Thursday, July 24, 2014




மஹா  பெரியவா  அனுபவங்கள் :




அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
-
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?”
-
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.
“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் — அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’  என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம்.  யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’  என்று தீர்மானித்தார் உதவியாளர்.
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.
உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா”  என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?
மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள்.  இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?’
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி. “என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக் கேட்டார்.
-
“ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாக உதவியாளர்.
-
“ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார்.
-
பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
-
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”
-
யோகி: “ஆம்….”
-
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.
-
“யோகி: “ராம்…. ராம்…
-
“பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறதுஎன்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”
பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.”
-
யோகி: “ராம்…. ராம்…
பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.”
பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்படு.”
இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.
இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.
-
தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.
-
சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான்.
-
இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.
கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

நன்றி : balahanuman's blog

Thursday, July 10, 2014

செல்வத்தின்  பயன்   ஈதலே :  மஹா பெரியவாவின்  நடைமுறை  போதனை .........
Shiva_Dhyanam

அன்று  தரிசனத்திற்கு  வந்த  அவர்  பெரும் செல்வந்தர்.  பெரும்  கஞ்சத்தனம்  மிக்க.... கருமி  எனலாம். அவரது  முறை வந்ததும் , வலது கையை  வாயருகில்  பவ்வயமாக  வைத்துக்கொண்டு  உணர்ச்சி  மிகுந்த  குரலில்  ,"  பெரியவா!  எனக்கு  நீண்ட  நாட்களாக  இரத்த அழுத்தம் & சர்க்கரை  நோய்  உள்ளது..  தற்பொழுது  புற்று நோய்  என  diagonise  பண்ணியுள்ளர்கள்.  மிகுந்த  கஷ்டத்தில்  உள்ளேன்.  பெரியவா தான்  ஏதேனும்  பரிகாரம்  சொல்லணும். அதன்படியே  செய்கிறேன் "  என்றார்.

"நான்  சொன்னபடி செய்வாயா ?"  என்றார்  பெரியவர்.
" கண்டிப்பாக   செய்கிறேன்.  பெரியவா!"  என்றார்  அந்த  செல்வந்தர்.
" அது  சற்றே  கடினமாயிற்றே! " விடாமல்  பெரியவர்  சொன்னார்.
"கண்டிப்பாக  அதனை  செய்கிறேன் பெரியவா ! எனக்கு  இந்த  நோய்களில் இருந்து  விடுதலை  கிடைத்தால்  போதும்". கண்களை  கசக்கிக்கொண்டு  அழுதுகொண்டு இருந்தார்.

சாதரணமாகவே  பக்தர்களின் கவலைகளை போக்குபவர்,  தன்  முன்னே  அழுபவரை  விட்டுவிடுவாரா, என்ன?  கருணை  இரங்கியது.........

கம்பீரமாக  கருணை குரல்  பேசியது ...." கிணற்றில்  நீர்  நிறைந்து   இருக்கும். ஆனால்  கிணறு  ஒருபோதும்  குடிப்பதும் இல்லை, அதற்கு    ஒன்றும்  உரிமை  கொண்டாடியதும் இல்லை. அதுபோல   மரங்கள்  பழங்களை  ஒருபோதும்  சாப்பிடுவதும்  இல்லை.   தனக்கே  சொந்தம்  என்று உரிமைகொண்டடுவதுமில்லை .


பசுக்கள்  தாங்கள்  உற்பத்தி செய்த பாலை  தாங்களே  குடிப்பதும் இல்லை.  மரமும்,  விலங்குகளும்,  தாவரங்களும் ,  இயற்கையும். தங்களது  பொருட்களை  மற்றவர்களுக்கே அளிக்கின்றன.   தங்களுக்காக  அவைகள்  எடுத்து வைப்பது இல்லை.  

உன்னால்  அவைகளின்  பரோபகாரம்  புரிந்துகொள்ள  முடிகிறதா?  அவைகள்  சொல்லுகின்றன.........மனிதர்கள்  ஆறு அறிவு  உள்ளவர்கள் .......எனில்  அவர்கள்  இன்னும்  எவ்வளவு  பரோபகாரம்  செய்யவேண்டும் ?

உன்னிடம்   எவ்வளவு செல்வம்  உள்ளது!....உனக்கும் பயன்படவில்லை........அல்லது  அதன்  மூலம்  நல்ல  காரியங்கள்...தர்ம  காரியங்களுக்கு  பயன்படுத்தலாமே!.....போன  ஜென்மாவில்   நீ செய்த    தீ வினை  பயன்களே  இந்த  ஜன்மாவில்  இந்த  கொடுமையான   நோய்களாக  மாறியுள்ளது  என்ற    காரணம் அறிந்துகொண்டு   அந்த  தீய வினைகளில்  இருந்து விடுபட  இப்போது  உள்ள  செல்வத்தால்  நல்ல  தர்மங்களில்  அதனை  செலவு செய்யலாமே !

இந்த  வார்த்தையை  கேள்விபட்டுள்ளாயா ?......'இஷ்டா  பூர்த்தம் ' ....தர்மத்தையே    இந்த  வார்த்தை  குறிக்கிறது .  பணத்தை  நல்ல  தர்ம  காரியங்களுக்கு  பயன்படுத்துவதை  கிணற்றில்  நீர்  இரைப்பதை   போன்றது...... அப்பொழுது  தானே  ஊறும் . அதே போல   பணத்தை  கோவில்களை  செப்பனிடவும்,  ஏழைகளுக்கு  உதவிடவும், வறுமையில்  உள்ள  உறவினருக்கு  தரவும்,  ஏழைகளுக்கு  மருந்து  வாங்கவும்  பயன்படுத்த வேண்டும்,  நோயுற்ற அனாதைகளுக்கு  மருத்துவ செலவுக்கும்   உதவிட  வேண்டும்.  யாரேனும்  கைநீட்டி  இல்லைஎன்று  வந்தால்  அவர்களுக்கு   வேண்டிய  பொருள்  வாங்க  உதவிட  வேண்டும். வெறும் கையுடன்  யாரையும்   அனுப்பக்கூடாது. என்ன சரியா?......செய்வியா ! " என்றது  பரப்ரம்மம்.

" உன்னிடம்   உள்ள  பணத்திற்கு  நீ வெறும்  பொறுப்பாளர்  தான்.....உண்மையில்  இறைவனே   உரிமையாளன் . உன்னை  ஒருபோதும்  உரிமையாளனாக  நினைக்காதே ! "


அவ்வளவுதான் !  அந்த  செல்வந்தர்    கதறி  அழ  ஆரம்பித்துவிட்டார், அழுகையை   அடக்கமுடியாமல் ......... அதன்  பின்பும்  நிறைய  தர்மகாரியங்கள்  செய்துகொண்டு  நல்ல  உடல் நிலையுடன்  தற்போது  உள்ளார்.

நன்றி : The  sage  of  kanchi

அதர்மத்தின்   பலனே  கடுமையான  நோய்கள் : --- பெரியவா   கருணையால்  மாறியது.

1888473_616442668409685_526532623_n


 அவருக்கு  இரண்டு சிறுநீரகங்களும்  செயலிழந்த நிலையில் , மருத்துவர்களும்  கைவிட்ட நிலையில்  மஹா பெரியவரை  பார்க்க  வந்து  தனது  நிலைமையை  சொல்லி கதறினார். பொதுவாக  மஹா  முனிவரும்  இதுபோன்றுநோயினால்  அவதிப்பட்டு, அழுது கதறுவோரிடம்  கருணையும்,  ஆறுதலாகவும்  பேசுவார். ஆனால்  அன்று  கடினமாகவும், கண்டிப்புடனும்  கூடிய  வார்த்தைகளை  பேசினார்.

" மக்கள்  தைரியமாக , தெரிந்தே  பாவங்களை  செய்து விட்டு, அதன்  விளைவுகளை 
 துன்பங்களாக  அனுபவிக்கும்போது  மட்டும்  இங்கு  வந்து  கதறுகின்றனர்.  செய்யும் போது  விளைவுகளை  அறிவதில்லை ...........பின்பு  இங்கு வந்து  கதறினால்  நாம்  என்ன  செய்வது ?"  என்றார்  முனிவர்.

எத்தகைய  நோய்களையும்  தனது கருணையால்  துடைப்பவர் , இன்று  ஏன்  இவ்வாறு  கூறுகிறார்  என அங்கு இருந்த  அனைவருக்கும்  ஆச்சர்யம் !

சிறிது  நேரம் சென்றவுடன்  பெரியவர் பின்வருமாறு பேசினார்   ......" இந்த  மனிதனின்  முன்னோர்கள்  தர்ம காரியத்திற்காக  டிரஸ்ட்  அமைத்து  தர்மங்கள் செய்தனர். நல்ல  வளமான  நிலங்களை  அந்த  டிரஸ்ட்க்கு  விட்டு சென்றனர். அங்கு  தண்ணீர் பந்தல்கள்  அமைத்து  தர்மங்கள்  செய்தனர். இவர்   அந்த  தர்மங்களை  செய்யாமலும்,  அழித்தும்  அந்த நிலத்தை  விற்று  தனது  சுயநலத்துக்கு  பயன்படுத்தியுள்ளார். "

இதை கேட்ட  அந்த   சிறுநீரக  கோளாறு  அவதியில்  துடித்த  மனிதர்  வெட்கத்திலும், குற்ற உணர்விலும்  நெளிந்தார். "  பெரியவா !  மன்னிக்கணும், இனிமேல்   அந்த  தர்மங்களை  விடாமல் பண்ணுகிறேன்  என்றும்,   தனது  ஊரில் ,  முன்னோர்களின்  தண்ணீர் பந்தலை  மீண்டும்  நடத்துகிறேன் "  என்றும்  வாக்கு  கொடுத்தார்.

பெரியவரின்  கருணையுடனும், குரலின்  குளிர்மையும்   அங்கு  பொங்கியது........." வசம்பு   பற்றி  கேள்விபற்றிகியோ!  சித்த மருத்துவ  கடைகளில்  கிடைக்கும்.  அதை  வாங்கி  நன்னா  அரைச்சு  அடிவைற்றில்  தொடர்ந்து   கட்டிண்டா  சரியாயிடும்."   என்றது  கருணைகடல். 


அதே  மனிதர்  பத்து  அல்லது  பதினைந்து  நாட்கள்  கழித்து  தரிசனத்துக்கு  வர ........." இப்போ  எல்லாம்  குணமாய்டுதுபோல "  என்றார்    பெரியவா! .......அந்த  மனிதரின்   முகத்தில்  தெரிந்த  புன்னகையை  பார்த்து ...........

நன்றி :- sage of  kanchi

Saturday, July 5, 2014

இறைவனை  அன்றி  வேறொன்றுமில்லை   
யோகி ராம் சுரத்குமார்  மற்றும்   சுவாமி சச்சிதானந்தஜி

சுவாமி  ஸ்ரீசச்சிதானந்தஜி  அவர்களின்    அனுபவ வார்த்தைகள் ;

நாம் எந்த  ஒரு வழியில் இறைவனை அணுகினாலும் , சாதனை  செய்தாலும் , நாம் செய்ய   வேண்டியது  என்னவெனில்  இடைவிடாது  இறைவனை பற்றிய  நினைவு கூர்தலே. இத்தகைய  இடைவிடாத  இறை நினைவு , இறை உணர்வு  ஆனது  நமது  அனைத்து   தொடர்புகளையும்   இறைவன்  தொடர்பாக  மாற்றியமைத்துவிடும். இதன் மூலம்  நாம்  தொடர்பு  கொள்ளும் அனைத்து பொருட்கள்  மற்றும்  நாம் பார்க்கும்  எல்லா பொருட்கள் , நம்  சிந்தனைகள்,  நம்மால்  தொடப்படுவது .........அனைத்தும்  இறைவனாகும்.  உண்மையில்  இறைவனை  அன்றி ஒன்றும் இல்லை.

( மரமாக   பார்த்தால்  மரத்தில் செதுக்கிய யானை தெரிவதில்லை. அது  யானை என்ற  உணர்வோடு பார்த்தால்  மரம் தெரிவதில்லை.   அனைத்தும்  இறைவனே  என்ற  உணர்வோடு பார்க்க...........சாதனை  செய்ய  செய்ய ............பொருட்களோ , உயிரினங்களோ,  ஏன்  உலகமோ  இல்லவே  இல்லை..)

 நம்முடைய  மனம்  சிறுவயது முதலே  அனைத்தும்  இறைவனாக  பார்க்காத  வண்ணம்  பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது.  ஒரு  உயர்ந்த குருவின்  கருணையால்  பொருட்களாக , உயிரினமாக  பார்த்த  பார்வையை  மாற்றி  நமது  இயல்பான  பார்வையில்  அனைத்தும்  இறைவனாக ,   பிரம்மமாக   பார்க்க  பழகும்  போது  அனைத்தும்  நாம்  இறைவனாக  காண்கிறோம்,  இறைவனாக   தெரிகிறது.

         அகந்தையை  அழிப்பதற்கு  மிகசிறந்த  வழி :
ஒரு  சாதகனின்  வாழ்க்கை  துன்பம்  நிறைந்ததும், அதே நேரத்தில்  அவனுக்கு  அகந்தையின்  பிடியிலிருந்து  விடுபடுவதற்கான  வழியாகவும், அனைத்தும்  இறைவனாக  உணர   தேவையான  இறை அருளை  பெறுவதற்காகவும்  துன்பத்தின்  வழியே  வழி நடத்தபடுகிறது.  அனைத்து   துன்பத்திலிருந்தும்  விடுபட  இந்த  அகந்தை  இறைவனிடம்  சரணடைய ........" ஓ! இறைவா  ........அனைத்தும்   நீயே.........நீயே  இந்த  உடல்;...நீயே  இந்த  மனம் ;.........நீயே    புத்தி .......நீயே  புலன்கள்;............ நீயே  புலன்களின் உணர்வுகள் :........அதனை  இயக்கும்    ஆற்றல்;.......அனைத்தும்  நீயே...........எல்லாம்  நீயே !"..............  இப்படியாக   உணர்ந்துவிட்டால்    பின்பு   அகந்தைக்கு    இடமேது?....எனவே   இம்முறையிலே  நாம்  நமது  சாதனையை  செய்வோமாக ...............

எப்பொழுதெல்லாம்  மற்றவர்களை  பார்க்கிறோமோ ,  அவர்களுக்குள்ளே  இறைவனை பார்க்க முயற்சி செய்தல்  வேண்டும்.  அவர்களுக்குள்  உள்ளே உள்ள இறை உணர்வை  காணக்காண  உண்மையிலேயே  அன்பு  செய்ய  ஆரம்பித்துவிடுவோம். இந்த  முறையில்  நாம்  பயிற்சியினை  செய்யசெய்ய ,  இதன்  மூலமாக  ஆனந்தம்  அதிகமாவதனை நன்கு  அறியலாம்.  இந்த  சாதனைக்காக  தனிப்பட்ட  எந்த  ஆசாரமும்  தேவையில்லை.  நாம்  எங்கே  எந்த சூழ்நிலையில் 
வாழ்ந்தாலும்  பரவாயில்லை, அங்கே  இருந்தே தொடங்குவோம்.  காலையில்  எழும்  அந்த   நொடியில் .........நாம்   உணர வேண்டியது.........காணவேண்டியது .......நம்மால்   காணப்படும்   பொருட்கள்  எல்லாம்  இறைவனின்  இருப்புதன்மை  கொண்டது.  இறைவனே! இந்த  பல்வேறு  பொருட்களாக  நம்  முன்னே  உள்ளார். அந்த  பொருட்களின்  ஒவ்வொரு  அணுவிலும்   இறைவனின்  இருப்புதன்மை  உள்ளது. நாம்  சந்திக்கும்  ஒவ்வொரு  மனிதருள்ளும்  கடவுளே  உள்ளார். இந்த  முறையில்  நாம் நம்  மனதை  பயிற்சியால்  மாற்றி அமைத்தால் .......நமது வாழ்க்கை  அருள்  நிரம்பிய  வாழ்வாகும்.

    இரவில்  நமது  கடமைகளை  முடித்து   படுக்கைக்கு சென்றபின்பு  நாம்  இறைவனின்  மடியிலேயே  நமது  தலையினை  வைத்து உறங்குவதாக  உணர வேண்டும்..அதேபோல, அதிகாலை  நாம்  எழுவதும்  இறைவனின்  மடியிலிருந்தே   எழுவதாக  உணரவேண்டும். இது வெறும்  கற்பனையல்ல......உண்மை  என்னவெனில்  இங்கு  அனைத்தும்  இறைவனே.....படுக்கையும்.........ஆனால்  நம்மை  உணர விடாமல்   தடுக்கும்  சில தடைகள்  யாதெனில்.  நமது  அறியாமையே....இப்போது  உள்ள  மனமே ! இந்த  அறியாமைகள்  ......மேற்கண்ட  பயிற்சியினால்  நீங்கும்.


அனைத்திலும்   புனிதமான  இறைஉணர்வே ;  ஆன்மீக பயிற்சிகள் என்பது  தினசரி கடமைகளுக்கு வேறானதல்ல. நாம்  செய்ய  வேண்டியதெல்லாம் நமது கடமை மீதான  பார்வையை  மாற்றி  பார்ப்பது  மட்டுமே. நம்முடைய  சாஸ்திரங்களும்  சொல்வதும்  ......அனைத்தும்  இறைவனே!....அனைத்தும்  பிரம்மமே!...... இறைவனை  அன்றி  வேறுஎதுவுமில்லை.  எனவே  நமது   கடமைகளும்  இறைவனே....அவைகள்  புனிதமானவையே!........நம்மோடு  வேலை  செய்பவர்களும்  இறைவனே......... புனிதமானவர்களே!..............நமது  வேலையில்  பயன்படுத்தப்படும்  பொருட்களும் இறைவனே !.....புனிதமானவையே!.....நம்மை  வேலை  செய்ய  வைக்கும்  அந்த  ஆற்றலும்  இறைவனே !.......இதில்  நமது   முயற்சி எனபது  என்ன  என்றால்  எல்லாவற்றையும்  தொடர்ச்சியாக ........இறைவனாக......காண்பது.....உணர்வது ........ மட்டுமே.   இங்கு  பின்பு  வேலையே  கடவுள்  வழிபாடாகும்.  முடிவில்  நாம்  அறிந்துகொள்வது  என்னவெனில் .....இறைவனே  நம்மிலிருந்தும் , வெளியிலும்   செயல்களை செய்பவராகவும்  இருந்து ,  அவருடைய  வேலையை   நம்மிலிருந்தே அவருக்கு  தேவையானதை  அவரே  பெற்றுக்கொள்கிறார் என்பதை  ....... நிதர்சனமாக  அறிந்துவிடுவோம். 


நன்றி : " The  vision"  -ஆனந்தாஷரமம்