Friday, April 4, 2014

பப்பாவின் கருணை :-




             சுவாமி  பப்பா ராமதாஸ்  தனது ராம நாமத்தால் இந்தியாவின்  அனைத்து  பகுதிகளும்  புனிதமடைய செய்து  கேரளாவின்  மங்களூருக்கு  அருகே கா ஞ்சன்காட்டில்  ஆனந்தாஸ்ரமம்  அமைத்து  பக்தர்களுக்கு  அருள் செய்துகொண்டு  இருந்தார்.  அப்போது  அருகாமையில்  உள்ள ஊரினில் ஒரு  தாயார்  தனது  மகனை  இழந்து  மிகவும்  துயரத்தால்  கதறிக்கொண்டு இருந்தார்.

                எல்லையற்ற துயரால் .........கதறியவரை.......யாராலும்  சமாதானப்படுத்த  முடியவில்லை......சில நாட்களாக  உணவு உண்ணவும் இல்லை. இது  பப்பா  ராமதாசிடம்  தெரிவிக்கப்பட்டது. பப்பாவும்  அந்த அன்னையை காண சென்றார்.

            பப்பா  ராமதாஸ்  சுவாமி  அன்னையிடம்  மிகுந்த அன்புடன் ஆறுதல்  கூறினார். முதலில்  பப்பாவை  பார்க்க கூட  திரும்பாத  அந்த அன்னை ......சிறிது நேரத்திலேயே  பப்பாவின்  சொற்களால்  ஆறுதல்  அடைந்தார்.அங்கேயே  ராம நாம  தீட்சை  பெற்று   ராம நாமம்  உச்சரித்து  தனது   துயரினை  மறக்க  முயன்றார்,   .

அன்னை  கிருஷ்ணாபாயுடன்  சுவாமி பப்பா  ராமதாஸ்  

          சிறிது  நாட்கள் கழித்து  பப்பா  அந்த  அன்னையை  கண்ட பொழுது  அந்த அன்னை  தனது  மகனை இழந்த  துயரிலிருந்து  விடுபட்டு...........ராம நாம  ஸ்மரணையில்  ஆழ்ந்து  .............ஆனந்தமயமாக .........அருளில்  முழ்கியிருந்தார் .

          குழந்தைகளே !.........ஞானிகளின்  கருணை  நம்மை........எந்த ஒரு துயரிலிருந்தும்  மீட்டெடுக்கும்.........நமது  வாழ்க்கையை  மாற்றியமைக்கும்.!

Tuesday, April 1, 2014

மஹா பெரியவா அருள்வாக்கு : -



அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் ‘நோட்டாக‘ மாறி விடும். அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

பணத்துக்காகப் பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னாலே உண்டாகும்.



சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும்.  அதை அடையவே முடியாது.
சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும்.  இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.
-
அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்! இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!



வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.
இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.
-
தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.
-
சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான்.
-
இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.
கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.


எல்லாரும் மோட்சத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக் கொண்டு உலக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது சாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஓடவிட்டு, பரஸ்பரம் மோதிக் கொள்ளவிட்டு, இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்தி வருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரசிப்பதற்குத்தான் அவன் உலக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈஸ்வரனுக்கு எப்படி டிராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?
அதே ஸமயம் அவன் கருணை வள்ளலும்தான். அதனால் வேடிக்கையெல்லாம் பார்த்தாலும் அநேக யுகங்கள், கல்ப காலம் ஆகிறபோது, ‘ஐயோ பாவம்! இப்படி ஆட்டமாக ஆடிவிட்டதுகளே!’ என்று பரம கருணையோடுதானே அவர்களை எல்லாம் தம்மிடம் ஒடுக்கிக்கொண்டு விடுகிறான்; அவர்களாக சாதனை பண்ணி ஒடுங்குவதில்லை; ஈஸ்வரனே ஒடுக்கிக் கொண்டு விடுகிறான்.
உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.


நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.
-
இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.
-
எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்து விட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று 
தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) 
ஐன்ஸ்டீனின்Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில்  சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.
ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்
பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.
‘தெய்வத்தின் குரல்" நூலிலிருந்து …  

நன்றி : balhanuman.wordpress.com

Friday, March 28, 2014


மஹா  பெரியவரின்  கருணை 


ஆறறிவு வாய்த்துவிட்டதால், நாம் மற்ற  பிராணிகளை, பறவைகளை  அவற்றை எப்படியோ அடிமைப்படுத்தி ஆட்டிப் படைக்கிறோம். இதுதானே மனித வாழ்வின் நிலைப்பாடு? நமக்கும் ஏனைய உயிர்களுக்குமான இந்த வேற்றுமை தெரிந்ததுதானே என்று கேட்கலாம். பெரியவர் வாழ்வில் நடந்த ஒரு அசாதாரண சம்பவத்தோடு இதைத் தொடர்புபடுத்தி சொல்ல வரும்போதுதான் முழுமையாகப் புரியும்.
பெரியவர் தன் யாத்திரையில் இந்த பாரத பூமியில் செல்லாத இடங்களே இல்லை. அதிலும் தமிழ்நாட்டுக்குள் அவர் காலடி படாத கிராமங்களே கூட இல்லை எனலாம். தனது யாத்திரையின் ஒரு கட்டத்தில் ஒரு கிராமத்தில் தங்கினார். அப்போது அவரை ஒரு விவசாயி சந்திக்க வந்தபோது, அவனிடம் நலன் விசாரித்தார். அந்த வருடம் விளைச்சல் அபாரம். அதிலும் கடலை விளைச்சலால் நல்ல லாபம்” என்று அவர் கூறவும், பெரியவர் சற்றும் எதிர்பாராமல் அவரிடம் கடலையைக் கேட்டார். அந்த விவசாயியும் அதை எடுத்துவரச் சென்றார்.
ஆனால், விவசாயி வீட்டில் கொஞ்சமும் கடலை இல்லை. நல்ல விலை வந்ததால் விற்றுவிட்டதின் எதிரொலி அது. யாரிடமாவது கேட்கலாம் என்றாலோ அதற்கும் அவகாசமில்லை. இப்படி ஒரு நிலையில் தான், அறுவடையான வயலில் எலி வளைக்குள் கடலைகள் எப்படியும் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தெரிந்து, வயற்காட்டுக்குச் சென்று எலி வளைக்குள் கையை விட்டு கடலையை எடுத்தும் வந்துவிட்டார்.
அதைப் பார்த்த பெரியவரும் அதில் எலிகள் கொறித்திருப்பதைப் பார்த்து, ‘இது பறித்ததா கொறித்ததா?’ என்று கேட்கப் போக, விவசாயியும் உள்ளதை உள்ளபடி கூறிவிட்டார். பெரியவரிடம் லேசான சலனம். பின் அவரையும் அழைத்துக் கொண்டு எலி வளையுள்ள அந்த வயல் நோக்கி புறப்பட்டு விட்டார்.
ஏம்ப்பா… உன்கிட்ட இல்லைன்னா வரவேண்டி யதுதானே? இப்படியா எனக்காக எலி வளைக்குள்ள அது தனக்காக சேமிச்சு வெச்சதை எடுத்துண்டு வந்து தருவே! அப்புறம் அது என்ன செய்யும்? சன்னியாசியான நான், ஒரு எலியோட சாப்பாட்டைப் புடுங்கிச் சாப்பிடலாமா?
பூமி மாதா எல்லோருக்குமாதானே பயிர்களைத் தரா! நமக்கு பயிர் பண்ணத் தெரிஞ்சதால விளைவிச்சு எடுத்துக்கறோம். அதுக்குத் தெரியாததால விளைஞ்சதை எடுத்துக்கறது. மரத்துல பழுக்கற பழத்தை, நாம மரத்துகிட்டே கேட்டுண்டா பறிக்கிறோம்? அது நமக்காகப் பழுத்ததுன்னு பறிச்சு சாப்பிடறதில்லையா! இதையே எலி செய்தா குத்தமா?”
- என்று நடந்தபடியே அவர் பேசியதில் கம்யூனிசம், சோஷலிசம் என்று எல்லாமே அடங்கி இருந்ததை என்னவென்று சொல்ல? பிறகு, பெரியவர் அந்த எலி வளையின் முன்னால் நின்றார். அதில் இருந்து எடுக்கப்பட்ட கடலையுடன் பரிசாக வெல்லமும் பொரியும் எலி வளையின் முன்னால் வைக்கப்பட்டது. எல்லோரும் சூழ்ந்து நின்று பார்த்த நிலையில் பெரியவர் எலி வளையைப் பார்த்து உருக்கமா நிற்க, மெல்ல ஒவ்வொரு எலியாய் வெளிவரத் தொடங்கின. அந்தக் கடலையும் வெல்லமும் பொரியும் அவற்றுக்கு உணவாக ஆரம்பித்தன.
அடுத்த நொடியே பெரியவர் ஒரு கரிசனப் பார்வையும் நிம்மதிப் பெருமூச்சுமாய் அங்கிருந்து புறப்பட்டு விட, எல்லோரும் திரும்பித் திரும்பி பார்த்தபடியே விலகினர். அந்த எலிகள் எவ்வளவு பாக்கியம் செய்திருந்தால் பெரியவரே தேடிவந்து அவற்றுக்கு உணவளித்திருப்பார்?
ஒரு புராணக் கதை ஒன்று உண்டு.
வேதாரண்யம் கோயிலுக்குள் ஈஸ்வர சன்னிதியில் ஒரு எலி தினமும் தான் உண்பதற்கு எதாவது கிடைக்காதா என்று புகுந்து பார்க்கும். அர்ச்சகர் பூ சாத்தி சில சமயங்களில் பழங்களை வைத்துவிட்டு நடையைச் சாத்தியிருப்பார். அந்தப் பழம்தான் அதற்கு உணவு. அப்படித் தேடி வரும்போது சன்னிதியில் உள்ள விளக்கொன்று அணையும் நிலையில் இருக்க, இந்த எலி அதன் திரியை தன் கூரிய மூக்கினால் ஏதோ உணவு என்று தீண்டிப் பார்க்க முனைந்ததில் அந்தத் திரி மேலேறிட, தீபமும் விடிய விடிய எரிந்ததாம். அந்த ஒரு செயல்பாடே ஈஸ்வர சன்னிதியில் விளக்கேற்றிய புண்ணியமாகி, அந்த எலி அடுத்த பிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பார்கள். பெரியவரிடம் கடலை உண்ட எலி, நிச்சயம் ஒரு சிறந்த பிறப்பைத் தான் எடுத்திருக்கும் என்ற கூறத் தேவையில்லை.
பிற உயிர்களின் மீதான பெரியவரின் கருணைக்கு இது மட்டுமே சான்று இல்லை. இந்த எலி போல ஒரு நாயும் புண்ணியம் செய்திருந்தது. சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் நிலையில், நிதமும் மடத்தில் எல்லோருக்கும் பசியார அன்னம் போஷிப்பதுண்டு. அப்படி எல்லோரும் சாப்பிட்ட பின் அந்த இலைகளை எடுத்துச் சென்று போடும் இடத்தில், நாய் ஒன்று பசியோடு வந்து குலைத்தபடி இலைகளில் உள்ள உணவைச் சாப்பிட முயல்வதும், அதை இலையைப் போட வருபவர்கள் துரத்துவதும் தொடர்ந்து நடந்தது. அப்போது அந்த நாய் குரைக்கும்! அந்த சப்தம் முகாமிட்டிருந்த பெரியவர் காதிலும் கேட்டது.
அந்த நாய் ஏன் குரைக்கிறது?” என்று கேட்கவும், அவருக்கு காரணம் சொல்லப்பட்டது. அப்போது ஒரு இலையில் அவருக்கான உணவு வைக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே எடுத்துச்சென்று அந்த நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர்.
பிறகுதான் மற்றவர்களுக்குப் புரிந்தது. மறுநாள், எல்லோருக்கும் இலை போடும்போது நாய்க்கும் அதன் இடத்தில் அன்னமிடப்பட்டது. பெரியவரும் அது சாப்பிட்டு விட்டதா என்று கேட்ட பிறகே, தன் உணவில் கையை வைத்தார். அது குலைக்காததை வைத்தே அது பசியாறிவிட்டதைத் தெரிந்து கொண்டார். இந்தச் சம்பவங்கள் அவர் ஜகத்குரு என்பதோடு, எல்லா உயிர்களுக்கும் பொதுவானவர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டதே! எலிக்கும் நாய்க்குமே இந்த அளவு கருணை செய்தவர் நமக்குச் செய்யாமல் இருப்பாரா? நமக்கு அவர் செய்த பெரும் கருணைதான், அவரது ‘தெய்வத்தின் குரல்!’ கிட்டத்தட்ட 10,000 பக்கங்கள் கொண்ட பாகம், பாகமான நூல்! வாழ்நாளெல்லாம் அவர் பேசியதை, சிந்தித்ததை, செயல்படுத்தியதை அப்படியே பதிவு செய்து வைத்துள்ளது. இதில் இல்லாதது இல்லை. இந்த தெய்வத்தின் குரல் நூல்  நமது  வேதமாக,  நடைமுறை  வாழ்க்கையில்   கடைபிடித்தால்  குழந்தைகளே !............எங்கும் , என்றும்   எந்த  ஒரு துன்பமும்  இல்லை.

நன்றி : balhanuman.wordpress.com
மஹா பெரியவரின்  அருள்மொழி



எந்த வீட்டில், யார் இறக்கும் தருவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.


             குழந்தைகளே !  நாம்  அவர்களுக்காக   மரணத்தருவாயில் இருப்போருக்கு  நாம்  இதனை  அவர்கள் வீட்டிற்கு  சென்றோ.........அல்லது  செல்ல முடியாவிட்டால் ...... நமது  வீட்டில்  அமர்ந்தோ........ ராம  நாமாவை.....அந்த  உயிர் பிரியும் தருவாயில் உள்ள  ஜீவாத்மாவுக்காக   இதனை  செய்யலாமே!


கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மட்டுமே, மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லாவிடில் மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.


நன்றி : balhanuman.wordpress.com

Wednesday, March 19, 2014

பகைவனுக்கும்  அருள்வாய்  நன்னெஞ்சே!

அது   1857 பிரிட்டிஷார்  ஆட்சி செய்த  காலம். சிப்பாய்கள் எல்லாம்  தமது  எதிர்ப்பை  வெளிப்படுத்திக்கொண்டு  இருந்தனர். இரும்புக்கரம்  கொண்டு புரட்சியினை  அரசாங்கம்  அடக்கிக்கொண்டு இருந்தது. இதனால்  மக்கள்  சொல்லமுடியாத  துன்பங்கள் அனுபவித்துக்கொண்டு இருந்தனர்.


                               ஒவ்வொரு கிராமமும் பயத்தால் நடுங்கிக்கொண்டு இருந்தன. ராம்நகர்  என்னும்  கிராமத்தை விட்டு மக்கள் எல்லோரும் காலி செய்து  வெளியேறினர்.  அப்போது  அந்த ஊரை நோக்கி  ஒரு சாது வந்துகொண்டு இருந்தார். மக்கள்  அவரை பார்த்து  எச்சரிக்கை செய்தனர், இன்னும்  சிறிது நேரத்தில் பிரிட்டிஷ்  படை வீரர்கள்  வருவார்கள் என்றும் இரக்கமின்றி  கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று விடுவார்கள் என  சாதுவிடம்  கூறப்பட்டது.

              சாதுவோ, எதையும் பொருட்படுத்தாமல்  அந்த ஊரை  நெருங்கினார்.அதே  சமயம்  ஒரு பிரிட்டிஷ் படை வீரன்  அவரை நெருங்கி, தனது  துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால்  குத்தினான். பலமுறை கத்தி  குத்துபட்ட  சாது , கீழே  விழுந்து  மரணத்தை  நெருங்கிக்கொண்டு இருந்தார். அந்த  பிரிட்டிஷ் படை வீரனும்,  சாது  இறக்கும்  தருவாயில் இருப்பதை  உறுதி செய்ய , அவருருகில்  குனிந்து பார்த்தான்.


           இப்போது  சாது  கடைசி மூச்சினை  இழுத்து விட,  அந்த  பிரிட்டிஷ்  படை வீரனை பார்த்து........." (இறைவனே!)  அவனே ,,,,,,,,நீ!"  என்று   உயிரினை  விட்டார்.

     குழந்தைகளே !  நாம்  கவனிக்கவேண்டியது..........கடைசி  மூச்சு ........உயிர் பிரியும் நேரம் .........வேதனை..........ஆனாலும்..........தான்  உயிர் விட  காரணமானவனிடமும் ..........இறைவனையே   அந்த  சாது கண்டார். எவ்வளவு  அற்புதமான  பார்வை,,,,,,,,,இறைவனை   உணர்ந்த   தன்மை!














Friday, March 14, 2014

சாதுக்கள் - எதிலும்  நன்மையே செய்வர்.

    ஒரு ஊரில்  ஒரு சாது  துணிகளை தைப்பதன்  மூலம்  தனது உணவுக்கான பணத்தினை பெற்று வாழ்ந்து  வந்தார். ஒரு துணி வியாபாரியும்  அவரிடமே  துணிகளை  தைக்க தந்து, திரும்பப்பெற்று தனது வியாபாரத்தை நடத்தி வந்தார்.  அந்த வியாபாரி  சாதுக்கு  கூலியாக  பணத்தினை  கொடுக்கும் போது  செல்லாத ரூபாய் நோட்டுக்களை  கூலியாக  கொடுப்பது வழக்கம்.  சாதுவும்  எதுவும் கூறாமல்  அந்த கிழிந்த, செல்லாத  ரூபாய் நோட்டுகளை பெற்றுகொள்வார்.




        ஒருநாள்  கடையினை  வேலை செய்யும்  சிறுவனை  பார்க்கசொல்லிவிட்டு  சாது  வெளிஊருக்கு  சென்றுவிட்டார். வழக்கம் போல கூலியினை  கொடுக்க  வந்த  வியாபாரியும்  செல்லாத,  கிழிந்த  நோட்டுக்களை கொடுக்க  கடைச்சிறுவன்  " இவை எல்லாம் செல்லாத, கிழிந்த நோட்டுக்கள். இவற்றுக்கு பதிலாக  வேறு நோட்டுகளை தாருங்கள்." என்று  கூறிக்கொண்டு இருக்கும் போதே  சாதுவும்  வந்துவிட்டார்.

          சாது  நடந்ததை அறிந்தார். வியாபாரியை  அனுப்பிவிட்டு  பின்பு  கடை சிறுவனிடம்,"  கண்ணா !  அவர்  ஒவ்வொரு முறையும்  வேண்டுமென்றே  கிழிந்த, செல்லாத நோட்டுகளை தருவதை  வாங்கிவிடுவேன். அவற்றை எல்லாம்  குழிதோண்டி  புதைத்துவிடுவேன்.  நாம்  அவற்றை  வாங்கவிடில்  வேறு  நபர்களை  அவர்  ஏமாற்றுவார். எனவே  அவற்றை   நாமே  வாங்கி  புதைத்துவிடுவது  மற்றவருக்கும்  நல்லது."  என்றார்.

         குழந்தைகளே !  சாதுக்கள்  எப்போதும்  சமுதாயத்துக்கு  நன்மையே  சிந்திப்பர் , நன்மையே  செய்வர்.........நாமும்   இதுபோல  வாழ்தல்  நலம்  அல்லவா !............

Thursday, March 13, 2014

உலகமே  கடவுளின் வடிவம் 

     கீர்த்திவாசன்  என்பவர் நற்பண்புகளின்  வடிவமாக இருந்தார். அவருக்கு  நிலையானது எது?  இந்த  உலகின்  தன்மை  என்ன?  துயரமற்று  இருப்பது  சாத்தியமா ?  போன்ற கேள்விகள்  எழுந்தன. இவற்றுக்கு  விடை காண  அருகிலிருக்கும்  காடுகளுக்கு சென்றார். அங்குள்ள  ஒரு குகையினில்  அமர்ந்து  " ஓம்  ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் "  என்று  இடையறாது  நாம ஸ்மரணம்  செய்துவந்தார் .



       இந்த  நிலையில் அவருக்கு  கடவுளின்  திருக்காட்சி  கிடைத்தது. அப்போது  இந்த உலகில் உள்ள எல்லா பொருள்களும், உயிரினகளும்  கடவுளின்  தன்மையை  கொண்டுள்ளதாக  உணர்த்தப்பட்டார்.


       இந்த பேருணர்வுடன்  திரும்பி  தமது இருப்பிடம் வந்தார். இருப்பதெல்லாம் கடவுளின் வடிவமே  என்ற உறுதி ஏற்பட்டவுடன்  அனைத்து  உயிரினகள்  மற்றும்  உயிரற்ற  பொருட்களும்  கடவுளின்  தன்மை கொண்டதாக  அறிந்தவுடன்  அவருக்கு  அன்பும், அருளும்  நிறைந்தவராக .........எப்போதும்  இறை உணர்வுடன்  வாழ்ந்து  தம்மை  நெருங்கி வந்தவர்களையும்   அமைதியும், அருளும்  கொண்டவர்களாக 
அன்பு  நிறைந்தவர்களாக  மாற்றியமைத்தார்.



      ஆம், குழந்தைகளே!  எல்லாமும் இறைவனே  என்று உணரும் போது , அன்பும்...  சேவையும்  கொண்டவர்களாக  மாறிவிடுவோம். நமது  பார்வையை  சற்றே மாற்றி  பார்த்தல் போதும்....இனி  பார்வையை சற்றே  மாற்றி நம் முன் நிற்பது எல்லாம் இறைவன் உருகொண்ட  உருவமே ........என பார்ப்போமா ........................