Monday, May 15, 2017

அக்னி ஹோத்ரம்

சாக்தம்  :- அக்னி  ஹோத்ரம் 


Image result for yagam



             மந்த்ர ஜபங்களை  ஆழ்ந்து , அமர்ந்து  செய்து  பழகியவர்களாலேயே  ஹோமங்களை  முழு  ஈடுபாட்டுடன் , நியதியுடன் , சத்ய நிஷ்டையாக  செய்யமுடிகிறது.

            பஞ்ச  பூதங்களில்  நெருப்பினை  நமஸ்காரம்  செய்ய  தொடங்கிய  மனிதன் ......தன்னுடைய  ஆசைகளை , அபிலாசைகளை , குறைகளை  நெருப்பின்  மூலம்  தெய்வங்களிடம்  சேர்க்கும் ஆகுதிகளை  அளிக்கும்  நியதிகளை, ஒழுங்கு  முறைகளை  ஹோமமாக  வணங்கினான்.

        ஹோமம்  என்பது  நெருப்போடு  பேசுவது. நெருப்பாக  மாறுவது.எங்கும்  நிறைந்த  பரம்பொருளை  அடைவதற்கு  தீயை , நெருப்பினை  ஒரு  தூதுவனாக  பயன்படுத்த  ஏற்பட்டது. அக்னியில்  சமர்ப்பிக்கப்படும்  எல்லா விஷயங்களும்   கடவுளிடம்  போய்ச்சேருதலை  மனிதன்  தெளிவாக  அறிந்து, அதற்கான  வழிமுறைகளை  மிகுந்த  மரியாதையோடு  வணங்கி  கற்றுக்கொண்டான்.  தலைமுறை,  தலைமுறையாக  கடைப்பிடித்தான்.

          மனிதனும் ,  நெருப்பும்  ஒன்றே. நெருப்பு  நிலையானதல்ல. இடையறாது  எரிந்துகொண்டே  இருப்பது, இடையறாது  மாறிக்கொண்டே  இருப்பது. மனித  உடம்பும்  அவ்வாறே !

         இடையறாது  ஒவ்வொரு கணமும்  மாறிக்கொண்டே  முதுமையை  நோக்கி  நகர்ந்துகொண்டே  இருக்கிறது. மனிதன்  நெருப்பினில்  தன்னைக்  காண்பதால் ...........தன்னுடைய  வீர்யம்  போலவே , தன்னுடைய  துடிப்பு   போலவே  நெருப்பினையையும்  காண்கிறான்.  தனக்கு  இருக்கும்  கொடுமையான  எண்ணங்கள்  போலவே நெருப்புக்கும்,  தீய்க்கின்ற   குணம்   இருப்பதாய்  உணர்கிறான். அதனாலேயே  நெருப்பினை  மிகவும்  சினேகமாக்கி  கொள்கிறான்.

          உயிர்  என்பது  ஒரு  சிறிய   மின் துடிப்பு. அந்த  மின்துடிப்பிலிருந்து  சூடு  பறக்கிறது. அந்த  சூடே  உடம்பை  உலவவிடுகிறது. உண்ணவிடுகிறது, உறங்கவிடுகிறது; உழைக்கவிடுகிறது  என்பதும்  புரிந்துபோயிற்று. மனிதன்  நெருப்போடு  கொண்ட  சிநேகம்  தான்  மின்சாரம்.  மின்சாரத்தின்  இன்னொரு  துடிப்புதான்  மின்னணு.

         பூமி  சுழலவும் , பூமியின்  தாவரங்கள்  மேல்நோக்கி  வளரவும்,  பூமிக்குள்  இருக்கின்ற  வெப்பம்தான்  காரணம்.

        நெருப்புக்கு  மிகுந்த  நன்றி  கூறி  அதனை  வணங்கி,  அதன்மூலம்  இயற்கையின்  நன்மைகளையும் ,  தெய்வங்களையையும்  அடைய  காரணமான  நெருப்பினை நெருப்புப்பெட்டி   உருவாகாத  அந்த  காலங்களில்,  சில  குடும்பங்கள்  பாதுகாத்து  வந்தன.  அந்த  அந்தணகுடும்பங்களுக்கு   நெருப்பை  பாதுகாக்கும்  பொறுப்பு  அளிக்கப்பட்டது.

Image result for agnihothram images

                எனவே,  அக்னி  ஹோத்ரம்  செய்பவர்கள்  இல்லங்களில்  எப்பொழுதும்  நெருப்பு  இருக்கும். அந்த  நெருப்பினை  அனையவிடுவதில்லை. ( இன்றும் கூட ) அக்னி  ஹோத்ரம்  செய்வதற்கென்றே  தனியிடம்  இருக்கும். அங்கே நெருப்பினை  வளர்த்து  அக்னியை  மந்திரங்களால்  வழிபட்டு ........அந்த  அக்னியிலிருந்து  சிறு  கங்குகள்  எடுத்து  வீட்டிற்கும் , மற்ற  வீடுகளுக்கு  பயன்படுத்தவும்  அனுப்புவார்கள்.

         பெண்கள்  புடைவைத்தலைப்புகளால்  மறைத்து  விளக்கினால்  அக்னியை  எடுத்துச்சென்று  அவரவர்  இல்லங்களுக்கு  எடுத்துச்செல்வர். எனவே  அந்தணர்  வீட்டினில் அக்னி  எப்போதும்  இருக்கும்.  அக்னி  கேட்டால்  கொடுக்க  வேண்டியது  அந்தணர்  பொறுப்பு. மாட்டேன்  என்று  ஒருபொழுதும்  மறுக்கக்கூடாது. அதேபோல்  அக்னிஹோத்ரிகளை   வழிபடுவதும்,  வாழ்விப்பதும்   மக்கள்  பொறுப்பாகவும்  இருந்தது.

      சாக்தத்தில்  அக்னியின்  பங்கு  காண்போம். பிரபஞ்சத்தில்   ஊடாடும்  சப்தங்களை  உணர்ந்து  அதை  மந்திர  வடிவாக்கி  ரிஷிகள்  கொடுத்தார்கள்  அல்லவா! அந்த  மந்திரங்களை  திரும்ப  திரும்ப,    சொல்லச்சொல்ல  நமக்குள்  ஒரு  புதிய  அதிர்வை  ஏற்படுத்தும். மாறுதலை  நிகழ்த்தும்.  அப்படி  சொல்கின்ற  முறையை  அக்னியோடு ,  ஆகுதியளித்து  மந்த்ரங்களை  சொல்லவைத்தார்கள்.

          மனதை   இன்னும்  ஒருமுகப்படுதலை ,  விரைவாக  சீராக்குதலே , குவித்தலே ........இறுதியாக   அக்னியில்  மனம்  ஒன்றி, ஒன்றி   .....மனம்  ஸ்தம்பிக்கிறது .

Image result for bala atibala mantra in tamil

        வெறுமனே  தனியே  மரத்தடியில்  உட்கார்ந்து  மண்டபத்தில்  உட்கார்ந்து  மந்திர  சொற்களை  திரும்பத்  திரும்ப   சொல்லி  மனதை  ஒருமுகப்படுத்தும்  இன்னொரு வலிமைமிக்க   உபாயமாக  அக்னியை   வளர்த்தல்.

              மணல்  பரப்பி, செங்கல்   வைத்து அதன்மீது  பசுஞ்சாணி  வரட்டியை  அடுக்கி , சுள்ளிகளை  வைத்து  காலம்காலமாய்  தொடர்ந்து  வந்த  நெருப்பால்  அதனை  ஏற்றி ,  அது வளர்வதற்கு  நெய்யை  ஊற்றுகிறபொழுதும்  மூலமந்திரம்  சொல்லி  ஊற்றினார்கள்.


Related image

         சம்மணமிட்டு  உட்கார்ந்து  கண்மூடி  உள்ளுக்குள்  மந்திர  ஜபம்  சொல்வதைவிட  இந்தமுறை  இன்னும்   சுகமாக  இருந்தது .........மிகவிரைவாக , மிகஎளிதில்  மனம்  குவிந்தது.
மந்திர  ஜபம்  இன்னும்  ஆழ்ந்து  சொல்ல  முடிந்தது.

         அக்னியை  சாட்சியாக  வைத்து,  அக்னிக்கு  எதிரே  செய்கின்றபொழுது  இன்னும்   அதில் ஈடுபாடு  அதிகமாயிற்று.

        முழு கவனமும்   அக்னியின்மீதும் ,  மந்திரத்தின்  மீதும்   நிலைத்து நின்றன.  அதை  மிகுந்த  அன்போடு , மிகுந்த  பக்தியோடு  இந்த  நிவேதனப்  பொருளெல்லாம்  இறைவனுக்கு  சென்று  அடையட்டும்   என்று   உண்மையோடு  ஜெபிக்கின்றபொழுது .............நிவேதனம்  செய்கின்றபொழுது   மனதில்  மிகப்பெரிய  நிறைவு  ஒன்று  ஏற்படுகிறது. மிகப்பெரிய  அக்னி  வளர்த்து,  எல்லா  திக்குகளிலும்  உட்கார்ந்து  இந்த  மந்திர  ஜெபத்தைக்  கற்றுத்தேர்ந்தவர்கள்   நெய்  எடுத்து  அக்னிமீது  ஊற்றி  ஒரே குரலில்  அந்த  மூல  மந்திரத்தை  ஜபிக்க , ஜபிக்க   அந்த  இடத்தின்  அதிர்வுகள்  மாறுகின்றது.

            அந்த   இடம்   நல்ல அதிர்வுகள்  கொண்ட  இடமாக  வளரும். அந்த  இடத்திற்கும்   மேலே  உள்ள பிரபஞ்ச  சக்திக்கும்  மிக  எளிதில்  தொடர்பு  ஏற்படுகின்றது. இதனால்  அங்கு  மழை  பொழியும்.  காற்று தூய்மையாக  மாறி  வீசும். துஷ்டத்தனமான  சூட்சுமங்கள்  அவ்விடம்  விட்டு  விலகி  ஓடிவிடும். நல்லவர்கள்  அங்கு  விரைவில்  ஒன்று  சேர்வார்கள். நல்ல  நம்பிக்கை  பரவும். அங்கு  அமைதி  நிரம்பும். இதனாலேயே  இன்னும்  சிறப்பாக  ஹோமங்களை  இன்னும்  பலமுடன்  அங்கு  செய்வார்கள்.

             இதனாலேயே  அக்காலங்களில்  ரிஷிகளும், மன்னர்களும்   ஒன்று  சேர்ந்து  மிகப்பெரிய  அளவில்  இந்த  யாகங்களை  செய்தார்கள்; பலன்  பெற்றார்கள்.  தனியே  உட்கார்ந்து  திரும்பத்  திரும்ப   மந்திர  ஜபம்  நெடுநாள்  செய்தவருக்கு  ஹோமம்  மிகப்பெரும்   சந்தோஷத்தை ,  சந்துஷ்டியைத்  தரும்.  அதில்   இன்னும்  உண்மையோடு  இருக்க ,  அதனாலேயே  ஆனந்தம்  பெருகப்பெருக ..........இன்னும்  உண்மையாக  ஹோமங்கள்  செய்வார்கள்.   

             என்ன நடக்கும் ?   உள்ளே  நிகழும்  இது  ஒரு  விஷயத்தின்  ஆரம்ப  நிலைகள். மந்திர  ஜபம்   சொல்லிச்சொல்லி  நெருப்பினில்  நெய்யூற்றி   அதை  ஹோமமாக  செய்கின்றபொழுது ...........மனம்  ஸ்தம்பிக்கின்றது. மிகச்சரியாக  ஹோமம்  செய்கின்றவர்கள்,  கிட்டத்தட்ட  அக்னியின்  ரூபத்தையே  ஒத்திருப்பார்கள். சிவந்த  கண்கள், செஞ்சடை ,  மார்பு  ரோமங்கள்  அக்னியால்  பொசுக்கப்பட்டும்,  பளபளப்பான  மேனியும் ,  மெல்லிய  உடலும்  கொண்டுஇருப்பார்கள்.




               அவர்கள்   மிகுந்த  அமைதியோடு  இருப்பார்கள். சீறும்போது   கடுமையாக  சீறுவார்கள்.  மிக  வேகமாக  இயங்குவார்கள். அக்னியால்  ஏற்பட்ட   மொத்த  வலிமையையும்  வெளிப்படுத்துவார்கள்.

          வாக்கு  பலிதம்  கொண்டவர்கள், புத்தி  சாதூர்யம்  கொண்டவர்கள். வருங்காலம்  உணர்பவர்கள். உலகத்தின்  ஒவ்வொரு  அசைவையும்  உற்றுக்  கவனிக்கிற  யுக்தி  உடையவர்கள். இது  எப்படி  இவர்களுக்கு  ஏற்பட்டது ? 

                 மனம்  ஸ்தம்பிதலால் !..........மனம்  நிற்றலால் !

              ஹோமம்  செய்கின்றபொழுது  முழு  ஈடுபாட்டுடன்,  நம்பிக்கையுடன் ,  பக்தியுடன் .......மிகுந்த  உண்மையாக  மந்திர  ஜெபத்துடன்  அக்னியில்  நெய்யினை  ஊற்றுகின்றபொழுது   அவர்களின்  மனம்  வெகு  எளிதில்  ஸ்தம்பித்துப்  போகின்றது.

Related image

         தனியே  அமர்ந்து  மந்திர  ஜபம்  செய்து  செய்து  உருவேற்றி  மந்திர  ஜெபத்தோடு  நெருங்கிய   பழக்கமுள்ளவர்கள்  ஹோமம்  செய்கின்றபொழுது,  அந்த  ஹோமம்  மிகச்  சிறப்பை  அடைகிறது.  அப்படி  மிகச்சிலரே  இருக்கிறார்கள்  என்பதும்  ஒரு  உண்மை!

         செயலில்  ஒரு  ஒழுங்கும்,  நியதியும்  வந்தபொழுது  மட்டுமே  இது  கைகூடும்.  எடுத்தேன் ,  கவிழ்த்தேன்  என்பவர்களால்  ஒருபோதும்  இதனை  கைக்கொள்ளமுடியாது. மனமும்  லயிக்காது. அவர்களால்  ஹோமங்கள்  சிறப்படையாது.



       இடத்தை  சுத்தம்  செய்து, வருகிறவர்களை   தேர்ந்தெடுத்து,  ஹோம  குண்டங்களை  மந்திரங்கள்  சொல்லி  புத்துயிர்  ஊட்டி,  அவைகளைப்  புனிதப்படுத்தியபின்பு  விடியலில்  எந்த  பரபரப்புமின்றி  வெகு  நிதானமாக  சகல  திரவியங்களும்   அருகே  இருக்க,  அந்த  திரவியங்களைக்  கொண்டுவா   என்றுகூட  சொல்வதற்கு  முயற்சிக்காமல்   அவை  அனைத்தும்  அருகே  இருக்கும்படியாக  வைத்துக்கொண்டு,   வேறு பேச்சுக்கள்  
இல்லாமல் ,  வேடிக்கையான  சிந்தனைகள்  இல்லாமல்  முழு  மனதாய்ச்  செய்கின்றபொழுது  மந்திர  ஜபம்  இன்னும்  பலநூறு  மடங்கு  பலமடைகிறது.

   
         தனியே  அமர்ந்து  செய்வதைக்காட்டிலும்  இன்னும்  மந்த்ர ஜபம்  உள்ளுக்குள்  அடர்த்தியாக  தங்கிவிடுகிறது.  உடம்பு  முழுதும்  பரவி , புத்தியில்  ஆளுமை  செய்கிறது. மந்திரங்கள்  மனம்  முழுதும்  பரவி  அமர்ந்துக்கொள்கிறது. இதனால்  மனம்  ஸ்தம்பித்துபோகிறது.

           உடம்பும் , புத்தியும் ,  மனமும்    மந்திரத்தால்  ஆட்பட்டிருக்க  அப்படிச்  செய்பவரின்  வாழ்வு முறை   மாறிப்போகிறது.  இப்படிச்  செய்துதான்  ரிஷி  என்ற  பட்டத்தை  நமது  பெரியோர்கள்  பெற்றார்கள்.  அதுவே  வாழ்க்கை  முறையாக  அவர்களுக்கு  அமைந்தது.

Image result for yagam

          ஹோமம்  செய்வதற்கென்றே  தன்  வாழ்க்கையைப்  பக்குவப்படுத்திக்கொண்டார்கள். என்   வேலை ஹோமம்  செய்வது.  வேறு  எதுவுமில்லை  என்று  தீர்மானித்தார்கள்.  இந்த  ஹோமம் ,  இந்த  உபாசனை  என்றால்  இவரை  அழையுங்கள்  என்று  தேர்ந்தெடுத்துக்கொண்டு   அதில்  மிகத்தீவிரமாக  ஈடுபட்டார்கள்.  அப்படி  மிகுந்த  ஈடுபாட்டோடு  ஹோமம்  செய்கின்றபொழுது,  தன்னைத்  தவிர,  தான்  வளர்கின்ற  நெருப்பினைத்  தவிர  வேறு  சில  சக்திகளை  உணர்ந்தார்கள். ஆதி  சக்தியின்  அம்சமாக , அங்கமாக  பல்வேறு  சக்திகளை பூமியில்  அவர்கள்  இயங்குவதை  உணர்ந்தார்கள்.  அவர்களுக்கு  பெயரிட்டார்கள்.  வழிபட்டார்கள்.

             அவர்களை  சக்தியின்  தோழிகள்  என்றார்கள். " தச  மஹா  வித்யா "  என்ற   முறையில்  விளக்கம்  சொன்னார்கள். 

           பக்குவிகள்  பல்வேறு  பெயர்களில்  உள்ளது  ஒரே  விஷயமே  என்று  மந்திர ஜெபங்களால்  உணர்ந்துகொண்டார்கள். அவற்றையெல்லாம்  " ஸ்ரீ  வித்யா "  என்ற நெறிமுறையாக   வகுத்து தொகுத்து ,  அளித்துள்ளார்கள். 


நன்றி : " திரு. பாலகுமாரன் "  அவர்கள் 
               ' சக்தி  வழிபாடு '.

1 comment:

  1. பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் சக்தியே அக்னி. எனவேதான் அக்னியை சாட்சியாக வைத்துக்கொண்டே நம் சடங்குகள் நடந்தேறுகின்றன...

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    ReplyDelete