Wednesday, November 12, 2014

நாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்

" நான்  தேகமல்ல - நான்  யார் -  அவனே  நான் "

              

                         கண்ணை   மூடித்   தியானம்   செய்தால்  எல்லோராலும்  பகவானை   மனதில்   பிடிக்கமுடிகிறதா ?

                 ஆனால்   லலிதாவும் ,  இந்திராவும்   கண்ணை  மூடினால் ,  அவர்கள்
மனம்   ரமணரின்   பாதகமலங்களிலேயே    சுற்றி  வரும்.

            லலிதா    துடுக்கு,  சமர்த்து;  இந்திரா  சாந்தம் ,  கம்பீரம்.  ஆந்திராவைச்  சேர்ந்த  குர்ரம்  சுப்பராமையாவின்   புத்திரிகள்   அவர்கள்.

         நேரம்  கிடைக்கும்போதெல்லாம்   திருவண்ணமலைக்கு  வந்து   ரமண  தியானத்தில்   மூழ்கி   முத்தெடுப்பார்  சுப்பராமையா.  அவர்  கல்லூரிப்  பேராசிரியர் ,  கவிஞர்.  அறிஞர்.

          1937- ம்  ஆண்டு.  சுப்பாரம்மையா   தனது  மகள்  லலிதாவுடன்  ரமணாஸ்ரமம்   வந்தார்.

          ரமணாஸ்ரமத்தின்   தியானக்கூடம்,  ரமண  பக்தர்களின்  சொர்க்க  பூமி. அங்கு   வருபவர்களுள்    நிம்மதியைத்  தேடுபவர்கள் ,  தங்களைத்  தேடுபவர்கள்,  தெய்வத்தைத்   தேடுபவர்கள்  என்று   பலரும்  அமர்ந்திருக்க , நடுநாயகமாக  ரமணர்   வீற்றிருப்பார்.

         துடுக்கான  லலிதா   அன்று   தன்னோடு   விளையாட ,  ஒருவரும்   இல்லையே  என   இங்குமங்கும்   அலைந்துகொண்டு   இருந்தாள்.

         ஹாலுக்கு   வரும்   மயிலை  அவள்    துரத்த  முடியாது.  குரங்குகளைக்  கண்டால்   அவளுக்கு  பயம்.  அணில்   அவளை  நெருங்குவதே   இல்லை.
நாய்   சொறி   பிடித்தது,  சே   வேண்டாம்.

         அந்தப்   பெரிய   ஹாலில்   பலரும்   விறைப்பாக   அமர்ந்தவாறும் ,  கண்களை  மூடிக்கொண்டும் ,  ரமணரைத்   தரிசித்துக்  கொண்டும் ,  பாராயணம்   செய்துகொண்டும்   இருக்கிறார்கள்.

         லலிதாவுடன்   விளையாட   யாருமில்லை.  தேடித்  பார்த்ததில்  ' தாத்தா  சாமிதான்  ' சும்மா ' இருக்கார்.  அவர்தான்   எனக்கு  லாயக்கு '  என  நினைத்தாள்.  ' சும்மா  இருப்பது '  மாபெரும்   தவம்   என்பது   அவளுக்கு   எப்படித்தெரியும் ?

         ரமணரின்   பக்கத்தில்  போய்   நின்றாள்  லலிதா.  அவருக்கு   ஏதாவது   சேவை   செய்யவா ?  ம்ஹூம் ,  ஒரே  சேஷ்டைதான். விசிறியை   ஆட்டி  சத்தம்  செய்வாள்.  நூல்களைப்   புரட்டுவாள்.  அவைகள்   கீழே  விழும்.  சிலர்  கண்களைத்   திறந்து   பார்ப்பர்.  நீண்ட   பொறுமைக்குப்   பிறகு   விஷமம்   அதிகமானால்,  மகரிஷியே,  "  ஏய்.  என்ன   பண்ற ....? " என்று   லேசாக  அதட்டுவார்.

        உடனே  லலிதா   வாய்க்  குவித்து,  மெல்லத்  தலையாட்டி,  " சுவாமி , நா ஒண்ணுமே   பண்ணலே,  சும்மாதான்   இருக்கேன் "  என்பாளே   அது   கொள்ளை   அழகு !

         பகவானே   சிரித்து,  "  இவ   இப்படித்   துறுதுறுன்னு   ஏதேதோ  செய்யறா,   ஆனா   நா  ஒண்ணுமே   செய்யல '  என்கிறா.  ஒரு  சிறுமி  இதைச்  சொல்ல  முடியறது.  ஆனா   பெரியவா  இதைப்  புரிஞ்சுக்க  முடியலையே "  என்றார்.  கீதையின்   சாரத்தை  இப்படி  குழந்தையின்  மூலமா   பிழிந்து  கொடுத்தார்  ரமணர்.

        1941 -ம்  ஆண்டு.  மே  மாதம்   மூன்றாம்  வாரம். மீண்டும்    திருவண்ணமலையில்   தன்  குடும்பத்துடன்  சுப்பராமையா.  இந்தமுறை  9  வயதான   லலிதாவுடன்,  இளையவள்  5  வயதான  இந்திராவும்  வந்திருந்தாள்.  பட்டுச்  சொக்காவில்   இருவரும்  சிட்டுக்களாக   ஓடியாடி   எல்லோரையும்   ஈர்த்தனர்.

        முக்கியமாக   ரமணருக்கு   இந்திராவை   பிடித்துப்  போயிற்று.  பாடச்  சொன்னால்   பாடுகிறாள்.  ஆடச்   சொன்னால்   ஆடுகிறாள்.  இந்த   லலிதாவுக்கு   என்ன  வந்தது ?  திடீரென   சங்கோஜப்பட  ஆரம்பித்து  விட்டாளே !

         ' நான்  ஒரு  பெண் '   என்ற  தேகாத்ம  புத்தி   தலையெடுக்கும்  வயதோ ! அதனால்  தான்   ரமணரின்   திருமுன்பு   அவளால்  இருக்கமுடியவில்லையோ ?  இந்திரா   பாடி   முடித்ததும்,  லலிதாவைப்   பாடச்   சொன்னார்   ரமணர். அவள்   தயங்கினாள்.  மகரிஷி   விடவில்லை.


          " என்ன  லலிதா ?  யார்  கிட்டேயும்  நா  எதுவும்  கேட்கறதில்ல.  நீ   என்னையே   கேட்க   வச்சுட்டியே !  இந்திராவைப்   பாரு,  அவ  மாதிரி  பாடு "  என்றார்.

          இவ்வளவிற்குப்  பிறகே   லலிதா   பாடினாள்.  பிறகு  இருவரும்   சேர்ந்து   ஆடினர்.  மகரிஷியின்   சபை   குழந்தைகளால்   களை  கட்டியது.
' நான்   யார் ? ' என்ற   தேடுதலின்  நடுவில்,   சாதகர்களின்  மனம்  லேசாவதற்கு  ரமணரே   அந்தக்  குழந்தைகளின்  மூலம்  நாட்டிய  நிகழ்ச்சி  நடத்தி  அங்கு   இருந்த   இறுக்கத்தை   நீக்கினார்  போலும் !

         ஒருநாள்   சுப்பராமையா   ' உபதேச சாரம் '  என்ற  தெலுங்கு  நூலை  ரமணர்  முன்பு   அமர்ந்து  படித்தார்.  அதன்   முன்பக்கத்தில்  சம்ஸ்கிரத  மொழியில்   நான்கு   வரிகள்   அச்சாகியிருந்தன.

        அதைப்   பார்த்த   இந்திரா  அதிலுள்ள   மூன்று  வார்த்தைகளை  ' நாஹம்  தேஹம்  -  கோஹம் - ஸோஹம் '    -  ( நான்  தேகமல்ல -  நான்  யார் ? -  அவன்  ' நான் ' - )  என்று   எழுத்துக்  கூட்டி  கூட்டி  ஒன்றாக   வாசித்தாள்.

        உதட்டோடு,  உள்ளத்தையும்   குவித்து   வாசித்த   அவளை  மகரிஷி  உற்று  நோக்கினார்.  அவளிடம்   ஏதோ  ஒரு  ஊற்று  பெருக்கெடுப்பதை  அவர்  கண்டதுபோல்   இருந்தது.

        " இந்திரா,  சரியாத்தான்   நீ   படிச்சேம்மா.  இந்த   வரிகளே  உனக்குப்  போதும்.  பாடலின்   மிச்ச  பகுதிய  நீ  படிக்க  வேண்டாம். நீ  இப்போ   வாசிச்சியே ,  அதான்   எல்லா  அறிவோட   சாரம்.  இனி   இதையே   மந்திரம்   மாதிரி  சொல்லிண்டிரு.  உனக்கு   எல்லாமே   இது   மூலம்   சித்திக்கும். "  என்றார்   ரமணர்.

         உடனே,  தாத்தா சாமி   தனக்கு  மட்டும்  சொல்லிக்  கொடுத்த  மூன்று  வரி  மந்திரத்தை   முணுமுணுக்க   ஆரம்பித்தாள்  இந்திரா.

         சரியாகச்  சொல்ல  தைரியம்  வந்ததும்   சத்தமாகப்  பல  ராகங்களில்   சொல்ல   ஆரம்பித்தாள்.

        பின்   அவளைப்   பார்க்கும்  போதெல்லாம்   ரமணர், " அந்த  மந்திரத்தைச்   சொல்லு,    பார்க்கலாம் "  என்பார்.  அவளும்  சொல்வாள்,   ஒரு  சிஷ்யையாக !

       அவர்   அவளது   உச்சரிப்பையா   கவனித்தார் ?  இல்லை.  ஏதோ  ஓர்  உச்சநிலைக்கு   கொண்டு  செல்வதற்கு   அவர்   அவளைத்  தயார்ப்படுத்திக்  கொண்டிருந்தார்.  சுப்பராமையா  அதைப்  பார்த்து  வியந்தார்.

      இந்த   மந்திரம்  முதன்முதலில்  ரமணர்,  தமது  முக்கியச்  சீடரான  காவ்ய  கண்ட  கணபதி  என்ற  மிகப்  பெரிய  பண்டிதருக்குக்  கூறியருளியது. ' ஆஹா,   இந்த  மந்திரம்தான்   என்னவோர்   அருமையானது '  என  சுப்பராமையா  அதை  ரசித்தார்.  ' இம்மந்திரம்   உயர்ந்த   சாதகர்களுக்கானது.  இந்தப்  பிராணாயாமம்  சாதாரண   ஒரு  மூச்சுப்  பயிற்சி  அல்ல.

       முதலில்   கோஹம்  ' நான்  யார் ? ' என்ற   விசாரத்தைப்  பூரகமாக - உள்மூச்சாக   சாதகன்  இழுக்க  வேண்டும்.

       அடுத்து,  ஸோஹம் - ' அவனே  நான் '  என்ற  'வ்ருத்தியை ' கும்பகமாக - மூச்சாகக்  கருதி ,  பிடித்து  வைத்துப்  பழக வேண்டும்.

        முடிவில்,  ' நாஹம்  தேஹம் ' - ' நான்  உடலல்ல '  என்ற  அனுபவம்  ரேசகமாக  -  வெளிமூச்சாக   விடவேண்டும்.  இதுவே   ' ஞானப்  பிராணாயாமம். '  அறிவு  ஜீவியான   சுப்பராமையாவின்  புத்தியை    ஒரு  கேள்வி  அடிக்கடி  குடைந்து  கொண்டிருந்தது.

         '  அறிவிலும்,  அனுபவத்திலும்   மிக்க  பக்தர்களும்,  சாதகர்களும்   ஆன  நாங்கள்,  மகரிஷியின்  ஒரு   உபதேசதிற்காகக்   காத்துக்கிடக்கும்போது,  இவர்  ஏன்  ஒரு  சிறுமியிடம்   இவ்வளவு  பெரிய  விஷயத்தைத்
திணிக்கிறார் ?  அவளுக்கு   என்ன  புரியும் ? '

        அன்று   சுப்பராமையா  தியானித்துக்  கொண்டு  இருந்தார். இந்திராவுக்குப்  பசித்தது. அப்பாவைத்  தொந்தரவு  செய்யாது   ஒரு  மூலையில்   அமர்ந்தாள்.

         ஆன்மப்  பசியோ, அடி  வயிற்றுப்பசியோ   அனைத்தையும்  அறியும்  பகவான்   அவளைக்  கவனித்தார்.

         உடனே   அவளது   அப்பாவிடம்,  " கொழந்தைக்குப்  பசிக்குது,  அதை  கவனிக்காம  தியானம்   எதுக்கு ? " என்று  கேட்டார்  ரமணர்.

        ஒருநாள்   பகவான்  அந்த  இரண்டு  சிறுமிகளுடனும்  விளையாட்டாகப்  பேசிக்கொண்டு   இருந்தார்.

         லலிதாவின்   கையைப்  பார்த்து,  "  இது  யாரோட  கை ? "  என்று  கேட்டார்.  அவள், " என்  கை "  என்றாள்.

       " இல்ல "  என்றார்   பகவான்.

       " இது   யாரோட   கண்ணு ? "

       "  என்னோட   கண்ணுதான் " - லலிதா.

       "  இல்ல ".......இவ்வாறு    ரமணர்   லலிதாவிடம்  ஒவ்வொன்றாகக்  கேட்கவும்,  அவள்   அவையெல்லாம்   தன்னுடையது  தான்   என்று  சொல்லி வந்தாள்.

         முடிவில்  ரமணர், " எதுவுமே   ஒன்னுடையதில்ல.  உன்  உடம்பே  பகவனுக்குத்தான்   சொந்தம். "   என்று  கூறி  முடித்தார்.  லலிதா  புரியாமல்  விழித்தாள்.

         ஆனால்   இந்த  உரையாடலை  உற்றுக்  கவனித்துக்  கொண்டிருந்த  இந்திரா  "ஓ,  அப்படியா !"  என்று   உள்ளுக்குள்ளேயே  உச்சரித்துக்கொண்டாள்.

        விடுமுறை   முடிந்தது.  இரண்டு  பெண்  குழந்தைகளும்   ஊருக்குச்  செல்ல   ரமணரிடம்   விடைபெற  வந்தனர்.

        காலை நேரம்.  பகவான்  மலைக்குப்  போகும்  நேரம். லலிதா  ஏதோ  வேடிக்கைப்  பார்த்தபடி   இருந்தாள்.  ஆனால்   இந்திரா  எதையோ  எதிர்பார்த்து  ஏங்கியிருப்பதாகக்  காணப்பட்டாள்.

       பகவான்   இந்திராவை  விழுங்கும்படிப்  பார்த்து, " அப்போ  நீ  உன்  இடத்துக்குப்  போற.  நா   என்னோட   எடத்துக்குப்   போறேன் "  என்று   கூறிவிட்டு   அருணாசல  மலையில்   ஏற  ஆரம்பித்தார்.

      கொஞ்சமாவது   பகவான்   திரும்பிப்   பார்க்க  வேண்டுமே ! ம்ஹூம், இந்திராவின்   இதயம்  பாரமானது.  ' தாத்தாசாமி !  இனி  நா  உங்கள  எப்பப்   பார்ப்பேன் ? '  என்று  அவளது   உள்ளம்   விம்மியது.  ஆனாலும்   ஓர்   ஆறுதல்.

     அவளுக்குத்தான்   தாத்தாசாமி   வழங்கிய   மூன்று  மந்திரங்கள்  இருக்கே ! அதைச்  சொன்னால்   நா  எங்கிருந்தாலும்  சாமி    என்ன  நல்லா  கவனிச்சுப்பார்   என  நினைத்தாள்.

       ஊருக்குச்  சென்றவுடன்  லலிதாவும் , இந்திராவும்   தந்தைக்குக்  கடிதம்  எழுதினர்.  கடிதங்கள்  மகரிஷி    முன்பு  வைக்கப்  பட்டன.

       " பகவானிடம்   கூறுங்கள்  அப்பா !   நான்  தினமும்  மந்திரத்தைச்  சொல்கிறேன்,  அவரையே   நினைத்துக்  கொண்டு  இருக்கிறேன்  என்று " என
எழுதப்பட்டிருந்த   இந்திராவின்   கடிதத்தை   கூர்ந்து  பார்த்தார்  மகரிஷி.  அவரது   பார்வை   எதைக்  கூறியது ?

        இனி   இந்திராவைப்   பார்க்க  முடியாது   என்பதையா ?  தான்   கற்றுத்  தந்ததைக்  கொண்டு  கைதேர்ந்தவளாகி,  பிறந்த  நோக்கத்தை  அடைந்து  முக்தி   பெற்றுவிடுவாள்   என்பதையா ?

       நாட்கள்  வேகமாகச்  சென்று  இரண்டு  வருடங்கள்  ஆயின.  1943 -ஆம்  ஆண்டு.  இந்திரா  அகத்திலும், புறத்திலும்   நன்கு   வளர்ந்திருந்தாள்.

       அப்போதுதான்  அவளுக்கு   திடீரென   அம்மை   வார்த்தது.  இரண்டு   வாரங்களில்   படுத்த  படுக்கையாகி   வாடிப்போனாள்.  உண்ண  முடியவில்லை.  உறக்க  மில்லை.  ஆனாலும் ...................,

       உடல்  வேதனையை   அனுபவித்தாலும்,  ரமணர்   அருளிய   மூன்று  மந்திரங்களைச்  சொல்ல  ஆரம்பித்தால்  போதும்  இந்திராவின்  முகம்  பிரகாசிக்கும்.

        மூச்சைச்   சிரமப்பட்டு  விட்டாலும்,   மந்திரத்தை  விடாமல்  சொல்லிக்கொண்டு   இருந்தாள்.  சுப்பராமையாவும்   பிற  பக்தர்களும்  ரமணரின்  திருவுருவப்  படத்தின்  முன்பு  அவளைக்   கிடத்திப்   பிரார்த்தித்தனர்.

       கவிஞரான   சுப்பராமையா,  தமது  மகள்  ஒரு  அற்புதமான  சோக  காவியத்தைப்  படைத்துக்  கொண்டிருக்கிறாள்  என்பதை  உணர்ந்தார்.

       இவள்   தெரிந்துதான்  ' ஞானப்  பிராணாயாமம் '  புரிகிறாளா ? ..... ஓ,  இவளது   ப்ராரப்தம்   தெரிந்துதான்  பகவான்  அவ்வளவு   பிரயத்தனம்   எடுத்து  இவளுக்குச்  சொல்லித்  தந்தாரோ ! '  என   சுப்பராமையா  எண்ணினார்.  அதை  எண்ணியபோதே   பகவானிடத்தில்  பக்தி  இன்னும்  பெருகியது.

       எஞ்சிய   நாட்கள்   ஏனையோருக்கு  இறுக்கமாகச்  சென்றாலும்,  இந்திரா   எதனாலும்   பாதிக்கப்  படாமல்   இருந்தாள் !  கடைசியில்  அந்த  சோகமான  நாளும்  வந்தது.  அன்று  ஸ்ரீ ராம  நவமி .  ஏப்ரல்  13.

      பக்தர்கள்   இந்திராவைச்  சூழ்ந்து  இருந்தனர்.  மூன்று  மந்திரங்களையும் , விடும்   மூச்சாக  ஓதிக்கொண்டே  இந்திரா  இறைவனடி  சேர்ந்துவிட்டாள்.

      அங்கு   துக்கம்  விசாரிக்க  யாரும்   வரவில்லை. யாராலும்   அழ  முடியவில்லை!  ஏனெனில்  அவள்  தேகத்தைத்  துப்பிவிட்டு,  தெய்வப்  பதத்தைச்  சேர்ந்துவிட்டதாகப்  பலரும்  நம்பினார் ;  உணர்ந்தனர்.

       ' பல  வருடங்கள்  விசாரத்திற்குப்  பிறகும்  சாதகர்களுக்கு   கிடைக்காத  ஒரு  ஸ்திதியை,  அவள்   குருகிருபையால்  எளிதாகப்  பெற்று,  பகவானை  எளிதாக   அடைந்துவிட்டாளே! '  என்று   பக்தர்கள்  மெய்சிலிர்த்தனர்.

      இந்திராவின்  உடலைப்   புதைத்த  இடத்தில்  ஒரு  கல்லறை  எழுப்பினார்   சுப்பராமையா. அதன்மீது ..........

                         
        " நாஹம்  தேஹம்  -  கோஹம் - ஸோஹம் " 

என்பதைப்   பொறித்து  வைத்தார்.   அது   பக்தர்களுக்கு  இன்றும்  ஒரு  வழிகாட்டியாக   இருந்து   விளங்குகிறது.


நன்றி :  ஸ்ரீ  ராமகிருஷ்ண  விஜயம்,  மே  2011.
                ரமணோதயம். 


     

No comments:

Post a Comment