Friday, March 28, 2014


மஹா  பெரியவரின்  கருணை 


ஆறறிவு வாய்த்துவிட்டதால், நாம் மற்ற  பிராணிகளை, பறவைகளை  அவற்றை எப்படியோ அடிமைப்படுத்தி ஆட்டிப் படைக்கிறோம். இதுதானே மனித வாழ்வின் நிலைப்பாடு? நமக்கும் ஏனைய உயிர்களுக்குமான இந்த வேற்றுமை தெரிந்ததுதானே என்று கேட்கலாம். பெரியவர் வாழ்வில் நடந்த ஒரு அசாதாரண சம்பவத்தோடு இதைத் தொடர்புபடுத்தி சொல்ல வரும்போதுதான் முழுமையாகப் புரியும்.
பெரியவர் தன் யாத்திரையில் இந்த பாரத பூமியில் செல்லாத இடங்களே இல்லை. அதிலும் தமிழ்நாட்டுக்குள் அவர் காலடி படாத கிராமங்களே கூட இல்லை எனலாம். தனது யாத்திரையின் ஒரு கட்டத்தில் ஒரு கிராமத்தில் தங்கினார். அப்போது அவரை ஒரு விவசாயி சந்திக்க வந்தபோது, அவனிடம் நலன் விசாரித்தார். அந்த வருடம் விளைச்சல் அபாரம். அதிலும் கடலை விளைச்சலால் நல்ல லாபம்” என்று அவர் கூறவும், பெரியவர் சற்றும் எதிர்பாராமல் அவரிடம் கடலையைக் கேட்டார். அந்த விவசாயியும் அதை எடுத்துவரச் சென்றார்.
ஆனால், விவசாயி வீட்டில் கொஞ்சமும் கடலை இல்லை. நல்ல விலை வந்ததால் விற்றுவிட்டதின் எதிரொலி அது. யாரிடமாவது கேட்கலாம் என்றாலோ அதற்கும் அவகாசமில்லை. இப்படி ஒரு நிலையில் தான், அறுவடையான வயலில் எலி வளைக்குள் கடலைகள் எப்படியும் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தெரிந்து, வயற்காட்டுக்குச் சென்று எலி வளைக்குள் கையை விட்டு கடலையை எடுத்தும் வந்துவிட்டார்.
அதைப் பார்த்த பெரியவரும் அதில் எலிகள் கொறித்திருப்பதைப் பார்த்து, ‘இது பறித்ததா கொறித்ததா?’ என்று கேட்கப் போக, விவசாயியும் உள்ளதை உள்ளபடி கூறிவிட்டார். பெரியவரிடம் லேசான சலனம். பின் அவரையும் அழைத்துக் கொண்டு எலி வளையுள்ள அந்த வயல் நோக்கி புறப்பட்டு விட்டார்.
ஏம்ப்பா… உன்கிட்ட இல்லைன்னா வரவேண்டி யதுதானே? இப்படியா எனக்காக எலி வளைக்குள்ள அது தனக்காக சேமிச்சு வெச்சதை எடுத்துண்டு வந்து தருவே! அப்புறம் அது என்ன செய்யும்? சன்னியாசியான நான், ஒரு எலியோட சாப்பாட்டைப் புடுங்கிச் சாப்பிடலாமா?
பூமி மாதா எல்லோருக்குமாதானே பயிர்களைத் தரா! நமக்கு பயிர் பண்ணத் தெரிஞ்சதால விளைவிச்சு எடுத்துக்கறோம். அதுக்குத் தெரியாததால விளைஞ்சதை எடுத்துக்கறது. மரத்துல பழுக்கற பழத்தை, நாம மரத்துகிட்டே கேட்டுண்டா பறிக்கிறோம்? அது நமக்காகப் பழுத்ததுன்னு பறிச்சு சாப்பிடறதில்லையா! இதையே எலி செய்தா குத்தமா?”
- என்று நடந்தபடியே அவர் பேசியதில் கம்யூனிசம், சோஷலிசம் என்று எல்லாமே அடங்கி இருந்ததை என்னவென்று சொல்ல? பிறகு, பெரியவர் அந்த எலி வளையின் முன்னால் நின்றார். அதில் இருந்து எடுக்கப்பட்ட கடலையுடன் பரிசாக வெல்லமும் பொரியும் எலி வளையின் முன்னால் வைக்கப்பட்டது. எல்லோரும் சூழ்ந்து நின்று பார்த்த நிலையில் பெரியவர் எலி வளையைப் பார்த்து உருக்கமா நிற்க, மெல்ல ஒவ்வொரு எலியாய் வெளிவரத் தொடங்கின. அந்தக் கடலையும் வெல்லமும் பொரியும் அவற்றுக்கு உணவாக ஆரம்பித்தன.
அடுத்த நொடியே பெரியவர் ஒரு கரிசனப் பார்வையும் நிம்மதிப் பெருமூச்சுமாய் அங்கிருந்து புறப்பட்டு விட, எல்லோரும் திரும்பித் திரும்பி பார்த்தபடியே விலகினர். அந்த எலிகள் எவ்வளவு பாக்கியம் செய்திருந்தால் பெரியவரே தேடிவந்து அவற்றுக்கு உணவளித்திருப்பார்?
ஒரு புராணக் கதை ஒன்று உண்டு.
வேதாரண்யம் கோயிலுக்குள் ஈஸ்வர சன்னிதியில் ஒரு எலி தினமும் தான் உண்பதற்கு எதாவது கிடைக்காதா என்று புகுந்து பார்க்கும். அர்ச்சகர் பூ சாத்தி சில சமயங்களில் பழங்களை வைத்துவிட்டு நடையைச் சாத்தியிருப்பார். அந்தப் பழம்தான் அதற்கு உணவு. அப்படித் தேடி வரும்போது சன்னிதியில் உள்ள விளக்கொன்று அணையும் நிலையில் இருக்க, இந்த எலி அதன் திரியை தன் கூரிய மூக்கினால் ஏதோ உணவு என்று தீண்டிப் பார்க்க முனைந்ததில் அந்தத் திரி மேலேறிட, தீபமும் விடிய விடிய எரிந்ததாம். அந்த ஒரு செயல்பாடே ஈஸ்வர சன்னிதியில் விளக்கேற்றிய புண்ணியமாகி, அந்த எலி அடுத்த பிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பார்கள். பெரியவரிடம் கடலை உண்ட எலி, நிச்சயம் ஒரு சிறந்த பிறப்பைத் தான் எடுத்திருக்கும் என்ற கூறத் தேவையில்லை.
பிற உயிர்களின் மீதான பெரியவரின் கருணைக்கு இது மட்டுமே சான்று இல்லை. இந்த எலி போல ஒரு நாயும் புண்ணியம் செய்திருந்தது. சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் நிலையில், நிதமும் மடத்தில் எல்லோருக்கும் பசியார அன்னம் போஷிப்பதுண்டு. அப்படி எல்லோரும் சாப்பிட்ட பின் அந்த இலைகளை எடுத்துச் சென்று போடும் இடத்தில், நாய் ஒன்று பசியோடு வந்து குலைத்தபடி இலைகளில் உள்ள உணவைச் சாப்பிட முயல்வதும், அதை இலையைப் போட வருபவர்கள் துரத்துவதும் தொடர்ந்து நடந்தது. அப்போது அந்த நாய் குரைக்கும்! அந்த சப்தம் முகாமிட்டிருந்த பெரியவர் காதிலும் கேட்டது.
அந்த நாய் ஏன் குரைக்கிறது?” என்று கேட்கவும், அவருக்கு காரணம் சொல்லப்பட்டது. அப்போது ஒரு இலையில் அவருக்கான உணவு வைக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே எடுத்துச்சென்று அந்த நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர்.
பிறகுதான் மற்றவர்களுக்குப் புரிந்தது. மறுநாள், எல்லோருக்கும் இலை போடும்போது நாய்க்கும் அதன் இடத்தில் அன்னமிடப்பட்டது. பெரியவரும் அது சாப்பிட்டு விட்டதா என்று கேட்ட பிறகே, தன் உணவில் கையை வைத்தார். அது குலைக்காததை வைத்தே அது பசியாறிவிட்டதைத் தெரிந்து கொண்டார். இந்தச் சம்பவங்கள் அவர் ஜகத்குரு என்பதோடு, எல்லா உயிர்களுக்கும் பொதுவானவர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டதே! எலிக்கும் நாய்க்குமே இந்த அளவு கருணை செய்தவர் நமக்குச் செய்யாமல் இருப்பாரா? நமக்கு அவர் செய்த பெரும் கருணைதான், அவரது ‘தெய்வத்தின் குரல்!’ கிட்டத்தட்ட 10,000 பக்கங்கள் கொண்ட பாகம், பாகமான நூல்! வாழ்நாளெல்லாம் அவர் பேசியதை, சிந்தித்ததை, செயல்படுத்தியதை அப்படியே பதிவு செய்து வைத்துள்ளது. இதில் இல்லாதது இல்லை. இந்த தெய்வத்தின் குரல் நூல்  நமது  வேதமாக,  நடைமுறை  வாழ்க்கையில்   கடைபிடித்தால்  குழந்தைகளே !............எங்கும் , என்றும்   எந்த  ஒரு துன்பமும்  இல்லை.

நன்றி : balhanuman.wordpress.com

No comments:

Post a Comment