Wednesday, June 7, 2017

வேத அத்யயனம் வேண்டாம்...

வேத அத்யயனம் வேண்டாம்...

Image may contain: 1 person, sitting
மஹாபெரியவா

ஸ்த்ரீகள் படிக்க வேண்டியதைச் சொன்னமாதிரியே படிக்க வேண்டாததையும் சொல்லவேண்டும். இப்படி நான் சொன்னால் கன்னா பின்னா புஸ்தகங்கள் படிக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்கிறேன் என்று எதிர்பார்பீர்கள். அதுவும் வாஸ்தவந்தான். ஆனால் கன்னா பின்னாவே இல்லாத இன்னொன்று, எல்லாக் கன்னா பின்னாக்களையும் போக்குகின்ற இன்னொன்றும் ஸ்த்ரீகளுக்கு வேண்டாம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதால் அதையும் நான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
வேதத்தைத்தான் சொல்கிறேன்.
வேதத்தின் தாத்பர்யத்தைச் சொல்லும் பல புஸ்தகங்கள் இருக்கின்றன. அவற்றை ஸ்த்ரீகள் படித்துச் தெரிந்து கொள்ளட்டும். நேரே வேதத்தைப் படிப்பதும் அதிலுள்ள ஸூக்தங்களைப் பாடம் பண்ணுவதும், புருஷர்கள் மாதிரியே அத்யயனம் பண்ணுவதும் வேண்டாம்.
இப்படிச் சொன்னால் ஒரே கோபமாகச் சில பேர் ஆக்ஷேபிக்கிறார்கள். ‘வேத, உப நிஷத, இதிஹாஸ புராணாதிகளைப் பார்த்தால் ஸ்த்ரீகளும் வேதத்தில் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றனவே! ஸ்த்ரீகளில் ப்ரஹ்மவாதினிகள் என்றே சொல்லப்பட்டவர்களும், மந்த்ரங்களைக் கண்டுபிடித்துச் கொடுத்த ஸ்த்ரீ ரிஷிகளும் கூட இருந்திருக்கிறார்களே’ என்று சான்று காட்டுகிறார்கள். பூர்வ யுகங்களில் அப்படி விதிவிலக்கு மாதிரியோ, என்னவோ, கொஞ்சம் இருந்திருப்பதை ஒத்துக் கொள்ளவேண்டியதே. ஆனால் அந்த யுகங்களில் நடந்ததை இந்தக் கலியுகத்துக்குப் பொருத்துவதுதான் ஸரியில்லை. கலியுக ஜீவர்கள் அல்ப சக்தர்கள். அவர்களில் எது எவருக்கு ஆகும், ஆகாது என்பதற்கு தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து அதன்படிதான் பண்ண வேண்டும். தனிப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். ஒருவருக்கே இன்றைக்கிருக்கிற அபிப்ராயம் நாளைக்கு இல்லாமல் போகலாம். அதனால் இந்த அபிப்ராயங்களை வைத்துப் பொது ஸமூஹத்துக்கான எந்த முடிவையும் எடுப்பதற்கில்லை. தங்களுடைய தனி மநுஷ்யத் தன்மையை அப்படியே போக்கிகொண்டு ஆத்ம ஸாக்ஷாத்காரத்தையும் லோக க்ஷேமத்தையுமே நினைத்துக் கொண்டிருந்த ரிஷிகளை தர்மத்துக்கு அதிகார புருஷர்களாக ஈச்வரன் நியமித்து அவர்கள் மூலம் லோகத்துக்கான தர்ம-அதர்ம விதிமுறைகளை சாஸ்த்ரமாகக் கொடுத்திருக்கிறான். அந்த சாஸ்த்ரம் சொல்கிறதுதான் யாரும் ஆக்ஷேபிப்பதற்கில்லாத முடிவு. இங்கே நம்முடைய பகுத்தறிவைக் கொண்டுவந்து கேள்விகேட்டால் ப்ரயோஜனப்படாது. ஈசவர ஸ்ருஷ்டி தர்மத்தையும், மர்மத்தையுமே அந்த ஸ்ருஷ்டிக்குள் அகப்பட்ட இந்தச் சின்னூண்டுப் பகுத்தறிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றால் எப்படி முடியும்?
சீர்திருத்தவாதிகள் மேல்மட்டத்தோடு பார்த்துத் தங்களுக்கு நல்லதாகத் தோன்றுவதைச் சொல்கிறார்கள். அந்த மேல்மட்டம் நம்முடைய பகுத்தறிவின் எல்லைக்குள் வருவதால் நாமும் அந்தச் சீர்த்திருத்தக்காரர்களை ‘ஆஹா’ என்று பாராட்டிப் பேசுகிறோம். தர்ம சாஸ்த்ரத்தைத் தந்த ரிஷிகளோ உள்மட்டத்திற்கும் போய், ஈச்வர ப்ரேணையில் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த இடத்தில் ப்ரவேசிக்க நம்முடைய பகுத்தறிவால் முடியாது. நம்பிக்கையின் மேலேதான் அவர்கள் சொல்வதை எடுத்துக்கொண்டாக வேண்டும். நம்முடைய அப்படிப்பட்ட பூர்ண நம்பிக்கைக்குப் பாத்ரமாகும் யோக்யதாம்சம் பெற்றவர்களே அவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நமக்குத் தெரிந்த சீர்திருத்தவாதிகளைவிட அதீந்திரிய சக்தி பெற்ற ரிஷிகள்; லோக க்ஷேமத்தைப் பற்றிச் சீர்திருத்தவாதிக்கு இருப்பதைவிட அதிகக் கருத்துள்ளவர்கள். சீர்திருத்தவாதிகள் நினைக்கிற லோக க்ஷேமம் இந்த லோகத்தோடு நிற்பதுதான். ரிஷிகள் நினைத்த லோக க்ஷேமம் பரலோகத்தை லக்ஷ்யமாகக் கொண்டது. அதற்காக இந்த இஹலோகத்தை அவர்கள் தள்ளிவிடவில்லை. இதையே அதற்கு உபாயமாக ஆக்கிக் கொள்வதற்குத்தான் தர்மம், தர்மம் என்கிற ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்து, இந்த லோகத்தில் யார் எப்படிப் பண்ணினால் அவர்களுக்கும் நல்லது, மொத்த ஸமுதாயத்துக்கும் நல்லது என்று ‘ரூல்’கள் போட்டிருக்கிறார்கள்.
அப்படியொரு ரூல்தான் கலிகாலத்தில் ஸ்த்ரீகளுக்கு வேதத்தில் அதிகாரமில்லை என்பது. வேதம் படிப்பது எதனால்? அது நல்லதைச் கொடுப்பது என்பதால்தான். ஆனால் அந்த வேதமோ எல்லா ரூல்களையும் நமக்குப் புரிகிற மாதிரி codify செய்து கொடுக்கவில்லை! அப்படிப் பண்ணுவது எது என்றால் தர்ம சாஸ்த்ரங்கள்தான். ச்ருதி என்ற வேதத்துக்கு விளக்காக இருப்பது ஸ்ம்ருதியாகிற தர்ம சாஸ்த்ரம். வேதம் படிப்பது நல்லதைக் கொடுக்கும் என்று நமக்குத் தெரிவதே அந்த தர்ம சாஸ்த்ரம் அப்படிச் சொல்வதால்தான். ஆனால் அதே சாஸ்த்ரம் கலிகாலத்தில் அல்ப சக்தர்களான ஸ்த்ரீகள் வேதம் படித்தால் அது நல்லதைக் கொடுப்பதற்குப் பதில் கெட்டதைத்தான் உண்டுபண்ணும் என்று சொல்கிறதென்றால் அதைக் கேட்க வேண்டியது தானே? அது சொல்கிறபடியே Do’s ஐயும் Don’t’s -ஐயும் முறையே செய்வதும், செய்யாமலிருப்பதும்தான் நம் கடமை. சாஸ்த்ர ரூலையே மீறி சாஸ்த்ரம் படிப்பேன் என்றால் எப்படி? ‘பகுத்தறிவுக்கு எட்டும் காரணம் கேட்கப்படாது, நம்பிக்கையின் மேலேயே போகவேண்டும்’ என்று சொன்னேன். ஆனால் பகுத்தறிவுக்கு எட்டும் ஒரு காரணமும் இதற்கு இருக்கிறது. புருஷர்கள் செய்கிற மற்ற அநேக கார்யங்கள், துணிகரமான ஸாஹஸங்கள் ஸ்த்ரீகளும் செய்து ஜயித்தாலும் ஜயிக்கலாம். ஆனால் புருஷர்கள் வேத கோஷம் என்று கம்பீரமாக மந்த்ரங்களுக்குரிய ஸ்வரங்களின் ஏற்ற இறக்கங்களுடன் நாபியிலிருந்து சப்தம் எழுப்பி மணிக்கணக்கில் சொல்வதுபோல் சொல்வது ஸ்த்ரீகளாகப் பிறைந்தவர்களுக்கு முடியவே முடியாத கார்யம், வேத மந்த்ரங்களை அப்படி கோஷித்தால்தான் பூர்ண பலன். புருஷர்கள் அப்படி கோஷம் பண்ணிவிட்டு கை, கையாக நெய்யைச் சாப்பிட்டு சமனம் பண்ணிக் கொள்வது போல் பண்ணுவதற்கு ஸ்த்ரீகளின் ஜீர்ண சக்தி இடம் கொடுக்காது. பிடிவாதத்தின் மேல் ஸ்த்ரீகளும் பெருங்குரலெடுத்து வேத கோஷம் பண்ணினால், ஸ்த்ரீகளுக்கு என்றே இருக்கிற கர்ப்பப்பை முதலானவற்றுக்கும் பெரிய ஹானி உண்டாகும். இப்படி அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வதோடு லோகத்திலும் ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் பல கோளாறுகள் உண்டாகும். அந்த ஒரு சாரார் சாஸ்த்ரத்துக்கு அடங்க மறுப்பதே அத்தனை சாராரும் சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ராஜாங்கச் சட்டம், ஸ்தாபனங்களின் சட்டம், பெரியோர்களின் கண்டிப்பு முதலிய ஸகலத்துக்கும் அடங்க மறுப்பதற்கு தூபம் போடும்.
அடங்காமை என்பதுதான் இன்று நம்மைப் பீடித்திருகிற பெரிய தீமை. அது இருக்கிற வரையில் இன்றைக்கு லோகத்தில் உள்ள மாதிரி அசாந்திதான் ஸ்ர்வ வ்யாபகமாக இருக்கும். அந்த அடங்காமைக்கு மாற்று மருந்தாகத்தான் அடக்கத்தைத் தலையான அங்கமாகக் கொண்டுள்ள சாஸ்த்ரீயமான பெண்மையை இன்று எப்படியேனும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்பது. நேர்மாறாக, இந்த அடங்காமையை வேதத்தின் விஷயத்திலேயே கொண்டு வருவது மஹாபாபமாகும்.

நன்றி : மஹா பெரியவா " முகநூல்  பக்கம் "

No comments:

Post a Comment