Tuesday, August 26, 2014

பகவானும்  பிராணிகளும்:



இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்படும்  முன்பு  பகவான்  ரமணர்  மலையில்  இருந்தபோது  பகவானுடன்  அதிகம்  உரிமையோடு  இருந்தவை பிராணிகளும்,    பறவைகளுமே!   சொல்லபோனால்  பகவான்  மலையை  விட்டு  இறங்கி  இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்பட்ட  பின்பு, அவைகளின்  உரிமைகள்  நம்மை  போன்ற  மனிதர்களால்  பறிக்கப்பட்டது. பகவானுக்கும்,  அவைகளுக்கும்  இடையே   பல சுவையான   நிகழ்ச்சிகள்  நடந்துள்ளன. அவற்றுள்  சிலவற்றைப்  பார்ப்போம்.

பகவான்  பிராணிகளை ,  அவன்  என்றும்  அவள்  என்றுமே  அழைப்பார்.....ஒருபோதும்  அது  என்றோ  வேறு  எவ்வகையிலும்  அழைத்ததில்லை. அவரை  பொறுத்த  வரையில்  அனைத்துமே  ஆத்மசொருபமே! 

ஒரு  மனிதனிடம்   குரங்கு  பழகினால்,  அதை  மற்ற  குரங்குகள்  தங்கள்  இனத்தினில்  மீண்டும்  சேர்ப்பதில்லை. ஆனால்  பகவானுடன்  பழகும்  குரங்குக்கோ , அவைகள்  விதிவிலக்கு.  அந்த  இனத்தினில்  அவைகள்  மிகவும்  மரியாதைக்குரியனவாக   போற்றப்படும்.

குரங்குகள்  கூட்டம், கூட்டமாகவே  இருக்கும்.  ஒவ்வொரு  கூட்டத்திற்கும்  ஒரு  தலைவன்  உண்டு. அங்கும்  எல்லைகள் உண்டு.  அவைகள்  தங்களுக்குள்  எல்லைகள்  மீறப்பட்டால்,  சண்டைகள்    ஏற்படும். சண்டைக்கு   முன்னர்  தூதுவனால்  எச்சரிக்கபடுவர்.  பின்னரே  அவைகளுக்குள்   சண்டைகள்  ஏற்படும் .  இதுபோன்ற  சமயங்களில்  அவைகளின்  இரண்டு  குரங்குக்கூட்டதிற்கும்  நடுவராக  பகவானே   இருப்பாராம்.  அவைகளின்  பிரச்சனைகள்    பகவானின்  முன்பே  தீர்த்துவைக்கப்படுமாம்.



ஒருமுறை  ஒரு குரங்கு  அடிபட்டு  நொண்டி, நொண்டி   இறக்கும்  தருவாயில்  இருந்ததை  பகவான்  பார்த்து,  அதனை  எடுத்து  வந்தார். பகவானுடனே  இருந்தது. சில  நாட்களில்  அதன்  காயங்களும்  ஆறின. சில  நாட்களில்  அதன்  கூட்டத்தார்   அதைத்தேடி   வந்தன.நொண்டியும்  அவர்களுடன்   திரும்பி  போனான். பகவானும்  "நொண்டி!  நீ  மீண்டும்  ராஜாவானால்  இங்கு  திரும்பி  வருவாயா ?" என்றார்.   நொண்டியும்  
மீண்டும்  போரிட்டு , அக்கூட்டத்தின்  தலைவனும்  ஆனான். பகவானுடன்  தங்கியிருந்த   நாட்களில்  அவனும்  தவம் செய்து  தனது  சக்தியை  வளர்த்து, போரிட்டு  வென்றதாக  பகவான்  கூறினார்.

பின்பு   என்ன?  அன்று  தமது  கூட்டத்துடன்  நொண்டி  திரும்பவும்  பகவானிடம்  வர .........அன்று  ஸ்கந்தாஸ்ரமத்தில்  ...நொண்டியும்  அவர்தம்  சகாக்களுக்கும்...............விருந்து  நடைபெற்றதாம்!



இதுமட்டுமா !  பெண்குரங்குகள்  குட்டிகளை  ஈன்றால்.........அந்த  குட்டிகளை .....இரத்தம்  மற்றும்  தொப்புள்  கொடியுடனே  அவைகள்  பகவானின்  மடியில்   சேர்ப்பிக்குமாம்.  பகவானே  அந்த  குட்டிகளை  கழுவி  பின்னர்  தமது  மடியினில்  
 சிறிது  நேரம்  வைத்திருந்து......பின்னர்  தாய்க்குரங்கிடம்  தருவாராம்.  இவ்விதம்  அவைகள்  பகவானிடம்  தமது  பிறக்கும்  குட்டிகளுக்கும்  ஆசிர்வாதம்  பெற்றன.  

பகவானே  சொல்லியது ...." ஒருமுறை  ரமணாஸ்ரமத்தில்  இருந்தபோது  ஏதோ  உந்தித்தள்ள   மேலே  வேகமாக  சென்றேன்!  அங்கு  வழியில்  நொண்டி மற்றும்   ராணி  குரங்கும்,  குட்டிகளும் , மற்ற  குரங்குகளும்   என்னை  பார்த்ததும்  கைகூப்பி வந்துகொண்டு இருந்தன. என்னைப்  பார்த்ததும்  அழுதன. அப்பொழுது  நொண்டிக்கும்  மிகவும்  வயதாகி, நடக்கமுடியாமல்    இருந்தது.  அவைகள்   அனைத்தும்  அழுதுகொண்டே, கைகூப்பி .....பகவானே!  எங்களுடனே  ஸ்கந்தாஸ்ரமத்திற்கே  வந்துவிடுங்கள் .....நாங்கள்  உங்களது  அண்மையை  இழந்து  தவிக்கின்றோம்......என்றன. நானும்  அவைகளுடனே  சிறிது  நேரம்  அமர்ந்திருந்தேன்.  பின்பு  கூறினேன் ......எனது  கண்களிலும்  கண்ணீர்   வழிந்தது .......என்னால்  என்ன  செய்ய  முடியும்! இங்கு  என்னால்  நிரந்தரமாக  வர முடியாது. ஏனெனில்  ரமணாஸ்ரமதிற்கு  வரும்  மக்கள்  எல்லோரும், அங்கு  இருப்பவர்களும்  ஏமாற்றமடைவர். எனவே  திரும்பி  மேலே செல்லுங்கள். எப்பொழுதும்  உங்களுடனேயே  இருக்கிறேன்" ...... என்று  கூறி சற்று  நேரம்  சமாதானப்படுத்தினேன்.....என்றார்.  இந்த  நிகழ்ச்சி  நடந்தபோது  அருகில்  இருந்தவர்  குஞ்சுஸ்வாமிகள்   ஆவார்.  பல  வருடங்களுக்குப் பிறகு  இதனை  நினைவு  கூறும்  பொழுதும்   கருணையின்   தாக்கம் ......சுவாமியின்  கண்களில்   கண்ணீராய்    வழிந்தது......எனில்  பகவானது  கருணையினை 
என்னவென்று  விளக்குவது !........ 



No comments:

Post a Comment