Wednesday, August 27, 2014

பகவானது  சரணாகதி:


ramana maharishi, saranagathi, surrendarsurrender, ramana maharishi , annamalai, tamil பகவான் ரமணர்  அண்ணாமலையை  அடைந்து  தமது  தந்தையாகிய  அருணாச்சலேஸ்வரரிடம் தம்மை  முழுதும்  ஒப்படைத்து,  " உன்னிஷ்டம்........என்னிஷ்டம் "  எனவும் ...................... " உன் எண்ணம் எதுவோ  அது செய்வாய்".....   என்றும்   சரணாகதியின்  உருவமாகவே  தமது மீதிநாட்களில் ....... அண்ணாமலையில் ........உலவினார்.

பின்னாட்களில்  பகவானிடம்  ஒரு அன்பர், "பகவானே! ஸ்கந்தாஸ்ரமத்தில்  இருந்து  தாங்கள்  கீழே  ரமணாஸ்ரமதிற்கு  வந்தததற்கு  எது  காரணம்? "  என  வினவ  அதற்கு   பகவான் 
" மதுரையிலிருந்து   எந்த  சக்தி  அண்ணாமலைக்கு  இழுத்ததோ ......அதுதான்  ஓய்! இங்கும்  இழுத்துவந்தது!"  என்றார், எனில்  அவரது  சரணாகதியின்  அசலத்தன்மை................... ...அருணாச்சலத்தில்  வாழ்ந்த  54  ஆண்டுகளுக்கும்  மேலாக   அவருள்  நிலைபெற்று,.....அதுவாகவே  இருந்தார் ..... இது  இன்னும்  ஒரு  நிகழ்வால்  நனி  விளங்கும்.

அது  1946 ம்  ஆண்டாக  இருக்கலாம். பகவானது  ஜெயந்தி  கொண்டாட்டத்திற்காக  மக்கள்  கூட்டம் 
நிரம்பியிருந்தது.   ஏற்கனவே .......சுமார்  400 பக்தர்களுக்கு  மேலவும்  இருக்கலாம். அன்று  இரவு  12.00 மணியாகியும்  ஆஸ்ரமத்தின்  சர்வாதிகாரியாகிய  சுவாமி  நிரஞ்ஜனானந்தர்  தூங்காமல் ( அதிகாலை  3.00 மணிக்கே  எழுவதால்  இரவு 8.30 க்கு  தூங்கிவிடுவர்)  அறையின்  நடுவே  குறுக்கும்,  நெடுக்குமாக   கையை  பிசைந்து  நடந்துகொண்டு  இருந்தார் .  இதனை  பகவானது  அறையிலிருந்து  பார்த்த  அணுக்கத்தொண்டர்,  பகவானின்  அனுமதி  பெற்று  ஆபீஸ்  அறைக்கு  சென்று  சர்வாதிகாரியிடம்  விசாரிக்க , " நாளை  ஜெயந்தி விழா!  இங்கு  ஒரு  குண்டுமணி   கூட  அரிசி  இல்லை! பெட்டிகளில்   கொஞ்சம்  கூட  பருப்பும்  இல்லை.  இங்கோ....400 பேருக்கு  மேலே  உள்ளனர்.  நாளைக்கு   இன்னும்  நிறையவே   மக்கள்  வருவர்.   உணவுக்கு  என்ன  பண்ணுவது  என்று தெரியாத  கவலையினால்  தூக்கம்  வரவில்லை " என்று  வருந்தி கூற ............ 

இதைக்கேட்டதும்  அந்த  அணுக்கத்தொண்டருக்கும்  கவலை  தொற்றிக்கொள்ள  பகவானிடம்  வந்து....." பகவான்!  சின்னஸ்வாமி   கவலையில்  உள்ளார் ......நாளை  ஜெயந்திக்கு  சமைப்பதற்கு  அரிசியோ!...பருப்போ .......எதுவும்  இல்லையாம்!" என்று   கவலையுடன்  தெரிவித்தார் . பகவானோ  புன்னகையுடன்   "ஓ !..... அவன்  பொறுப்பை  ஏற்றுக்கொள்வதால்  துன்புறுகின்றானா? ஏன்  அருணாச்சலத்திடம்  பொறுப்பினை  ஒப்படைக்கக்கூடாது ..... .....மனதை  திருப்பி  அருணாச்சலத்திடம்  இருத்தினாலென்ன?.......மனதை  அருணாச்சலத்தில்  திருப்பி  இருத்தினால் ......பொறுப்பு    அவருடையதாகுமே!"......என்று  அருளினார்.   அணுக்கத்தொண்டரும்    சின்ன ஸ்வாமியிடம்  சென்று  பகவான்  கூறியதை  கூறினார்.
சின்னஸ்வாமியும்  பகவானிடம்  வந்து  நமஸ்கரித்து  விட்டு ... . ........ அவ்வாறே  தாம்  இருப்பதாகக்  கூறி....வெளியில்   வந்து......அண்ணாமலைக்கும்   நமஸ்காரம்  செய்துவிட்டுச்  சென்றார்.உண்மையில்  அடுத்த  இரண்டு  மணி  நேரத்திற்குள்  அது  நடந்தது.  ஒரு  மாட்டு வண்டி  நிரம்ப  அரிசி மூட்டைகள் ,  பருப்பு  மூட்டைகள்,  காய்கறி  சாமான்கள்  வந்திறங்கின.  எப்படியெனில்  அடுத்த  பத்து  கி.மீ. க்குள்   உள்ள  ஒரு  இடத்தில  பகவானது
 செல்வந்தரான  ஒரு   பக்தரின்  கனவினில்   பகவான்   தோன்றி, ஒரு  லிஸ்ட்  கொடுத்ததாகவும் ......அதில்  அரிசி  இவ்வளவு  மூட்டை .....பருப்பு  இவ்வளவு  ....காய்கறிகள்  அளவு...........  என  ஜெயந்திக்கு  தேவையான  எல்லாம்  அதில்  குறிப்பிடப்பட்டு  இருந்ததாகவும்,...... அவர்  உடனே  எழுந்து  அவருடைய  கடையிலிருந்த  பொருட்களை   வண்டியில்  கட்டி  அதிகாலை  3.00 மணிக்கு  ஆஷ்ரமத்தில்  சேர்க்க  கொண்டு  வந்ததாகவும்  கூறினார். 

வேறுயென்ன !.....சின்னஸ்வாமி  பகவானிடம்  ஓடிவந்து,  "பகவானே!  ஜெயந்திக்கு  தேவையான  சமையல்  பொருட்கள்  எல்லாம்  வந்துவிட்டன."  என்று  சரணாகதியின்  மகத்துவத்தை  உணர்ந்து  கைகூப்பி  வணங்கினார்.  இப்போது  அவ்வளவு  பேருக்கும்  சமைக்க  ஆளில்லை.  படுத்திருந்த  எல்லோரும்  எழுப்பப்பட்டு .....பகவானும்  அவர்களுடன்  சமையலில்  
பங்குகொண்டு ........அந்த  வருட  ஜெயந்தி  மிகச்சிறப்பாக   நடைபெற்றது.


 " நாம  இருக்கற  படி  இருந்தா ........
( ஆன்மாவிசாரத்தில்  .....சரணகதியில் )   நடக்கவேண்டியது     தானாகவே    நடக்கும்."       
                                                         ----பகவான் ஸ்ரீ ரமணர்


Tuesday, August 26, 2014

பகவானும்  பிராணிகளும்:இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்படும்  முன்பு  பகவான்  ரமணர்  மலையில்  இருந்தபோது  பகவானுடன்  அதிகம்  உரிமையோடு  இருந்தவை பிராணிகளும்,    பறவைகளுமே!   சொல்லபோனால்  பகவான்  மலையை  விட்டு  இறங்கி  இன்றைய  ரமணாஸ்ரமம்  ஏற்பட்ட  பின்பு, அவைகளின்  உரிமைகள்  நம்மை  போன்ற  மனிதர்களால்  பறிக்கப்பட்டது. பகவானுக்கும்,  அவைகளுக்கும்  இடையே   பல சுவையான   நிகழ்ச்சிகள்  நடந்துள்ளன. அவற்றுள்  சிலவற்றைப்  பார்ப்போம்.

பகவான்  பிராணிகளை ,  அவன்  என்றும்  அவள்  என்றுமே  அழைப்பார்.....ஒருபோதும்  அது  என்றோ  வேறு  எவ்வகையிலும்  அழைத்ததில்லை. அவரை  பொறுத்த  வரையில்  அனைத்துமே  ஆத்மசொருபமே! 

ஒரு  மனிதனிடம்   குரங்கு  பழகினால்,  அதை  மற்ற  குரங்குகள்  தங்கள்  இனத்தினில்  மீண்டும்  சேர்ப்பதில்லை. ஆனால்  பகவானுடன்  பழகும்  குரங்குக்கோ , அவைகள்  விதிவிலக்கு.  அந்த  இனத்தினில்  அவைகள்  மிகவும்  மரியாதைக்குரியனவாக   போற்றப்படும்.

குரங்குகள்  கூட்டம், கூட்டமாகவே  இருக்கும்.  ஒவ்வொரு  கூட்டத்திற்கும்  ஒரு  தலைவன்  உண்டு. அங்கும்  எல்லைகள் உண்டு.  அவைகள்  தங்களுக்குள்  எல்லைகள்  மீறப்பட்டால்,  சண்டைகள்    ஏற்படும். சண்டைக்கு   முன்னர்  தூதுவனால்  எச்சரிக்கபடுவர்.  பின்னரே  அவைகளுக்குள்   சண்டைகள்  ஏற்படும் .  இதுபோன்ற  சமயங்களில்  அவைகளின்  இரண்டு  குரங்குக்கூட்டதிற்கும்  நடுவராக  பகவானே   இருப்பாராம்.  அவைகளின்  பிரச்சனைகள்    பகவானின்  முன்பே  தீர்த்துவைக்கப்படுமாம்.ஒருமுறை  ஒரு குரங்கு  அடிபட்டு  நொண்டி, நொண்டி   இறக்கும்  தருவாயில்  இருந்ததை  பகவான்  பார்த்து,  அதனை  எடுத்து  வந்தார். பகவானுடனே  இருந்தது. சில  நாட்களில்  அதன்  காயங்களும்  ஆறின. சில  நாட்களில்  அதன்  கூட்டத்தார்   அதைத்தேடி   வந்தன.நொண்டியும்  அவர்களுடன்   திரும்பி  போனான். பகவானும்  "நொண்டி!  நீ  மீண்டும்  ராஜாவானால்  இங்கு  திரும்பி  வருவாயா ?" என்றார்.   நொண்டியும்  
மீண்டும்  போரிட்டு , அக்கூட்டத்தின்  தலைவனும்  ஆனான். பகவானுடன்  தங்கியிருந்த   நாட்களில்  அவனும்  தவம் செய்து  தனது  சக்தியை  வளர்த்து, போரிட்டு  வென்றதாக  பகவான்  கூறினார்.

பின்பு   என்ன?  அன்று  தமது  கூட்டத்துடன்  நொண்டி  திரும்பவும்  பகவானிடம்  வர .........அன்று  ஸ்கந்தாஸ்ரமத்தில்  ...நொண்டியும்  அவர்தம்  சகாக்களுக்கும்...............விருந்து  நடைபெற்றதாம்!இதுமட்டுமா !  பெண்குரங்குகள்  குட்டிகளை  ஈன்றால்.........அந்த  குட்டிகளை .....இரத்தம்  மற்றும்  தொப்புள்  கொடியுடனே  அவைகள்  பகவானின்  மடியில்   சேர்ப்பிக்குமாம்.  பகவானே  அந்த  குட்டிகளை  கழுவி  பின்னர்  தமது  மடியினில்  
 சிறிது  நேரம்  வைத்திருந்து......பின்னர்  தாய்க்குரங்கிடம்  தருவாராம்.  இவ்விதம்  அவைகள்  பகவானிடம்  தமது  பிறக்கும்  குட்டிகளுக்கும்  ஆசிர்வாதம்  பெற்றன.  

பகவானே  சொல்லியது ...." ஒருமுறை  ரமணாஸ்ரமத்தில்  இருந்தபோது  ஏதோ  உந்தித்தள்ள   மேலே  வேகமாக  சென்றேன்!  அங்கு  வழியில்  நொண்டி மற்றும்   ராணி  குரங்கும்,  குட்டிகளும் , மற்ற  குரங்குகளும்   என்னை  பார்த்ததும்  கைகூப்பி வந்துகொண்டு இருந்தன. என்னைப்  பார்த்ததும்  அழுதன. அப்பொழுது  நொண்டிக்கும்  மிகவும்  வயதாகி, நடக்கமுடியாமல்    இருந்தது.  அவைகள்   அனைத்தும்  அழுதுகொண்டே, கைகூப்பி .....பகவானே!  எங்களுடனே  ஸ்கந்தாஸ்ரமத்திற்கே  வந்துவிடுங்கள் .....நாங்கள்  உங்களது  அண்மையை  இழந்து  தவிக்கின்றோம்......என்றன. நானும்  அவைகளுடனே  சிறிது  நேரம்  அமர்ந்திருந்தேன்.  பின்பு  கூறினேன் ......எனது  கண்களிலும்  கண்ணீர்   வழிந்தது .......என்னால்  என்ன  செய்ய  முடியும்! இங்கு  என்னால்  நிரந்தரமாக  வர முடியாது. ஏனெனில்  ரமணாஸ்ரமதிற்கு  வரும்  மக்கள்  எல்லோரும், அங்கு  இருப்பவர்களும்  ஏமாற்றமடைவர். எனவே  திரும்பி  மேலே செல்லுங்கள். எப்பொழுதும்  உங்களுடனேயே  இருக்கிறேன்" ...... என்று  கூறி சற்று  நேரம்  சமாதானப்படுத்தினேன்.....என்றார்.  இந்த  நிகழ்ச்சி  நடந்தபோது  அருகில்  இருந்தவர்  குஞ்சுஸ்வாமிகள்   ஆவார்.  பல  வருடங்களுக்குப் பிறகு  இதனை  நினைவு  கூறும்  பொழுதும்   கருணையின்   தாக்கம் ......சுவாமியின்  கண்களில்   கண்ணீராய்    வழிந்தது......எனில்  பகவானது  கருணையினை 
என்னவென்று  விளக்குவது !........ பகவான்  ரமணரின்  கருணாமிர்தம்:

ஒருமுறை  விஸ்வநாத ஐய்யர்  பலாகொத்தில்  தங்கியிருந்து  வேந்தாந்த  நூல்களை  பாராயணம்
செய்துகொண்டு  இருந்தார்.  அவர்  சிறந்த  ஆங்கில 
பேராசிரியர்.    தமிழ்  மற்றும் 
சமஸ்கிருதத்தில்  புலமையும், அவற்றினை   நன்கு  கற்றரிந்தவருமாவார். இவர்  பகவானுடன்  மலையில்  உலாவச்  சென்றார். அப்போது  அவருள்   தாம்  படித்த   உபநிஷத்  வார்த்தைகளாக  'ஒருவன்  இந்த  உலகத்தில்  வாழ்ந்துகொண்டே ......உலகத்தை  எப்படி  பார்க்கவேண்டும்....சாதகன்  எப்படி  உலக வாழ்க்கையை  நடத்த  வேண்டும்'  என்பன  ஓடிக்கொண்டு  இருந்தது.

மலையின்  மேலே  ஏறிக்கொண்டு  இருந்தபொழுது  பகவான்  திடீரென  விஸ்வநாதய்யர்  பக்கம்  திரும்பி, ....  " விஸ்வநாதா !  உலகத்தை  பூராவும்   ஒரு  துரும்பா  நினைக்க  தெரியணும். "  பின்னர்  சற்றே  சில அடிகள்  நடந்து.....  நின்று.......   திரும்பி, 
" அதேநேரத்தில .....ஒரு  துரும்புக்கு  கூட  உலகத்துக்கு  கொடுக்கற  மரியாதையைக்  கொடுக்கணும்!" என்று  கூறி நடந்தார் .

இதனுள் .....எவ்வளவு  பெரிய  "மகா வாக்யம்" 
 அடங்கியுள்ளது,   உணர்ந்து  பார்த்தால் நம்மை  எவ்வளவோ  உயர்த்தும்.

மற்றுமொருமுறை,   விஸ்வநாதய்யரிடம்,  அங்கிருந்த  மரம், செடி, கொடிகளை  மற்றும்  கட்டிடங்களையும்  காட்டி, "  இதெல்லாம்  யார்   உருவாக்கினது, அந்த  ஈஸ்வர  சக்தி ......நீயா  உருவாக்கினது ? எல்லாமே  அந்த  அதிசய  சக்தியால  ........ உண்டானது. அதனால  எல்லாத்துக்கும்  மரியாதையை  தரணும்!".....என்றார்.


பகவான்   ரமணரின்  கருணாமிர்தம்:
பகவான்  ரமண  மகரிஷியால் ' நாகு' என்று  செல்லமாக  அழைக்கப்பட்ட  நாகலட்சுமி அம்மாள் 
ஒரு முறை  சமையலறையில்  சேவையில்  இருந்தபொழுது , பகவான்  சமையலறைக்கு   விஜயம் செய்தார். 

 அப்பொழுதெல்லாம் அண்ணாமலை  டவுனில்  'நாகு '  தங்கியிருந்து அதிகாலை  5 மணிக்கு சமையல்  செய்ய  வந்துவிடுவார்.  மீண்டும்  மாலை  5 மணிக்கு  சென்று விடுவார்.  பகல்  பொழுதில்  சமையல்  அறையில்  சேவையில்  இருப்பதால் அவர்களுக்கு  பகவானுடன்  பேசவோ ....உபதேசங்களை  கேட்டு மகிழவோ  முடியாது. இதை  அறிந்த கருணைக்கடலான  பகவான்  மதியம்  12 லிருந்து  1 மணி வரை  சமையலறையில் ,  சமையல்  குறிப்புகள்  மற்றும் அவர்களுக்கு  ஏதோ ஒரு  வகையில்  உதவி   அவர்களுடன்  இருப்பார். அப்படிதான்   ஒருமுறை  வந்தபோது, 'நாகு' வை  அழைத்து,

' நாகு ' இமையமலையில்  தவமியற்றினாலும், சிவத்தை  உணர்ந்த  மகான்கள், அண்ணாமலை  பிரதக்ஷினத்தின்  மேல்  உள்ள  ஈடுபாட்டால் இங்கு  வருவர். அவர்கள்   தங்களை  சாதாரணமாக  மானிடர்கள்  அடையாளம்  கண்டுகொள்ள  முடியாதபடி  தங்களை  பைத்தியம்  போலவும்,  பிச்சைக்காரர்கள்  போலவும்  மறைத்து  வருவர். உன் வீட்டின்  முன்னே  யாரேனும்  வந்து  கைத்தட்டி  யாசகம்  கேட்டால்,  இல்லையெனாமல்   கையிலுள்ளதை  கொடுத்து  விடு! அவர்களை  வெறும்  கையுடன்  அனுப்பிவிடாதே !" என்றார்   பகவான்  ரமணர். இந்த  அன்னையும்  அன்றிலிருந்து  தனது  கடைசி  காலம்  வரை  அவ்வாறே  நடந்து .........' கொடுப்பவரும்  ஆன்மாவே ...பெறுபவரும்   ஆன்மாவே.... (பிறருக்கு  ஒருவன்  கொடுப்பதெல்லாம்  ஒருவன்  தனக்கே  கொடுத்துக்கொள்கிறான்) ......என்று   தாம்  உணர்ந்ததாகவும் ......  இதனால்  தாம் பலப்பல  சாதுக்களின்  தரிசனமும் ,  ஆசிகளையும்  பெற்றதாக  கூறியுள்ளார்.
Monday, August 25, 2014

பகவான்  நமக்காக  செய்யும்  பிரார்த்தனை :


பரம நின்  பாதம்  பற்றப்  பற்றும்

பரவறிய  அறிய  அரியரிப்  பரமன்

பரம்  உனக்கு  எனவென்  பணியறப்  பணியாய் 

பரித்திடும்  உனக்கு  எது  பாரம் 

பரம நின்  பிரிந்து  இவ்வுலகினைத்  தலையில் 

பற்று (மற்று )  யான்  பெற்றது  போதும் 

பரமனாம்  அருணாச்சலா !  எனை  இனி  உன் 

பதத்தினின்று   ஒதுக்குறப்   பாரேன் .

                                    அருணாச்சலப்  பதிகம்.


பொருள்:

பரம்பொருளாகிய  அருணாச்சலா!  இந்த  உலக  பந்தங்களாகிய  பற்றுக்களை    ஒழிப்பதற்கு .........உனது   திருவடிகளில்  சரணடைந்து   பற்றிக்கொள்ளவேண்டும்  என்ற .......  மெய்யறிவு, .... விவேகம்   இல்லாத  அறிவீலிகளில்..........  யானே   முதன்மையானவன். 
 என்னை   உய்விக்கும் பொறுப்பையும்.......  உன்னுடையதாகவே , நீயே  ஏற்றுக்கொண்டு,.........எனது  செயல்கள்  யாவும்  அறவே    ஓயும்படி  செய்தருள்வாயாக.  

எல்லாவற்றையும்   தாங்கிடும்   உனக்கு.........   எதுதான்   பாரமாகும்?  மதிமயக்கதினால்  உன்னைவிட்டுப்  பிரிந்து .. ....உலக பந்தத்தை ...
 ( நான் ,  எனது ..... ......என்னுடையது   என்னும்) உலகப்பற்றை ....என் தலையில்   தாங்கி ........இதுவரை  சுமந்துகொண்டு   துயருற்று,.....அலைந்தது  திரிந்து ....... அடைந்த  துயரம்    போதும் ..........அருணாச்சலா !  இனிமேலாவது  என்னை   உன்
 திருவடிகளின்   பாதுகாப்பிலிருந்து  விலக்குவதற்கு  நினையாமல்  கருணை  புரிவாயாக !Saturday, August 23, 2014

பகவான் ரமணரின் கருணை

பகவான்  ரமணரின்   கருணை:


ஒரு  நாள்  இரவு  பகவான்  ரமணர்  இரவினில்   ரமணாஸ்ரமத்தின்  பின்புறம்  இயற்கை  உபாதியை  கழிக்க  சென்றார். அவருடன்  எப்போதும், எங்கும்  கூடவே  செல்லும்  அணுக்கத்தொண்டர்  சற்றே  தூரத்தில்  நின்று கொண்டார்.     சுமார்  இருபது  நிமிடங்கள்  கழிந்தன. பகவான்  வரவில்லை.  சற்றே  பதைத்து  பகவானைத்  தேடி  சென்றவர்,  அங்கே  கண்டது ...............


உடல்  முழுதும்  சொறி சொறியாய் .....தோல்கள்  முடியிழந்து ........சொட்டை மற்றும்  புண்களுடன்  பார்க்கவே  மிகுந்த  அருவருப்புடன்  உள்ள  நாய்  நோயுற்று .........பகவானை  நக்கிக்கொண்டு   இருந்தது.  வாலை  ஆட்டி,  ஆட்டி....    மீண்டும்   தன்னுடைய  அன்பினை  .......பகவானை  நக்கி , நக்கி  வெளிப்படுத்திக்கொண்டும்   இருந்தது.  பகவானும்  அதன்  அருகில் அன்போடு  அமர்ந்த  வண்ணம்  அதற்கு  தன்னை  முழுதும்  அனுமதித்து .........தடவி  தடவி ...." போதுமாடா !....போதுமாடா !"     இன்னும்  வேண்டுமா?"  என்ற  தன்னுடைய  கருணையை  அளித்தார்.


அன்று  இரவு .....கை, கால்களை  அலம்பாமல்  அப்படியே  படுக்கைக்குச்  சென்றுவிட்டார்.  மறுநாள்  காலை  ஆசிரமத்தின்  பின்புறம்  அந்த  நாய்  இறந்து  கிடந்தது. இதைப்  பற்றி  அணுக்கத்தொண்டர்  இரவு  நடந்ததும் பற்றி  பகவானிடம்  வினவ ......பகவான்  அருளியது .....


" அவன்  இரண்டு  மூன்று   நாட்களாகவே   தன்னைப்  பார்ப்பதற்கு   ஆசிரமத்தினுள்  நுழைய  முயற்சிக்க  முயன்றும்,  ஆசிரமத்து  நாய்களும், மற்றவர்களும்  அதனை  துரத்தினர். அதன்  முடிவும் நெருங்கியது , என்னை  பார்க்கவேண்டும்  என்ற  அவனுடைய  விருப்பமே  அங்கு  தன்னை  செல்ல வைத்ததாகவும்,  அன்று  இரவு  அவன்  தன்னுடைய  அன்பை  வெளிபடுத்திய
பின்னரே    இறக்க  வேண்டும்   என்ற  அவனது   விருப்பத்தினை  நிறைவேற்றியதாகவும்",   பகவான்   கூறினார்.அதுமட்டுமல்ல, எந்த  ஒரு  விலங்கும்  தன்னை'  நாடி அண்டுவது ......என்பது  .தங்களுடைய  கர்ம  வினையை  நீக்கிக்கொள்ளவே  என்றும் ......எந்த  உடம்பினில்  எந்த  உயர்ந்த,  பக்குவ   ஆன்மா  இருக்கும்  என்பது  அறிய  முடியாது .....எனவே  அவற்றை  அலட்சியப்படுத்தக்கூடாது,  அவற்றுக்கு தீங்கிழைக்கூடாது  என்றும்  அருளினார்.


 அந்த  நாய்  வடிவில்  வந்த  அந்த  புண்ணிய ஆன்மா .. யாரோ ?  எவரோ!.....என்ன  பேறு  பெற்றதோ . ........பகவானை  அண்டி ......கடைசி  நேரத்தில்.......தமது  அன்பினால்   பகவானை  ஈர்த்து ....அவரது  அருள் பெற்று   முக்தியடைய ...........என்ன  தவம்  செய்தனை ....! 

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”!


7 Votes

Children
பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!
அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!
அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.
“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.
நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.
“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.
இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !
அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!
உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

நன்றி:  sage  of  kanchi

Bhagawan Ramanar’s parenting


 
1 Votes

ப்படித்தான் ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று!
இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார்! அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே? கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…’ என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய்! இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும்? அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும்? இந்த விரிசல் சேருமா? சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.
கருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான்! அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர்! குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.
ஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.
அடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர்! ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்!
அன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா? முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும்? இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.
சில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது.
குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.
ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.
‘நான்’ எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது?!
நன்றி : sage  of  kanchi
மஹா பெரியவா : ராம  நாம  மகிமை

periaval


Thukkiri Paati
காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லி தலையசைத்தார்.
சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, “”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்!” என்றார்.
“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.
“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். பெரியவர், ””அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.
“” துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார்.
பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.

நன்றி : sage  of  kanchi

மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் மகா சுவாமிகளுடன் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்…
எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அய்யர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என்றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினே?’ என்றார்.
‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.
‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.
சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.
எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன். சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”
மஹா பெரியவா அருள்வாக்கு : -
  • எந்த வழியில் எவன் சென்றாலும் அது ஒரே இடத்தில் தான் வந்து சேருகிறது என்று வேதத்தில் மாத்திரம் சொல்லியிருக்கிறது.
  • முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்நாளும் சேர்ந்து விட்டோம் என்று ஆக்கிக் கொண்டால், அதுவே யோகம்.
  • கல், மண், செம்பு என்று எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் ஆண்டவன் வருவான்.

  • மாயைக்கு ஆளான நான் என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கிற அந்த வெறும் நான் எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்?

நன்றி : balhanuman's blog
பகவானின் ஹாஸ்யம்  கலந்த  போதனை :பகவானை   அன்று  தரிசனம்  செய்ய  அரசின்  முக்கியமான  அதிகாரி  ஒருவர்  வருவதாகவும்,  அவரால்   தரையில்   அமர  முடியாது  எனவும்,  அவருக்கு   ஒரு  நாற்காலியும்  ஆஷ்ரம  அலுவலகத்தில்  ஏற்பாடும்  செய்யப்பட்டு  இருந்தது. இது  பகவானின்  ஒரு  அணுக்கத்தொண்டருக்கு  பிடிக்கமால்  முணுமுணுத்துக்கொண்டே  இருந்தார். அந்த  அன்பர்  சென்றபின்பும்  அணுக்கதொண்டரின் 
புலம்பல்கள்  நிற்கவில்லை.

பகவான்  இதனை  அறியாதவரா  என்ன ?  புலம்பும்  தொண்டரை  அழைத்தார் ....." என்னவோய் !..... உன்
 பகவானின்  முன்பு  யாரும்  நாற்காலியில்  உட்காரக்கூடாதா ? உமது  பகவானின்  மரியாதையை  போய்விட்டதாக  புலம்புகிறாயே?  அவர்  போய்விட்டார்...........இப்போது  இவ்வளவு  உயரத்தில்  இவர்  உட்கார்ந்து  இருக்கிறாரே ......இவரை  என்ன  செய்ய  போகிறாய்?"  என்று   கூறி .....அறையின்  மூலையின்  மேற்கூரையினைக்  காட்டிக்  கேட்க .......அந்த  தொண்டர்  மேலேப்  பார்க்க ...அங்கு  ஒரு  குரங்கு  உட்கார்ந்து  கொண்டு  இருந்தது.

மகான்கள்  தவறினை  சுட்டிகாட்டுவது  கூட  எவ்வளவு  ஹாஸ்யமாயும்  பண்புடனும்  உள்ளது.

மிக உயர்ந்த சரணாகதி நிலைஉன்னிடத்தில்  ஒப்புவித்த   உள்ளத்தால்   எப்போதும் 
உன்னைக்கண்டு,  எல்லாமும்  உன்  உருவாய் ,
அன்னியமில்   அன்பு  செய்யும்  அண்ணோன்   அருணாச்சலா 
வெல்கும்  இன்ப  உருவாம்   உன்னில்   ஆழ்ந்தே!
                                                                                                                       அருணாச்சல  பஞ்சரத்னம் 

பொருள் :

அருள்மிகுந்த  அன்பே  வடிவமான  அருணாச்சலா ! உன்னையே  சரணாகதியடைந்து,   அனைத்தையும்  உனக்கே  ஒப்படைத்து,  தூய்மை  நிறைந்த  உள்ளத்தினால்  காணக்கூடிய  உருவம்  அனைத்தையும்  உனது  சொருபமாகவே  கருதி , உன்னிடம்  
-அனன்ய  ( இரண்டற்ற---நான் ,  நீயற்ற .... )  பக்தி  செலுத்தும்  உத்தம  பக்தன்  சுக  சொரூபமான  உன்னில்  இரண்டறக்  கலந்து  பேரின்ப  நிலை  எய்துகிறான்.


இந்த  மனிதபிறவி  இதற்கே !


திருவாசகம் --------ரமணரின் 

 பாடலுடன் .......

 
கோயில் திருப்பதிகம் 

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;
சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

   உனது  அருளால்  இன்று ...எமது  உள்ளத்தில்   உள்ள  அஞ்ஞான  இருளும்  நீங்கியது   எவ்வாறு  எனில்   சூரியனை  கண்ட  இருள்  விலகுதல்  போல  ...........எமது  உள்ளத்தில்  இருக்கும்  உமது  தன்மையினை  அறிந்ததால்  ( நினைப்பற --எண்ணங்களற்ற இடத்தில்  இருப்பது ... இதைத்தான் .....(உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே!) ....உணர்வே  வடிவமாய் .....அறியும்  மனம்  இறந்ததால் .....அங்கு  இருக்கும்  உணர்வு  வடிவமாகிய....உன்னை  அன்றி  வேறு  எதுவும்  இல்லை .....வெளியிலும்  எல்லா  உயிரினம் ,  பொருட்களும்  இந்த  உணர்வே  வடிவமாய் .....பிரபஞ்சமாய்  இருக்கிறது.

இந்த   உணர்வு  வடிவே  ஆன  சிவத்தை  வெளியில்  காணும்  பொருட்களிலும் ....ஐந்து  புலன்களாலும்  உணர்வதால்  சிவமே!   வெவ்வேறு  குணங்களாய்  விரிந்த  மனமானது  ஒடுங்கி  ....சென்று   சென்று  அணுவாய்   தேய்ந்து , சிவசொரூபத்தில் .....ஆன்மாவில்  கரைதலை   அணு அணுவாய்   என்றும் ........

இந்த  உணர்வு  அன்றி  ஒன்றுமில்லை  என்பதாலேயே .......  உன்னை அன்றி  ஒன்றுமில்லை   என்கிறார்   .....மாணிக்கவாசகர்.
இந்த  உணர்வு  நிலையை  வேறு  யார்  வந்து  அறிவித்து
 ( மொழியால்....வார்த்தைகளால் ) சொல்லமுடியும்.  வேறு  என்ன?  மௌனம்  தான் .

இதை தான்  ரமண மகரிஷியும்  
தலைவ!  நின்  தன்மை  என்ன? என்பாருக்கு  தலை குனி  சிலை என  வைத்தாய் !   என்கிறார். தன்னுடைய  தலைவனின்   தன்மையை  கேட்கும்  உலகத்தவருக்கு  ........உன்னை  பற்றி   எதுவும்  சொல்லமுடியாத   தலையை  குனிந்து  நிற்கும்  பெண்ணாய் .....வைத்தாயே!  என்று  அருணாச்சலத்தை  .......தாம்  பெற்ற  அனுபவத்தை  கூறுகிறார்.
யோகி  ராம்சுரத்குமார் .......கடவுளின்  குழந்தை :


திருவண்ணாமலை வந்த காசி மகான்!
கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதைக் கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.
விளைவு- மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று பின்னால் பெயர் வந்தது.
இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம், ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளை நிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே, உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது.ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப் படுத்தினர்.
அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க… ‘இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி- விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்’ என்றார்.
காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். எத்தனை மகான்கள் தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனித மான இடம்… அவருக்கு மெய்சிலிர்த்தது.
இந்தப் புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவ லிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது.
இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அது’வே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.
இது என்ன… இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்… இந்தத் தவிப்பு… இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே… இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே. அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ..? உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறுவிதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியாமல் போனது.
மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப் படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்குக் கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும் மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தைக் கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும்; உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இதுதான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்- தந்தை. ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.
பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார். பள்ளிக்கூடம் சரியாகும் வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.
நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்றுகூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.
பள்ளிக்கூடம் நடக்கத் துவங் கியது. சிறிய வருமானம்; ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.
தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்… அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை… பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீஅரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும் பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.
என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா… அரவிந்தரை நோக்கிப் போவதா… மௌனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ..?
தயங்கினார்; குழம்பினார்.
எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார்.
ஆசிரியர் அவரை மாணவர் களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.
யார் கையேந்திக் கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது.
கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது…
ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! இவரே என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச் சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.
ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போக முடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.
அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப் பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே… என்று கவலைப்பட்டார்.
அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். ”இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.
உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும்புலப்பட வில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமான வராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடி களில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயத மான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.


திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.
தங்க நாணய மயமான சிரிப்பு… தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும், திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.
புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.
இது எப்படி சாத்தியம்..? கேட்டார்கள். ”இந்தப் பெயரைச் சொன்னால் போதும்… எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது ”கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார்” என்பார்.
இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.
கணவன் – மனைவிக்குள் சண்டை! மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார்! ‘ரொம்ப நல்லது. செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று, ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.
என்னாயிற்று..? எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி…
”பகவான்… உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். வேலை செய்யவில்லை. மாறாக, என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்து விடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார்- உங்களுடைய பக்தராக!” என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு சௌக்கியமாக வாழ்ந்தது.
பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்… வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்… அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது, ‘வந்தே மாதரம்’ என்றும், ‘பாரத் மாதா கி ஜேய்’ என்றும், ‘ராம ராம ராம’ என்றும், ‘ஓம் ஸ்ரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.
ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, ‘யோகி ராம்சுரத்குமாரை தரிசித்துவிட்டுப் போகலாம்’ என்று வந்தார். தான் திருப்பதிக்குப் போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்குப் போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் ‘சரி’யென்று சொல்லி, ”வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்தப் பிச்சைக்காரன் யார்’ என்பதைக் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்டது ஞாபகம் வந்தது.
”பெருமாளே… திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?” என்று உரக்க வினவினார்.
”நேனே” என்று கருவறையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாகப் புரிந்தது.
இந்தக் கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது… தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்துபோய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு…
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான். அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக்கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.
வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து, வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.
மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, ”யோக்யதை இருந்தால் கூப்பிடுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் பேசுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்தக் கதவு திறந்தது.
‘உனக்கு என்ன வேண்டும்..?’
‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. எனக்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக!
அவர் பதறினார். ‘இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா!’ என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார்.
எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுகோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துகள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.
ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளளியைப் பெருக்கி, இறை தரிசனமும் காட்டினார்.
யோகி ராம்சுரத்குமார்… 20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலுமுள்ள பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
திருவண்ணாமலை செங்கம் ரோடில் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.
‘யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார் என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்னை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்’ என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்!

நன்றி : balahanuman blogs