப்பிடியிருந்தும் ராமன் ரொம்ப இறக்கப்பட்டு, விபீஷணனுக்கு அடைக்கலம் குடுத்தான். "இப்போ இந்த ராமாயணம் எதுக்கு?" சிஷ்யர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் வந்தது. "இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா! "உடல் வேறு ஆன்மா வேறு" என்பதை கண்கூடாக சிஷ்யர்களுக்கு நிரூபித்தார்.

ரத்த சுவைக்காக அவை அவருடைய பாதங்களில் ஊர்ந்ததையே ஒரு வ்யாஜமாகக் கொண்டு, "சரணாகதி" என்று ஏற்றுக் கொண்ட கருணை பெரியவாளைத் தவிர யாருக்கு வரும்? நம் மேல் ஒரு எறும்பு ஊறினால் கூட, அடுத்த செகண்ட் அது உருத் தெரியாமல் நசுங்கி விடும். நமக்கும் நல்லறிவை தர பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்.
ஆஞ்சநேயரைப்  பார்த்துட்டியா?


மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்.

Wednesday, August 27, 2014

பகவானது  சரணாகதி:


ramana maharishi, saranagathi, surrendarsurrender, ramana maharishi , annamalai, tamil பகவான் ரமணர்  அண்ணாமலையை  அடைந்து  தமது  தந்தையாகிய  அருணாச்சலேஸ்வரரிடம் தம்மை  முழுதும்  ஒப்படைத்து,  " உன்னிஷ்டம்........என்னிஷ்டம் "  எனவும் ...................... " உன் எண்ணம் எதுவோ  அது செய்வாய்".....   என்றும்   சரணாகதியின்  உருவமாகவே  தமது மீதிநாட்களில் ....... அண்ணாமலையில் ........உலவினார்.

பின்னாட்களில்  பகவானிடம்  ஒரு அன்பர், "பகவானே! ஸ்கந்தாஸ்ரமத்தில்  இருந்து  தாங்கள்  கீழே  ரமணாஸ்ரமதிற்கு  வந்தததற்கு  எது  காரணம்? "  என  வினவ  அதற்கு   பகவான் 
" மதுரையிலிருந்து   எந்த  சக்தி  அண்ணாமலைக்கு  இழுத்ததோ ......அதுதான்  ஓய்! இங்கும்  இழுத்துவந்தது!"  என்றார், எனில்  அவரது  சரணாகதியின்  அசலத்தன்மை................... ...அருணாச்சலத்தில்  வாழ்ந்த  54  ஆண்டுகளுக்கும்  மேலாக   அவருள்  நிலைபெற்று,.....அதுவாகவே  இருந்தார் ..... இது  இன்னும்  ஒரு  நிகழ்வால்  நனி  விளங்கும்.

அது  1946 ம்  ஆண்டாக  இருக்கலாம். பகவானது  ஜெயந்தி  கொண்டாட்டத்திற்காக  மக்கள்  கூட்டம் 
நிரம்பியிருந்தது.   ஏற்கனவே .......சுமார்  400 பக்தர்களுக்கு  மேலவும்  இருக்கலாம். அன்று  இரவு  12.00 மணியாகியும்  ஆஸ்ரமத்தின்  சர்வாதிகாரியாகிய  சுவாமி  நிரஞ்ஜனானந்தர்  தூங்காமல் ( அதிகாலை  3.00 மணிக்கே  எழுவதால்  இரவு 8.30 க்கு  தூங்கிவிடுவர்)  அறையின்  நடுவே  குறுக்கும்,  நெடுக்குமாக   கையை  பிசைந்து  நடந்துகொண்டு  இருந்தார் .  இதனை  பகவானது  அறையிலிருந்து  பார்த்த  அணுக்கத்தொண்டர்,  பகவானின்  அனுமதி  பெற்று  ஆபீஸ்  அறைக்கு  சென்று  சர்வாதிகாரியிடம்  விசாரிக்க , " நாளை  ஜெயந்தி விழா!  இங்கு  ஒரு  குண்டுமணி   கூட  அரிசி  இல்லை! பெட்டிகளில்   கொஞ்சம்  கூட  பருப்பும்  இல்லை.  இங்கோ....400 பேருக்கு  மேலே  உள்ளனர்.  நாளைக்கு   இன்னும்  நிறையவே   மக்கள்  வருவர்.   உணவுக்கு  என்ன  பண்ணுவது  என்று தெரியாத  கவலையினால்  தூக்கம்  வரவில்லை " என்று  வருந்தி கூற ............ 

இதைக்கேட்டதும்  அந்த  அணுக்கத்தொண்டருக்கும்  கவலை  தொற்றிக்கொள்ள  பகவானிடம்  வந்து....." பகவான்!  சின்னஸ்வாமி   கவலையில்  உள்ளார் ......நாளை  ஜெயந்திக்கு  சமைப்பதற்கு  அரிசியோ!...பருப்போ .......எதுவும்  இல்லையாம்!" என்று   கவலையுடன்  தெரிவித்தார் . பகவானோ  புன்னகையுடன்   "ஓ !..... அவன்  பொறுப்பை  ஏற்றுக்கொள்வதால்  துன்புறுகின்றானா? ஏன்  அருணாச்சலத்திடம்  பொறுப்பினை  ஒப்படைக்கக்கூடாது ..... .....மனதை  திருப்பி  அருணாச்சலத்திடம்  இருத்தினாலென்ன?.......மனதை  அருணாச்சலத்தில்  திருப்பி  இருத்தினால் ......பொறுப்பு    அவருடையதாகுமே!"......என்று  அருளினார்.   அணுக்கத்தொண்டரும்    சின்ன ஸ்வாமியிடம்  சென்று  பகவான்  கூறியதை  கூறினார்.
சின்னஸ்வாமியும்  பகவானிடம்  வந்து  நமஸ்கரித்து  விட்டு ... . ........ அவ்வாறே  தாம்  இருப்பதாகக்  கூறி....வெளியில்   வந்து......அண்ணாமலைக்கும்   நமஸ்காரம்  செய்துவிட்டுச்  சென்றார்.



உண்மையில்  அடுத்த  இரண்டு  மணி  நேரத்திற்குள்  அது  நடந்தது.  ஒரு  மாட்டு வண்டி  நிரம்ப  அரிசி மூட்டைகள் ,  பருப்பு  மூட்டைகள்,  காய்கறி  சாமான்கள்  வந்திறங்கின.  எப்படியெனில்  அடுத்த  பத்து  கி.மீ. க்குள்   உள்ள  ஒரு  இடத்தில  பகவானது
 செல்வந்தரான  ஒரு   பக்தரின்  கனவினில்   பகவான்   தோன்றி, ஒரு  லிஸ்ட்  கொடுத்ததாகவும் ......அதில்  அரிசி  இவ்வளவு  மூட்டை .....பருப்பு  இவ்வளவு  ....காய்கறிகள்  அளவு...........  என  ஜெயந்திக்கு  தேவையான  எல்லாம்  அதில்  குறிப்பிடப்பட்டு  இருந்ததாகவும்,...... அவர்  உடனே  எழுந்து  அவருடைய  கடையிலிருந்த  பொருட்களை   வண்டியில்  கட்டி  அதிகாலை  3.00 மணிக்கு  ஆஷ்ரமத்தில்  சேர்க்க  கொண்டு  வந்ததாகவும்  கூறினார். 

வேறுயென்ன !.....சின்னஸ்வாமி  பகவானிடம்  ஓடிவந்து,  "பகவானே!  ஜெயந்திக்கு  தேவையான  சமையல்  பொருட்கள்  எல்லாம்  வந்துவிட்டன."  என்று  சரணாகதியின்  மகத்துவத்தை  உணர்ந்து  கைகூப்பி  வணங்கினார்.  இப்போது  அவ்வளவு  பேருக்கும்  சமைக்க  ஆளில்லை.  படுத்திருந்த  எல்லோரும்  எழுப்பப்பட்டு .....பகவானும்  அவர்களுடன்  சமையலில்  
பங்குகொண்டு ........அந்த  வருட  ஜெயந்தி  மிகச்சிறப்பாக   நடைபெற்றது.


 " நாம  இருக்கற  படி  இருந்தா ........
( ஆன்மாவிசாரத்தில்  .....சரணகதியில் )   நடக்கவேண்டியது     தானாகவே    நடக்கும்."       
                                                         ----பகவான் ஸ்ரீ ரமணர்


Tuesday, August 26, 2014

பகவானும்  பிராணிகளும்:



இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்படும்  முன்பு  பகவான்  ரமணர்  மலையில்  இருந்தபோது  பகவானுடன்  அதிகம்  உரிமையோடு  இருந்தவை பிராணிகளும்,    பறவைகளுமே!   சொல்லபோனால்  பகவான்  மலையை  விட்டு  இறங்கி  இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்பட்ட  பின்பு, அவைகளின்  உரிமைகள்  நம்மை  போன்ற  மனிதர்களால்  பறிக்கப்பட்டது. பகவானுக்கும்,  அவைகளுக்கும்  இடையே   பல சுவையான   நிகழ்ச்சிகள்  நடந்துள்ளன. அவற்றுள்  சிலவற்றைப்  பார்ப்போம்.

பகவான்  பிராணிகளை ,  அவன்  என்றும்  அவள்  என்றுமே  அழைப்பார்.....ஒருபோதும்  அது  என்றோ  வேறு  எவ்வகையிலும்  அழைத்ததில்லை. அவரை  பொறுத்த  வரையில்  அனைத்துமே  ஆத்மசொருபமே! 

ஒரு  மனிதனிடம்   குரங்கு  பழகினால்,  அதை  மற்ற  குரங்குகள்  தங்கள்  இனத்தினில்  மீண்டும்  சேர்ப்பதில்லை. ஆனால்  பகவானுடன்  பழகும்  குரங்குக்கோ , அவைகள்  விதிவிலக்கு.  அந்த  இனத்தினில்  அவைகள்  மிகவும்  மரியாதைக்குரியனவாக   போற்றப்படும்.

குரங்குகள்  கூட்டம், கூட்டமாகவே  இருக்கும்.  ஒவ்வொரு  கூட்டத்திற்கும்  ஒரு  தலைவன்  உண்டு. அங்கும்  எல்லைகள் உண்டு.  அவைகள்  தங்களுக்குள்  எல்லைகள்  மீறப்பட்டால்,  சண்டைகள்    ஏற்படும். சண்டைக்கு   முன்னர்  தூதுவனால்  எச்சரிக்கபடுவர்.  பின்னரே  அவைகளுக்குள்   சண்டைகள்  ஏற்படும் .  இதுபோன்ற  சமயங்களில்  அவைகளின்  இரண்டு  குரங்குக்கூட்டதிற்கும்  நடுவராக  பகவானே   இருப்பாராம்.  அவைகளின்  பிரச்சனைகள்    பகவானின்  முன்பே  தீர்த்துவைக்கப்படுமாம்.



ஒருமுறை  ஒரு குரங்கு  அடிபட்டு  நொண்டி, நொண்டி   இறக்கும்  தருவாயில்  இருந்ததை  பகவான்  பார்த்து,  அதனை  எடுத்து  வந்தார். பகவானுடனே  இருந்தது. சில  நாட்களில்  அதன்  காயங்களும்  ஆறின. சில  நாட்களில்  அதன்  கூட்டத்தார்   அதைத்தேடி   வந்தன.நொண்டியும்  அவர்களுடன்   திரும்பி  போனான். பகவானும்  "நொண்டி!  நீ  மீண்டும்  ராஜாவானால்  இங்கு  திரும்பி  வருவாயா ?" என்றார்.   நொண்டியும்  
மீண்டும்  போரிட்டு , அக்கூட்டத்தின்  தலைவனும்  ஆனான். பகவானுடன்  தங்கியிருந்த   நாட்களில்  அவனும்  தவம் செய்து  தனது  சக்தியை  வளர்த்து, போரிட்டு  வென்றதாக  பகவான்  கூறினார்.

பின்பு   என்ன?  அன்று  தமது  கூட்டத்துடன்  நொண்டி  திரும்பவும்  பகவானிடம்  வர .........அன்று  ஸ்கந்தாஸ்ரமத்தில்  ...நொண்டியும்  அவர்தம்  சகாக்களுக்கும்...............விருந்து  நடைபெற்றதாம்!



இதுமட்டுமா !  பெண்குரங்குகள்  குட்டிகளை  ஈன்றால்.........அந்த  குட்டிகளை .....இரத்தம்  மற்றும்  தொப்புள்  கொடியுடனே  அவைகள்  பகவானின்  மடியில்   சேர்ப்பிக்குமாம்.  பகவானே  அந்த  குட்டிகளை  கழுவி  பின்னர்  தமது  மடியினில்  
 சிறிது  நேரம்  வைத்திருந்து......பின்னர்  தாய்க்குரங்கிடம்  தருவாராம்.  இவ்விதம்  அவைகள்  பகவானிடம்  தமது  பிறக்கும்  குட்டிகளுக்கும்  ஆசிர்வாதம்  பெற்றன.  

பகவானே  சொல்லியது ...." ஒருமுறை  ரமணாஸ்ரமத்தில்  இருந்தபோது  ஏதோ  உந்தித்தள்ள   மேலே  வேகமாக  சென்றேன்!  அங்கு  வழியில்  நொண்டி மற்றும்   ராணி  குரங்கும்,  குட்டிகளும் , மற்ற  குரங்குகளும்   என்னை  பார்த்ததும்  கைகூப்பி வந்துகொண்டு இருந்தன. என்னைப்  பார்த்ததும்  அழுதன. அப்பொழுது  நொண்டிக்கும்  மிகவும்  வயதாகி, நடக்கமுடியாமல்    இருந்தது.  அவைகள்   அனைத்தும்  அழுதுகொண்டே, கைகூப்பி .....பகவானே!  எங்களுடனே  ஸ்கந்தாஸ்ரமத்திற்கே  வந்துவிடுங்கள் .....நாங்கள்  உங்களது  அண்மையை  இழந்து  தவிக்கின்றோம்......என்றன. நானும்  அவைகளுடனே  சிறிது  நேரம்  அமர்ந்திருந்தேன்.  பின்பு  கூறினேன் ......எனது  கண்களிலும்  கண்ணீர்   வழிந்தது .......என்னால்  என்ன  செய்ய  முடியும்! இங்கு  என்னால்  நிரந்தரமாக  வர முடியாது. ஏனெனில்  ரமணாஸ்ரமதிற்கு  வரும்  மக்கள்  எல்லோரும், அங்கு  இருப்பவர்களும்  ஏமாற்றமடைவர். எனவே  திரும்பி  மேலே செல்லுங்கள். எப்பொழுதும்  உங்களுடனேயே  இருக்கிறேன்" ...... என்று  கூறி சற்று  நேரம்  சமாதானப்படுத்தினேன்.....என்றார்.  இந்த  நிகழ்ச்சி  நடந்தபோது  அருகில்  இருந்தவர்  குஞ்சுஸ்வாமிகள்   ஆவார்.  பல  வருடங்களுக்குப் பிறகு  இதனை  நினைவு  கூறும்  பொழுதும்   கருணையின்   தாக்கம் ......சுவாமியின்  கண்களில்   கண்ணீராய்    வழிந்தது......எனில்  பகவானது  கருணையினை 
என்னவென்று  விளக்குவது !........ 



Saturday, August 23, 2014

பகவான் ரமணரின் கருணை

பகவான்  ரமணரின்   கருணை:






ஒரு  நாள்  இரவு  பகவான்  ரமணர்  இரவினில்   ரமணாஸ்ரமத்தின்  பின்புறம்  இயற்கை  உபாதியை  கழிக்க  சென்றார். அவருடன்  எப்போதும், எங்கும்  கூடவே  செல்லும்  அணுக்கத்தொண்டர்  சற்றே  தூரத்தில்  நின்று கொண்டார்.     சுமார்  இருபது  நிமிடங்கள்  கழிந்தன. பகவான்  வரவில்லை.  சற்றே  பதைத்து  பகவானைத்  தேடி  சென்றவர்,  அங்கே  கண்டது ...............


உடல்  முழுதும்  சொறி சொறியாய் .....தோல்கள்  முடியிழந்து ........சொட்டை மற்றும்  புண்களுடன்  பார்க்கவே  மிகுந்த  அருவருப்புடன்  உள்ள  நாய்  நோயுற்று .........பகவானை  நக்கிக்கொண்டு   இருந்தது.  வாலை  ஆட்டி,  ஆட்டி....    மீண்டும்   தன்னுடைய  அன்பினை  .......பகவானை  நக்கி , நக்கி  வெளிப்படுத்திக்கொண்டும்   இருந்தது.  பகவானும்  அதன்  அருகில் அன்போடு  அமர்ந்த  வண்ணம்  அதற்கு  தன்னை  முழுதும்  அனுமதித்து .........தடவி  தடவி ...." போதுமாடா !....போதுமாடா !"     இன்னும்  வேண்டுமா?"  என்ற  தன்னுடைய  கருணையை  அளித்தார்.


அன்று  இரவு .....கை, கால்களை  அலம்பாமல்  அப்படியே  படுக்கைக்குச்  சென்றுவிட்டார்.  மறுநாள்  காலை  ஆசிரமத்தின்  பின்புறம்  அந்த  நாய்  இறந்து  கிடந்தது. இதைப்  பற்றி  அணுக்கத்தொண்டர்  இரவு  நடந்ததும் பற்றி  பகவானிடம்  வினவ ......பகவான்  அருளியது .....


" அவன்  இரண்டு  மூன்று   நாட்களாகவே   தன்னைப்  பார்ப்பதற்கு   ஆசிரமத்தினுள்  நுழைய  முயற்சிக்க  முயன்றும்,  ஆசிரமத்து  நாய்களும், மற்றவர்களும்  அதனை  துரத்தினர். அதன்  முடிவும் நெருங்கியது , என்னை  பார்க்கவேண்டும்  என்ற  அவனுடைய  விருப்பமே  அங்கு  தன்னை  செல்ல வைத்ததாகவும்,  அன்று  இரவு  அவன்  தன்னுடைய  அன்பை  வெளிபடுத்திய
பின்னரே    இறக்க  வேண்டும்   என்ற  அவனது   விருப்பத்தினை  நிறைவேற்றியதாகவும்",   பகவான்   கூறினார்.



அதுமட்டுமல்ல, எந்த  ஒரு  விலங்கும்  தன்னை'  நாடி அண்டுவது ......என்பது  .தங்களுடைய  கர்ம  வினையை  நீக்கிக்கொள்ளவே  என்றும் ......எந்த  உடம்பினில்  எந்த  உயர்ந்த,  பக்குவ   ஆன்மா  இருக்கும்  என்பது  அறிய  முடியாது .....எனவே  அவற்றை  அலட்சியப்படுத்தக்கூடாது,  அவற்றுக்கு தீங்கிழைக்கூடாது  என்றும்  அருளினார்.


 அந்த  நாய்  வடிவில்  வந்த  அந்த  புண்ணிய ஆன்மா .. யாரோ ?  எவரோ!.....என்ன  பேறு  பெற்றதோ . ........பகவானை  அண்டி ......கடைசி  நேரத்தில்.......தமது  அன்பினால்   பகவானை  ஈர்த்து ....அவரது  அருள் பெற்று   முக்தியடைய ...........என்ன  தவம்  செய்தனை ....! 

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”!


7 Votes

Children
பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!
அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!
அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.
“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.
நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.
“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.
இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !
அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!
உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

நன்றி:  sage  of  kanchi