Sunday, June 18, 2017

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

Image may contain: 1 person, glasses, beard and close-up

மகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா? POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம்.
இன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக தளங்களில் ஆற்றும் எதிர்வினை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களை மேலும் ஊக்குவிக்கவே செய்யும்.
அப்படியெனில் நாம் என்ன செய்யவேண்டும்? மகாபெரியவா வழிகாட்டுகிறார் பாருங்கள்!
ஸ்ரீமடம் பாலு அவர்கள் தொகுத்த மகா பெரியவாள் தரிசன அனுபவங்களிலிருந்து, கதர்க்கடை ஏ.வி.வெங்கட்ராமன் ஸ்ரீரங்கம் அவர்கள் விளக்கியுள்ள அத்தகைய அற்புத சம்பவம் ஒன்றை அளிக்கிறோம்.

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்?

பூஜ்யஸ்ரீ மகாஸ்வாமிகள் சுமார் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை சமீபம் வேட்ட மங்கலம் என்ற சிறிய கிராமத்தில் முகாம் செய்திருந்தார்கள். அப்போது திரு.பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் ''பிள்ளையார் சிலை உடைப்பு'' இயக்கம் ஆரம்பித்தார்கள். சிலை உடைப்பு ஆரம்ப தேதி அறிவித்தவுடன் கும்பகோணத்திலுள்ள சிவனடியார் திருக்கூட்டத்தினர் பதறிப்போய், ஸ்ரீஸ்ரீ பெரியவாள் அவர்களை வேட்டமங்கலத்தில் சந்தித்து, 'இதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுப்பது?' என்று கேட்டார்கள்.
        அதற்கு ஸ்ரீ பெரியவாள், 'பக்தர்கள் எல்லோரும் நாளை முதல் பிள்ளையார் கோவிலுக்கு போய் தேங்காய் உடையுங்கள், அபிஷேக ஆராதனை செய்யுங்கள்' என்று ஆசியுரை வழங்கினார்கள்.
         அடியேனிடம் ஸ்ரீ பெரியவாள் மௌனத்திலேயே ஜாடைக்காட்டி 'விநாயகர் அகவலை எல்லோரும் பாராயணம் செய்யும்படி பத்திரிக்கையில் போடு' என்று உத்தரவு கொடுத்தார்கள். மேலும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல் புஸ்தகம் அச்சிட்டு இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் படியும் உத்தரவு. இதில் ஒரு ஆச்சர்யம். விநாயகர் அகவல் என்று ஒரு நூல் இருக்கும் விபரம் எனக்கு தெரியாது. மௌனத்தில் ஜாடையாக ஔவையார் என்று சொன்னதும் எனக்கு விளங்கவில்லை. விநாயகர் அகவல் நூல் பற்றி சொன்ன ஜாடையும் புரியவில்லை. பிறகு மணலில் விரலால் எழுதிக் காட்டினார்கள். இரவு நேரம். ஸ்ரீ பெரியவாள் இருக்கும் இடத்தில் எலக்ட்ரிக் வெளிச்சம் இருக்கவில்லை. மணலில் எழுதியது, இரவில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சிலேட்டும் குச்சியும் கொண்டு வர சொல்லி எழுதிக்காட்டினார்கள். புரிந்தது. அதன்படி விநாயகர் அகவல் அச்சடிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் ஸ்ரீ பெரியவாள் விருப்பம் விநாயகர் அகவல் பாராயணம் செய்யும்படி செய்தியாக வந்தது. ஸ்ரீ பெரியவாள் அவர்களது கையெழுத்து அச்சு எழுத்துப் போல் இருந்ததை கண்குளிரப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.

பெரியாரும் ராமநாமமும்!

தஞ்சை நகரில் திரு. பெரியார் சிலையின்கீழ் ''கடவுளை நம்புபவன் முட்டாள்'' என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த சிலர் ஸ்ரீ மகா பெரியவாளிடம் வந்து 'இப்படி எழுதப்பட்டிருக்கே? என்ன செய்வது?' என்று ஆதங்கப்பட்டபோது ஸ்ரீ பெரியவாள் ''நீங்கள் காந்திஜியின் சிலை வைத்து அதன் கீழ் ராமநாமாவை எழுதுங்கள். ராமநாமம் ஜபிப்பது சாலச் சிறந்தது- என்று எழுதுங்கள்' என்று ஆலோசனை வழங்கினார்கள்.

நன்றி : rightmantra சுந்தர்.

No comments:

Post a Comment