Wednesday, November 12, 2014

நாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்

" நான்  தேகமல்ல - நான்  யார் -  அவனே  நான் "

              

                         கண்ணை   மூடித்   தியானம்   செய்தால்  எல்லோராலும்  பகவானை   மனதில்   பிடிக்கமுடிகிறதா ?

                 ஆனால்   லலிதாவும் ,  இந்திராவும்   கண்ணை  மூடினால் ,  அவர்கள்
மனம்   ரமணரின்   பாதகமலங்களிலேயே    சுற்றி  வரும்.

            லலிதா    துடுக்கு,  சமர்த்து;  இந்திரா  சாந்தம் ,  கம்பீரம்.  ஆந்திராவைச்  சேர்ந்த  குர்ரம்  சுப்பராமையாவின்   புத்திரிகள்   அவர்கள்.

         நேரம்  கிடைக்கும்போதெல்லாம்   திருவண்ணமலைக்கு  வந்து   ரமண  தியானத்தில்   மூழ்கி   முத்தெடுப்பார்  சுப்பராமையா.  அவர்  கல்லூரிப்  பேராசிரியர் ,  கவிஞர்.  அறிஞர்.

          1937- ம்  ஆண்டு.  சுப்பாரம்மையா   தனது  மகள்  லலிதாவுடன்  ரமணாஸ்ரமம்   வந்தார்.

          ரமணாஸ்ரமத்தின்   தியானக்கூடம்,  ரமண  பக்தர்களின்  சொர்க்க  பூமி. அங்கு   வருபவர்களுள்    நிம்மதியைத்  தேடுபவர்கள் ,  தங்களைத்  தேடுபவர்கள்,  தெய்வத்தைத்   தேடுபவர்கள்  என்று   பலரும்  அமர்ந்திருக்க , நடுநாயகமாக  ரமணர்   வீற்றிருப்பார்.

         துடுக்கான  லலிதா   அன்று   தன்னோடு   விளையாட ,  ஒருவரும்   இல்லையே  என   இங்குமங்கும்   அலைந்துகொண்டு   இருந்தாள்.

         ஹாலுக்கு   வரும்   மயிலை  அவள்    துரத்த  முடியாது.  குரங்குகளைக்  கண்டால்   அவளுக்கு  பயம்.  அணில்   அவளை  நெருங்குவதே   இல்லை.
நாய்   சொறி   பிடித்தது,  சே   வேண்டாம்.

         அந்தப்   பெரிய   ஹாலில்   பலரும்   விறைப்பாக   அமர்ந்தவாறும் ,  கண்களை  மூடிக்கொண்டும் ,  ரமணரைத்   தரிசித்துக்  கொண்டும் ,  பாராயணம்   செய்துகொண்டும்   இருக்கிறார்கள்.

         லலிதாவுடன்   விளையாட   யாருமில்லை.  தேடித்  பார்த்ததில்  ' தாத்தா  சாமிதான்  ' சும்மா ' இருக்கார்.  அவர்தான்   எனக்கு  லாயக்கு '  என  நினைத்தாள்.  ' சும்மா  இருப்பது '  மாபெரும்   தவம்   என்பது   அவளுக்கு   எப்படித்தெரியும் ?

         ரமணரின்   பக்கத்தில்  போய்   நின்றாள்  லலிதா.  அவருக்கு   ஏதாவது   சேவை   செய்யவா ?  ம்ஹூம் ,  ஒரே  சேஷ்டைதான். விசிறியை   ஆட்டி  சத்தம்  செய்வாள்.  நூல்களைப்   புரட்டுவாள்.  அவைகள்   கீழே  விழும்.  சிலர்  கண்களைத்   திறந்து   பார்ப்பர்.  நீண்ட   பொறுமைக்குப்   பிறகு   விஷமம்   அதிகமானால்,  மகரிஷியே,  "  ஏய்.  என்ன   பண்ற ....? " என்று   லேசாக  அதட்டுவார்.

        உடனே  லலிதா   வாய்க்  குவித்து,  மெல்லத்  தலையாட்டி,  " சுவாமி , நா ஒண்ணுமே   பண்ணலே,  சும்மாதான்   இருக்கேன் "  என்பாளே   அது   கொள்ளை   அழகு !

         பகவானே   சிரித்து,  "  இவ   இப்படித்   துறுதுறுன்னு   ஏதேதோ  செய்யறா,   ஆனா   நா  ஒண்ணுமே   செய்யல '  என்கிறா.  ஒரு  சிறுமி  இதைச்  சொல்ல  முடியறது.  ஆனா   பெரியவா  இதைப்  புரிஞ்சுக்க  முடியலையே "  என்றார்.  கீதையின்   சாரத்தை  இப்படி  குழந்தையின்  மூலமா   பிழிந்து  கொடுத்தார்  ரமணர்.

        1941 -ம்  ஆண்டு.  மே  மாதம்   மூன்றாம்  வாரம். மீண்டும்    திருவண்ணமலையில்   தன்  குடும்பத்துடன்  சுப்பராமையா.  இந்தமுறை  9  வயதான   லலிதாவுடன்,  இளையவள்  5  வயதான  இந்திராவும்  வந்திருந்தாள்.  பட்டுச்  சொக்காவில்   இருவரும்  சிட்டுக்களாக   ஓடியாடி   எல்லோரையும்   ஈர்த்தனர்.

        முக்கியமாக   ரமணருக்கு   இந்திராவை   பிடித்துப்  போயிற்று.  பாடச்  சொன்னால்   பாடுகிறாள்.  ஆடச்   சொன்னால்   ஆடுகிறாள்.  இந்த   லலிதாவுக்கு   என்ன  வந்தது ?  திடீரென   சங்கோஜப்பட  ஆரம்பித்து  விட்டாளே !

         ' நான்  ஒரு  பெண் '   என்ற  தேகாத்ம  புத்தி   தலையெடுக்கும்  வயதோ ! அதனால்  தான்   ரமணரின்   திருமுன்பு   அவளால்  இருக்கமுடியவில்லையோ ?  இந்திரா   பாடி   முடித்ததும்,  லலிதாவைப்   பாடச்   சொன்னார்   ரமணர். அவள்   தயங்கினாள்.  மகரிஷி   விடவில்லை.


          " என்ன  லலிதா ?  யார்  கிட்டேயும்  நா  எதுவும்  கேட்கறதில்ல.  நீ   என்னையே   கேட்க   வச்சுட்டியே !  இந்திராவைப்   பாரு,  அவ  மாதிரி  பாடு "  என்றார்.

          இவ்வளவிற்குப்  பிறகே   லலிதா   பாடினாள்.  பிறகு  இருவரும்   சேர்ந்து   ஆடினர்.  மகரிஷியின்   சபை   குழந்தைகளால்   களை  கட்டியது.
' நான்   யார் ? ' என்ற   தேடுதலின்  நடுவில்,   சாதகர்களின்  மனம்  லேசாவதற்கு  ரமணரே   அந்தக்  குழந்தைகளின்  மூலம்  நாட்டிய  நிகழ்ச்சி  நடத்தி  அங்கு   இருந்த   இறுக்கத்தை   நீக்கினார்  போலும் !

         ஒருநாள்   சுப்பராமையா   ' உபதேச சாரம் '  என்ற  தெலுங்கு  நூலை  ரமணர்  முன்பு   அமர்ந்து  படித்தார்.  அதன்   முன்பக்கத்தில்  சம்ஸ்கிரத  மொழியில்   நான்கு   வரிகள்   அச்சாகியிருந்தன.

        அதைப்   பார்த்த   இந்திரா  அதிலுள்ள   மூன்று  வார்த்தைகளை  ' நாஹம்  தேஹம்  -  கோஹம் - ஸோஹம் '    -  ( நான்  தேகமல்ல -  நான்  யார் ? -  அவன்  ' நான் ' - )  என்று   எழுத்துக்  கூட்டி  கூட்டி  ஒன்றாக   வாசித்தாள்.

        உதட்டோடு,  உள்ளத்தையும்   குவித்து   வாசித்த   அவளை  மகரிஷி  உற்று  நோக்கினார்.  அவளிடம்   ஏதோ  ஒரு  ஊற்று  பெருக்கெடுப்பதை  அவர்  கண்டதுபோல்   இருந்தது.

        " இந்திரா,  சரியாத்தான்   நீ   படிச்சேம்மா.  இந்த   வரிகளே  உனக்குப்  போதும்.  பாடலின்   மிச்ச  பகுதிய  நீ  படிக்க  வேண்டாம். நீ  இப்போ   வாசிச்சியே ,  அதான்   எல்லா  அறிவோட   சாரம்.  இனி   இதையே   மந்திரம்   மாதிரி  சொல்லிண்டிரு.  உனக்கு   எல்லாமே   இது   மூலம்   சித்திக்கும். "  என்றார்   ரமணர்.

         உடனே,  தாத்தா சாமி   தனக்கு  மட்டும்  சொல்லிக்  கொடுத்த  மூன்று  வரி  மந்திரத்தை   முணுமுணுக்க   ஆரம்பித்தாள்  இந்திரா.

         சரியாகச்  சொல்ல  தைரியம்  வந்ததும்   சத்தமாகப்  பல  ராகங்களில்   சொல்ல   ஆரம்பித்தாள்.

        பின்   அவளைப்   பார்க்கும்  போதெல்லாம்   ரமணர், " அந்த  மந்திரத்தைச்   சொல்லு,    பார்க்கலாம் "  என்பார்.  அவளும்  சொல்வாள்,   ஒரு  சிஷ்யையாக !

       அவர்   அவளது   உச்சரிப்பையா   கவனித்தார் ?  இல்லை.  ஏதோ  ஓர்  உச்சநிலைக்கு   கொண்டு  செல்வதற்கு   அவர்   அவளைத்  தயார்ப்படுத்திக்  கொண்டிருந்தார்.  சுப்பராமையா  அதைப்  பார்த்து  வியந்தார்.

      இந்த   மந்திரம்  முதன்முதலில்  ரமணர்,  தமது  முக்கியச்  சீடரான  காவ்ய  கண்ட  கணபதி  என்ற  மிகப்  பெரிய  பண்டிதருக்குக்  கூறியருளியது. ' ஆஹா,   இந்த  மந்திரம்தான்   என்னவோர்   அருமையானது '  என  சுப்பராமையா  அதை  ரசித்தார்.  ' இம்மந்திரம்   உயர்ந்த   சாதகர்களுக்கானது.  இந்தப்  பிராணாயாமம்  சாதாரண   ஒரு  மூச்சுப்  பயிற்சி  அல்ல.

       முதலில்   கோஹம்  ' நான்  யார் ? ' என்ற   விசாரத்தைப்  பூரகமாக - உள்மூச்சாக   சாதகன்  இழுக்க  வேண்டும்.

       அடுத்து,  ஸோஹம் - ' அவனே  நான் '  என்ற  'வ்ருத்தியை ' கும்பகமாக - மூச்சாகக்  கருதி ,  பிடித்து  வைத்துப்  பழக வேண்டும்.

        முடிவில்,  ' நாஹம்  தேஹம் ' - ' நான்  உடலல்ல '  என்ற  அனுபவம்  ரேசகமாக  -  வெளிமூச்சாக   விடவேண்டும்.  இதுவே   ' ஞானப்  பிராணாயாமம். '  அறிவு  ஜீவியான   சுப்பராமையாவின்  புத்தியை    ஒரு  கேள்வி  அடிக்கடி  குடைந்து  கொண்டிருந்தது.

         '  அறிவிலும்,  அனுபவத்திலும்   மிக்க  பக்தர்களும்,  சாதகர்களும்   ஆன  நாங்கள்,  மகரிஷியின்  ஒரு   உபதேசதிற்காகக்   காத்துக்கிடக்கும்போது,  இவர்  ஏன்  ஒரு  சிறுமியிடம்   இவ்வளவு  பெரிய  விஷயத்தைத்
திணிக்கிறார் ?  அவளுக்கு   என்ன  புரியும் ? '

        அன்று   சுப்பராமையா  தியானித்துக்  கொண்டு  இருந்தார். இந்திராவுக்குப்  பசித்தது. அப்பாவைத்  தொந்தரவு  செய்யாது   ஒரு  மூலையில்   அமர்ந்தாள்.

         ஆன்மப்  பசியோ, அடி  வயிற்றுப்பசியோ   அனைத்தையும்  அறியும்  பகவான்   அவளைக்  கவனித்தார்.

         உடனே   அவளது   அப்பாவிடம்,  " கொழந்தைக்குப்  பசிக்குது,  அதை  கவனிக்காம  தியானம்   எதுக்கு ? " என்று  கேட்டார்  ரமணர்.

        ஒருநாள்   பகவான்  அந்த  இரண்டு  சிறுமிகளுடனும்  விளையாட்டாகப்  பேசிக்கொண்டு   இருந்தார்.

         லலிதாவின்   கையைப்  பார்த்து,  "  இது  யாரோட  கை ? "  என்று  கேட்டார்.  அவள், " என்  கை "  என்றாள்.

       " இல்ல "  என்றார்   பகவான்.

       " இது   யாரோட   கண்ணு ? "

       "  என்னோட   கண்ணுதான் " - லலிதா.

       "  இல்ல ".......இவ்வாறு    ரமணர்   லலிதாவிடம்  ஒவ்வொன்றாகக்  கேட்கவும்,  அவள்   அவையெல்லாம்   தன்னுடையது  தான்   என்று  சொல்லி வந்தாள்.

         முடிவில்  ரமணர், " எதுவுமே   ஒன்னுடையதில்ல.  உன்  உடம்பே  பகவனுக்குத்தான்   சொந்தம். "   என்று  கூறி  முடித்தார்.  லலிதா  புரியாமல்  விழித்தாள்.

         ஆனால்   இந்த  உரையாடலை  உற்றுக்  கவனித்துக்  கொண்டிருந்த  இந்திரா  "ஓ,  அப்படியா !"  என்று   உள்ளுக்குள்ளேயே  உச்சரித்துக்கொண்டாள்.

        விடுமுறை   முடிந்தது.  இரண்டு  பெண்  குழந்தைகளும்   ஊருக்குச்  செல்ல   ரமணரிடம்   விடைபெற  வந்தனர்.

        காலை நேரம்.  பகவான்  மலைக்குப்  போகும்  நேரம். லலிதா  ஏதோ  வேடிக்கைப்  பார்த்தபடி   இருந்தாள்.  ஆனால்   இந்திரா  எதையோ  எதிர்பார்த்து  ஏங்கியிருப்பதாகக்  காணப்பட்டாள்.

       பகவான்   இந்திராவை  விழுங்கும்படிப்  பார்த்து, " அப்போ  நீ  உன்  இடத்துக்குப்  போற.  நா   என்னோட   எடத்துக்குப்   போறேன் "  என்று   கூறிவிட்டு   அருணாசல  மலையில்   ஏற  ஆரம்பித்தார்.

      கொஞ்சமாவது   பகவான்   திரும்பிப்   பார்க்க  வேண்டுமே ! ம்ஹூம், இந்திராவின்   இதயம்  பாரமானது.  ' தாத்தாசாமி !  இனி  நா  உங்கள  எப்பப்   பார்ப்பேன் ? '  என்று  அவளது   உள்ளம்   விம்மியது.  ஆனாலும்   ஓர்   ஆறுதல்.

     அவளுக்குத்தான்   தாத்தாசாமி   வழங்கிய   மூன்று  மந்திரங்கள்  இருக்கே ! அதைச்  சொன்னால்   நா  எங்கிருந்தாலும்  சாமி    என்ன  நல்லா  கவனிச்சுப்பார்   என  நினைத்தாள்.

       ஊருக்குச்  சென்றவுடன்  லலிதாவும் , இந்திராவும்   தந்தைக்குக்  கடிதம்  எழுதினர்.  கடிதங்கள்  மகரிஷி    முன்பு  வைக்கப்  பட்டன.

       " பகவானிடம்   கூறுங்கள்  அப்பா !   நான்  தினமும்  மந்திரத்தைச்  சொல்கிறேன்,  அவரையே   நினைத்துக்  கொண்டு  இருக்கிறேன்  என்று " என
எழுதப்பட்டிருந்த   இந்திராவின்   கடிதத்தை   கூர்ந்து  பார்த்தார்  மகரிஷி.  அவரது   பார்வை   எதைக்  கூறியது ?

        இனி   இந்திராவைப்   பார்க்க  முடியாது   என்பதையா ?  தான்   கற்றுத்  தந்ததைக்  கொண்டு  கைதேர்ந்தவளாகி,  பிறந்த  நோக்கத்தை  அடைந்து  முக்தி   பெற்றுவிடுவாள்   என்பதையா ?

       நாட்கள்  வேகமாகச்  சென்று  இரண்டு  வருடங்கள்  ஆயின.  1943 -ஆம்  ஆண்டு.  இந்திரா  அகத்திலும், புறத்திலும்   நன்கு   வளர்ந்திருந்தாள்.

       அப்போதுதான்  அவளுக்கு   திடீரென   அம்மை   வார்த்தது.  இரண்டு   வாரங்களில்   படுத்த  படுக்கையாகி   வாடிப்போனாள்.  உண்ண  முடியவில்லை.  உறக்க  மில்லை.  ஆனாலும் ...................,

       உடல்  வேதனையை   அனுபவித்தாலும்,  ரமணர்   அருளிய   மூன்று  மந்திரங்களைச்  சொல்ல  ஆரம்பித்தால்  போதும்  இந்திராவின்  முகம்  பிரகாசிக்கும்.

        மூச்சைச்   சிரமப்பட்டு  விட்டாலும்,   மந்திரத்தை  விடாமல்  சொல்லிக்கொண்டு   இருந்தாள்.  சுப்பராமையாவும்   பிற  பக்தர்களும்  ரமணரின்  திருவுருவப்  படத்தின்  முன்பு  அவளைக்   கிடத்திப்   பிரார்த்தித்தனர்.

       கவிஞரான   சுப்பராமையா,  தமது  மகள்  ஒரு  அற்புதமான  சோக  காவியத்தைப்  படைத்துக்  கொண்டிருக்கிறாள்  என்பதை  உணர்ந்தார்.

       இவள்   தெரிந்துதான்  ' ஞானப்  பிராணாயாமம் '  புரிகிறாளா ? ..... ஓ,  இவளது   ப்ராரப்தம்   தெரிந்துதான்  பகவான்  அவ்வளவு   பிரயத்தனம்   எடுத்து  இவளுக்குச்  சொல்லித்  தந்தாரோ ! '  என   சுப்பராமையா  எண்ணினார்.  அதை  எண்ணியபோதே   பகவானிடத்தில்  பக்தி  இன்னும்  பெருகியது.

       எஞ்சிய   நாட்கள்   ஏனையோருக்கு  இறுக்கமாகச்  சென்றாலும்,  இந்திரா   எதனாலும்   பாதிக்கப்  படாமல்   இருந்தாள் !  கடைசியில்  அந்த  சோகமான  நாளும்  வந்தது.  அன்று  ஸ்ரீ ராம  நவமி .  ஏப்ரல்  13.

      பக்தர்கள்   இந்திராவைச்  சூழ்ந்து  இருந்தனர்.  மூன்று  மந்திரங்களையும் , விடும்   மூச்சாக  ஓதிக்கொண்டே  இந்திரா  இறைவனடி  சேர்ந்துவிட்டாள்.

      அங்கு   துக்கம்  விசாரிக்க  யாரும்   வரவில்லை. யாராலும்   அழ  முடியவில்லை!  ஏனெனில்  அவள்  தேகத்தைத்  துப்பிவிட்டு,  தெய்வப்  பதத்தைச்  சேர்ந்துவிட்டதாகப்  பலரும்  நம்பினார் ;  உணர்ந்தனர்.

       ' பல  வருடங்கள்  விசாரத்திற்குப்  பிறகும்  சாதகர்களுக்கு   கிடைக்காத  ஒரு  ஸ்திதியை,  அவள்   குருகிருபையால்  எளிதாகப்  பெற்று,  பகவானை  எளிதாக   அடைந்துவிட்டாளே! '  என்று   பக்தர்கள்  மெய்சிலிர்த்தனர்.

      இந்திராவின்  உடலைப்   புதைத்த  இடத்தில்  ஒரு  கல்லறை  எழுப்பினார்   சுப்பராமையா. அதன்மீது ..........

                         
        " நாஹம்  தேஹம்  -  கோஹம் - ஸோஹம் " 

என்பதைப்   பொறித்து  வைத்தார்.   அது   பக்தர்களுக்கு  இன்றும்  ஒரு  வழிகாட்டியாக   இருந்து   விளங்குகிறது.


நன்றி :  ஸ்ரீ  ராமகிருஷ்ண  விஜயம்,  மே  2011.
                ரமணோதயம்.



 


     

Tuesday, November 11, 2014

சுவாமி சிவானந்தர் பண்பு

துறவியின்  சிறப்பம்சம் :
                    
            ஸ்ரீ ராமகிருஷ்ணரின்   பதினாறு   சீடர்களில்  ஒருவர்   ஸ்வாமி  சிவானந்தர்.  காசி  அத்வைத  ஆஸ்ரமத்தில்   வாழ்ந்து  வந்தார்.  அப்போது  அந்த   ஆஸ்ரமத்திற்கு   பிங்கா   அரசர்   செய்து  வந்த   நிதி  உதவியினை   திடீரென   நிறுத்தி  விட்டார். வாடகை   பல  மாதங்களாகக்   கொடுக்கப்பட- வில்லை.  எனவே   வீட்டுச்  சொந்தக்காரர்   வாடகை  கேட்டு   வற்புறுத்தினார் .


         ஸ்வாமி   சிவானந்தர்   சிறிது  பணம்  சேர்த்து  வைத்து  இருந்தார்.  ஒருநாள்   ஆஸ்ரமத்தில்   இருந்த  ஓர்  இளைஞன்  அந்தப்  பணத்தை   திருடிக்  கொண்டு   ஓடி  விட்டான். போகும்போது   அவன்   ஒரே  ஒரு  பைசாவை   மட்டும்   விட்டுச்  சென்றிருந்தான்.

         அந்த   ஒரு  பைசாவைக்   கொண்டு   அன்று   ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு   நிவேதனம்  படைக்கப்பட்டது.


      அந்த    இளைஞனைப்   பற்றி   ஸ்வாமி   சிவானந்தர்   கூறும்போது,  "  அவனுடைய   இல்லாமைதான்   அவனை  அப்படிச்   செய்யுமாறு   தூண்டியது.  ஆனாலும்   கொஞ்சம்   தர்மசிந்தனை   அவனிடம்   இருந்தது.  அதனால்   ஒரு   பைசாவையாவது   விட்டுச்   சென்றான்   அல்லவா ! "  என்றார்.

            இதுவே     துறவி   ஒருவரின்   சிறப்பம்சம்.   இறைவனையே   முற்றும்   நம்பி   சரணடைந்து    வாழ்ந்ததால் தான்     சுவாமிகளால்   இவ்வாறு   நிதானமாக ,  தவறே   செய்தவரிடமும்    நற்சிந்தனைகளையே   காணுமாறு   செயல்பட   முடிந்தது   என்பதில்   வியப்பேதுமில்லை.

    சுவாமி   சிவானந்தர் 

Monday, November 10, 2014

மகா பெரியவா உபதேசங்கள் : 9

ஸ்வயம்பாகம்  :
                               
       

       வாழ்க்கைக்கு   முதலாக   வேண்டியது   அன்னம்.

     நமக்கு   வேண்டிய   உணவை   நாமே   தயார்   செய்துகொள்ள  வேண்டியதுதான்   ஆதாரக்  கல்வியின்   முக்கிய  நோக்கமாக   எனக்குப்  படுகிறது.  இப்படி   நாம்   பழக்கிக்  கொள்ள  வேண்டும்.

                                              **********************

          புருஷர்கள்   எல்லாம்   சமையல்   பண்ணத்  தெரிந்து   கொள்ள   வேண்டும். ஹோட்டலுக்குப்   போவதை   தவிர்த்துப்   பழக  வேண்டும்.


         எவ்வளவு   சுத்தமாக   நம்முடைய   ஆகாரத்தை   நாமே   தயாரித்துக்  கொண்டு   சாப்பிட  முடியுமோ   அவ்வளவு   சுத்தமாக  ( சத்வ  குணமாக )  அவரவர்களே   சமைத்து   சாப்பிடக்  கற்றுக்  கொள்ள  வேண்டும்.

                                             ***********************

         இப்போதிலிருந்தே,  ஆபீஸோ ,  ஸ்கூலோ   அதில்   என்றைக்கு   லீவோ   அன்றைக்கு ,  வாரத்தில்   ஞாயிறு   ஒரு   நாளாவது    சகலமானபேரும்   ஸ்வயம்பாக   வழக்கத்தை   மேற்கொள்ள   வேண்டும்.

         ஸ்வயம்பாகம்  ( நாமே  சமைத்து  சாப்பிடுவது  - சத்வ  குணத்தோடு )  என்ற   ஒரு   சின்ன   நியமத்தால்   அநேக   நன்மைகள்   உண்டாகின்றன.

                                          *************************

     சித்த   சுத்தி,  தேக  ஆரோக்கியம் ,  செலவு  மட்டுப்படுவது ,  இதற்கு  மேலாக  குண  தோஷங்கள்   அற்ற  உணவு  ( செய்பவரின்   எண்ணங்கள்   உணவில்  பதியும்  ஆதலால்  வெளியில்   சாப்பிடுவது   தவிர்த்தல்  நலம்  ),    ஐம்பது  வயசுக்குமேல்   கல்யாணம்   கூடாது   என்பது   போன்ற    சாஸ்திர  விதிகளை   அனுசரிக்க   முடிவது ,  பிராணி   ஹிம்சைகளை   குறைவது.


                                     ****************************

     ஸ்வாமிப்   பிரசாதம் ,  குரு  பிரசாதம்   தவிர   ஸ்வயம்பாகம் தான்   என்று  ஆக்கிக்  கொண்டுவிட   வேண்டும்.

       என்  அபிப்ராயம் ,  பதினைந்தே  நிமிஷத்தில்   தயாரிக்கக்  கூடியதாக  ஏதாவது   ஒரு  சிம்பிள்   ஆகாரத்தைப்   புருஷர்கள்   அத்தனைபேரும்   தெரிந்து   கொண்டு   தாங்களே   அதைப்   பண்ணி   போட்டுக்கொண்டு   சாப்பிட  வேண்டுமென்பது.

                               
                                  *******************************

               
          அரிசியைக்   களைந்து,  உலர்த்தி ,  சிவக்க  வறுத்தெடுத்து   அரைத்து  வைத்துக்கொள்வதே  " ஸத்துமா  " .  உடம்புக்கு   நல்ல   சத்து   தருவதாலும்,
 ஸத்வ   குணம்   ஊட்டுவதாலும்   அதற்கு    ஸத்துமா  என்றே  பெயர்   இருக்கிறது.

             ஸத்துமாவிலே   மோரை   விட்டோ ,  பாலை   விட்டோ  சாப்பிடலாம்.  கொஞ்சம்   சாப்பிட்டால்  கூட   புஸ்   என்று   ஊறிக்  கொண்டு   பசி   அடங்கி  புஷ்டியாய்   இருக்கும்.

          நாள்கணக்கில்   பிரயாணம்   பண்ணும்  போது   கூட   கண்ட   இடத்தில்   கண்டதைத்   திண்ணாமல்   இதைக்  கொண்டே   காலம்   தள்ளி   விடலாம்.

                              ****************************************

           
             தானே   சமைத்துக்  கொள்வது  என்கிறபோது  வேலையைக்   குறைத்துக்   கொள்ள  வேண்டும்   என்று   இருக்குமாதலால் ,  பல  தினுஷுகளில்   வியாஞ்ஜனம்   பண்ணிக்கொள்ள   தோன்றாது.  அதாவது   நாக்கு  ருசி,  அமிர்த போஜனம்  பண்ணி   சித்த  சுத்தியை   கெடுத்துக்  கொள்ளாமல்   இருப்போம்.

                             ******************************

         இன்னொருவர்  சமைத்துப்   போடுகிறபோது  நாக்கைத்   தீட்டிக் கொண்டு, " இது  உப்பு ,  அது   உரைப்பு "  என்று   நோணா வட்டம்   சொல்லத் தோ ன்றுகிறது . இதில்   நமக்கும்   அதிருப்தி.  பண்ணினவர்களுக்கும்  மனக்கிலேசம்.


       நாமே   செய்துகொண்டால்   அந்த  சமையல்   எப்படி  இருந்தாலும்  தேவாமிர்தமாக   தோன்றும்.  சாப்பிடுகிற  வேளையில்  " அரிபிரி "  என்றில்லாமல்   சந்தோஷமாக ,  திருப்தியாக  இருக்கும்.  ஆஹாரம்  இதனாலேயே   உடலில்   ஒட்டி ,  சித்தத்திலும்   நல்லதைப்   பண்ணும்.

                             *******************************


             ஸ்வயம்பகத்தினால்   ஒரு   டிசிபிளின்  உண்டாகிறது. சும்மா  உட்கார்ந்து  கொண்டிருக்கவோ,  அரட்டை ,  சீட்டு ,  கேளிக்கை , சினிமா   என்று   போகவோ   விடாமல்   சமையல்   வேலை   என்று   ஒருத்தனைக்  கட்டிப்போடுகிறதல்லவா ?

                             ***************************

                                                                                                  - மகா  பெரியவா 







வாலியின் இன்னொரு பக்கம்

உணர்த்தினால்  போதும்  :

      

              வாலிக்கும்   சுக்ரீவனுக்கும்   இடையே  நடந்த  போரின்  போது  ராமரின்  பாணத்தால்   வாலி  கீழே  சாய்ந்தான்.  தான்  செய்தது  அதர்மமானது   என்று   சொல்லி  வருந்தி  நின்றான்  ராமன்.

               அப்போது   வாலி,  " ராமா !  என் தம்பி  சுக்ரீவன்  நல்லவன்.  ஆனாலும்  சபல புத்திக்காரன்.  இராவணன்  கவர்ந்து  சென்ற   உன்னுடைய  சீதையை    மீட்பதற்காக   உனக்கு   உதவுவான்   என்பதற்காக   சுக்ரீவனுடைய   எதிரியான   என்னை  வீழ்த்தினாய்.

           சரி ,  இனி   மாரிக்காலம்   துவங்கப்போகிறது.  தேடுதல்  என்பது  இயலாது.  இந்தக்  காலத்தில்   ஆண்  சிங்கம்   எப்படி   இறையேதும்  தேடித்  போகாமல்  குகைக்குள்   பெண்  சிங்கத்திடம்   முடங்கிக்  கிடக்கிறதோ,  அதேபோல   சுக்ரீவனும்  தன்   விருப்பப்  பெண்களுடன்   காலம்  கழிப்பான்.

       ஆனால்  மாரிக்காலம்  முடிந்ததும்  மயக்கம்  தீராமல்   உனக்கு   வாக்களித்தபடி  சீதையைத்   தேடுவதை   தொடராமல்  கிறங்கிக்  கிடப்பான்.

      அப்போது   அவன்மீது   கோபம்  கொண்டு   கொன்று விடாதே!........கடமையை   அவனுக்கு   உணர்த்தினால்  போதும்  உணர்ந்து  கொள்வான் "
என்றான்.

       அண்ணனின்   இந்த   வார்த்தையைக்  கேட்ட  சுக்ரீவன்   அப்படியே   அவன்  காலடியில்  வீழ்ந்து   தன்   தவறுணர்ந்து   கதறி   அழுதான்.

                             

Sunday, November 9, 2014

ராம் ஏழைப்பங்காளன்

அனைவரையும்  காக்க  ' ராம் '  ஒருவன்  உள்ளான் :
           

        ஸ்வாமி  ராமதாஸ்   யாத்திரையில்   ஏழைத்தாய்  ஒருவர்,  தாம்   வயது  முதிர்ந்து,  மிகவும்   பரிதாபகரமான  நிலையில்   உள்ளதாக  கூறினார். உலகில்  தனிமையில்  விடப்பட்டு ,  எல்லா  நேரமும்   மிகுந்த   துக்கத்திலும் , வேதனையிலும் , கவலையிலும் , பயத்திலும்  தான்  வாழ்நாட்களைக்  கழிப்பதாகக்  கூறினார்.

             ராமதாஸ்   அவருக்கு,  " தாயே !  அனைவரையும்  காக்க  ராம்  ஒருவன்  இருக்கும்பொழுது,  பயப்படுவதற்கோ ,  கவலைப்படுவதற்கோ  அல்லது  நிர்கதியாய்  நிற்கிறோம்  என்ற   உணர்வுக்கோ  இடமில்லை.  எப்போதும்  நமதருகில்  ' ராம் '  இருக்கின்றான் "  என்று  உறுதி  அளித்தான்.


        " ஆனால்  இந்த  எளிய ,  மனம்  தளர்ந்த  என்னைப்  போன்ற  பெண்  இறைவன்  மேல்  எந்த  விதமான  நம்பிக்கையும்   வைத்திருக்கவில்லை ,  ஏனென்றால்   நான்  பாவம்  செய்தவள் "  என்று  கூறியவாறு   அந்த  அன்னை  கண்ணீர்  மல்கினார்.

        " அன்பான   அன்னையே !  ராம்   அருளால்  நம்பிக்கை  உண்டாகும் , ராம்  என்றுமே   ஏழை   எளியவர்களுக்கு   நண்பன் " என்று  ராமதாஸ்  கூறினான்.

      "  அப்படியானால்,  எனக்கு   ஒரு  வழி  காட்டுங்கள் "  என்று  கேட்டார்   அந்த  மூதாட்டி.

     " பகலில்   எப்போதும்,  மற்றும்  இரவில்  விழித்திருக்கும்  போதும்  " ராம் "  என்ற   ஒரு  நாமத்தையே   இடைவிடாமல்   உச்சரித்துக் கொண்டுஇருங்கள்.
இந்த  மேன்மை  மிக்க  நாமத்தைக்  கூறிக்கொண்டு  இருக்கும்  வரை  நிச்சயமாக   நீங்கள்  தனிமையையோ ,  துயரத்தையோ  உணர  மாட்டீர்கள்.
இந்த  அற்புத  நாம  ஒலி   எங்கு  எழுப்பப்படுகிறதோ  அல்லது   தியானிக்கப் படுகிறதோ  அங்கு   எந்த  விதமான   துக்கமோ , கவலையோ ,  ஏக்கமோ ,  ஏன்  மரணம்  கூட   இல்லை.  "  என்று   கூறியவாறு  ராமதாஸ்  செல்வதற்கு   ஆயத்தமான  போது,  அவ்வன்னை  அவனை  மறுநாளும்   வரவேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

          அவர்  விருப்பப்படியே   மறுநாளும்   அதே  நேரத்தில்  ராமதாஸ்   அக்குடிலுக்கு  சென்றான்.  " தாயே !  எப்படி  இருக்கிறீர்கள் ? " என்று   கேட்டான்.


        அவ்வன்னை   முகத்தில்   உற்சாகப்  புன்னகை  தவழ்ந்தது.  ராமதாஸின்  அறிவுரைப்படி   செய்ததால்  பயத்தினின்றும்,  கவலையிலிருந்தும்  தான்  பெரிதும்   விடுபட்டுள்ளதாகக்  கூறினார்.  இனிப்புக்  கடையிலிருந்து   வாங்கி  வைத்திருந்த  சில  இனிப்புகளை   ராமதாஸுக்கு   அளித்தார்.

       அதற்கு  அவன்   "  அன்னையே !  ராமதாஸ்   விரும்புவது  இதுவன்று ;  தங்கள்   கைகளாலேயே   செய்தது   ஏதாகிலும்  இருந்தால்  நன்று, "  என்று  சொன்னான்.

         உடனே   அவர்  உள்ளே  சென்று   தன்   கையாலே   செய்த  ரொட்டித்துண்டு   ஒன்றை  கொண்டு  வந்து   கொடுத்தார்.  ராமதாஸ்   அதை  பெருமகிழ்ச்சியுடன்   உண்டான்.  பின்பு   ஒருமுறை   அவ்வன்னையைப்  பார்க்க   நேர்ந்தது.  அவர்   ராம  நாம   ஜெபத்தில்  மிகத்   தீவிரமாக   ஈடுபட்டிருப்பதை   கண்டான்.


நன்றி :  " கடவுளைத்தேடி  "  என்ற   நூலிலிருந்து 
                   ஸ்வாமி   பப்பா  ராமதாஸ்.

Thursday, November 6, 2014

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்

சுகக்  கடல்  பொங்க..................... சொல்லுணர்வடங்க : 
             

         சர்வ  வியாபகமாக  இறைவன் ,  அந்தர்யாமியாக   எல்லாவற்றிலும்  நிறைந்து  விளங்குவதை  பகவான்  ரமணர்  இந்த  பாடலில்   விளக்கியுள்ளார்.


                   " வெளி வளி   தீநீர்   மண்பல  உயிரா 
                            விரிவுறு    பூத   பெளதிகங்கள்              
                     வெளிஒளி   உன்னை  அன்றி  இன்று  என்னின் 
                              வேறு யான்  ஆருளன்   விமலா 
                     வெளியதாய்  உளத்தே  வேறு  அற  விளங்கின் 
                              வேறு  என  வெளிப்படுவேன்  ஆர் 
                     வெளிவராய்   அருணாசலா   அவன்  தலையில் 
                               விரிமலர்ப்   பதத்தினை  வைத்தே ! "

" எங்கும்  பரந்து , விரிந்து  நிறைந்த  ஆகாயம் ,   காற்று , நீர் ,  நெருப்பு  , மண்  என  ஐந்து   பூதங்களும் ,  அவற்றின்  கலப்பான   இந்த  பிரபஞ்ச  தோற்றம் ,  உயிரினங்கள்   எல்லாம்   சித்  சொரூபமான   உன்னையன்றி  வேறு  ஒன்றுமே   இல்லை.  உண்மை  இவ்வாறு  இருக்க ,  உனக்கு  வேறாக  நான்  ஒருவன்  மட்டும்  எப்படி  இருக்க  முடியும் ? என்  உள்ளத்தில்   ஆத்மாவாக ,  நான் ...நான்,  என்று   இரண்டற்று ,  அபேதமாக  நீயே  பிரகாசித்துக்கொண்டு  இருக்கும்போது ,  அன்னியமாக   நான் - என்று ( அஹங்காரமாக )  எழும்புகின்றேனே ...........அந்த  "நான்  யார் ? ".  அந்த   அஹங்காரத்தின்  மேல்  உனது  விரிந்த  அருள்   மலர்ப்  பாதத்தினை  வைத்து ,  அருணாசலா   நீயே  வெளிபட்டு   வருவாய் !"  என   பகவான்  பிரார்த்திக்கிறார்.


          எல்லாமே   நீயாக  இருக்கும்போது   எப்படி  ஒருவன்   தனித்து  வெளிப்பட்டு  வர  முடியும் ?   இவை  எல்லாமே   உன்   விளையாட்டுதான்   என்கிறார்  பகவான்.

                   ஒருவனாம்   உன்னை  ஒளித்து  எவர்  வருவார் 
                       உன்சூதே  இது,   அருணாச்சலா !

இதற்கு    குருவின்  மலர்திருப்பாதம்   சாதகன்   தலையில்  வைக்கப்  படுதல் வேண்டும் !  பகவானது   குரு  யார் ?  அருணாசலனே !  அவர்தம்  குரு ,  எனவே

                    " தலையில்   விரிமலர்ப்  பாதம்  வை  !"

எனக்  குறிப்பிடுகிறார். இந்த  குருபாதம்   ஸ்பரிசத்தையே   மணிவாசகரும்,

                 " குருவடிவாகி   குவலயம்   தன்னில் 
                      திருவடி   வைத்த   திறம்  இது பொருள் !"

எனக்  குறிப்பிடுகிறார்.

             ரமண  குருவின்  திருவடிப்  பாதங்கள்  நம்  உள்ளத்தில்  ,  நம்  தலையில்  தங்கும் பொழுது,    குருவின்  திருவருள்  நம்மை   அஞ்ஞான  மையல் ,  ஆசை ,  அகந்தை   வலைகளில்   சிக்காமல்  பாதுகாக்கிறது.

             " கூர்வாள்   கண்ணியர்   கொடுமையில்  படாது அருள் 
                    கூர்ந்து  எனைச்  சேர்ந்தருள்   அருணாச்சலா !

"உலகின்  கவர்ச்சி  மிக்க  விஷங்கள்   நம்மை  மாய  வலையினில்  சிக்க வைத்து   பின்னர்   நமது   துன்பத்திற்கு   காரணமாகின்றன. அவற்றில் சிக்கிவிடாமல்   எனது  குருவாகிய  உனது  அருள்  என்னைக்  காப்பதாக ! " என  பகவான்   நமக்காக  வேண்டுகிறார் !

   தமது   வாக்கு  வன்மையால் .......பிறரை   ஈர்த்து   ஆட்படுத்தி ..........மிகச்சிறந்த   ஞானிபோல   தம்மை   வெளிப்படுத்தி ,  பின்னர்   அவர்கள்  புறம்  போக  விடாமல்  துன்பத்தில்   ஆழ்த்தும் ,  போலி  குருமார்கள்,......

இது  போலி குரு  ஒருவனை  நம்பி   ஏமாந்த  நண்பர்  ஒருவரின்  கதை ......

 ( இன்றைக்கு   உள்ள   போலி  பாபாக்கள்  )  தான்  சொன்னதை   கேட்காததால்  சீடர்களைப்   பழி வாங்கும் , அவர்களின்  குடும்பத்தை   வஞ்சகமாகப்  பிரித்து , அவர்தம்   மனைவியை   வசப்படுத்தி,  காரும், வீடும்   விற்றால்  மனைவி , குழந்தை   கிடைப்பார்கள்   என  மிரட்டி , விற்க  வைத்து ,    அந்த பணத்தையும்   பிடுங்கிக்கொண்டு ,   சீடனின்  மனைவியை  கைப்பற்றிய      .......  போலி  பாபா ,இன்றும் ........ இத்தகைய  போலி   பாபா   உண்டு !)


போலிகள்   நிறைந்து   வழியும்  இன்றைக்காக ,  பகவான்   அன்றைக்கே   செய்த   பிரார்த்தனை !

ரமண  பகவானை   குருவாகப்  பெற்றது  நமது  பூர்வ  புண்ணியம்  மற்றும்  பகவானின்  எல்லையற்ற  கருணையே !  உங்களின்   திருவடிகளில்  பணிந்து வேண்டுவது  என்னவென்றால்...........போலிகளின்  நடிப்பால்  ஏமாற  வேண்டாம் !..........ரமண  பகவானுக்கே  எப்பிறப்பிலும்   அன்பராவோம் !

ரமணருக்கு   ஆட்பட்ட  பின்   பிறவி  ஏது ?

      ரமண  பகவானின்   திருவடிகளையே   தஞ்சமாய்  கொண்டு   ஆன்ம  விசாரணையில்    ஊக்கமுடன்   ஈடுபட .............ரமணரின்   திருவருளால்  தடைகள்   நீங்கி ..........பாய்ந்து  வரும்   அருள்  வெள்ளம்  நம்மை   உள்ளுக்குள்   இழுத்து  செல்கிறது.

ஆம் ,  போலிகளை   சேராமல் .........ஆன்ம  விசாரணை  செய்ய  ஆரம்பித்தால்...இறையருள்   பாய்ந்து  வருகிறது !   ரமண   அருள்   தானே  வெளிப்பட்டு .  அப்பரம்பொருளில்   சேர்க்கிறது.

இந்த    உள்முக  நாட்டம்  விசாரணையால்,  தீவிர  நாட்டமுற   தனது  உண்மை  உருவாம்  ' உணர்வுமயம் '  நிலைக்கிறது !

                   " தேனுக்குள்  இன்பம்   சிவப்போ   கருப்போ 
                       வானுக்குள்   ஈசனைத்  தேடும்  மதியிலி 
                      தேனுக்குள்   இன்பம்   செறிந்து  இருந்தாற்போல் 
                      ஊனுக்குள்   ஈசன்   ஒளிந்து  இருந்தானே !

ரமண  சத்குருவின்   அருளில்   முழுநம்பிக்கை   வைத்து   நாம்  முயற்சியைத் தொடங்கினால்   போதும்.  எவ்வளவு   துயரில்   நாம்  கிடந்தாலும் ,  அருள் நம்மை   மீட்டெடுத்து ,  வழிநடத்தி   தரும்  அனுபவம் ,  "  நான்   வேறு ,  நீ  வேறு ! " என்ற   வேறுபாட்டு   உணர்வை  நீக்கிவிடுகிறார்  ரமண சத்குரு !

இரண்டு   என்ற   வேறுபாட்டு  உணர்ச்சி  போக்கிவிட்டால்,  இருமை  என்பதே  இல்லாமல்   ரமணருக்குள்   அடங்கிவிடுகிறோம்.  ஏக போகமாய் , ஒன்றாகி ,   நான்   என்பதே   இல்லாமல்   தானாய்  பரிணமிக்கும்  நிலையே ........

              " சுகக்  கடல்  பொங்க ..........சொல்லுணர்வடங்க !"
                                     
                                            
    " எம்  இதயத்தில்,  தலைமேல்.... உறையும்   ரமண  திருப்பாதம் " 







நன்றி :  ரமணோதயம்
         

   

Saturday, November 1, 2014

ராம் ஒருவனே முழுமையான வஸ்து!

அனைத்தும்  ராம் !

                       

           சத்தியமாம்   ஒரே உண்மை  ராம்  ஒருவனே !  இந்த  ராம்  என்பது  உருவமாக   வருவதற்கு   முன்பும்,   உருவமற்றும்    இருந்ததும்   அவன்  ஒருவனே ! அவனை  அறிதல்  என்பது,  மாறும்  உருவங்கள்  கொண்ட  இந்த
மாய  உலகத்திலிருந்து   விலகுதலே  ஆகும்.


         உருவமற்று ,  அகில  உலகையும்   வியாபித்து  காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய  சக்தியே  ' ராம் '.

         அவன்   பிறப்பு -  இறப்பு   இல்லாதாவன்.   பொருட்கள்  அனைத்திலும்,  உயிர்கள்  அனைத்திலும்   வியாபித்து  இருக்கும்   அவன்   ஓயாது   மாறிக்கொண்டு  இருக்கும்   நாம  ரூபங்களின்   தன்மையால்  தனித்தனியாக  காணப்படுவது   வெறும்   தோற்றம்   மட்டுமே!

      இந்த   நாம - ரூபங்களின்  பொய்த்  தோற்றத்திலிருந்து   விழித்தெழுதல்   அல்லது   உண்மையைக்   காணுதலென்பது  ராமின்   பேரன்பை  அல்லது   அவனுடன்   ஒருங்கிணைவதை  உணர்வதாகும்.

       ராமிடம்   அன்பு   செலுத்துவது   என்பது   அனைத்து   இருப்புகளிடத்தும்,  அனைத்து   உயிர்களிடத்தும்,  ஜடப்பொருட்களிடத்தும்   அன்பு  செலுத்துவதே  ஆகும்.

        ஏனென்றால்   ராம்   அனைத்திலும்   உள்ளான்,  அனைத்தும்  ராமில்  உள்ளது.   ராம்   ஒருவனே  முழுமையான   வஸ்து.

        இந்தப்  பேருண்மையை   உணர்வதற்கு  -    அஞ்ஞானத்தினால்   நம்மை   தனித்தனி     உயிர்களாய்க்  கருதும்  நாம்  -  எங்கும்   நிறைந்திருக்கும்,  எல்லையில்லாக்   கருணையாம்   அபார   சக்தியான  ராமின்   இயக்கத்திற்கும்,  அவன்   சித்தத்திற்கும்   முழுமையாக   சரணடைதல்  வேண்டும்.

         ராம்   ஒருவனே  நிலையான   உண்மை.  முழுவதுமாக    ராமின்    திருவுள்ளச்   சித்தத்திற்கு   அடிபணிவதன்  மூலம் ,  தேகாபிமான  உணர்வால்   நாம்  இறைவனிடமிருந்து   பிரிந்திருக்கிறோம்,  தனிப்பட்ட  வியக்தி  என்னும்   நினைவு  மறைந்து,  நம்மிலும்   நம்மைச்  சுற்றிலும்   வியாபித்திருக்கும்  இறைவனுடன்  ஒருங்கிணைந்து   அவனுள்  ஐக்கியமாகி   விடலாம்.


        இப்படிப்பட்ட  மனோநிலையில்   வேற்றுமை   உணர்ச்சியாம்  பகைமை  அழிகிறது.  ஒற்றுமை   உணர்வாம்  அன்பு   துளிர்க்கிறது.

     
       தனியானதோர்   இருப்பு   நமக்கு   இல்லையென  ( " நான் "  என்ற   அகந்தையின்   இறுமாப்பு   அறவே  ஒடுங்குமாறு )  நம்மை   தனித்தனி   உயிர்வாழ்வனவாக    எண்ணாமல் ,  பணிந்து  கொண்டால்   இந்த   தெய்வீக  அன்பைப்  பெறலாம்.


       இந்த  நிலை  எய்தினால்   பரிபூர்ண   அன்பு   என்ற  இறைவனுடன்  ஐக்கியம்   என்ற   உணர்வால்    தூண்டப்பெற்று   உடலை  பற்றிய   எண்ணங்கள்   ஒழிந்து,  ராமின்   வடிவங்களாம்  அனைத்து   மனிதர்   மற்றும்   பிராணிகளின்   நலன்களையே   நாடுவோம்.

    அனைத்தும்   ராம்   ஆன  பிறகு   எண்ணம் , மனம் , உள்ளம் , உயிர்   அனைத்தும்    ராமில்   ஒடுங்கிவிடும்.

இந்த  நிலையில்தான் ............................


      "  வேறு  எதையும்   நினைக்காமல்  எவர்  என்னையே   நினைத்து ,  எங்கும்   என்னையே   வழிபடுகிறார்களோ , மாறாத   உறுதிகொண்ட   அந்த   பக்தர்களின்   யோக  சேமத்தை   நான்    தாங்குகிறேன் ".

-----என்பது   அனுப  உண்மையாகிறது.


 அனைத்திலும்   ஊடுருவிப்   பரவிய   உயிர்   நீ  - ' ராம் '.




                                                                                            - ஸ்வாமி  ராமதாஸ்
                                                                  -  'கடவுளைத்தேடி '  என்ற   நூலிலிருந்து.........


குறிப்பு :

                 நண்பர்களே !  புயலாய்த்  தாக்கும்   துன்பங்களின் போது   இவற்றை  திரும்பத்   திரும்ப   படித்து ,   இவை   எமக்கு   அனுபவமாக   வேண்டும்   என்ற  கதறலோடு   இருக்கும்   போது .............எம்முள்   அமைதியும் ,   இடைவிடாது   ராம  நாமம்   சொல்ல    தூண்டுதலாய்   இருந்த   பகுதிகள்..........................