Friday, April 18, 2014

மஹா பெரியவா  அருளுரை :-


செய்ய வேண்டிய பணி:-

   தங்கள் க்ராமத்தில் அல்லது பேட்டையில் ஒருத்தன் சாகிற நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தால் அங்கே ஸங்கத்திலிருந்து ஒருத்தரோ சிலரோ போக வேண்டும். வீட்டிலே இல்லாமல் ஆஸ்பத்திரியிலோ ஜெயிலிலோ உயிரை விடுகிறவர்ளும் உண்டு. எனவே இப்பேர்ப்பட்ட இடங்ளுக்கும் தங்களை அனுமதிக்கும் படியாக அந்தந்த அதிகாரிகளிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே வெறும் கையோடு போகக்கூடாது. நாமம்தான் ஸர்வரோக நிவாரணி என்பது வாஸ்தவமே. அதற்கு வெளி வஸ்து ஒன்றும் வேண்டியதில்லைதான். ஆனால் ஸ்தூலமாக ப்ரஸாதம் என்று ஒன்றைக்கொண்டுபோய்க் கொடுத்தால் அதற்கும் ஒரு தனி உத்ஸாஹ சக்தி உண்டுதான்;அது சாகிற ஜீவனுக்கு ஜாஸ்தி ஆறுதலாக இருக்கும். ஆனதால், முதலிலேயே கையில் சிவன்கோவில் விபூதி, பெருமாள் கோயில் துளசி 'ஸ்டாக்'வைத்திருக்கவேண்டும். அம்பாள் கோயில் குங்குமம், முருகன் அல்லது பிள்ளையார் கோயில் விபூதி என்று எது இருந்தாலும் ஸரி. சிவபரமாகவும், விஷ்ணுபரமாகவும், ஏதாவது இரண்டு கோயில் ப்ரஸாதம் ஸ்டாக் இருக்கவேண்டும். கங்கா ஜலம் ஸர்வ பாப சமனம் ஆனதால் சங்கா தீர்த்தமும் வைத்திருக்க வேண்டும். மரணமடைகிற ஜீவன் சைவ மதமோ, வைஷ்ணவ மதமோ அதைப்பொறுத்து அந்தந்த ப்ரஸாதத்தை எடுத்துப்போக வேண்டும். கங்கா தீர்த்தம் எல்லோருக்கும் பொது. அநேக சைவர்கள் துளஸி ப்ரஸாதத்தையும் ஆக்பிக்ஷேக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் வைஷ்ணவர்கள்கூட, ஈஸ்வரன் கோயில் ப்ரஸாதம் என்றால் விபூதி ப்ரஸாதம் கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆனால் நாம் அவரவர் அபிப்ராயத்துக்கு அநுகூலமாகத்தான் ப்ரஸாதத்தைத் தரவேண்டும். மரண ஸமயத்திலே ஓர் இடத்தில் போய் ஸித்தாந்தச் சண்டைகளைக் கிளப்பக் கூடாது. யாருக்கு எது ஹிதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ப்ரஸாதமாக எடுத்துப்போக வேண்டும்.


    விபூதிப்ரஸாதம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கோ, அல்லது தனிக் கோயிலில் இருக்கிற பிள்ளையாருக்கோ, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கோ அபிஷேகம் பண்ணப்பட்ட விபூதியாக இருக்க வேண்டும். ஸாக்ஷ£த் பராசக்தியான அம்பாள் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமும் கங்கா ஜலத்துடனோ, கங்கா ஜலம் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாகவோ வைத்திருந்து, மரிக்கிறவனுக்குக் கொடுக்கலாம். இதேபோல் விஷ்ணுபரமாக, பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளஸியைக்கொண்டு வந்து உலர்த்தி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். பெருமாள் பாதத்தில் அபிஷேகமான தீர்த்தமும் கொடுக்கலாம். கங்கை கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வைஷ்ணவர்களுக்குப் பெருமாள் பாத தீர்த்தம் தரவேண்டும். பெருமாளுக்கு நித்யப்படி முழு அபிஷேகம் இராது. திருமஞ்சனம் என்று சில நாட்களில்தான் செய்வார்கள். அதனால் மூர்த்தியின் பாதத்தில் மட்டும் அபிஷேகம் பண்ணுவித்து அந்தத் தீர்த்தத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்கும் கங்கை கைவசம் இருப்பது நல்லது.

       சாவு என்றால் எவனுக்கும் பயம்தான். ஆயுஸ் முழுக்க நாஸ்திகனாக இருந்தவன்கூட அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின்கையில் தானிருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்கமாட்டான். அந்த நேரத்திலே பயத்தைப்போக்க அந்த சக்திதான் கதி என்ற எண்ணம் எவனுக்கும் வராமல் இருக்காது. எவனுமே ஈஸ்வர த்யானத்தோடுதான் சாக விரும்புவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனதால், நாம் அவனுக்கு உபகரிப்பதை அவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வான். அவனுடைய பந்துக்களும் இந்தக் கைங்கர்யத்தை வரவேற்பார்கள். சில கிழம் கட்டைகள் போகாதா என்று இருக்கும்போது, வைத்யம் பார்க்கிறோம் என்று நாம் போனால் ஒருக்கால் பந்துக்கள் அசட்டை பண்ணக்கூடும் ஆனால் 'புறப்பாடு'நன்றாக நடப்பதற்கே நாம் உபகாரம் பண்ணுகிறோம் என்றால் எவரும் ஆக்ஷேபிக்கமாட்டார்கள்!அதிலும் நாம் அவர்களுக்குச் எந்தச் செலவும் சிரமமும் வைக்காததால் நிச்சயம் ஆக்ஷேபிக்கமாட்டார்கள் ஆனதால் நாம் இப்படிப்பட்ட தொண்டு செய்கிறோம் என்று தெரிந்துவிட்டால், அவர்களே நம்மைக் கூப்பிடுவார்கள். கூப்பிடாவிட்டாலும் நாம் போகவேண்டும். அவர்கள் கடும் நாஸ்திகர்களாக இருந்து ஆக்ஷேபித்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். அப்படியும் கேட்காவிட்டால் திரும்பிவிடலாம். ஆனால் அப்போதுகூடக் கோபம் இல்லாமல் சாகிற ஜீவனுக்கான ப்ராத்தனையை நமக்குள் செய்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்யப் பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது தொண்டே இல்லை.


உயிர்பிரிகிறவனுக்கு உயர் உதவி


    இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது;அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

   இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

      நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்;அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே''என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ ? உயிர்கொண்டு போம் பொழுது ?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ ?


                        என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ''கடைசியில் எதெதை நினைத்தாலும் அத்தை அடைகிறான்''என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

        எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

   கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்;நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

         புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

   இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும். 


    செய்யவேண்டியது என்னவென்றால், ப்ராணா வஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் ப்ரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போடவேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு 'சிவ சிவ சிவ சிவ'என்றோ 'ராம ராம ராம ராம'என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம். ஜீவன் காதிலே அதுபட்டு மனஸைத் திருப்ப வேண்டுமாதலால், உயிர்போகும் வரையில் இப்படி நாம ஜபம் செய்வதுதான் ச்ரேஷ்டம். ஆனால் ப்ராணாவஸ்தையிலேயே ஒரு ஜீவன் மணிக்கணகாகக இழுத்துக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?நமக்கு மற்றக் கார்யம் இருக்கத்தானே செய்யும்?அதனால் பக்கத்திலே பந்துக்களில் யாராவது ஒருத்தர் முறைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து நாம ஜபம் பண்ணும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு நாம், 'நம் கடமையைக் கொஞ்சமாவது செய்தோம்'என்று புறப்பட வேண்டும். குறைந்த பக்ஷம் சிவநாமாவோ, ராமநாமவோ 1008 தடவையவது நாம் ஒரு ஜீவனுக்காகச் சொல்லவேண்டும். இப்படிப் பலபேர் சொன்னது அந்த ஜீவனுக்குள்ளே போய் தானாக அது உள்நினைவில் பகவானை நினைத்துக்கொண்டிருக்கும் படியாகப் பண்ணியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷந்தான். நாம் கடைசிவரை இருக்கமுடியாமல் வந்துவிட்டாலும்கூட, ஒரு ஜீவன் பிரிகிறபோது அங்கு பகவந்நாம சப்தம் இருக்கும்படியாக அவனுடைய பந்துக்களையாவது ஜபிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வருவதே ச்லாக்யம்.


                                                                   --------தெய்வத்தின் குரல் -மூன்றாம்  பாகம் 

நண்பர்களே !.....ஜீவனின்  கடைசி  நேரம்  எவ்வளவு  முக்கியம்.......அதற்கு  இறை உணர்வினை    அளிப்பது   எனபது  பெரியவாவின்  சொற்களில் இருந்து  நம்மால்  அறிய முடிகிறது. நம்மால்  முடிந்தது  .......என்றில்லாமல்   வாய்ப்பு  கிடைத்தால்  நமது  கடமையாக   கருதி  அந்த  ஜீவாத்மாவை.........தெய்வ  ஸ்மரணையில்  உயிர் விட  உறுதுணையாக  அருகில்  அமர்ந்து  நாம ஜபம்  செய்வோம்.

நன்றி :  balahanuman's blog

Monday, April 7, 2014


நாம  மகிமை :-

நாமமே  இறைவன்!

    இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் இறைவனே. அவருடைய திருநாமம் மனதில் தோன்றியவுடன், உள்ளம் இறைவனின் சாந்நித்தியதினால் நிரம்புகிறது. நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்வதைவிட எளிமையான வழி வேறேதும் இல்லை. இறைவனின் நாமத்தை உரக்க ஜபம் செய்யும் போது, நமது இதயத்தில் ப்ரேமை என்னும் வெள்ளம் பெருக்கெடுத்து பரவச நிலை அடைவதை உணரலாகிறோம். ஏனெனில் திருநாமத்தின் ஒலி நம் மனதை விழிப்புறச் செய்து இறைவனின் அன்பையும் பேரானந்தத்தையும் உணரச் செய்கிறது.
இறைவனின் திவ்யநாமததை உரக்கச் சொல்வதைவிட மனதில் ஜபம் செய்வது மிக சிறந்ததாயினும், நாமத்தை உரக்கச் சொல்வதில் எழும் இனிமையும், ஆனந்தமும் ஒப்பற்கரிய அனுபவம் ஆகும். பக்தனின் மனம் இசையில் லயிக்கும்பொழுது மெய்சிலிர்த்து அவனுக்கு நாமமே ப்ரம்மம் என்ற அனுபவம் கிட்டுச்கிறது.
      இறைவன் ஸ்ருஷ்டிக்கு உட்பட்டவரும் அதே சமயம் ஸ்ருஷ்டிக்கு அப்பாற்பட்டவரும் ஆவார். திருநாமம் இத்தகைய இறைவனைக் குறிக்கிறது. இங்கு எங்கும் நிறைந்த எல்லையில்லாத மாற்ற்மே இல்லாத அமைதியான தத்துவமே ஸ்ருஷ்டிக்கு அப்பாற்பட்ட இறைவன் ஆகும். நாம ரூப சலங்கள் கூடிய அனைத்து ஜீவராசிகளையும் வஸ்துக்களையும் அகத்தே உடைய இந்த ப்ரபஞ்சமே இறைவனின் ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட அம்சம் ஆகும். திருநாமம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி, அதே சமயம் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டதாகி தனித்துவமும் தனித்துவதிற்கு அப்பாற்பட்ட்துமாகிய இறைவனைக் குறிக்கிறது.
        இத்தகைய திவ்யநாமம் அனைத்து ஸ்ருஷ்டிக்கும் ஆதியே இல்லாத மூலகாரணமும், அதே சமயத்தில் ஸ்ருஷ்டியும் ஆகும். பூரண பொருளாகிய கடவுள் அநாமியாகிய நாமமே.
        இறைவனின் திருநாமம் ஜீவனை பந்ததிலிருந்து விடுவிக்கிறது. திருநாமம் அவனை ஆன்மீக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு திவ்ய த்ருஷ்டியை அளிக்கிறது. இறைவனின் திருநாமம் உன்னதம் பொருந்திய விஸ்வ ரூப தரிசனத்தை அளிக்க வல்லது. திவ்யநாமம் ஜீவனை சிந்தனைக்கு எட்டாத இறை அனுபூதி என்னும் மஹோன்னத சிகரதிற்கு உயர்த்த வல்லது.
      இறைவனின் திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாதது. வெல்லற்கரியது என்று கருதப்பட்டாலும் மனம் நாமத்தின் இதமான இசையில் ஈர்க்கப்பட்டு பணிவுள்ளதாகவும் மென்மையாகவும் இணக்கமுள்ளதாகவும் மாறுகிறது. நாம மஹிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. இறைவனின் திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும். அவன் இயற்க்கையின் சக்திகளை வென்று மனித ஜீவன்களின் மனதில் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்த முடியும். திவ்யநாமம் மனித ஜீவனை நித்யானந்த ப்ரேம ஸ்வரூபமாக மாற்ற முடியும். நாமம் ஒரு தனிப்பட்ட ஜீவனை விராட் ஸ்வரூபனாக (cosmic reality) - அறிவிலியான ஜீவனை இறைவனாக மாற்ற முடியும்.
    திவ்யநாம பஜனை செய்யும் இடத்தில், நாமத்தின் இசை நயம் ப்ரேமையின் மஹிமையைப் பரப்பி அந்த சூழ்நிலையை தூய்மை, அமைதி பேரானந்தம் ஆகியவற்றால் நிரம்பச் செய்கிறது.
திவ்யநாமம் பூரணத்துவம் பொருந்தியது. நாமத்தை சொல்வதே த்யானம். அதனால் ஏற்படும் பரவச நிலையே சமாதி. திவ்யநாமம் தான் அன்பு, ஒலி, சக்தி, பேரானந்தம்.
   இறைவனின் திவ்யநாமத்தைப்போல் அனைவரும் ஒருங்கே பின்பற்றக்கூடியதும் அதே சமயம் இறைவனை அடைய எளியதுமாகிய சாதனை முறை வேறெதுவுமில்லை. ஒரு மஹான் கூறியதுபோல் எவருடைய நாவில் எப்பொழுதும் இறைவனின் திவ்யநாமம் குடி கொண்டுள்ளதோ அவரே பந்தத்திலிருந்து விடுபட்டவர் அல்லது ஜீவன் முக்தர் என்பது உண்மையான கூற்றே.
    எனவே, அருமை தோழர்களே! நீங்கள் எந்த இனம், குலம், கோட்பாடு அல்லது நிறத்தைச் சார்ந்தவராயினும் இறைவனின் நாமத்தை ஏற்றி அதன் இனிய உறவை உணர்ந்து கொள்ளுங்கள். நாமம் என்னும் அமுதத்தில் இடையறாமல் மூழ்கும் உங்கள் ஆன்மா தூய்மையுருவது மட்டும் அல்லாமல் யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் பேரொளியாலும், அன்பாலும் ப்ரகாசிக்கும் என்பது உறுதி. திவ்யநாமத்தை இடையறாமல் ஓதும் பயிற்சி கீழ்ப்படியாமல் நிற்கும் மனதை இறைவனின் திருச்சித்ததிற்கும் வல்லமைக்கும் அடிமையாக்குகிறது. முதலில் திருநாமத்தை ஒருவன் ச்ரத்தை, நம்பிககை ஒருமனப்பாடு ஆகியவற்றுடன் ஜபம் செய்யும் போது முகமும் சரீரமும் ஒரு அஸாதாரண ஒளியுடன் ப்ரகாசிக்கிறது. அவனுடய மனம் விவேகத்தாலும், இதயம் அன்பாலும் நிரம்புகிறது. இவை யாவும் சாதகனின் மனதில் சத்வ குணம் மேலோங்குவதால் ஏற்படுகின்றன. பின்னர் நாம ஜபத்தை அதே உற்சாகத்துடன் பின்பற்றும்போது, அவன் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் இறைவனின் உருவமாகக் காண்கிறான். இறைவனுடன் ஒருமித்து அவன் எங்கும் இறைவனின் தரிசனத்தையே காண்கிறான்.
உண்மையில் நாமமே இறைவன்.

 
-ஸ்வாமி ராம்தாஸ்


Friday, April 4, 2014

பறவைகளையும், பிராணிகளையும்   ஈர்த்த  ராம  நாமம் :-

         குழந்தைகளே!  சுவாமி  பப்பா ராமதாசின்  "கடவுளைத்தேடி " என்ற  நூல்  எம்மை   மிகவும் ஆகர்ஷித்த  நூல்............அதில்   ராம  நாம மகிமையை  பல  இடங்களில்  வெளிபடுத்தியுள்ளார்.  அதில்   ஒரு சம்பவம் ............அவரது  புனித மொழியிலேயே...........................           " இரவு  முழுவதும்  இராமதாசன்  ஜான்சிக்கு அருகில்  உள்ள ஊர்ச்சாவில் அமைந்த    அந்த  சமாதியில்   ராமதியானத்தில்  அமர்வான். இரவு  நேரம் பேரானந்தத்தில்  கழிந்தது. அந்த இடத்தில்  தான்  சுவாசிக்கும்  காற்றில்  ராமின்  இருப்புதன்மையை  உணர்ந்தான். பகல் நேரங்களில் உள்ளம் கவரும்      "ஓம்  ஸ்ரீ  ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்"   என்ற  நாமத்தை   உரக்க உச்சரிக்கும்பொழுது  சிறியனவும், பெரியனவுமான  பறவைகளும் , அணில்களும்  மதில் சுவர்  மேல் வந்தமர்ந்து  ஆவலுடன்  மெய்மறந்து  "ஓம்"  எனும் பிரணவ  ஒலியை  கூர்ந்து  கேட்பது  வழக்கம் . அவ்வாறே  மாலைபொழுதிலும், அச்சமாதியினருகே  மேய்ந்துகொண்டு வரும்  ஆடு, மாடுகளும்  கூட  மந்திர  ஜாலத்திற்கு  கட்டுண்டது போல  "ஓம்"  என்ற  ஒலியில்  கட்டுண்டு  தூக்கிய  தலையுடன்,  நிமிர்ந்த  காதுகளுடன்  அசையாமல்  அங்கேயே  நின்று  நாம ஒலியின்  இனிமையை பருகும்.  

          இதிலிருந்து  ' ஓ  ராம்!  அனைத்து உயிர்களின்  இதயங்களிலும்  நீயே  உறைகின்றாய்' என்பது  எவ்வித சந்தேகத்திற்கும்  இடமின்றி  உறுதியாகின்றது. வானத்தில்  பறக்கும்  பறவைகளிலும், சமவெளியில்  வாழும்  விலங்குகளிலும்  உறைகின்ற  இறைவன்,  தனது  புகழ்மிக்க  நாம  ஒலியால்  அந்தந்த  ஜீவன்களில்  விழிப்புணர்வு  அடைகின்றான்". 
                                                                                        - சுவாமி  பப்பா  இராமதாஸ்
                                                             " கடவுளைத்தேடி " - என்ற  நூலிலிருந்து .........


        குழந்தைகளே !  முற்றிலும்  எமது  அனுபவ  உண்மையும்  கூட......சேலம்  அருகில்   ஒரு மலைபகுதில்  அமர்ந்து  ராம  நாமம்  உச்சரிக்க ............அங்கு காகங்கள், தேன்சிட்டு, சிட்டுக்குருவிகளும்............மேச்சலுக்கு  வந்த  பசுக்களும்  தலையையும்......காதுகளையும்   நிமிர்ந்து  அசையாமல்  ராம  நாம  ஒலியை   பருகின.........

          

                  
பப்பாவின் கருணை :-
             சுவாமி  பப்பா ராமதாஸ்  தனது ராம நாமத்தால் இந்தியாவின்  அனைத்து  பகுதிகளும்  புனிதமடைய செய்து  கேரளாவின்  மங்களூருக்கு  அருகே கா ஞ்சன்காட்டில்  ஆனந்தாஸ்ரமம்  அமைத்து  பக்தர்களுக்கு  அருள் செய்துகொண்டு  இருந்தார்.  அப்போது  அருகாமையில்  உள்ள ஊரினில் ஒரு  தாயார்  தனது  மகனை  இழந்து  மிகவும்  துயரத்தால்  கதறிக்கொண்டு இருந்தார்.

                எல்லையற்ற துயரால் .........கதறியவரை.......யாராலும்  சமாதானப்படுத்த  முடியவில்லை......சில நாட்களாக  உணவு உண்ணவும் இல்லை. இது  பப்பா  ராமதாசிடம்  தெரிவிக்கப்பட்டது. பப்பாவும்  அந்த அன்னையை காண சென்றார்.

            பப்பா  ராமதாஸ்  சுவாமி  அன்னையிடம்  மிகுந்த அன்புடன் ஆறுதல்  கூறினார். முதலில்  பப்பாவை  பார்க்க கூட  திரும்பாத  அந்த அன்னை ......சிறிது நேரத்திலேயே  பப்பாவின்  சொற்களால்  ஆறுதல்  அடைந்தார்.அங்கேயே  ராம நாம  தீட்சை  பெற்று   ராம நாமம்  உச்சரித்து  தனது   துயரினை  மறக்க  முயன்றார்,   .

அன்னை  கிருஷ்ணாபாயுடன்  சுவாமி பப்பா  ராமதாஸ்  

          சிறிது  நாட்கள் கழித்து  பப்பா  அந்த  அன்னையை  கண்ட பொழுது  அந்த அன்னை  தனது  மகனை இழந்த  துயரிலிருந்து  விடுபட்டு...........ராம நாம  ஸ்மரணையில்  ஆழ்ந்து  .............ஆனந்தமயமாக .........அருளில்  முழ்கியிருந்தார் .

          குழந்தைகளே !.........ஞானிகளின்  கருணை  நம்மை........எந்த ஒரு துயரிலிருந்தும்  மீட்டெடுக்கும்.........நமது  வாழ்க்கையை  மாற்றியமைக்கும்.!

Tuesday, April 1, 2014

மஹா பெரியவா அருள்வாக்கு : -அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் ‘நோட்டாக‘ மாறி விடும். அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

பணத்துக்காகப் பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னாலே உண்டாகும்.சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும்.  அதை அடையவே முடியாது.
சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும்.  இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.
-
அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்! இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.
இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.
-
தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.
-
சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான்.
-
இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.
கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.


எல்லாரும் மோட்சத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக் கொண்டு உலக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது சாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஓடவிட்டு, பரஸ்பரம் மோதிக் கொள்ளவிட்டு, இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்தி வருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரசிப்பதற்குத்தான் அவன் உலக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈஸ்வரனுக்கு எப்படி டிராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?
அதே ஸமயம் அவன் கருணை வள்ளலும்தான். அதனால் வேடிக்கையெல்லாம் பார்த்தாலும் அநேக யுகங்கள், கல்ப காலம் ஆகிறபோது, ‘ஐயோ பாவம்! இப்படி ஆட்டமாக ஆடிவிட்டதுகளே!’ என்று பரம கருணையோடுதானே அவர்களை எல்லாம் தம்மிடம் ஒடுக்கிக்கொண்டு விடுகிறான்; அவர்களாக சாதனை பண்ணி ஒடுங்குவதில்லை; ஈஸ்வரனே ஒடுக்கிக் கொண்டு விடுகிறான்.
உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.


நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.
-
இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.
-
எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்து விட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று 
தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) 
ஐன்ஸ்டீனின்Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில்  சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.
ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்
பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.
‘தெய்வத்தின் குரல்" நூலிலிருந்து …  

நன்றி : balhanuman.wordpress.com