Wednesday, March 29, 2017

தண்டம், கமண்டலம் எரிந்தது

தண்டம், கமண்டலம்   எரிந்தது :

Image result for sri bhaskararaya pattar

               ஒருமுறை  திரு  பாஸ்கரராய பட்டர்  என்ற  மஹான் ஸ்ரீ வித்யை உபாசனையில்  மிகவும்  சிறந்து  விளங்கினார். இன்று  நம்  எல்லோராலும்  பாராயணம்  செய்யும்  ஸ்ரீ  லலிதா  ஸஹஸ்ரநாமத்திற்கு  முதலில்  வியாக்கியானம்  செய்தவர். இன்றைய  ஸ்ரீ  வித்யை  இவரது  நூல்களை  ஒட்டியே  பலராலும்  பின்பற்றப்படுகிறது  என்றால்  மிகையில்லை.   தேவியின்  அருளை  பெற்ற  உபாஸகர். பால்யத்திலேயே  சரஸ்வதி  உபாஸனையினை  தந்தையிடம்  இருந்து  பெற்ற  இவர்  வெகு  சீக்கிரத்திலேயே   எல்லா  வித்யா  அப்பியாசங்களை  கைவரப்  பெற்றவரானார். 40 கிரந்தங்கள் , மற்றும்  " சௌபாக்ய  பாஸ்கரம் " - லலிதா  ஸஹஸ்ரநாமதிற்கு  விளக்கவுரை  என  எழுதி  ஸ்ரீ வித்யா  சாதனைக்கு  பெருமையினை  ஏற்படுத்தி,  ஆதிசங்கரரின்  வழியையும்  ஒட்டி  வாழ்ந்த   அத்வைத  சாதகரும்  ஆவார்.

Image result for sri bhaskararaya pattar

             தமது  மனைவிக்கும்  ஸ்ரீ  வித்யையை  உபதேசித்து  அவரையும்  அந்த  ஸம்ப்ரதாயத்தில்  ஈடுபடுத்தினார். சோழ  நாட்டின்  காவிரிக்கரையில் உள்ள   திருவாலங்காட்டின்  எதிர்பக்கத்தில்  ' பாஸ்கரராயபுரம்'  இவரது  பெயராலேயே  அழைக்கப்படுகிறது. பின்பு  திருவிடைமருதூரில்   வசித்து  வந்தபொழுது ,  ஒருநாள்   மஹாதான  தெருவில்  உள்ள  தமது  வீட்டின்  திண்ணையில்  மாலை  வேளையில்  சாய்ந்து  உட்கார்ந்து  இருப்பது  அவரது  வழக்கம். கால்களை  நீட்டி  தூண்களில்  வைத்து  திண்ணையின்  சுவரில்  சாய்ந்து  இருப்பார்.

Related image

             அருகிலுள்ள   வேப்பத்தூரிலிருந்து  ஒரு  சன்னியாசி  தினமும்   பாஸ்கரராயரின்   வீட்டின்  வழியே  ஸ்ரீ  மஹாலிங்கேஸ்வரரை  தரிசிக்க  செல்வது  வழக்கம். எல்லோரும்  அவருக்கு  மரியாதை  அளிப்பர். ஆனால்  பாஸ்கரராயரோ  எழுந்திருப்பதோ ,  மரியாதையோ  செலுத்துவது  இல்லை.  உண்மையில்  தன்னை  மறந்த  ஆனந்த  நிலையில்  இருந்த  அவருக்கு  வெளியில்  நடப்பதில்  அக்கறையில்லை. வெளிப்பார்வை  இல்லை  என்றே  கூறலாம்.

Related image

         ஒருநாள்  இருவரும்  மகாலிங்கேஸ்வரர்  கோவிலில்,  பிரதோஷ  நேரத்தில்  எதிர் எதிராக  சந்திக்க  நேர்ந்தது.  ஏற்கனவே  தன்னை  வணங்கவில்லை  என்ற  கோபத்தில்  இருந்த  சன்னியாசி  மிக  கடுமையாக ...........சாதுக்களை  இவர்  மதிப்பதில்லை  என  எல்லோர்  முன்னிலையிலும்  சண்டையிட்டார்.  பாஸ்கரராய  பட்டரோ  மிகவும்  சாந்தமாக, பொறுமையாக  அவரின்  குற்றச்சாட்டுகளை  கேட்டுவிட்டு .......இல்லற  தர்மத்தின்படி ( இல்லறத்தாரான  அவர்  சாதுவை  எழுந்து  நின்று  வணங்கவில்லை  என்பதே  குற்றச்சாட்டு )  தாம்  அவரை  வணங்கினால்   அவரது  தலை  வெடித்து  சிதறிவிடும்  என்றும்,  அவரது  உயிரை  காப்பாற்று தற்காகவே   தாம்  வணங்கவில்லை  என்றார். சன்னியாசி  நம்பாமல்  வாதாட, எல்லோர்  முன்னிலையிலும்   சந்நியாசியின்  தண்டம் , கமண்டலத்தை  கீழே  வைக்க  சொல்லி  அதனை  வணங்கி  எழ ..............கமண்டலமும் ,  தண்டமும்  வெடித்து  சிதறின.
                     
                               பாஸ்கரராயரின்  பெருமையை  உணர்ந்த  சன்னியாசி,  தன்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ள ...........பாஸ்கரராயரும்  அவரை   மன்னித்து  அருளினார்.  அதுமுதல்  அந்த  சன்னியாசி  வரும்  நேரத்தில்  பாஸ்கரராயர்  வெளியே  திண்ணையில்  அமர்வதில்லையாம். எப்படிப்பட்ட  மஹான்கள்   இந்த  பூமியில்  வாழ்ந்துள்ளார்கள்.

நன்றி : ' மந்த்ர  ஆராதனை ' -நூல் 
பரமஹம்ஸ  பரத்வாஜ  ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment