Saturday, November 1, 2014

ராம் ஒருவனே முழுமையான வஸ்து!

அனைத்தும்  ராம் !

                       

           சத்தியமாம்   ஒரே உண்மை  ராம்  ஒருவனே !  இந்த  ராம்  என்பது  உருவமாக   வருவதற்கு   முன்பும்,   உருவமற்றும்    இருந்ததும்   அவன்  ஒருவனே ! அவனை  அறிதல்  என்பது,  மாறும்  உருவங்கள்  கொண்ட  இந்த
மாய  உலகத்திலிருந்து   விலகுதலே  ஆகும்.


         உருவமற்று ,  அகில  உலகையும்   வியாபித்து  காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய  சக்தியே  ' ராம் '.

         அவன்   பிறப்பு -  இறப்பு   இல்லாதாவன்.   பொருட்கள்  அனைத்திலும்,  உயிர்கள்  அனைத்திலும்   வியாபித்து  இருக்கும்   அவன்   ஓயாது   மாறிக்கொண்டு  இருக்கும்   நாம  ரூபங்களின்   தன்மையால்  தனித்தனியாக  காணப்படுவது   வெறும்   தோற்றம்   மட்டுமே!

      இந்த   நாம - ரூபங்களின்  பொய்த்  தோற்றத்திலிருந்து   விழித்தெழுதல்   அல்லது   உண்மையைக்   காணுதலென்பது  ராமின்   பேரன்பை  அல்லது   அவனுடன்   ஒருங்கிணைவதை  உணர்வதாகும்.

       ராமிடம்   அன்பு   செலுத்துவது   என்பது   அனைத்து   இருப்புகளிடத்தும்,  அனைத்து   உயிர்களிடத்தும்,  ஜடப்பொருட்களிடத்தும்   அன்பு  செலுத்துவதே  ஆகும்.

        ஏனென்றால்   ராம்   அனைத்திலும்   உள்ளான்,  அனைத்தும்  ராமில்  உள்ளது.   ராம்   ஒருவனே  முழுமையான   வஸ்து.

        இந்தப்  பேருண்மையை   உணர்வதற்கு  -    அஞ்ஞானத்தினால்   நம்மை   தனித்தனி     உயிர்களாய்க்  கருதும்  நாம்  -  எங்கும்   நிறைந்திருக்கும்,  எல்லையில்லாக்   கருணையாம்   அபார   சக்தியான  ராமின்   இயக்கத்திற்கும்,  அவன்   சித்தத்திற்கும்   முழுமையாக   சரணடைதல்  வேண்டும்.

         ராம்   ஒருவனே  நிலையான   உண்மை.  முழுவதுமாக    ராமின்    திருவுள்ளச்   சித்தத்திற்கு   அடிபணிவதன்  மூலம் ,  தேகாபிமான  உணர்வால்   நாம்  இறைவனிடமிருந்து   பிரிந்திருக்கிறோம்,  தனிப்பட்ட  வியக்தி  என்னும்   நினைவு  மறைந்து,  நம்மிலும்   நம்மைச்  சுற்றிலும்   வியாபித்திருக்கும்  இறைவனுடன்  ஒருங்கிணைந்து   அவனுள்  ஐக்கியமாகி   விடலாம்.


        இப்படிப்பட்ட  மனோநிலையில்   வேற்றுமை   உணர்ச்சியாம்  பகைமை  அழிகிறது.  ஒற்றுமை   உணர்வாம்  அன்பு   துளிர்க்கிறது.

     
       தனியானதோர்   இருப்பு   நமக்கு   இல்லையென  ( " நான் "  என்ற   அகந்தையின்   இறுமாப்பு   அறவே  ஒடுங்குமாறு )  நம்மை   தனித்தனி   உயிர்வாழ்வனவாக    எண்ணாமல் ,  பணிந்து  கொண்டால்   இந்த   தெய்வீக  அன்பைப்  பெறலாம்.


       இந்த  நிலை  எய்தினால்   பரிபூர்ண   அன்பு   என்ற  இறைவனுடன்  ஐக்கியம்   என்ற   உணர்வால்    தூண்டப்பெற்று   உடலை  பற்றிய   எண்ணங்கள்   ஒழிந்து,  ராமின்   வடிவங்களாம்  அனைத்து   மனிதர்   மற்றும்   பிராணிகளின்   நலன்களையே   நாடுவோம்.

    அனைத்தும்   ராம்   ஆன  பிறகு   எண்ணம் , மனம் , உள்ளம் , உயிர்   அனைத்தும்    ராமில்   ஒடுங்கிவிடும்.

இந்த  நிலையில்தான் ............................


      "  வேறு  எதையும்   நினைக்காமல்  எவர்  என்னையே   நினைத்து ,  எங்கும்   என்னையே   வழிபடுகிறார்களோ , மாறாத   உறுதிகொண்ட   அந்த   பக்தர்களின்   யோக  சேமத்தை   நான்    தாங்குகிறேன் ".

-----என்பது   அனுப  உண்மையாகிறது.


 அனைத்திலும்   ஊடுருவிப்   பரவிய   உயிர்   நீ  - ' ராம் '.




                                                                                            - ஸ்வாமி  ராமதாஸ்
                                                                  -  'கடவுளைத்தேடி '  என்ற   நூலிலிருந்து.........


குறிப்பு :

                 நண்பர்களே !  புயலாய்த்  தாக்கும்   துன்பங்களின் போது   இவற்றை  திரும்பத்   திரும்ப   படித்து ,   இவை   எமக்கு   அனுபவமாக   வேண்டும்   என்ற  கதறலோடு   இருக்கும்   போது .............எம்முள்   அமைதியும் ,   இடைவிடாது   ராம  நாமம்   சொல்ல    தூண்டுதலாய்   இருந்த   பகுதிகள்..........................

        
                                        

No comments:

Post a Comment