Sunday, November 9, 2014

ராம் ஏழைப்பங்காளன்

அனைவரையும்  காக்க  ' ராம் '  ஒருவன்  உள்ளான் :
           

        ஸ்வாமி  ராமதாஸ்   யாத்திரையில்   ஏழைத்தாய்  ஒருவர்,  தாம்   வயது  முதிர்ந்து,  மிகவும்   பரிதாபகரமான  நிலையில்   உள்ளதாக  கூறினார். உலகில்  தனிமையில்  விடப்பட்டு ,  எல்லா  நேரமும்   மிகுந்த   துக்கத்திலும் , வேதனையிலும் , கவலையிலும் , பயத்திலும்  தான்  வாழ்நாட்களைக்  கழிப்பதாகக்  கூறினார்.

             ராமதாஸ்   அவருக்கு,  " தாயே !  அனைவரையும்  காக்க  ராம்  ஒருவன்  இருக்கும்பொழுது,  பயப்படுவதற்கோ ,  கவலைப்படுவதற்கோ  அல்லது  நிர்கதியாய்  நிற்கிறோம்  என்ற   உணர்வுக்கோ  இடமில்லை.  எப்போதும்  நமதருகில்  ' ராம் '  இருக்கின்றான் "  என்று  உறுதி  அளித்தான்.


        " ஆனால்  இந்த  எளிய ,  மனம்  தளர்ந்த  என்னைப்  போன்ற  பெண்  இறைவன்  மேல்  எந்த  விதமான  நம்பிக்கையும்   வைத்திருக்கவில்லை ,  ஏனென்றால்   நான்  பாவம்  செய்தவள் "  என்று  கூறியவாறு   அந்த  அன்னை  கண்ணீர்  மல்கினார்.

        " அன்பான   அன்னையே !  ராம்   அருளால்  நம்பிக்கை  உண்டாகும் , ராம்  என்றுமே   ஏழை   எளியவர்களுக்கு   நண்பன் " என்று  ராமதாஸ்  கூறினான்.

      "  அப்படியானால்,  எனக்கு   ஒரு  வழி  காட்டுங்கள் "  என்று  கேட்டார்   அந்த  மூதாட்டி.

     " பகலில்   எப்போதும்,  மற்றும்  இரவில்  விழித்திருக்கும்  போதும்  " ராம் "  என்ற   ஒரு  நாமத்தையே   இடைவிடாமல்   உச்சரித்துக் கொண்டுஇருங்கள்.
இந்த  மேன்மை  மிக்க  நாமத்தைக்  கூறிக்கொண்டு  இருக்கும்  வரை  நிச்சயமாக   நீங்கள்  தனிமையையோ ,  துயரத்தையோ  உணர  மாட்டீர்கள்.
இந்த  அற்புத  நாம  ஒலி   எங்கு  எழுப்பப்படுகிறதோ  அல்லது   தியானிக்கப் படுகிறதோ  அங்கு   எந்த  விதமான   துக்கமோ , கவலையோ ,  ஏக்கமோ ,  ஏன்  மரணம்  கூட   இல்லை.  "  என்று   கூறியவாறு  ராமதாஸ்  செல்வதற்கு   ஆயத்தமான  போது,  அவ்வன்னை  அவனை  மறுநாளும்   வரவேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

          அவர்  விருப்பப்படியே   மறுநாளும்   அதே  நேரத்தில்  ராமதாஸ்   அக்குடிலுக்கு  சென்றான்.  " தாயே !  எப்படி  இருக்கிறீர்கள் ? " என்று   கேட்டான்.


        அவ்வன்னை   முகத்தில்   உற்சாகப்  புன்னகை  தவழ்ந்தது.  ராமதாஸின்  அறிவுரைப்படி   செய்ததால்  பயத்தினின்றும்,  கவலையிலிருந்தும்  தான்  பெரிதும்   விடுபட்டுள்ளதாகக்  கூறினார்.  இனிப்புக்  கடையிலிருந்து   வாங்கி  வைத்திருந்த  சில  இனிப்புகளை   ராமதாஸுக்கு   அளித்தார்.

       அதற்கு  அவன்   "  அன்னையே !  ராமதாஸ்   விரும்புவது  இதுவன்று ;  தங்கள்   கைகளாலேயே   செய்தது   ஏதாகிலும்  இருந்தால்  நன்று, "  என்று  சொன்னான்.

         உடனே   அவர்  உள்ளே  சென்று   தன்   கையாலே   செய்த  ரொட்டித்துண்டு   ஒன்றை  கொண்டு  வந்து   கொடுத்தார்.  ராமதாஸ்   அதை  பெருமகிழ்ச்சியுடன்   உண்டான்.  பின்பு   ஒருமுறை   அவ்வன்னையைப்  பார்க்க   நேர்ந்தது.  அவர்   ராம  நாம   ஜெபத்தில்  மிகத்   தீவிரமாக   ஈடுபட்டிருப்பதை   கண்டான்.


நன்றி :  " கடவுளைத்தேடி  "  என்ற   நூலிலிருந்து 
                   ஸ்வாமி   பப்பா  ராமதாஸ்.

No comments:

Post a Comment