Thursday, November 6, 2014

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்

சுகக்  கடல்  பொங்க..................... சொல்லுணர்வடங்க : 
             

         சர்வ  வியாபகமாக  இறைவன் ,  அந்தர்யாமியாக   எல்லாவற்றிலும்  நிறைந்து  விளங்குவதை  பகவான்  ரமணர்  இந்த  பாடலில்   விளக்கியுள்ளார்.


                   " வெளி வளி   தீநீர்   மண்பல  உயிரா 
                            விரிவுறு    பூத   பெளதிகங்கள்              
                     வெளிஒளி   உன்னை  அன்றி  இன்று  என்னின் 
                              வேறு யான்  ஆருளன்   விமலா 
                     வெளியதாய்  உளத்தே  வேறு  அற  விளங்கின் 
                              வேறு  என  வெளிப்படுவேன்  ஆர் 
                     வெளிவராய்   அருணாசலா   அவன்  தலையில் 
                               விரிமலர்ப்   பதத்தினை  வைத்தே ! "

" எங்கும்  பரந்து , விரிந்து  நிறைந்த  ஆகாயம் ,   காற்று , நீர் ,  நெருப்பு  , மண்  என  ஐந்து   பூதங்களும் ,  அவற்றின்  கலப்பான   இந்த  பிரபஞ்ச  தோற்றம் ,  உயிரினங்கள்   எல்லாம்   சித்  சொரூபமான   உன்னையன்றி  வேறு  ஒன்றுமே   இல்லை.  உண்மை  இவ்வாறு  இருக்க ,  உனக்கு  வேறாக  நான்  ஒருவன்  மட்டும்  எப்படி  இருக்க  முடியும் ? என்  உள்ளத்தில்   ஆத்மாவாக ,  நான் ...நான்,  என்று   இரண்டற்று ,  அபேதமாக  நீயே  பிரகாசித்துக்கொண்டு  இருக்கும்போது ,  அன்னியமாக   நான் - என்று ( அஹங்காரமாக )  எழும்புகின்றேனே ...........அந்த  "நான்  யார் ? ".  அந்த   அஹங்காரத்தின்  மேல்  உனது  விரிந்த  அருள்   மலர்ப்  பாதத்தினை  வைத்து ,  அருணாசலா   நீயே  வெளிபட்டு   வருவாய் !"  என   பகவான்  பிரார்த்திக்கிறார்.


          எல்லாமே   நீயாக  இருக்கும்போது   எப்படி  ஒருவன்   தனித்து  வெளிப்பட்டு  வர  முடியும் ?   இவை  எல்லாமே   உன்   விளையாட்டுதான்   என்கிறார்  பகவான்.

                   ஒருவனாம்   உன்னை  ஒளித்து  எவர்  வருவார் 
                       உன்சூதே  இது,   அருணாச்சலா !

இதற்கு    குருவின்  மலர்திருப்பாதம்   சாதகன்   தலையில்  வைக்கப்  படுதல் வேண்டும் !  பகவானது   குரு  யார் ?  அருணாசலனே !  அவர்தம்  குரு ,  எனவே

                    " தலையில்   விரிமலர்ப்  பாதம்  வை  !"

எனக்  குறிப்பிடுகிறார். இந்த  குருபாதம்   ஸ்பரிசத்தையே   மணிவாசகரும்,

                 " குருவடிவாகி   குவலயம்   தன்னில் 
                      திருவடி   வைத்த   திறம்  இது பொருள் !"

எனக்  குறிப்பிடுகிறார்.

             ரமண  குருவின்  திருவடிப்  பாதங்கள்  நம்  உள்ளத்தில்  ,  நம்  தலையில்  தங்கும் பொழுது,    குருவின்  திருவருள்  நம்மை   அஞ்ஞான  மையல் ,  ஆசை ,  அகந்தை   வலைகளில்   சிக்காமல்  பாதுகாக்கிறது.

             " கூர்வாள்   கண்ணியர்   கொடுமையில்  படாது அருள் 
                    கூர்ந்து  எனைச்  சேர்ந்தருள்   அருணாச்சலா !

"உலகின்  கவர்ச்சி  மிக்க  விஷங்கள்   நம்மை  மாய  வலையினில்  சிக்க வைத்து   பின்னர்   நமது   துன்பத்திற்கு   காரணமாகின்றன. அவற்றில் சிக்கிவிடாமல்   எனது  குருவாகிய  உனது  அருள்  என்னைக்  காப்பதாக ! " என  பகவான்   நமக்காக  வேண்டுகிறார் !

   தமது   வாக்கு  வன்மையால் .......பிறரை   ஈர்த்து   ஆட்படுத்தி ..........மிகச்சிறந்த   ஞானிபோல   தம்மை   வெளிப்படுத்தி ,  பின்னர்   அவர்கள்  புறம்  போக  விடாமல்  துன்பத்தில்   ஆழ்த்தும் ,  போலி  குருமார்கள்,......

இது  போலி குரு  ஒருவனை  நம்பி   ஏமாந்த  நண்பர்  ஒருவரின்  கதை ......

 ( இன்றைக்கு   உள்ள   போலி  பாபாக்கள்  )  தான்  சொன்னதை   கேட்காததால்  சீடர்களைப்   பழி வாங்கும் , அவர்களின்  குடும்பத்தை   வஞ்சகமாகப்  பிரித்து , அவர்தம்   மனைவியை   வசப்படுத்தி,  காரும், வீடும்   விற்றால்  மனைவி , குழந்தை   கிடைப்பார்கள்   என  மிரட்டி , விற்க  வைத்து ,    அந்த பணத்தையும்   பிடுங்கிக்கொண்டு ,   சீடனின்  மனைவியை  கைப்பற்றிய      .......  போலி  பாபா ,இன்றும் ........ இத்தகைய  போலி   பாபா   உண்டு !)


போலிகள்   நிறைந்து   வழியும்  இன்றைக்காக ,  பகவான்   அன்றைக்கே   செய்த   பிரார்த்தனை !

ரமண  பகவானை   குருவாகப்  பெற்றது  நமது  பூர்வ  புண்ணியம்  மற்றும்  பகவானின்  எல்லையற்ற  கருணையே !  உங்களின்   திருவடிகளில்  பணிந்து வேண்டுவது  என்னவென்றால்...........போலிகளின்  நடிப்பால்  ஏமாற  வேண்டாம் !..........ரமண  பகவானுக்கே  எப்பிறப்பிலும்   அன்பராவோம் !

ரமணருக்கு   ஆட்பட்ட  பின்   பிறவி  ஏது ?

      ரமண  பகவானின்   திருவடிகளையே   தஞ்சமாய்  கொண்டு   ஆன்ம  விசாரணையில்    ஊக்கமுடன்   ஈடுபட .............ரமணரின்   திருவருளால்  தடைகள்   நீங்கி ..........பாய்ந்து  வரும்   அருள்  வெள்ளம்  நம்மை   உள்ளுக்குள்   இழுத்து  செல்கிறது.

ஆம் ,  போலிகளை   சேராமல் .........ஆன்ம  விசாரணை  செய்ய  ஆரம்பித்தால்...இறையருள்   பாய்ந்து  வருகிறது !   ரமண   அருள்   தானே  வெளிப்பட்டு .  அப்பரம்பொருளில்   சேர்க்கிறது.

இந்த    உள்முக  நாட்டம்  விசாரணையால்,  தீவிர  நாட்டமுற   தனது  உண்மை  உருவாம்  ' உணர்வுமயம் '  நிலைக்கிறது !

                   " தேனுக்குள்  இன்பம்   சிவப்போ   கருப்போ 
                       வானுக்குள்   ஈசனைத்  தேடும்  மதியிலி 
                      தேனுக்குள்   இன்பம்   செறிந்து  இருந்தாற்போல் 
                      ஊனுக்குள்   ஈசன்   ஒளிந்து  இருந்தானே !

ரமண  சத்குருவின்   அருளில்   முழுநம்பிக்கை   வைத்து   நாம்  முயற்சியைத் தொடங்கினால்   போதும்.  எவ்வளவு   துயரில்   நாம்  கிடந்தாலும் ,  அருள் நம்மை   மீட்டெடுத்து ,  வழிநடத்தி   தரும்  அனுபவம் ,  "  நான்   வேறு ,  நீ  வேறு ! " என்ற   வேறுபாட்டு   உணர்வை  நீக்கிவிடுகிறார்  ரமண சத்குரு !

இரண்டு   என்ற   வேறுபாட்டு  உணர்ச்சி  போக்கிவிட்டால்,  இருமை  என்பதே  இல்லாமல்   ரமணருக்குள்   அடங்கிவிடுகிறோம்.  ஏக போகமாய் , ஒன்றாகி ,   நான்   என்பதே   இல்லாமல்   தானாய்  பரிணமிக்கும்  நிலையே ........

              " சுகக்  கடல்  பொங்க ..........சொல்லுணர்வடங்க !"
                                     
                                            
    " எம்  இதயத்தில்,  தலைமேல்.... உறையும்   ரமண  திருப்பாதம் " 







நன்றி :  ரமணோதயம்
         

   

No comments:

Post a Comment