குருஸ்வரூபம் : -
இன்று பிற்பகல் ஒரு வாலிபன் சோபாவிற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, 'ஸ்வாமி! நேற்று காலையில் அந்த குஜராத்தி அம்மாளிடம் தியாகம் என்றால் அகத்தியாகம் என்று சொன்னீர்களே அது எவ்வாறு உண்டாகும்? முதலில் அகத்தியாகம் என்றால் என்ன?' என்று கேட்டான்.
"அகத்தியாகம் என்றால் எல்லா வாசனைகளும் அடங்கி விட வேண்டும். அது எவ்வாறு உண்டாகுமென்றால் சாதனை மூலம்தான்" என்றார் பகவான். 'சாதனைக்கு குரு வேண்டும் அல்லவா?' என்று அவன் கேட்டதற்கு "ஆமாம் வேண்டும்" என்றார் பகவான். 'சத்குருவை எந்த விதமாக நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது? அந்த குருஸ்வரூபம் எப்படிப்பட்டது?' என்று கேட்டான். "யார் மீது உன் மனம் லயிக்கிறதோ அவர்தான் குரு. சத்குரு இவர்தான் என்று எவ்வாறு தீர்மானிப்பது? அவர் ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்றால், சாந்தமும், அடக்கமும், கட்டுப்பாடும் உடையவராய் காந்தக்கல்போல் தன் பார்வையாலேயே ஆகர்ஷிக்கும் சக்தி படைத்தவராய் எல்லோரிடமும் நிலையான, சமமான நோக்கம் கொண்டவராய் இருப்பதுதான். குருஸ்வரூபம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் தன் ஸ்வரூபம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தன் ஸ்வரூபம் யாதென்று தெரியாத போது குரு ஸ்வரூபம் எப்படித் தெரியும்? குரு ஸ்வரூபத்தைக் காண வேண்டுமென்றால் உலகனைத்தையும் குரு ஸ்வரூபமாகக் காண வேண்டும். ஒவ்வொரு ஜீவனிடமும் குரு பாவத்ையே காண வேண்டும். ஒவ்வொரு ஜீவனிடத்தும் குரு உருவையே காண வேண்டும். ஈச்வரனென்றாலும் அதே போன்றுதான். எல்லாவற்றையும் ஈசனுருவாகக் காண வேண்டும். தான் யாரென்றும் அறியாதவன், ஈஸ்வர ரூபத்தையோ, குரு ரூபத்ையோ எவ்வாறு காண்பான்? எவ்வாறு தீர்மானிப்பான்? அதனால் முதலில் உன்னுடைய உண்மையான ஸ்வரூபம் என்னவென்று தெரிந்து கொள்" என்றார் பகவான்.
'அதைத் தெரிந்து கொள்வதற்கு குரு வேண்டாமா?' என்றான் அந்த வாலிபன். "உண்மைதான். உலகத்தில் எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள். உன் மனம் எவரிடம் லயிக்கிறதோ அவரையே குருவாகக் கொள். குறிதானே குரு?" என்றார் பகவான்.
இளைஞன் அத்துடன் திருப்தியடையாமல் பெரியவர்களில் சிலரது பெயர்களைச் சொல்லி, அவரிடம் இந்தக் குறை இவரிடம் இந்தக் குறை என்று கூறி, 'இவர்கள் எப்படி குரு ஆவார்கள்?' என்று மறுப்பு தெரிவித்தான்.
பகவான் தம்மை யார் எவ்வளவு நிந்தித்தாலும் பொறுத்துக் கொள்வார். ஆனால் பிறரை நிந்தனை செய்தால் துளியும் தாங்க மாட்டார். சற்று உரத்த குரலில், "ஓஹோ, உன்னை நீ தெரிந்து கொள் என்று சொன்னால், கேட்காமல், அவரிடம் இந்தக் குறை இவரிடம் இந்தக் குறையென்று தோஷம் கூறுகிறாயே! உன் குறையை நீ திருத்திக் கொண்டால் போதும். அவர்கள் குறைகளை அவர்கள் தாமே பார்த்துக் கொள்ள முடியும். உன் செர்டிஃபிகேட் இல்லாமல் அவர்களால் மோக்ஷம் அடைய முடியாத என்ன? பாவம்! உன் செர்டிஃபிகேட்டைத்தான் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மகா பெரியவன். நீ மெச்சவில்லையென்றால் அவர்களுக்கு கதி வேறேது? இங்கே அவர்களைக் குறை சொன்னாய். இன்னொரு இடத்தில் எங்களைக் குறை சொல்வாய். நீ எல்லாம் அறிந்தவன். நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள். உனக்கு அடங்கியிருக்க வேண்டும்தான். இருப்போம். 'ரமணாச்ரமத்திற்குப் போனேன். அவரிடம் கேள்வி கேட்டேன். அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவருக்கொன்றும் தெரியாது' என்று எல்லோரிடமும் பிரகடனம் செய் அப்பா" என்றார் பகவான்.
அந்த வாலிபன் திரும்பவும் அதே தோரணையில் பேசத் தொடங்கியதும், ஒரு பக்தர் தடுத்தார். பகவான் அதைப் பார்த்து, "இருங்கள் ஐயா, நீங்கள் யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். அவர் மனது திருப்தியடையும் வரை பேசிக் கொண்டேயிருக்கட்டும். அவர் அறிவாளி, நாமெல்லாம் அவருக்குப் பணித்திருக்க வேண்டும். இவர் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். இதெல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு மூளையில் உட்கார்ந்திருந்தார். நாளாக நாளாகக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்தில் வந்தார். நேற்று அந்த அம்மாள் கேள்விகள் கேட்டதைப் பார்த்து, 'நானும் ஒருத்தன் இருக்கிறேன்' என்று மூட்டையை அவிழ்திறுக்கிறார். கட்டி வைத்ததெல்லாம் அவிழ்த்து விட வேண்டாமா? இந்த உலகமெல்லாம் தேடி குருஸ்வரூபம் நிர்ணயிக்கிறாராம் இவர். தனது குருவாக ஏற்றுக் கொள்வதற்கு யோக்யதை, இதுவரை எவரிடமும் தென்படவில்லையாம். தத்தாத்ரேயர் ஜகத்குரு இல்லையா? அவரே 'உலகமெல்லாம் எனக்கு குருதான்' என்றார். ' கெட்டதைப் பார்த்தால் அதைச் செய்யக் கூடாதென்று தோன்றுகிறது. அதனால் அதுவும் குருதான். நல்லதைப் பார்த்தால் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. அதனால் இதுவும் குருதான். நல்லவை, கெட்டவை இரண்டுமே எனக்கு குருக்கள்தான்' என்று சொன்னார். வேடனொருவனை அவர் வழிகேட்ட போது, தன் சொல்லை அவன் காதில் போட்டுக் கொள்ளாமல், பறவையையே குறி பார்த்து அடிப்பதைக் கண்டு, 'அப்பா, நீ எனக்கு குரு' என்று நமஸ்கரித்தாராம். பறவையைக் கொள்வது ஹிம்சையானாலும் கவனத்துடன் குறிபார்த்து அம்பு எய்வதைப் பார்த்து 'என் மனமும் இந்த விதமாகவே ஈச்வரணிடத்தில் குறியாகவிருந்து லயிக்க வேண்டும் என்று நீ போதிக்கிராய். ஆகையால் நீ எனக்கு ஒரு குரு' என்றாராம். இவ்விதமாக எதைக் கண்டாலும் அதுவே குருவென்று சொல்லி கடைசியில் இந்தச் சரீரமே குரு என்றார். எப்படியென்றால் தூக்கத்தில் இந்தச் சரீர உணர்வில்லை. இந்த இல்லாத பொருளின்மேல் தேகாத்ம பாவம் கூடாதென்று போதிக்கிறது. அதனால் இதுவும் குருதான். அவர் உலகத்தையெல்லாம் குருவாகப் பாவித்ததால் உலகமெல்லாம் அவரைக் குருவென்று கொண்டாடியது. ஈச்வரன் விஷயத்திலும் அப்படித்தான். உலகத்தையெல்லாம் ஈச்வர மயமாக எவர் பார்க்கிறாரோ அவரை ஈச்வரன் என்று உலகம் வணங்கும், நாம் எவ்வாரோ அவ்வாறே உலகமும், 'யத்பாவம் தத்பவதி' என்கிறார்கள். பெரிய தோட்டமொன்றிருக்கிறது. குயில் வந்தால் நல்ல பழங்களுக்காக மாமரங்களைத் தேடுகிறது. காக்கை வந்தால், அது வேப்பமரங்களைத் தேடுகிறது. வண்டுகள் தேனுக்காக நல்ல புஷ்பங்களைத் தேடினால், ஈக்கள் மலத்தைத் தேடுகின்றன. சாலக்ராமம் வேண்டுபவன் கற்களையெல்லாம் தள்ளிவிட்டு அது ஒன்றை மாத்திரம் எடுத்துப் பூஜிக்கிறான். அந்தச் சாலக்ராமம் கற்களுக்கிடையில்தான் இருக்கும். கெடுதல் இருந்தால்தான் நல்லது தெரியும். இருள் இருந்தால்தான் வெளிச்சம் தெரியும். மாயை இருந்தால்தான் ஈச்வரன் இருப்பான். சாரத்தைக் கிரஹிப்பவனுக்கு நூற்றில் ஒன்று நல்லது கிடைத்தால் போதும். அந்த ஒன்றை எடுத்துக் கொண்டு மீதி தொண்ணூற்றோன்பதைத் தள்ளிவிட்டு, 'இது ஒன்று போதும்பா நமக்கு', இதைக் கொண்டு உலகத்தை எல்லாம் ஜயிக்கலாம் என்று நினைக்கிறான். அவனுடைய பார்வை அந்த ஒன்றின் மேல்தான் இருக்கும்", என்று கணீர்க் குரலில் சொல்லி முடித்தார் பகவான்.
ஹால் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. மணி 'டண், டண்' என்று நான்கு முறை முழங்கியது. அஞ்ஞானம் என்னும் சூரபத்மனை சம்ஹாரம் செய்த அருணாசல ரமணரின் பாத பத்மங்களை நமஸ்கரித்து, துதி இசைக்க வந்த ஆதிமயூரமே போன்று வடதிசையில் இருந்து ஹாலுக்குள்ளே ஒரு மயில் வந்து, கம்பீரமான கேகாத்வனியில் தன் வரவைத் தெரியப் படுத்திக் கொண்டது. பகவான் "ஆவ் ஆவ்" என்று அழைத்துக் கொண்டே தன் பார்வையை அந்தப் பக்கம் திருப்பினார்.
- சூரிநாகம்மா
(ஸ்ரீ ரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள், பாகம் 1)
(ஸ்ரீ ரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள், பாகம் 1)
நன்றி : திருமதி சாந்தா பாலகுமாரன் அவர்கள் முகநூல் பக்கம் மற்றும் கார்த்திகேயன் செல்வராஜ் அவர்கள்.