Thursday, October 6, 2016

ஜபம் பண்ணினா என்ன கிடைச்சுது சேஷாத்ரி

தங்கக்கை   சேஷாத்ரி :

              திரு. பாலகுமாரன்  எழுதிய  " தங்கக்கை " யை  படிக்கும்பொழுது  வாய்விட்டு, கதறி  அழுததுண்டு.  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஸ்ரீ வித்யா  மந்திரங்களை  ஒவ்வொரு  மந்த்ரமாக   1008 முறை  ஜபம்  செய்த  பின்பு  வேதம்  படிக்க  செல்வாராம்.

                எமக்கும்  ஸ்ரீ  வித்யா  சாதனைகளை   கற்றுத்தர  குரு  கிடைப்பாரா  என  ஏங்கியதுண்டு. நல்ல  எண்ணங்கள்  செயல்படாமல்  போகுமா ? ஆம் !  குரு  எம்மை  தமது  இருப்பிடத்திற்கே வரவழைத்து   கற்றுக்கொடுத்தார்.  சகலமும் ..................என்ன  சொல்ல !  உள்ளங்ககைகளில்  வைத்து  தாங்கிக்கொண்டார் !

              அந்த  புத்தகத்தில்  திரு. பாலகுமாரன்  விவரித்திருப்பார் ...........1 மணி, 2மணி , 3மணி , 4 மணி  ..........என  ஜபம்  செய்யச்  செய்ய  என்னென்ன  மாற்றங்கள்  நிகழும்  என .....................................

            படித்துப்பாருங்கள்  நண்பர்களே !!...........எங்கேனும்  உங்களுக்குள்  உள்ள  நெருப்பை  தூண்டிவிட்டு   பிரகாசமாக்கும் ...............................

           இடைவிடாது  மந்த்ரம்  சொல்லிக்கொண்டுள்ள  அந்த  இளைஞனை  அணுகி ,  எவரோ  " என்ன  செய்கிறாய் ? சேஷாத்ரி "  எனக்  கேட்டார். " கர்மா  ஒழிய  வேண்டும் ", அதற்காக  மந்த்ர  ஜபம்  செய்வதாக  கூறினார்.

                " லட்சம்  ஆவிருத்தி  ஆயிருக்கு. இன்னும்  ஒரு  அரை  லட்சம்  பண்ண  வேண்டி  இருக்கு. மந்திரம்  சொல்லிச்சொல்லி  கர்மாவை  அழிக்கலாம்.  வாழ்க்கைப்  போக்கையே  மாற்றிவிடலாம். மந்த்ர  ஜபம்  மனசை  சுத்தம்  பண்ணும். மனசு  சுத்தமாயிடுச்சுன்னா  போதும்.....நீங்க  என்ன  கேட்டாலும்  கிடைக்கும். "

        "  இது   ஆச்சரியமா  இருக்கே !  நாலு  வார்த்தையை  திருப்பித்   திருப்பி  சொல்றதா  எல்லா  நன்மையும்   கொண்டு   வந்து  தரும். "

       " அது  வெறும்  வார்த்தையல்ல.  கந்தகம்கறது  ஒருவகை  மண்ணு. அது  வெடிமருந்தா  மாறலயா. அந்த மாதிரி   சில  குறிப்பிட்ட  வார்த்தைகள்  உள்ளுக்குள்ள  மாறுதல்  நிகழ்த்தும். மந்த்ரம்  சொல்லச்சொல்ல  மனசு  ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட  மனசுக்கு  நிறைய  சக்தி  உண்டு. "

         " வெறுமனே  சந்தேகப்படாம  உடனே  மந்திரம்  சொல்ல  ஆரம்பிக்கணும். உனக்கு  என்ன  ஆயுசு  விதிச்சிருக்கோ  தெரியாது. அதனால  இந்த  ஆயுசிலேயே  நல்லது  கிடைக்கறதுக்காக ,  தெளிவு  கிடைக்கறதுக்காக  இப்பவே  மந்திரம்  சொல்ல  ஆரம்பி. "

            " ஒருமணி  நேரத்துக்குமேல  ஜபம்  பண்ண  முடியலையே  சேஷாத்ரி.  அந்த  ஒருமணி  நேரமும்  மனசு  எங்கெங்கோ  சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள்  ஆவலுடன்  கேட்டார்கள்.

          " பண்ணிதான்  ஆவேன்னு  உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான்   வைராக்கியம். என்ன  தடுத்தாலும் ,  எது  குறுக்கிட்டாலும்  தினம்  ஒருமணி  நேரம்  ஜபம்கறதை   ஆரம்பிச்சுடணும்.  சிரத்தையா  பண்ண  ஆரம்பிச்சுட்டா  ஒருமணி  நேரம்  போறாது. மனசுக்கு  பசிக்க  ஆரம்பிச்சுடும். இன்னொரு  மணிநேரம்  பண்ணு.  இன்னொரு  மணிநேரம்  பண்ணுன்னு  அதுவா  கேட்கும்.

              நான்   ஏழு வயசிலேயே  கார்த்தாலே  1 மணிநேரம், சாயந்தரம்  1 மணிநேரம்  ஜபம்  பண்ண  ஆரம்பிச்சுட்டேன்.  அதனாலே  கணக்கோ,  பாட்டோ,  பூகோளமோ, இங்கிலீசோ,  பள்ளிக்கூடமோ  முக்கியமில்லைனு  ஆயிடுத்து. காசை  விட  ஜபம் தான்  முக்கியம்னு  போயிடுத்து.
எல்லா  அபிலாஷைகளும்  ஜபத்தால்  நடக்கும்கறபோது  வேற  இங்கு  செய்யறதுக்கு  என்ன  இருக்கு.

              மனசு  கேட்க, கேட்க  ஜபம்  பண்ணிண்டே  இருக்கேன். என்  மனசுக்கு  பசி  அதிகம்  எத்தனை  சாப்பிட்டாலும்  நிரம்பாத  வயிறு  மாதிரி எத்தனை  ஜபம்  பண்ணினாலும்  மனசுக்கு  போறள. பன்னெண்டு  மணிநேரம்  பண்றேன்.

           " என்ன  கிடைச்சுது  சேஷாத்ரி ? "
            
            " எனக்கு   என்ன  கிடைச்சுதுங்கறது  முக்கியமில்லடா. நான்  ஒரு  பொருட்டில்லை. என்ன  கிடைக்கும்னு  கேள்!  படிப்படியா  விளக்கிச்  சொல்றேன். 


         தினம்  ஒருமணிநேரம்  ஜபம்  பண்ணினா, மனசு  அமைதியாகும். கோபம்  குறையும். இதைவிட  அதிகமா  பண்ணினா  கோபம்  அறவே  போறதுக்கு  வாய்ப்பிருக்கு. காலைல  ரெண்டு  மணிநேரம், சாயந்தரம்  ரெண்டு  மணிநேரம்  பண்ணினா  காதுக்குள்ள  இனிமையான  சங்கீதம்  கேட்கும். உடம்பு  இறகுபோல  லேசா  இருக்கும். நோய் உபத்திரவாதங்கள்  இருக்காது. உணவு  கவனமா  சாப்பிடத்  தோணிடும். ருசிக்கு  நாக்கு  அலையாது.

          கார்த்தாலே  மூன்று  மணிநேரம், சாயந்தரம்  மூன்று  மணிநேரம்  ஜபம்  பண்ணினா, முகத்துல  மாறுதல்  உண்டாகும். கண்  கூர்மையாகும். உடம்பிலே  இருந்து  தேஜஸ்  விசிறி  விசிறி  அடிக்கும். வாக்கு  பலிக்கும். 
                
             எட்டு மணிநேரம்  ஜபம்  பண்ணினா, நீ  வேற  மந்த்ரம்  வேற  இல்ல. நீயே  மந்திரமா  மாறிடலாம். அதற்கப்புறம்  நடக்கறதெல்லாம்  ஆனந்தக்  குதியல்  தான். எதை  பார்த்தாலும்  சந்தோஷம்  தான். பசிக்காது. தூக்கம்  வராது. யாரையும்  அடையாளம்  தெரியாது.

              மனசு   கட்டுலேயிருந்து  விடுபட்டு  ஸ்வாமிக்கிட்ட  நெருக்கமா  போய்டலாம். அப்புறம்  அது  இழுத்துண்டு  போய்டும்.

            இன்னும்  உக்கிரமா  ஜபம்  செய்ய,  அந்த  சக்தியே  கூட்டிண்டு  போய்டும். நீ  உன்னோட  கட்டுப்பாட்டில்  இருக்கமாட்டே. முழுக்க  முழுக்க  ஸ்வாமிகிட்ட  சரணாகதி  ஆயிடுவே. அப்ப  நீ  என்ன  கேட்டாலும்  கிடைக்கும்.  இதுல பெரிய  சந்தோஷம்  என்ன  தெரியுமா,  உனக்கு  வேணும்கறது  ஒவ்வொன்றும்  பகவானா  பார்த்து, பார்த்துக்  கொடுப்பார். உன்  வார்த்தையெல்லாம்  கடவுளுடைய  வார்த்தை.  உன்  செய்கையெல்லாம்  கடவுளுடைய  செய்கை. "

           " எட்டு  மணிநேர  ஜபத்துக்கப்புறம்  என்ன ? "

          " எல்லா  நேரமும்  ஜபம்  பண்ணனும்னு  தோணிடும்.  எட்டு - இருபத்தி  நாலா  மாறிடும். அதுல  இன்னும்  உக்கிரம்   வந்துடும்."



         மந்த்ர  ஜபம்  என்பது  கற்றுக்  கொள்வதில்  இல்லை. பூஜை  என்பது  சொல்லித்தந்து  செய்வது  அல்ல.  உள்ளிருந்து  பீறிட  வேண்டும். தன்முனைப்பாக  கிளர்ந்து  எழுந்து  அதற்குள்  தானே  மயங்கிச்  சரிதல்  வேண்டும்.

          சடங்காக  செய்கிறபோதும்,  எதிர்பார்த்து  உட்காரும்போதும்  செய்கிற  விஷயத்தின்  வீர்யம்  குறைகிறது. ஸ்வாசம்  போல  இயல்பாக  மாறிய  செயல்தான்  உன்னத  நிலைக்கு  அழைத்துச்  செல்கிறது. 


நன்றி : திரு. பாலகுமாரன்  அவர்கள்
" தங்கக்கை "




3 comments: