Saturday, August 16, 2014

அன்னை  கிருஷ்ணாபாய்  அவர்களின்  அனுபவம்: சுவாமி  பப்பா  ராமதாஸ்  உடன் .......... "குருவருள்"  என்ற  நூலில்  இருந்து ....

  எம்மை  இடையறாது  'ராம நாமம்'  சொல்லவும், பண்படுத்தவும்  பயன்பட்ட  பகுதிகள் ......உங்களுக்கும்  பயனுள்ளதாக  அமைய.....அந்த  ஸ்ரீ ராமனையே  வேண்டி .....



புண்ணிய ஆத்மா  கிருஷ்ணாபாய்  ஆஸ்ரமத்துக்குள்  முதலில்  நுழைந்த போது, ராமதாஸ்  உள்ளத்துக்குள்  தோன்றிய எண்ணதைப் பற்றி சொல்லவேண்டுமானால் .....கிருஷ்ணா பாயை    'ஒளி, தூய்மை, அருள்  ஆகியவற்றின்  உருவமாகவே  பார்த்தார். இந்த  பூமியில்  உண்மையில்  ஒரு  தெய்வத் தாயாகவே தென்பட்டார்.

இனி   அன்னையின்   வார்த்தைகளில் .....

எங்கும்  நிறைத்த பப்பா!  உங்களுடைய  நிரந்தரமான  சொரூபத்தில்  இணைய,  1928-ஆம்  ஆண்டு  நீங்கள்  ஒரு  உறுதியான  தூண்டுதலை  என்னுள்  எழுப்பினீர்கள்.  நானும்  உங்களிடம்  வந்தேன். உங்களுடைய  புனிதமான  தொடர்பில்  ஓராண்டு  கடந்த பின்னர் ,  ரமேவுக்கு  ராம நாமத்தில் அசாதாரணமான   நம்பிக்கை  இருந்தது. அவள் தனது  உணவைகூட  பொருட்படுத்தாது, பெரும்பாலும்  இரவு  பகலாக  ராம நாமத்தை  உச்சரித்து  வந்தாள். அவளுடைய  நிலை  உங்களுடைய  முதலாண்டு  சாதனையில்,  நீங்கள்  எவ்வாறு  இருந்தீர்கள்  என்பதை  நினைவுபடுத்தியது. இதன்  மூலம்  உங்களிடமிருந்து  ராம நாம  உபதேசம்  பெற வேண்டும்  என்ற  ஆவல்  மேலும் மேலும்  உறுதியாக  வளர்ந்தது.

ஒருநாள்  முற்பகல்  நீங்கள்  ஓய்வுக்குத்  தயார்  செய்து கொண்டிருந்தபோது,  உங்களிடம்  வந்தேன்.
ஆசிரமத்தில்  யாரும்  இல்லாத நேரத்தில்,  கடும்  வெய்யிலில்  நான்  உங்களிடம்  வந்ததை பார்த்து, "இப்போது  ஏன்  வந்தாய் ?" என்று  கேட்டீர்கள். எனது  நோக்கத்தை  உங்களிடம்  தெரிவித்ததும்,  உடனே  நீங்கள், "ஓம்  ஸ்ரீ ராம்  ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் " என்ற  புனித  மந்திரத்தை  உபதேசம்  செய்தீர்கள். 

கருணையே  உருவான  பப்பா! என்னை  உங்களுடைய  குழந்தையாக  ஏற்றுக்கொண்டு,  நீங்கள்  கூறிய  அறிவுரையாவது: " ராம  நாமத்தை  எப்போதும்,  இரவு  பகலாக  உச்சரித்துகொண்டு  இருக்கவும்;  யாருக்கு  சேவை  செய்தாலும்  அது  ராமனுக்குச் செய்யும்  சேவையும் ,  வழிபாடுமாகும்  என்று  கருதுக;  இந்த  பயிற்சி,  பிரம்ம  சொரூபமாகிய  ராமனுடன்  ஐக்கியத்தை எளிதில்  உணர   உதவியாக  இருக்கும் ."  மேலும்  கூறினீர்கள் ,....." இறை  அனுபவம்  பெற வேண்டும்  என்ற  ஆவல்  உன் மனதில்  உறுதியாக இருக்கும்  போது, அதுவே  முழு  முயற்சி  செய்வதற்குரிய  காலமாகும். அந்த  வாய்ப்பை  நீ  பயன்படுத்தவில்லை  என்றால், எவ்வளவு  கடினமாக  முயற்சி  செய்தாலும்  இந்த  வாழ்க்கையில்  அவனை  அடைவது  சந்தேகமே." இதனால்  மிக விரைவில்  எல்லையற்ற  பரம்பொருளுடன்  எனது  ஐக்கியத்தை  அனுபவிக்க வேண்டும்  என்ற  ஆவல்  உறுதி அடைந்தது.

'ராம  நாமத்தை'  உச்சரிக்கும் போதெல்லாம், எனது  சுற்றத்தாரைப்  பற்றி  நினைவு  வரும். அந்த  நேரங்களில்  என்  மனம்  குழப்பமடைவது  வழக்கம். பின்னர்  நீங்கள், " எல்லோரும்  ராமனுடைய  வெளித்தோற்றங்களாக  இருப்பதால்,  உன்னுடைய  சுற்றத்தாரைப்  பற்றிய  நினைவு  வரும் போது குழப்பமடைய  வேண்டாம்.  அவர்களையும்  ராமனாகவே  கருதுவாய்"  என்றும்  கூறினீர்கள்.

மேலும்  என்  உள்ளத்தில்  எழும் எல்லா  எண்ணங்களையும்,  மற்றும்  பார்க்கும்  அனைவரையும்  'ராமன் '  என்றே  கருதுமாறு  கூறினீர்கள்.

உயிருள்ளவை, உயிரற்றவை  அனைத்து  சிருஷ்டிகளிலும்  ராமன்  வியாபித்துள்ளார். ஆகவே, எல்லா  உயிரினங்களிடத்தும், மற்ற பொருள்களிடத்தும்  ஒரே  மாதிரியான  மதிப்பை  வளர்த்துக்கொள்." என்றும்  கூறினீர்கள்.



எல்லையற்ற  பப்பா ! என் மனம்    வேதனைப்படும் பொழுது  அழுவதும், எனது  குழந்தைகள்  குறும்பு செய்து  கீழ்படியாதபோது  அடிப்பதும்  எனது  இயல்பாக  இருந்தது. இதனை  அறிந்த  நீங்கள் ....'உனக்கு   ராமதாஸிடம்  உண்மையான  அன்பிருக்குமானால், இனிமேல்  உன்னுடைய  குழந்தைகளை  அடிக்கும் போது உண்மையில் நீ  ராமதாஸை  அடிக்கிறாய்  என்று  அறிந்துகொள்க!....இனியும்  ஏக்நாத் பாகவதம், ஞானேஸ்வரி   ஆகிய  சாஸ்திரங்களை  படிப்பதை  நிறுத்திவிட்டு,  நாள்தோறும்  செய்துவரும்  வழிபாடு,  ஜபமாலை  பயன்படுத்துதலை  நிறுத்திவிடு. இந்த  சமய  சாதனைகளின்  நோக்கம் எல்லோரையும்,  எல்லா  உயிரிங்களையும்  ஒன்றாக நினைத்து  அன்பு  செய்ய வேண்டும்  என்பதாகும். இந்த  முறையை  பின்பற்றி வந்தும்  உன்னால்  கோபத்தை  கட்டுபடுத்த முடியவில்லை. அப்படியானால்  இவைகளால்  என்ன பயன் ? ஆகவே, இனி  'ராம நாமத்தை'  மட்டுமே  உச்சரிக்க வேண்டும். மேலும்  எல்லோரையும்  ராமனாகவும், யாருக்கு  சேவை  செய்தாலும், அது  ராமனுக்கு  செய்யும்  சேவையாக  கருத  வேண்டும்." 



எங்கும்  நிறைந்த  பப்பா! சில  பக்தர்களின்  இல்லங்களுக்கு  சென்று  தங்களை  பற்றி  பேசிக்கொண்டு  இருக்கும்  போதெல்லாம், நான்  சந்தித்தவர்களிடம்,  ஏதேனும்  குற்றம்  இருந்தால், அவர்களை  நீங்களாகவே  எண்ணிக்கொண்டு,  மேலும்  எத்தகைய  குறைகளையும்  அவர்களிடம்  காணாதவாறு  அருள்  செய்ய  வேண்டும்  என்று  அவர்களிடமே  மானசீகமாக  பிரார்த்தனை  செய்துவந்தேன். பெண்களாக  இருந்தால், அவர்கள் தூங்கும்  போது  அங்கு  சென்று  அவர்களின்  பாத  தூளியை  எடுத்துக்கொண்டு, அவர்களிடத்தில்  உள்ள  குறைகளை  காணுவதிலிருந்து  என்னை  தடுக்க வேண்டும்  என்று  பிரார்த்தனை செய்வேன்.

ஆண்களாக  இருந்தால் ,  அவர்கள்  குளிக்கும்   அறையில் இருந்து  வீட்டுக்குள்  செல்லும்  போது 
அவர்களின்  கால்களில் இருந்து  சொட்டும்  நீரைத்  தீர்த்தமாக  குடிப்பேன். இதை  அவர்களுக்கு  தெரியாமல்  நான்  செய்வது  வழக்கமாக  இருந்தது.
இது  முடியாத போது, அவர்கள்  குளிக்கும்  போது, பின்புறம்  சாக்கடை  வழியாக  வரும்  நீரை  தீர்த்தமாக  அருந்துவேன்.  அதே  நேரத்தில்  மறுபடியும்  குற்றம் காணாது  செய்யுமாறு  அவர்களிடம் பிரார்த்தனை  செய்துகொள்வேன். இந்த  பயிற்சியால்  யாரிடமும்  எந்த  குற்றமும்  காணாத  நிலையை  நான்  அடைந்தேன்.

சர்வ  வியாபியான  பப்பா!  உங்கள்  அருளால்  நான்  கடுமையான  அச்சம்  தரும்  உங்கள்  வடிவங்களிடத்து  வெறுப்பும்,  சாந்தமான  அமைதி தரும்  உங்கள்  வடிவங்களிடதும்  விருப்பும்  கொள்ளலாகாது  என்றும்,  நீங்கள்  விரைவில்  என்னை  உங்களது  பூரணமான  சொரூபத்தில்  கரைத்துக்கொள்ள  வேண்டும்  என்றும்  அடிக்கடி  பிரார்த்தனை  செய்வது  வழக்கமாக  இருந்தது.

இதன்  மூலம்  நான்  எல்லோரையும்  நீங்களாகவே பார்த்தேன். எல்லோருக்குள்ளும்,  எல்லாவற்றிலும்  உங்களையே  பார்க்கும்  பார்வையைப்  பெற்றேன். உங்களுடைய   எல்லையற்ற  பெருநிலையில்  நான்  ஒன்றாகி  இருக்கும்  அனுபவத்தைக்  கொடுத்தீர்கள். இதன்  பின்னர்  தான்  மன  நிறைவு  பெற்றேன்.

கேட்கப்படும்  சொற்கள்  அனைத்தும்  மந்திரங்களாகவும் ,  ராமனின்  புகழுரைகளாகவும்  கொள்ளவேண்டுமென  நீங்கள்  எனக்கு  கூறி, உங்களுடைய  நிரந்தரமான  பெருநிலையை  நான்  உணர  அருள்  செய்தீர்கள்.

நான்  எப்பொருளை  நுகர்ந்தாலும்  அது  ராமன் புனிதத்  திருவடிகளில்  சமர்ப்பணம்  செய்யப்பட்ட  நறுமணமே  என்று  கூறி  அழியாத  இருப்பைப் பற்றிய  அறிவை  எனக்கு  அளித்தீர்கள்.

நான்  எதை பருகினாலும்  அது  தீர்த்தம்  என்று  புரிந்துகொள்ளுமாறு  செய்தீர்.

உங்களின்  பிரசாதத்தை  ஆவலுடன் உண்பதைக்  கண்ட  நீங்கள்,  நான்  எதை  உண்டாலும்  அது  ராமனின்  பிரசாதம்  தான்  என்று  அறிவுறுத்தினீர்கள்.

என்னுடைய  கைகளால்,  நான்  எந்த  வேலையைச்  செய்தாலும்,  அது  ராமனுடைய  வழிபாடும், சேவையே  ஆகும்  என  அறிவுறுத்தினீர்கள்.

நீங்கள், நான்  எங்கு  அமர்ந்தாலும்  அது  'ராமனுடைய  முன்னிலையே  ஆகும்  என்று  கருத  வேண்டும்'  என்று  அறிவுரை  கூறினீர்கள்.

இறுதியில்,  நான்  எங்கு  நடந்தாலும், சென்றாலும்  அது  கடவுளுக்குச்  செய்யும்  பிரதட்சணமேயாகுமென்று  அறிவுறுத்தினீர்கள்.

" நன்மையிலும்,  தீமையிலும்  நீங்கள் ராமனைக்  காணவேண்டும் . அவன்  இரண்டிலும்  இருக்கின்றான்.  இரண்டிற்கு  அப்பாற்பட்டும்  இருக்கின்றான். அவனுக்கு  ஆதியும், அந்தமும்  இல்லை. அவனே  அசைவற்று,  மாறுபாடு  இல்லாது    எங்கும்  நிறைந்து  யாவற்றுக்கும்  அப்பாற்பட்டவனாக  இருக்கின்றான். அவன்   எப்பொழுதும்   மாற்றமடையாதவனும், மாற்றமடைந்துகொண்டே   இருப்பவனும்  ஆவான். அன்பே  பேருருவமாக  இருப்பவன்.  வெறுப்பின்  உருவமும்  கூட  அவன்தான்.  ஆயினும்  அவை  இரண்டுக்கும்  அப்பாற்பட்டவன்.  ஆகவே,  நாம்  நன்மை  அல்லது  தீமை  எதைப்  பார்த்தாலும், அவை  இரண்டிலும்   ராமனையே  காணவேண்டும்.  எல்லா  உடல்களிலும்,  உருவங்களிலும்  இருந்து  விளையாடுபவன்   அவன்  ஒருவனே".

"இடைவிடாது  " ராம  நாம "  ஜபம்  செய்க . இருமைகள்  உனக்குத்  தொல்லை  தரும்போது  அதுவும்  ராமனே  என்று  எண்ணுக "  என்று  கூறினீர்கள்.

இவ்வாறு  நான்  முன்னேறிச்  செல்ல, " எல்லா   உயிரினங்களிலும்  நீங்கள்  நிறைந்துள்ளீர், மேலும்  என்னுள்ளும்   குடிகொண்டுள்ளீர்  என்ற   அனுபவத்தை  அடைந்தேன்.  இதன்  விளைவாக  என்  உள்ளத்தில்  பரிபூரணமான  அன்பும்,  அமைதியும் , அழியாத  ஆனந்தமும்  நிலைத்து நின்றது.

 இவற்றைத்  திரும்பத் திரும்ப  படிக்க ......நம்முள்  நிகழும்  மாற்றம்  அலாதியானது.  
அனுபவித்து  பாருங்கள்.
நன்றி  : ஆனந்தாஸ்ரமம்  " குருவருள் "  என்ற  நூலிருந்து ............

  
    

No comments:

Post a Comment