சொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........!
ஒருமுறை சாது ஒருவர் ஆனந்தாஸ்ரமத்திற்கு வந்தார். ராமதாஸரிடம் பேசும்போது, ஒவ்வொரு பொருளிலும் ராமனை பார்ப்பதாகவும் , இந்த உலக லீலையில் ராமனே விளையாடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். ஒருநாள், அவர் கமண்டலத்தை அவருடைய ஆசனத்தின் அருகிலேயே வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். அந்த கமண்டலத்தின் அழகிய வர்ணம் மற்றும் கலை வெளிப்பாடுகளில் கவர்ந்த ஆச்ரமவாசி அதனை கைகளால் எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அதற்குள் திரும்பி வந்த சாது, ஆஸ்ரமவாசியின் கைகளில் கமண்டலத்தைப் பார்த்து கோபம்கொண்டு கடுமையான வசைமொழிகளால் அவரைச் சாடினார். இதனை அறிந்த பப்பா ராமதாஸ் அவர்கள் அமைதியுடன் இருந்தார்.
மாலையில் பப்பாவை சந்தித்த சாது பப்பா ராமதாஸின் திருவடிகளை பிடித்துவிட்டுக்கொண்டு இருக்கும்போது, மதியம் என்ன நடந்தது என சாதுவிடம் கேட்டார். சாதுவும் , " அந்த முட்டாள், வந்து என்னுடைய கமண்டலத்தை எடுத்து, அவனது ஸ்பரிசத்தால் அதை அசுத்தமாக்கிவிட்டான். அதை தொடுவதற்கு அவனுக்கு என்ன தைரியம் ? " என்றார். அதற்கு ராமதாஸ் அந்த சாதுவிடம், " அந்த கமண்டலத்தை எடுத்தது ராமன் இல்லையா ? ஒவ்வொருவரையும் ராமனாக காண்பதாக நீங்கள் ராமதாஸிடம் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் ? நீங்கள் ஏன் உங்களின் ராமனை நிந்தனை செய்தீர்கள் ? " என்றார்.
" அந்த மனிதன் அசுத்தமானவன் " என்று தொடங்கி, அவனது குலம் என திட்டி, " அந்த கீழ்குலத்தவன் என் கமண்டலத்தை தொடுவதை நான் எப்படி பொறுத்துக்கொண்டு இருக்க முடியும் ? " என்று கேட்டார்.
அந்த சாது எங்கும் ராமனையே காண்கிறேன் என்று கூறியது வீண்பேச்சு மட்டுமே, யார் ஒருவர் அவனுடைய சொற்களுக்கு ஏற்ப நடந்துகொள்கிறானோ, அவனே உண்மையில் வழிபடுவதற்கேற்ற தகுதி படைத்தவன் ............என்று தமது அத்யந்த பக்தர்களுக்கு விளக்கினார்.
நன்றி : " சாதகர்கள் சிந்தனைக்கு "
- ஸ்வாமி பப்பா ராமதாஸ்.
ஆனந்தாஸ்ரமம் வெளியீடு.
No comments:
Post a Comment