Wednesday, September 21, 2016

காரியமும் , காரணமும் நம் கையிலா ?

சிறுத் ( பெரும் )  தொண்டர்  :
               
                         Image result for siruthondar

                 ஒரே ஒரு கேள்வி அதற்கு  பாலகுமாரன் அவர்கள் கூறிய பதில் ஒன்றை, நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். அனேகமாக நம்மில் அனைவருக்கும் இந்த கேள்வி மனதில் தோன்றி இருக்க கூடும்.
              வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எத்தனையோ இன்னல்களுக்கு ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்க கூடும். படித்துப் பாருங்கள் நம் சிந்தனையை செப்பனிடும் ஒரு அருமையான பதில் இது. பாலகுமாரனின் வசீகர வரிகள் அப்படியே, நம் வாசகர்கள் பார்வைக்கு :  


கேள்வி :
           ஐயா, குழந்தையை நரபலி கொடுத்து கடவுளை திருப்தி செய்யும் கதை ஒன்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதையில் இருக்கிறது. இது நியாயம்தானா. எந்தக் கடவுள் நரபலி கேட்டார். அதுவும் பெற்ற குழந்தையையே வெட்டிக்கொடு என்று சொல்வார். நான் இந்து மதத்தைச் சார்ந்தவனாயினும் இந்தக்கதை என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. அதனால் கேட்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.

பாலகுமாரன் அவர்கள் கூறிய பதில் :

             உங்கள் அறியாமையில் விளைந்த கேள்வி அது. எந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசிக்காமல் மேலோட்டமாக உங்கள் அபிப்ராயம் வைத்தே உலகத்தை எடைபோடுகின்ற சிறுமையில் விளைந்த விளைவு அது. மிகத் தெளிவான கருத்துகளை வாழ்வியலைப் பற்றிக் கொண்ட இந்து மதம் தன்னை வெளிப்படுத்தச் சொல்லும் கதைகளை மிகக் கவனமாக நெய்திருக்கிறது. வெகு குறிப்பாக அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதைகளும் மிகப்பெரிய வாழ்வியல் விளக்கம் நமக்கு அளிப்பவை. யோசிக்க யோசிக்க தெளிவாக்குபவை.

           வெற்றி என்றும், தன் தேசத்து எதிரியை வீழ்த்துவது என்பதும், அடுத்தவரை வெட்டிக் கொன்றால்தான் சுகமாக இருக்க முடியும் என்றும், தான் சுகமாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே அந்தக் கொலைகள் நியாயப்படுத்தப்பட்டன என்றும், தர்மத்தின் பாற்பட்டது என்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம். எனவே, உலகத்தின் நாகரீகமாக, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இதுவே தர்மமாக இருக்கிறது. நாடு பிடிக்கக் கொலை செய்யலாம். அடுத்தவர் செல்வத்தை சூறையாட வெட்டிக் கொல்லலாம். குழு மனப்பான்மையோடு பரஸ்பரம் வெட்டி சிதைத்து இடையறாது கொலைகளை இந்தப்பூமி செய்து வந்திருக்கிறது.

Image result for siruthondar

            பரஞ்சோதி என்கிற அந்த தளபதி, மன்னனுக்காக பல போர்கள் செய்து, பல பேரைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடி,இனி போதும் என்று கடவுள் பணிக்குத் திரும்புகிறார். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் கடவுள் பணிக்குத் திரும்பியதாலேயே, ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டதாலேயே இதுவரை அவர் செய்துவந்தவை நியாயமாகி விடுமா? ஏகப்பட்ட அக்கிரமங்களைச் செய்துவிட்டு, உழவாரப்பணி என்று ஆரம்பித்து விட்டால் உத்தமராகி விடமுடியுமா?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

                அந்தத் தளபதி மிகச் சிறந்த தளபதியாக இருப்பினும்,அவர் செய்த கொலைகள்,அவர் வாழ்க்கையில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். எத்தனை பேரை வெட்டி வீழ்த்தியிருக்கிறார். அதற்காக, உன் தர்மத்திற்காக, உன் கொள்கைகளுக்காக, எத்தனை பேரை குத்திக் கொன்றிருக்கிறாய். ஏனெனில் அவர்களெல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்கள். அப்பொழுது வேண்டியவர்கள் யார். வேண்டியவர்களில் சிறந்தவர் யார், தாயா, தகப்பனா, மனைவியா அல்லது நீ பெற்ற குழந்தையா என்று ஒரு மனிதனைக் கேட்டால், தாய் தந்தையரையும் விட, மனைவியையும் விட, அவன் தன் குழந்தையைத் தான் தனக்கு மிகவும் நேசிப்புக்கு உகந்தவனாகக் கருதுகிறான்.

Image result for siruthondar

                     அப்படி நீ வெட்டிக் கொன்றவர்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் குழந்தைகள்தானே. அடித்துக் கொன்றவர்களெல்லாம் பல குழந்தைகளுக்கு தந்தையாய் இருந்தவர்கள் தானே. உறவாக வளர்ந்தவர்கள்தானே. அவர்களை எதிரியாக நினைத்துவிட்டு, உன் குழந்தையை உயிர் என்று கொஞ்சுகிறாயே. உன் குழந்தையை உன்னால் கொல்ல முடியுமா, வெட்டி எறிய முடியுமா, ஆயிரம் ஆயிரமாய் கொலைகள் செய்திருக்கிறாயே. உன் குழந்தையை நறுக்கி கறி செய்ய முடியுமா, உன்னுடைய புகழை, உன்னுடைய வீரத்தை தன்னுடையது என்று பங்கு போட்டுக் கொண்டாளே உன் மனைவி இதில் பங்கு போட்டுக் கொள்வாளா. முதலமைச்சரின் மனைவி என்று நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாளே. இப்போதும் செய்வாளா என்று கணவனுக்கும், மனைவிக்கும் இறைவன் சோதனை வைக்க, அந்தப் போர் வீரர் தன் மனைவியோடு தன்னைப் பற்றி முழுவதுமாக விசாரத்தில் ஈடுபட்டதால் தான் எதுவும் செய்யவில்லை. தான் வெறும் கருவி. செய்தது நான் இல்லை. நான் தளபதியும் அல்ல. சகலமும் இறைவனின் திருவுளத்தின்படி நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டதால், ஒரு இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்ததால் அதை எந்தவித மனவேதனையுமின்றி செய்ய முடிந்தது.
அவர் மனைவியால் சமைக்க முடிந்தது. முந்திய வினைக்குக் கிடைத்த தண்டனை என்பதாய் அந்தத் தம்பதிகள் புரிந்து கொண்டார்கள்.

Image result for siruthondar

               குழந்தையை வெட்டிக் கொல்வது துன்பம் என்று நீங்கள் கருதினீர்கள் என்றால் அந்தத் துன்பத்திற்கு முன்வினை ஒன்று இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை ஒன்று ஏற்பட்டது என்றால், அந்தச் சோதனைக்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணத்தையும், காரியத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு அவன் கட்டளைப்படி செய்யுங்கள் என்பது கருத்து. உண்மையான சிவத்தொண்டர்களும் சிவரூபமே என்பதும் இந்தக் கதையின் கருத்து. 

             மேற்கண்ட  பதிவு  சமீபத்தில்  யாம்  www.livingextra.com  என்ற பதிவு  தளத்தில்   படித்தது. 
நன்றி : http://www.livingextra.com/2012/11/blog-post_27.html#ixzz4KxqpQ2M1

3 comments:

 1. Replies
  1. தங்களின் வருகைக்கும் , ஆழ்ந்த புரிதலுக்கும் நன்றி பாரதி.

   Delete
 2. இன்று குழந்தையை கொன்று பாருங்கள் .முன் வினையும் ,பின் விழைவும் என்னவென்று தெரியும் !
  கேள்வி கேட்டவர் கூட இந்த பதிலை ஏற்றுக் கொள்ள மாட்டார் :)

  ReplyDelete