Tuesday, April 1, 2014

மஹா பெரியவா அருள்வாக்கு : -அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் ‘நோட்டாக‘ மாறி விடும். அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

பணத்துக்காகப் பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னாலே உண்டாகும்.சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும்.  அதை அடையவே முடியாது.
சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும்.  இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.
-
அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்! இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.
இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.
-
தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.
-
சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான்.
-
இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.
கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.


எல்லாரும் மோட்சத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக் கொண்டு உலக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது சாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஓடவிட்டு, பரஸ்பரம் மோதிக் கொள்ளவிட்டு, இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்தி வருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரசிப்பதற்குத்தான் அவன் உலக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈஸ்வரனுக்கு எப்படி டிராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?
அதே ஸமயம் அவன் கருணை வள்ளலும்தான். அதனால் வேடிக்கையெல்லாம் பார்த்தாலும் அநேக யுகங்கள், கல்ப காலம் ஆகிறபோது, ‘ஐயோ பாவம்! இப்படி ஆட்டமாக ஆடிவிட்டதுகளே!’ என்று பரம கருணையோடுதானே அவர்களை எல்லாம் தம்மிடம் ஒடுக்கிக்கொண்டு விடுகிறான்; அவர்களாக சாதனை பண்ணி ஒடுங்குவதில்லை; ஈஸ்வரனே ஒடுக்கிக் கொண்டு விடுகிறான்.
உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.


நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.
-
இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.
-
எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்து விட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று 
தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) 
ஐன்ஸ்டீனின்Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில்  சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.
ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்
பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.
‘தெய்வத்தின் குரல்" நூலிலிருந்து …  

நன்றி : balhanuman.wordpress.com

No comments:

Post a Comment