Friday, October 31, 2014

எது பகுத்தறிவு?

பிரம்மமயம் :


எது பகுத்தறிவு?
சில வருடங்களாக "கடவுள் இல்லை" என்று சொல்வது மட்டுமே பகுத்தறிவு என்று தவறாக கருதப்படுகிறது.
உண்மையில் கடவுளே இல்லை என்று சொல்வது பகுத்தறிவல்ல. உண்மையில் கடவுள் என்றால் என்ன? ........
எது  கடவுள் தன்மை ?........
அதனை  அடைவது   எவ்வாறு ?..........
என்பதனை பகுத்து  ஆராயும் அறிவுக்கே பகுத்தறிவு என்று பொருள்.

எது கடவுள்?
நம் வேதங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை, அவன் ஆதியும் அந்தமும் அற்றவன். அனைத்தும் ஆனவன்.ஏகன் அநேகன் என்றெல்லாம் கூறுகிறது.
அக்கூற்றுகளின் வழியில் சென்றால் நமக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாக தெரியும்.
அது "கடவுள் ஒன்றே" என்பதுதான்.
ஒன்றான இறைவன் பலபெயர்களாலும் உருவங்களாலும் கற்பனை செய்யப்படுகிறான்.
அதை"ஏகம் சத்! விப்ரா பஹுதா வதந்தி" என்கிறது ரிக்வேதம்.
உலகில் ஒரே கடல்தான் உள்ளது. ஆனால்
"இந்தியப்பெருங்கடல்" "வங்கக்கடல்" "அரேபியக்கடல்"...........என்றெல்லாம் அதற்கு கற்பனைப்பெயர்கள் பல வழங்கப்பட்டாலும் கடல் பெயரற்ற ஒன்றுதான்.
அவ்வண்ணமே இருக்கும் ஒரே இறைவனுக்கு, இறைவன், கடவுள், ஆற்றல், இயற்கை,நுண்ணறிவு, சித், ப்ரஹ்மம், நுண்ணுணர்வு, சிவன், விஷ்ணு, அல்லாஹ், அருகன், ஈஷ்வா, அடநோமஸ்......................என்றெல்லாம் பற்பல கற்பனை பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன.  


ஆனாலும் இறைவன் என்று கூறப்படும் அது பெயரில்லா, உருவமில்லா, முழுமையான ஒன்று.
அது இரண்டுகள் அற்றது.



எப்பொழுது நம் மனம் வியவகரித்து கற்பனைகளை உண்டாகுகிறதோ அப்பொழுது இரண்டுகளற்ற இறைவன் என்னும் உண்மை நம் கண்களுக்கு பலவான உலகம் என்னும் மாய தோற்றமாக தெரிகிறது.


எப்பொழுது மனம் கற்பனைகளை உண்டாக்க நிறுத்தி அனைத்தையும் ஒன்றாக கருத துவங்குகிறதோ அப்பொழுது ஆத்மலாபம் சித்திக்கும்.


தங்கம் ஒன்றுதான் ஆனால் அதற்கு கம்மல்,மாட்டி, வலை, கொலுசு, சங்கிலி என்று எண்ணற்ற கற்பனைப் பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன. பொருட்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் ஆதாரம் ஒன்றுதான். அதுவே தங்கம். பொருட்கள் இல்லாமல் தங்கம் இருக்கும். 


ஆனால் தங்கம் இல்லாமல் அப்பொருட்கள் நிலைநிற்காது.
அதுபோலவே நாம் பலவற்றை நம் மனம் என்னும் கண்ணால் கண்டாலும், அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஒரே சக்திதான். அச்சக்தியையே நமக்கு புரிய கடவுள்,.....ப்ரஹ்மம்.......என்றெல்லாம் கூறுகிறோம்.


எவ்வாறு நீர்க்குமிழி நீரிலயே பிறந்து,வளர்ந்து, உடையுமோ அவ்வணமே அனைத்தும் இறைவனிடமே தோன்றி,...வளர்ந்து,....ஒடுங்குகின்றன.
இருப்பது அவ்வாற்றல் ஒன்றே.


இருப்பவன் இறைவன் ஒருவனே!

அவனைத் தவிர்த்து நீங்களும், நானும் இல்லவே இல்லை.  இறைவனத்  தவிர்த்து நமக்கும் வேறு பொருட்களுக்கும் இம்மியளவும் தனித்ததொரு இருப்பு இல்லை.

இதை  உணர்வதற்கே  இந்த  மனிதபிறவி ,..........உயிர்  வாழ்தல் ...........மூச்சுவிடல் !
எல்லாம் !.........

தனித்த  இருப்பு  இன்றி  இருத்தலே ............பிரம்மத்தில்.........அதுவாய்  இருத்தலே .......சரணாகதி ........முக்தி   என்பதும் !

                              

சரி !  இதை  எப்படி  தெரிந்துகொண்டு  அதுவாய்  இருப்பது .......?

சீடன்:- சுவாமி! நீங்கள் எங்கும் ப்ரஹ்மம் தான் உள்ளது அதைத்தவிர வேறு எதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கு உலகம் தான் தெரிகின்றதே தவிர ப்ரஹ்மம் தெரியவில்லையே.!! ஏன்?
.
சத்குரு:- ஒருவன் நகை வாங்க ஆசாரி இல்லத்திற்கு சென்றான். அங்கு அவன் பொன்னால் ஆன வளையல், காப்பு, கம்மல், பிள்ளையார் மாடம், பற்பல வடிவங்களில் பற்பல நகைகளைப் பார்த்தான். 

ஆனால் அங்கு உள்ள ஆசாரிக்கோ, அவை யாவுமே பொன்னாகவே தெரிந்தன தவிர பல பொருட்களாக தெரியவில்லை. தங்கமும் அதன் எடையும் தவிர வேறு எதுவும் அந்த ஆசாரிக்கு முக்கியம் இல்லை, 

அதே போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை, ஆதலால் எனக்கு அனைத்துமே பிரம்மமயம். உனக்கு உலகில் பலவற்றில் பற்று உள்ளது. பிரம்மத்தைத்தவிர வேறு பலவும் உனக்கு வேண்டியுள்ளது. ஆகையால்தான் உனக்கு உலகம் தெரிகின்றது. இருவருக்குமே காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வை வேறு!!!


பிரம்மம் ஒன்று.  எல்லாம் ஒன்று.... என்பது வேதத்தின் கூற்று.அது எப்படி சாத்தியம்?

எல்லாம் ஒன்று,கடவுள் ஒன்று என்றால் அந்த ஒன்று ஏதோ சப்பாத்தி மாவைப்போலவோ,கிரிக்கெட் பந்தினைப்போலவோ ஒரு வடிவமாக இல்லை.


அது எப்படி ஒன்று என்பது தாங்கள் அத்வைதிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தெரியவில்லை.
இப்பொழுது ப்ரஹ்மம் (அ) இறைவன் (அ) பிரபஞ்சம் (அ ).................. எப்படி ஒன்று என்பதனை பாப்போம்.

இங்கு ஒரு உதாரணத்தை பார் ப்போம்.
ஒரு மகிழுந்து(கார்) உங்கள் முன்னாள் இருக்கிறது என்பதாக வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது உங்களிடம் நான் வந்து உங்கள் முன்னால்  இருப்பது என்ன ? என்று வினவினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
கார்..........என்றுதானே.
ஆனால் நான் சொல்கிறேன். அங்கு கார் இல்லை பல ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கலாலான ஒரு இயந்திரம் உள்ளதென்று..........! 

இதல் எது சரி?
இரண்டுமே சரிதான்.


உண்மையில் கார் என்ற ஒரு பொருள் உலகில் இல்லவே இல்லை. அது பலப் பல உதிரி பாகங்களால்  ஒருங்கிணைந்த ஒன்று. நீங்கள் உதிரிபாகங்களாக பார்த்தால் பலவாகவும், அனைத்தின் ஒருங்கிணைப்பாக பார்த்தால்...... காராக, ஒன்றாக தெரிகிறது.
அதே போல் தான் இப்பிரபஞ்சத்தில் இருப்பில் அதாவது உண்மையில் உள்ள அனைத்தின் ஒருங்கிணைந்த கூட்டிற்கு வழங்கப்படும் பெயர் தான் ப்ரஹ்மம்,இறைவன்,கடவுள்,இயற்கை........என்பதெல்லாம்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் ஒருங்கிணைப்பிற்கு வழங்கப்படும் பெயரே இறைவன்.


நீங்கள் அந்த ஒருங்கிணைப்பை தனித்தனியாக பார்த்தல் உலகமாகவும்,அனைத்தின் கூட்டாகப் பார்த்தல் பிரம்மமாகவும் தெரிகிறது.
இப்படித்தான் ப்ரஹ்மம் ஒன்று ஆகிறது.
எப்படி பல கம்பிகள் ஒன்று சேர்ந்து வலை ஆகிறதோ,
எப்படி பல ஆயிரம் நூல் சேர்ந்து ஒரு ஆடை ஆகிறதோ,
அப்படித்தான் எல்லா நட்சத்திரங்களின், எல்லா கோள்களின், எல்லா தாவரங்களின், எல்லா ஜீவராசிகளின், எல்லா மிருகங்களின், உங்களின், எனது ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த கூட்டிற்கு(the mass totality) வழங்கப்படும் ஒரு பெயரே ப்ரஹ்மம்.
அல்லேலூயா என்றோ ,  அல்லா  என்றோ ....... ப்ரஹ்மம் என்றோ, இறைவன் என்றோ தனித்து எதுவுமே இல்லை.


இருப்பதெல்லாம்   ஒன்றேயான   ஆத்மவஸ்து !.......ஸ்வரூபம் ........அதுவே  சுகமயம் !
உணர்வே  தனது  உருவமான .........  பூரண  உணர்வு மயம் !



நன்றி : சனாதன தர்மம்.

பிறப்பும்  இறப்பும்  :

            


ராமரும் இலக்குவணனும் வனவாசத்தின்போது படகில் ஆற்றைக்கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு மரத்துண்டுகள் நீரில் மிதந்தவாறு வந்துகொண்டிருந்தது. ஸ்ரீராமர் இலக்குவனக் கூப்பிட்டு, ''இலக்குவா!! அதோ பார்" என்று அந்த மரக்கட்டைகளைக் காண்பித்தார். இவை இரண்டும் சிறிது தூரம் நீரில் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தது. 

திடீரென்று குறுக்கே பாறை ஒன்று வந்தது. பாறையில் மோதி கட்டைகள் பிரிந்தது. இதைக்காண்பித்து, "அன்பு தம்பி!! நம் உறவும் இப்படித்தான். எங்கிருந்தோ வந்த கட்டைகள் சிறிது நேரம் ஒன்றாக இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்தது. உண்மையில் அவை சேரவும் இல்லை பிரியவும் இல்லை.

 அவ்வாறே நாமும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இப்பொழுது இணைந்துள்ளோம். காலம் கட்டாயம் அனைவரையும் அனைத்திடமும்   இருந்து பிரித்துவிடும். எதற்கும் நாம் வருந்தக்கூடாது. இணைவதும் பிரிவதும் இயற்கையின் நியதி, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது!!!" என்று மகா உபதேசம் செய்தார்.


             சமீபத்தில்    முக  நூலில்  கேட்ட  ஒரு   காணொளி  எம்மை  மிகவும்  பாதித்து ,  என்ன  செய்கிறோம் , என்ன  செய்ய  வந்தோம் , என்ன  செய்துகொண்டு உள்ளோம் ?  இங்கு  செய்வதற்கு  என்ன  உள்ளது ?.......................இனி  இது  நிகழாமல்  இருக்க  என்ன  செய்ய ?

எதை  அடைந்தால்   நிலைத்த  அமைதியும் ,  பரிபூரண  நிம்மதியும்  பெறமுடியும் ?
இவற்றை   விரும்புவோன்  யார் ?  நானே !

நான்  என்பது ...............

உடலல்ல .........மனம்  அல்ல .............நரம்பு , தசை , எலும்பு , மஜ்ஜை , ரத்தம் ..........வைத்து  கட்டிய  இந்த  கூடு  அல்ல .........தூங்கும்போது  உள்ள  மனம்  அல்ல ..........உள்ளே  சென்று  வரும்  காற்று ..மூச்சு ......அல்ல !.......


உள்ளே  பார்க்கும்  இந்த  பார்வை  நான்  அல்ல !


நான் .......நான்  என்று  எழுந்து  வரும்   இந்த  நான்  யார் ?  எங்கு  உள்ளது ?  இதன்  பிறப்பிடம்  எது ?  எங்கே ?................. 


விசாரம்..........இடைவிடா  விசாரத்தால்  உணர்வே  உருவாய் ...............சொல்லமுடியாத  ஒரு  மாபெரும்  நிம்மதி  ..........எங்கும் , எதிலும்  பரவி  நிற்கிறதே !


இவற்றை  உணர்வோன்   நானே !


எனில்,    இந்த  .........நான்  யார் ?









நன்றி : சனாதன தர்மம்.

Thursday, October 30, 2014

ஸ்ரீ சத்குரு ஞானகவசம்


ஸ்ரீ யோக  வாசிஷ்டம்  :
                     
                 


பக்குவ நிலையில் உள்ள சாதகனுக்கு இந்த உபதேச கவசமே தன் ஞானத்திற்கும் முக்திக்கும் போதுமானதாகும். ஒவ்வொரு ஆன்ம சாதகனும் தினமும் நேரம் ஒதுக்கி தியானம் செய்ய வேண்டிய உபதேசம் இது. இந்த உபதேச நூலான "ஸ்ரீ சத்குரு ஞானகவசம்" தவத்திரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் அருளப்பட்டது.


மேலும்  சமீபத்தில்  முகநூலில்  எம்மை  பாதித்த ,  படித்த வற்றை , சிரவணம்,  மனனம் , நிதித்யாசனமாக ,  அனுபவமாகவேண்டும்   என்ற   பெரும்   ஏக்கத்துடன்,  ஸ்வாமி   ஞானானந்தர்   திருவடிகளைப்  பணிந்து ......................


                 



ஹே மைந்தா! ராமா!! உனக்கு ஆனந்தம் வேண்டுமெனில், "எதேர்ச்சையாக" செய்ய நேர்வதை எந்த வித காரண காரியத்தையும் ஆராயாமல், உளம் களிப்பின்றியும் வெறுப்பின்றியும் செய்து, நீயாக எந்த ஒரு செயலையும் உன் அகங்காரத்தை கொண்டு செய்யாமல் இரு.
--யோக வாசிஷ்டம்.


ஹே உத்தவா!
யார் மீதும் கோபமோ, பொறாமையோ, வெறுப்போ, அசூயயோ....... கொள்ளாதே.ஏனெனில் எந்த பரமன் உன் ஆன்மாவாக பிரகாசிக்கின்றானோ அதே பரமனே சின்ன எறும்பு முதல் பிரம்மன் வரையான அனைத்திலும் நான் என்று ஆன்ம ஸ்வரூபமாய் பிரகாசிக்கிறான்.
நீ ஒருவரைக் கோபித்துக்கொண்டால் அது அவர்களையல்ல............... இறைவனை கோபித்ததாகும்.
-ஸ்ரீகிருஷ்ணன்!!!


புத்தி அமைதி உற்றவன், ஜனக்கூட்டதிற்கோ, காட்டிற்கோ ஓடமாட்டான். அவன் எங்கும் சமனாய் உள்ளவாறே நிலைநிற்பான்!!!
--அஷ்டாவக்கிர கீதை!!!


*முக்தியாவது யாது??
எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும், எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. 
அதை எய்த வேண்டும் என்னும் எண்ணம் உனக்கு உண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய்!!!
இல்லாவிட்டால் துன்பங்களிலே கிடந்து, ஓயாமல் உழன்றுகொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்!!!

*நீ எவ்வித செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையல்ல. "கடவுளுடைய செய்கை" என்பதை அறிந்துகொண்டு செய். 

*எல்லாம் கடவுள் மயம். எல்லா தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா வடிவங்களும், எல்லா நிலைகளும், எல்லா உயிர்களும், எல்லா பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்சிகளும், எல்லா செயல்களும், எல்லாம் ஈசன் மயம். ஆதலால் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்!!!

--மகாகவி பாரதியார். (பகவத் கீதை நூலில் இருந்து)


ஹே ராமா!! இருப்பது நிர்குண ப்ரஹ்மம் மட்டுமே. பிரம்மத்தைத் தவிர்த்து வேறு எதுவும் அணுவளவும் இல்லை. இதுவே சத்தியம். ஆனால் உலக விஷயத்தை பொறுத்த வரையில் த்வைதத்தில் தான் பிரவிர்த்திக்கவேண்டும். உண்டல், உறங்கல், ஜீவித்தல்,...... முதலிய உலகாய விஷயங்களை அஞ்ஞானத்தால் தான் செய்தாக வேண்டும். ஆனால் ஞானம் எது என்பதை அறிந்து, அக்ஞானத்தை கையாளவேண்டும். அக்ஞானத்தில் மூழ்கிவிடக்கூடாது. உலகைப் பொறுத்தவரையில் த்வைதத்தில், கர்மயோகியாக இருந்து, உள்ளத்தளவில் ஆழ்கடலைப்போல சஞ்சலம் அற்று, கற்பனைகளும் சங்கல்பங்களும் ஒழிந்து, எதனாலும் பாதிக்கபடாதவனாய், அத்வைதானந்தமாய், ஜீவன்முக்தனாய் இருப்பாயாக.
--யோக வாசிஷ்டம்.



மனிதன்  தனக்கு  சாதகமானதை  நல்லவை என்றும் ,  பாதகமானதை  தீயவை  என்றும்  தன்  கற்பனையால்   வரையறை  செய்கிறான்.  அதே  போன்று  தனக்கு  சாதகமானவர்களை   நல்லவர்கள்   என்றும்,  பாதகமானவர்களை   தீயவர்கள்  என்றும்  எண்ணுகிறான்.  நன்றாக   சிந்தித்துப்  பார்  ராமா !

உள்ளது  அனைத்துமே  அந்த  பரவஸ்துவான   பிரம்மமாய்    இருக்க,   இங்கு  நல்லவை   தீயவை ,  நல்லவர்   தீயவர்,   அறிவுடையோன்   மதிஈனன் ,   ஏழை   பணக்காரன் ,    தீரன்  கோழை ............என்னும்   இரட்டைகள்   எங்கிருந்து  வர இயலும் ?

அனைத்தும்  கற்பனைகளே !  உள்ளது  அனந்த ,  அகண்ட , பரிபூரண , அமல ,  சத் சித்  ஆனந்தம்  எனப்படும்  பிரம்மம்  ஒன்றே.  பிரம்மத்தைத்   தவிர்த்து  இங்கு  நீயோ ,  நானோ   வேறு   எதுவுமே  இல்லவே   இல்லை.   காணும்  அனைத்தும்   பிரம்மமயமாய்க்   கண்டு   ஜீவன்முக்தனாய்   சுகித்திருப்பாய் !
----------மகரிஷி  வசிஷ்டர் ( யோக  வாசிஷ்டம் ).


நன்றி : ஞானானந்தமயம் 
ராம !  ராம !!  ராம !!!..........

Photo: ஸ்ரீமத் போதேந்த்ர யோகீந்த்ற தேசிகேந்திரம் உபாச்மஹே.

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம!!!

"ராம" என்னும் சொல் ஒரு நபரையோ, குணத்தையோ குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு தத்துவம். நிர்குண பரபிரம்மத்தின் பெயர். 

ஸ்ரீமத் பாகவதத்தில் சுகசார்யார் "எத்தனையோ ராமர்கள் இருந்திருக்கின்றார்கள் அதில் ரகுகுல ராமைப்பற்றி உனக்கு சொல்கிறேன் கேள்" என்று பரிக்ஷித் ராஜாவிற்கு கூறினார்.
நமக்கு தெரிந்தது தசரத மைந்தனான சீதாராமன் மட்டுமே. ஆனால் புராணத்தில் ராமன் என்னும் பெயரில் எண்ணற்ற மகான்களும்,மகாபுருஷர்களும் இருக்கின்றனர். ராமாவதாரத்திற்கு முன் அவதாரமும் ராமன் தான்.அதாவது பரசு ராமன் என்பது.........
கையில் கோடரி இருந்ததனால் அந்த ராமனுக்கு அப்பெயர்.

தசரதராமனது அடுத்த அவதாரமும் ராமன் தான். அது பலராம அவதாரம். பலம் பொருந்தியதனால் அந்த ராமனுக்கு அப்பெயர்.
"ராம" என்னும் சொல்லின் சிறப்பு அப்பெயர் கொண்ட நபரால் அல்ல. "ராம நாமதினால்தான் அந்த நபர்களுக்கு சிறப்பு".


சரி,.... இப்பொழுது ராமநாமத்தின் சிறப்பை பார்போம்:


நான்கு வேதங்களின் நாடு பாகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். ஸ்ரீருத்ரத்தின் நடுவில் சிறப்புற திகழ்வதே "நம:சிவாய" என்னும் சிவா பஞ்சாக்ஷர மந்திரம்.
"சிவ" என்றால் நன்மை,மங்களம் என்று பொருள்.


நம:சிவாய என்றால் மங்கலத்தை தருபவருக்கு போற்றி என்று பொருள். இதில் முக்கிய எழுத்தாக இருப்பது "ம:" என்னும் எழுத்து. இதை எடுத்துவிட்டால் "ந சிவாய" என்றாகிவிடும். அதன் பொருள் "நன்மைகளை என்றுமே தராதவர்" என்று பொருள்.
திருமாலின் பஞ்சாக்ஷரம் "நாராயணாய" என்பதாகும். நாராயண என்னும் சப்தத்திற்கு "பரபிரம்மம்" என்று பொருள்.இதில் முக்கிய எழுத்து "ரா" என்பதாகும். இவ்வெழுத்தை அகற்றிவிட்டால் "ந அயனாய" என்றாகிவிடும். அதாவது அயனம் என்றால் கண், "கண்கள் அற்றவன்" குருடன் என்று அனர்த்தமாகிவிடும்.


இவ்விரண்டும் பஞ்சாக்ஷரங்களுக்கு "ஆத்ம அக்ஷரம்" என்று அழைக்கப்படும்.


இவ்விரண்டு ஆத்மஅக்ஷரங்களும் ஒன்று சேர்த்தல் "ராம:" என்னும் அற்புதமான திருநாமம் கிடைக்கும்.
எவ்வாறு "நம:சிவாய" என்பதில் "ம:" என்னும் எழுதும், "நாராயணாய" என்பதில் "ரா" என்னும் எழுதும் நீங்கிவிட்டால் அவைகள் பொருளற்றனவாக மாறிவிடுகிறதோ,அவ்வண்ணமே பரம்பொருளான "ராமன்" இல்லாவிடில் இப்பிரபஞ்சம் பொருளற்றதாகிவிடும் என்பதனை குறிப்பதே "ராமநாமம்" ஆகும்.


ஆக ராமநாம ஜபம் செய்தால் அது குணமுடைய சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து தியானிப்பதாகவும், நிர்குண பரப்பிரம்மத்தின் தியானமாகவும் அமையும்.

ராம ராம ராம ராம ராம ராம.


-------------------------------------------------------------சுவாமி  ஞானானந்தர் 



நன்றி : ஞானானந்தமயம் 

மரம்கூட  நன்மையை  செய்கிறது ?............ நாம் !




ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டனர்.

ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது.

கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள்.
"மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?' என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார்.
நடுங்கியபடி அவள் மன்னர் முன் நின்றாள்.

""மன்னா! அறியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். மூன்று நாள் பட்டினியாக என் கணவர் படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு பழம் பறிக்க மரத்தின் மீது கல்லெறிந்தேன். தவறுதலாக அது உங்கள் மீது பட்டு விட்டது'' என்று சொல்லி கும்பிட்டாள்.

மந்திரியிடம் மன்னன்,""அரண்மனைக்கு இவளை அழைத்துச் சென்று, வயிறார உணவும், உடையும், நூறு பொற்காசும் கொடுத்தனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்'' என ஆணையிட்டார்.
மந்திரி,""மன்னா! இது தான் தப்புக்கு தண்டனையா?'' என்று ஆச்சர்யமாக கேட்டார்.

""இது பஞ்ச காலம். அவளும் நாம் இருப்பதை அறியாமலேயே தவறு செய்தாள். இந்த பஞ்சகாலத்தில், ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி!'' என்றான்.

Friday, October 24, 2014

கேள்வி  -  பதில் .........ஸ்வாமி  பப்பா   ராமதாஸ் :




பக்தர் :           ஸ்வாமி.   மாலையில்   தாங்கள்   ஏதோ  சில  மந்திரங்கள்                                            சொன்னதைக்    கேட்டுகொண்டு  இருந்தேன். அதைப்  பற்றி                                         எங்களுக்கு   சிறிதேனும்   கூறுங்கள்.

ராமதாஸ் :  ஆரம்ப  ஆன்மீக   சாதனையில்,ஒரு  ஆத்ம  சாதகனுக்கு   மிக                                    கடினமாக  இருப்பது   தனது  மனதை   கட்டுப்படுத்துவதே  ஆகும்.
எப்போது  மனம்   அலைபாய்ந்த  படி  இருக்குமோ  ,  அமைதியற்றதாக  இருக்கும்போதும்   அதை  தியானத்தின்   மூலம்   இறைவனிடம்
 இருத்துவது   என்பதும்  கடினமே.

            எனவே   முதலில்  மன  ஒருமைப்பாட்டுக்கு  சில  பயிற்சிகள்  மேற்கொள்ள வேண்டும். இதற்கு  நாம ஜபம்   மிக  சிறப்பாக    உதவக்கூடிய
ஒரு  வழி.   மந்திர  ஜபம்   எனபது   இறைவனின்   திருநாமம்  மற்றும்  அவருடைய   அற்புதமான  சிறப்புத் தன்மைகள்  கொண்டது.  எப்பொழுதெல்லாம்   நீங்கள்   இறைவனின்  நாமத்தை   உச்சரிக்கிறீர்களோ  அப்பொழுதெல்லாம்  உங்கள்  மனம்  இறைவனை   நோக்கித்  திருப்புகிறீர்கள்.

          இடைவிடாத ,  தொடர்ச்சியான   உணர்வோடு  கலந்த  நாம  ஜபம்  உங்களுக்கு   அமைதியையும்,  மன  ஒருமைப்பாட்டையும் ,  சாந்தியையும், பின்பு   நிச்சல  நிலையையும்   ஒருங்கே  அளிக்கிறது.  மேலும்  அது   எல்லா  தீய  ஆசைகளையும்  அழித்து, அதே  நேரத்தில்  மனதை  தூய்மையும்,  சக்தி மிக்கதாகவும்   ஆக்குகிறது.

         மனம்   எப்பொழுது   தூய்மையாகவும்,  ஒருநிலைப்பட்ட  சக்தியுடையதாகிறதோ   அப்பொழுதே   அது   இறைவனை   தன்னிலிருந்து  வெளிபடுத்தும்   இயல்புடையதாகிறது.

         ராமதாஸ்   தன்னுடைய  அனுபவத்திலிருந்து  கூறுவது, ...... யார்  ஒருவர் ,
" ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்  ஜெய்  ஜெய்  ராம்  "  என்று   இடைவிடாமல்  ஜபிக்கிறார்களோ  ,   அவர்   உண்மையிலேயே  தூய்மையும் , அதே  நேரத்தில்  அவரது   இதயம்  வெளியிடும்  தூய்மையான  அன்பில்   அனைத்து  உயிரினங்களும்  மகிழும்   பேற்றினைப்  பெறும்.  அவர்  இதயம்  இறை அன்பால்  நிரப்பப்பட்டு,  எல்லையற்ற   ஆனந்தம்  மற்றும்  அமைதியால்   நிரம்பி  வழியும்.  இவ்விதமே   ராமதாஸை   இறைவன்  தனது  குழந்தையாக்கி  உள்ளான்.

          எல்லா   ஞான   ஆசான்களும்   கூறுவதும்  இதுவே.  நமது  எண்ணத்தில்  தூய்மை,  குழந்தை   போன்ற   கள்ளம் , கபடமற்ற   தன்மை ,  இதுவே  இறைவனை   அடையத்   தேவையானவை.  இந்த  மிக  உயர்ந்த  நிச்சல  நிலை   இறைவனின்  திரு நாமத்தை   திரும்பத்  திரும்ப   உச்சரிப்பதால்  கிடைக்கிறது.


 பக்தர் :           ஸ்வாமி   மேலும்   தியானம்   என்பதைப்  பற்றி   தயை   கூர்ந்து
                            அருளவேண்டும் !


ராமதாஸ் :   மன  ஒருமைப்பாடு   கைகூடினால்   தியானம்  என்பது                                                  தானாகவே   நிகழும்.   எல்லா   திசைகளிலும் ,  மனம்   அலை                                    பாய்ந்துகொண்டே  இருந்தால்   தியானம்  எங்கனம்  நிகழும்.   முதலில்  மனதை   பற்றி   அறிவோம்.  மனதில்   எப்போதும்   எண்ணங்கள்  பலப்பல   அலைகளாக    எழுவதும், பின்பு   அவை  வீழ்வதும்  நிகழ்கின்றன ! எனவே  முதலில்   அவற்றை   எல்லாம்   ஒரே   எண்ண   அலையாக  மாற்ற வேண்டும்.   அதனை  கடவுளின்   திருநாமம்   என்ற  ஒரே   அலையாக  மாற்றுகிறோம்.

            இறுதியாக,  அந்த   ஒரே  எண்ண  அலையும்  மறைந்துவிடும். இப்போது  எண்ணங்களே   இல்லாதாததால் ......எழுச்சி ,  வீழ்ச்சி   அற்ற  நிச்சலமான  நிலையை  மனம்  அடைகிறது.  இந்த  நிச்சல  நிலையை   மனம்   அடைந்தால் ...........உடலைப்  பற்றிய   எண்ணங்கள்   அனைத்தும்   மறைந்து  விடுகிறது.

         இதன் பின்பு  நீங்கள்   அறிவதே ......நீங்கள்   உடல்  அல்ல ,  எப்போதும் நிலையாக   இருந்து   ஒளிவிடும்   ஆத்ம  ஸ்வரூபமே   என்பதை  அனுபவப்பூர்வமாக,.........   இதுவே   சமாதி என்பதையும்   நன்கு  அறிவீர்கள் !
சமாதி  பற்றிய   முழு  உண்மையும்   இதோடு   முடிந்துவிடுவதில்லை.

        நீங்கள்   எப்பொழுது   இத்தகைய  சமாதியிலிருந்து  வெளியே    வருகிறீர்களோ ,   அப்பொழுதே   இந்த  உலகத்தை   இறைவனாக   பார்த்துப்  பழக  வேண்டும்!  இதுவே  உண்மையில்   சமாதியாகும். இந்த  உள்ளும்  இறைவன் , வெளியும்  இறைவன்   அல்லது   இறைவனின்  வெளிப்பாடே  இந்த  உலகம்  என்ற  அனுபவமே   சமாதி  என்பதின்   முழுமை  ஆகும்.

            சகஜ சமாதி  என்பதும்  இதுவே !  இந்த  பிளவுபடாத  ( உள்ளும்  ராமன் , வெளியும்  ராமன்  என்ற )   முழு  இறை  உணர்வு   நிலையில்  எப்போதும்   இருப்பதே  சமாதி, .....மற்றும்   இந்த  நிலையிலேயே   உங்களின்   பேச்சு ,  செயல் , நடை ,  பாவனை    என்ற   உலக  கர்மாவும்   ( பின்பு   அது   உலகியல்  கர்மா  அல்ல )  இருத்தல் வேண்டும்.  ஏனெனில்  இப்போது   நீங்கள்  எது  செய்தாலும்   அது   இறைவனுக்கு',  இறைவனுக்காக ........................!

        இது  இடையீடின்றி   தொடர்ந்தால் ..... சமாதிக்குச்   செல்வதும்  இல்லை.  சமாதியிலிருந்து  வெளியில்   வருவதும்   இல்லை.  கண்கள்  திறந்திருந்தாலும்   அது  சமாதியே ......தியானமே !

         இதுவே   இறை  அனுபவம்  பெற்ற  நிலை !  தியானம்   என்பதும்  இதற்கே !
தியானத்தின்  மூலம்    உடலே   நான்   என்ற   நிலையை  கடந்து  விடுகிறீர்கள். இதனால்   உங்களின்  மனமானது   இறைவன்  என்ற   எண்ணத்திலேயே , எல்லையற்ற   அந்த   உண்மையில்   இருந்து   இருந்து   அம்மயமாகிறது.
( அங்கு   ' நான் '  என்ற  அகந்தையின்   தனி  இயக்கம்   இருக்காது )

         நீங்கள்   உங்களை   இறைவனில்  இழக்கிறீர்கள்.  அங்கே  இருப்பது  இறைவன்  மற்றும்    இறைவன்   மட்டுமே !  இவ்விதமே  நீங்கள்   மன  ஒருமைப்பாடு  என்பதிலிருந்து   தியானம்   என்ற   நிலைக்கு  மாறுகிறீர்கள்.

         சமாதி  மற்றும்  சகஜ  சமாதிக்கும்   இவ்விதமே   உங்கள்  மனம்  உயர்கிறது.  இறை  அனுபவம்   என்ற   நிலையில்  படிப்படியாக  பெறும்  அனுபவம்  இதுவே !




நன்றி  :  " தி  விஷன் "  -  ஆனந்தாஸ்ரமம்  இதழ்.
              
               

Friday, October 17, 2014

மன்னன்  வணங்கிய   ஓடு :  
              
     

                பாண்டிய   மன்னன்    வரகுண    பாண்டியன்   சிவபெருமானிடம்   மிகுந்த    பேரன்பு   பூண்ட   அடியவனாக  விளங்கினான்.


                   அவன்   சிவபெருமானின்   பல்வேறு   திருத்தலங் களுக்கு   சென்று   வழிபடுவதைத்    தலையாயக்    கடமையாகக்   கொண்டிருந்தான்.


                ஒரு முறை   அவன்   திருவிடைமருதூரை   அடைந்தான்.  திருக்கோவிலுக்குச்   செல்வதற்கு  முன்பு     கோவில்   இருந்த   வீதியை  வலம்   வந்தான்.


                அங்கே   வழியில்   ஒரு   மண்டை   ஓடு   கிடந்தது.  அதைப்   பார்த்த  அவன்  கண்களில்   நீர்  மல்க    அந்த   மண்டை   ஓட்டிற்கு   முன்பாக  பலமுறை   நிலத்தில்   விழுந்து   வணங்கினான்.


              "  எதற்காக   இப்படி   மண்டை  ஓட்டை   வணங்குகிறீர்கள் ? "  என்று   உடன்  வந்தவர்கள்   கேட்க ,


                "  இறந்த   பின்பும்   வீதிவிடங்கரின்   திருவீதியில்  கிடக்கும்   நற்பேறு  இந்த   மண்டை   ஓட்டிற்கு   கிடைத்துள்ளதே !  இப்படிப்பட்ட   நற்பேறு   எனக்கும்   கிடைக்க   இறைவன்  அருள்புரிய   வேண்டும்   என்ற   எண்ணத்தில்தான்   இப்படி   வணங்கினேன் ! "  என்று   பதில்   சொன்னார்   வரகுணபாண்டியன்.


               
கும்பகர்ணன்  கேட்ட  வரம் :
                     
            ராமருக்கும்   கும்பகர்ணனுக்கும்   யுத்தம்  நடந்தது.

                   அப்போது   கும்பகர்ணன்   ராமரைப்   பார்த்து,  "  ராமா ! இந்தப்  போரில்   நான்  இறப்பதும் ,   நீ   வெற்றி   பெறுவதும்   உறுதி.  


                அப்படியிருக்கும்   போது    நமக்குப்   பின்னால்   வரக்கூடிய   சந்ததியினர்   உன்னைப்பற்றியும்     ராவணனனைப்பற்றியுமே    பெருமையாகப்   பேசுவார்களே   தவிர   என்னைப்   பற்றி   நினைக்கக்கூட   வகை   இல்லாமல்  போய்விடுமே !"  என்று   கூறி   வருந்தினான்.


                  அதற்கு   ஸ்ரீ  ராமர்,  " வருந்தாதே   கும்பகர்ணா ! எங்களைப்  பற்றி   பேசும்   இடங்களிலெல்லாம்    உன்னைப்   பற்றியும்   பத்து    பேராவது  நினைக்கும்படி  செய்துவிடுகிறேன் ! "  என்று   அருளினார்.

               
               இதன்  விளைவு  தான்   இன்றும்   ராமாயணம்   நடைபெறும்   இடங்களில்   எல்லாம்   குறைந்தது    பத்து   பேராவது   கும்பகர்ணனை   நினைத்து  ( தூங்கிக் )  கொண்டிருகிறார்கள்.

அறிவு  வேறு ;  படிப்பு  வேறு :

             
  
              அது  ஸ்ரீரங்கம்.  எங்கும்   துளசியின்  மணம்   வீசும்  தெருக்கள் . இரவு  வேளை.  அந்தப்   பெரியவர்   வேகம்   வேகமாக   நடக்கிறார்.  அவரது   சீடர்கள்   பதுங்கிப்   பதுங்கி    அவரைப்   பின்  தொடர்ந்தார்கள்.  ஊருக்கு   ஒதுக்குப்  புறமாக   ஒரு   குடிசை.  அதற்குள்   நுழைந்து   கதவைச்   சார்த்திக்  கொண்டார்.

                           தமது   குருநாதர்   இரவு  நேரத்தில்,  யாரிடமும்   சொல்லிக்கொள்ளாமல்   புறப்பட்டு   வந்து,  ஊருக்கு   ஒதுக்குப்  புறமான   இடத்தில்   உள்ள   குடிசைக்குள்   நுழைந்து   கதவைச்   சார்த்திக் கொண்டால்,  அந்த   சீடர்களுக்கு   மனம்   எப்படி  இருக்கும் ?   பரபரப்பான  ..........கற்பனைகள்  ஓட ,  ஓலைகளின்   இடுக்கு  வழியே   உள்ளே   பார்க்க .......


                   மங்கலான   வெளிச்சத்தில்,  கட்டிலில்   கிடக்கும்   அந்த  மெலிந்த  உருவத்தை   மெல்லத்   தாங்கி   எடுத்து    உடலைத்   துடைத்து   சுத்தப்படுத்தி,
உணவு   ஊட்டிவிட்டு ,  பணிவிடைகள்   செய்கிறார் .........குருநாதர் !

                  மாறனேறி   நம்பிகள்   என்ற   நோயுற்ற  கீழ்க்குலத்தைச்  சேர்ந்த  வைணவர்   ஒருவருக்கு    பெரிய  நம்பிகள்    என்ற   அந்தண  வைணவர்  தான்   இந்த   அரும்பணியை   செய்த   அன்பர்.  ( அக்காலத்தில்   ஜாதி  பேதங்கள்  நிறைந்ததாக    ஸ்ரீரங்கம்  இருந்தது )  செய்தி   காட்டுத்தீயை   விட   மிகவும்   வேகமாகப்   பரவியது.

               கீழ்க்குலத்தவரைத்   தொட்டுப்   பணி   செய்யும்   அந்தண   நம்பிகளை   என்ன  செய்வது ?  ஜாதிப்ரஷ்டம்    செய்வதா ?  விசாரணை   நடத்துவதா ?
இப்போது   ஸ்ரீரங்கத்தில்   தேர்த்  திருவிழா   வேறு ......

              இப்படியே   விடக்கூடாதே !  இவரைத்   தண்டித்தே   ஆகவேண்டுமே ! ஸ்ரீரங்கமே   கூடி   விவாதித்து   தீர்ப்பு   வழங்கியது !

            " ரங்கனின்   தேர்   பெரிய  நம்பிகள்   வீட்டு   வாசலில்   நிற்கக்  கூடாது; இடைக்கால   அவமானமாக   இது   இருக்கட்டும் ! " என்று   தீர்மானம்   ஆனது.

             கருணைக்  கடல்   தேர்   ஊர்ந்து  வந்த  சமயம்,  பெரிய  நம்பிகளின்  திருமகள்   அத்துழாய்,   கண்களில்   நீர்மல்க ,  கதவைப்   பிடித்தபடியே   வெளியில்   பார்த்தவள் ,  வாய்  திறந்து   புலம்பினாள் !

            "  எல்லோரும்   எம்மை   விலக்கினர்........ரங்கா!....ரங்கா !  நீயும்   எமக்கு   விலக்கோ ! "  என்றாள்.

           அச்சு  முறிந்து   தேர்   வீட்டு   வாசலிலேயே   நின்று  விட்டது !  பத்து  நிமிடம்   அல்ல !..........பல மணி  நேரம்   பகவான்   அங்கு  நின்றார் ....நின்றார் !

       ஆம் !  கேள்வி   ஞானம்   அல்ல !  வாழ்க்கை  ஞானம்  இதுவே !


                                                  


நன்றி :  திரு. சுகிசிவம் ,  நல்லவண்ணம்   வாழலாம்.
               
ஜீவனே  சிவன் ,  சிவனே  ஜீவன் ........எப்படி ?  எப்போது ?



           ரமண  மஹா  குருவின்   அருளால்  நாம்   ஞான மலையாகிய   அக  நோக்கில்  ( விசாரத்தில் )  ஈடுபட ,   அவரின்   கருணை   என்ற   அந்த்மில்லாக்  கண்ணாகிய   நமது  ஸ்வரூபம்   மெல்ல  மெல்ல   புலப்படும்.

          ஆரம்பத்தில்   அறிவின்   துணைகொண்டு   முயற்சி  செய்கிறோம் ! அந்த  அறிவின்   துணையாலேயே   மலை  ஏறுகிறோம்.  சாதனை  முற்றுப்  பெறும்போது   அங்கு   அறிவுக்கு   வேலையில்லை. அப்போது   உலகளாவிய  பேரன்பு  தோன்றுகிறது.

           அறிவு  முற்றுப்  பெறுகின்ற  இடத்தே ,  அன்பு  விளைகின்ற   இடத்திலே  அநுபவம்   தோன்றுகிறது.  ஆன்மா  இறைவனுடன்   ஒன்றாகி ,  அன்பிலே  விளைகின்ற   ஆனந்தத்  தேனை   அநுபவித்து,   அதிலேயே   கரைகின்றது.

                     அம்புவில்  ஆலிபோல்   அன்புருவில்  எனை 
                                 அன்பாய்க்    கரைத்தருள்     அருணாசலா !

  என்று   பகவான்  பாடும்  அநுபவம்  இது.  அதுவே   பஞ்ச  பூதங்களுக்கும்  அப்பாற்பட்டு   கால ,  தேச  எல்லை  கடந்து  அநாதி  வெளியில்   விளைந்த  வெறும்  பாழ்  என்ற   மகோன்னத  நிலை.  அங்கு   ஆத்மாவைத்   தவிர  வேறு  பொருளே  இல்லாத  நிலை.  அதுவே   அருணகிரிநாதர்   குறிப்பிடும்   வெறும்  வெளி  !

                     பகவான்   வாக்கிலேயே  இதனைக்  காண்போம் !  ஆன்மாவில்  அகந்தை   கானாதலுடன்   ஜீவனின்    தனித்தன்மை   அற்றுப்போகிறது.   ஜீவன்   தன்   மூல  ஸ்வரூபமே   ஆகிறான்.   அங்கு   யார் ? எதற்கு ?  எப்படிச்  சரணடைவது ? இந்த   நிலையே   பக்தி , ஞானம்  , விசாரணை  அனைத்தின்  முடிந்த   நிலையாம்.

           யானே  என்னை  அறியகிலாதே 
           யானே   என்   தனதே   என்றிருந்தேன் 
           யானே   நீ   என்னுடைமையும்   நீயே 
           வானே   ஏத்தும்  எம்  வானவர்  ஏறே !            ( திருவாய்மொழி 2-9-9 ) 

என்று   இந்த  நிலையையே   நம்மாழ்வார்  எவ்வளவு  தெளிவாகக் கூறியிருக்கிறார்.

  பொருள் :   என்னையே   நான்   அறியாது  ,  நான்  என்றும் , எனது  என்றும்  மயங்கி  இருந்தேன்.  ( உண்மையை   ஆராயுமிடத்து ) -  நான் ,   நான்   என்பது  நீயேதான்.  என்  உடமை  யாவும்   நீயே.   அகண்ட  ஞானம்  பெற்றவர்   ஏத்தும்  பரம்பொருள்   நீயே ! ( பகவான்  நம்மாழ்வார்  பற்றிக்  குறிப்பிடல்.  பகவத் வசனாமிர்தம்  பக்கம் - 205- 207 ).

           மேலும்   பகவான்  கூறுகிறார்.  சரணடைய   முயற்சி  மேற்கொள்ளும்    போதெல்லாம்   அகந்தை   தலை  தூக்கும்.  அதனை   அடக்கி ,  ஒடுக்கவும்  முயல   வேண்டி  வரும், சரணாகதி   அவ்வளவு   எளிதான   காரியம்   அல்ல.
பரமனே   தனது   அருளால்   பக்தனின்  மனதை   உள்ளுக்குள்   இழுத்து   நிலை  நிறுத்தினால்   அன்றிப்  பூரண  சரணாகதி  நிலை   நிறைவேறுவது   கடினம்.
( Day  by  Day  with  Bhagavan   p.227. )

           ஆன்ம  ஞானத்தின்   சிகரத்தில்   இருந்து   பகவான்   கூறுகிறார்.  அகந்தை  என்பது  கூட    ஒன்று   தனியாகக்    கிடையாது   என்கிறபோது,   அது   எங்கிருந்து   எழும் ,  அதன்  மூலமாகிய   அஞ்ஞானமும்    இல்லை.  அகந்தையும்   இல்லை.  அதைப்  பற்றி  எழும்   பிரச்சனைகளும்,  துன்பங்களும்    சற்றும்  இல்லை  என்பதை   அறிவோம்.  அதைத்தான்   அகந்தை   அழிந்துவிட்டது   என்கிறோம்.  ( Talks   197  வசனாம்ருதம்  2.  பக்கம்  96 )   இதுதான்  வெறும்   பாழில்   விளைந்த   தனி   என்னும்   ஞானம்.

             நம்முள்ளே   ஊறி  வருகின்ற   இந்தப்   பரமானந்தம்   பெற   அவசரம்  ஏதும்   தேவை  இல்லை.  வேகம் ........விவேகத்திற்குத்   தடை ! ( வேகம்  கெடுத்து  ஆண்ட  வேந்தன்  அடி  வெல்க ! )  வேகம்   இருந்தால்  படபடப்பு ,  இருக்கும் , படபடப்பால்   நிறைய   தவறுகள்  நிகழும் ......எனவே   வேகம்  இருக்கும்வரை   உண்மையை   உணரவே   முடியாது.  எனவே   இத்தகைய  வேகம்     கூடவே     கூடாது.  அப்பொழுது   தான்   நம்  உள்ளத்தே     இறைவன்    அருள்  மெல்ல  மெல்ல  முகிழ்கிறது.

          மெல்ல  மெல்ல   இறைவனை   அறிக !  இறைவனின்   நாமத்தை   உச்சரிக்கும்  போதே   அது   நமது   உள்ளத்தில்   பதியும்படி  ஜபித்தல்   வேண்டும்.  ரமண  குருவினை    இதயம்  ஒன்றி   தியானித்தாலே    பரமானந்தம்   அரும்பும் .  மேலே   ஒன்றும்   இல்லாத ,  வேண்டாத   பரமானந்தம்   அது !

நன்றி  :  ரமணோதயம் ,  ஜனவரி  2012

சமீபத்தில்  முகநூல்   பார்த்த  பொழுது   தமிழ்மறை  என்ற  பக்கத்தில்  பார்த்தேன்.  எமது  கல்லூரி  நாட்களில்  இருந்தே     தினமும் பாராயணம்  செய்யும்   பதிகம்.   மற்றவர்களுக்கும்   பயனளிக்கும்  என்பதால் ............

இந்தப்   பதிகத்தை   பாராயணம்   செய்தால் தேவாரப்   பதிகங்கள்   முழுவதையும்   (படித்த) பாராயணம்  பலன் கிடைக்கும். 

| திருஞானசம்பந்தர்


                                                         

இந்தப் பதிகத்தை பாராயணம் செய்தால் தேவாரப் பதிகங்கள் முழுவதையும் படித்த பலன் கிடைக்கும்.

திருஞானசம்பர்   தினமும்   ஒவ்வொரு   தலமாக   தரிசனம்   செய்து   திருமுறைகள்   பாடி   வந்துகொண்டு  இருந்தார்.  அந்நாட்களில்   அவரின்   தந்தை  சிவபாத ஹிருதயர்  தினமும்   ஞானசம்பந்தரின்    திருமுறைகளை   பாராயணம்  செய்த  ( படித்த )    பின்னரே   உணவு   எடுத்து   வந்தார்.  தினமும்   பதிகம்   பெருகப்  பெருக   தந்தையாரின்  பாராயணக்  காலமும்   நீண்டுகொண்டே  சென்றதால்,   உணவு   உண்ணும்   நேரமும்    தள்ளிப்போனது.

இது   திருஞானசம்பந்தரின்   கவனத்திற்கு  வந்தது.  அவர்  தந்தையாரிடம் , " தந்தையே !  இதுவரைப்   பாடிய   பாடல்களின்   பயனும்,  இனிவரும்   தேவாரங்களைப்   பாடுவதால்  கிடைக்கும்    பயனும்   இந்த   ஒரு   பதிகம்  பாடினாலே  கிடைக்கும் "  என்று   அருளிய   பதிகம்   தான்   " திருவெழுக்கூற்றிருக்கை "  என்ற   பதிகம்.  இதனையே   நாமும்   பாராயணம்   செய்து  வந்தால்   மனத் தூய்மை , , இறையருள்   கிடைக்கும் !

இறையருள்   கிடைத்தால்   வேறு  என்ன  வேண்டும் ?  இறையருளே   எல்லாம்  தரும். எல்லா  நலன்களும்   நம்மை  வந்தடையும்.


பாடியவர்: திருஞானசம்பந்தர்:     தலம்: சீர்காழி
******************************************

ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;

ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,

முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி

அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;

பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வரபுரம் ஒன்று உணர்சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
                                       
          சிவாயநம   என்று  இருப்பாருக்கு   அபாயம்  ஒருநாளுமில்லை .

நன்றி : தமிழ்மறை  முகநூல்  பக்கம்.

Thursday, October 16, 2014

யார்தான்   தவறு   செய்யவில்லை ? 

           
           அசோகவனத்தில்   இருந்த  சீதையை  அங்கிருந்த   அரக்கியர்கள்  மிகவும்   துன்புறுத்தினார்கள்.


                    இதனை   அறிந்த   ஆஞ்சநேயர்   அவர்களைக்   கொல்ல  நினைத்தார்.

               
               அப்போது   சீதை,  "  ஆஞ்சநேயா    அவர்களை  ஒன்றும்   செய்யதே ! யார்தான்   தவறு   செய்யவில்லை ? "  என்று  அனுமனைக்   கட்டுப்  படுத்தினாள்.

             
                  தவறு   செய்வது   மனித  இயல்பு.


              மன்னிப்பது    தெய்வீக   குணம்  என்று   ஒரு   பொன்மொழி   கூறுகிறது.


               அன்புக்குப்   பகைவனில்லை   என்பது   முற்றிலும்   உண்மை.

         
           புகை  நடுவினில்   தீயிருப்பது  போல்   பகை   நடுவிலும்   பரமன்   வாழ்கிறான்    என்பதே   பாரதியின்   வாக்கு.


     ( இன்றைய    அசோகவனம்   சீதை   கோவில்  மற்றும்  அனுமனின்   பாதம்  பதிந்த  பாறை  )
        

ஆத்ம   ச்ரேயஸுக்கு   ஹானி :
 


பைஜாமா-ஜிப்பா போட்டுக் கொள்கிற ஸ்த்ரீகள் மேலுக்கு அங்க வஸ்த்ரம் மாதிரி ஒன்று பேருக்குப் போட்டுக் கொள்வதாகத் தெரிகிறது. ஸ்த்ரீத்வம் என்று இருப்பதன் மான, கெளரவ, வெட்கங்களுக்கு இந்த மேலாடை போதவே போதாது.

யதோக்தமாகப் புடைவை உடுத்திக்கொண்டு அதன் மேலாக்குப் போர்வையிலிருப்பதுதான் அவர்களுக்கு லக்ஷணம், ரக்ஷணம் எல்லாம். புருஷர்களின் தப்பான பார்வையைத் தூண்டிக் கொடுக்கிற எந்த ஆடை அலங்காரமும் அவலக்ஷணந்தான்.

பெண்கள் கற்பு நெறியை நெருப்பு மாதிரிக் காப்பாற்றி வந்து அதையே தேசாசாரத்தின் ஜீவரத்தமாகப் பண்ணிக் கொண்டிருக்கிற இந்த பாரத வர்ஷத்திலே அதற்கு ஊறு விளைவிக்கும்படி பண்ணினால் நம்முடைய மஹோன்னத நாகரிகமே இடிந்து விழுகிற மாதிரிதான்!

இன்றைக்கு ஜிப்பாவுக்கு மேலே பேருக்கு ஒரு வஸ்திரம் என்பது எதிர்காலத்தில் இல்லாமலே போகலாம். ஏனென்றால் மானாவமானங்களை மதிக்காமல் ஸெளகர்ய – அஸெளகர்யங்களைப் பார்த்தல்லவா இப்போது உடுத்தத் தலைப்பட்டிருக்கிறார்கள்? ஜிப்பாவுக்கு மேலே அங்கவஸ்த்ரம் மாதிரி ஒன்று போட்டுக்கொள்வது அஸெளகர்யமாயிருக்கிறது என்று தோன்றிவிட்டால்?

ரொம்பவும் அருவருப்பான இன்னொரு விஷயம் ஸ்த்ரீகளுக்கு ‘நைட்-கெளன்’ பழக்கமும்   வந்திருக்கிறது என்பதாகும். குருவை மிஞ்சின சிஷ்யனாக இதில் வெள்ளைக்காரர்களையும் மிஞ்சி விட்டிருக்கிறார்களென்று தெரிகிறது. வெள்ளைகாரர்களில் புருஷர்கள்கூட ‘பெட்-ரூமில்’ மட்டுந்தான் ‘நைட்-கெளனில்’ இருப்பது; அந்த ரூமை விட்டு அகத்துக்குள்ளேயே வெளியில் வந்தால்கூட அப்படியே வராமல் ஸாதா ட்ரெஸ்ஸுக்கு ‘சேஞ்ஜ்’ பண்ணிக் கொண்டுதான் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நம் தேசத்துப் பெண்களோ ‘நைட்-கெளனி’லேயே ‘நைட்’ போன அப்புறமும் தெருவில்கூட சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் தலைகுனிவான விஷயம்.

                 இப்படியெல்லாம் செய்வது ஸ்த்ரீகளின் ஆத்ம ச்ரேயஸை அடியோடு கெடுக்கும். தேசத்திலும் அமங்களங்களை, பல தினுஸான பீடைகளை வ்ருத்தி பண்ணும்.

- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா
ஞானம்  வந்து  விட்டது !



                  தம்முடைய   மகனும்,  ஞானியுமான   சுகதேவரிடம்  வியாசர்  சொன்னார்,  "  குழந்தாய் !  நீ   என்னவோ   ஞானிதான்.  ஆனால்   உன்மீது   இன்னும்  குருவின்   முத்திரை   விழவில்லை !  ஜனகரிடம்   போ "

                                ஜனகர்   தம்   விசாலமான   உப்பரிக்கையில்   மூன்றாம்   மாடியில்   அமர்ந்திருந்தார்.  சுகதேவர்   அங்கே   சென்றார்.  ஜனகரின்   வினாக்களுக்கு   உடனுக்குடன்   பதில்   கூறினார்.

                          "  எதற்கு   வந்தாய் ? "

                          "  ஞானம்  பெற ! "

                          "  யார்   அனுப்பியது ? "

                          "  வியாசர் "

                          "  எங்கிருந்து  வருகிறாய் ? "

                          "  கடைத்தெருவிலிருந்து ........."

                          "  வரும்பொழுது   கடைத்  தெருவில்   என்னென்ன   பார்த்தாய் ? "

                         "  சக்கரைப்   பணியாரம்   அடுக்கி   வைத்திருந்ததைப்
பார்த்தேன் ! "

                        "  இன்னும்   என்னென்ன   பார்த்தாய் ? "

                        "   இங்கே   ஏறி   வர   சர்க்கரையால்    ஆன   மெத்தைப்  படிகள்   இருந்தன.  சர்க்கரையால்   ஆன   பொருட்கள்   வழியில்  இருந்தன.  மேலும்   சர்க்கரை   உருவங்கள்   இங்குமங்கும்   நடமாடுவது   தென்பட்டன ! "

                        "  இப்போது   காண்பது   என்ன ? "

                        "  ஒரு   சர்க்கரைச்   சிலை   இன்னொரு   சர்க்கரைச்  சிலையோடு  பேசிக்கொண்டிருக்கிறது. "

             உடனே   ஜனகர்,  " நீ  போகலாம்.  உனக்கு   எல்லா  ஞானமும்   வந்து  விட்டது ! "  என்று   அருளினார்.



சுகப்ரம்மம்   ஜனகருடன் ..!

குறிப்பு :
                      இங்கு   சர்க்கரை  என்பது    பிரம்மம் ,  ஆத்மா   என்று   பொருள்படும்.   ஆம் !  சுகதேவர்  ( சுகப்ரம்மம் )   அனைத்தும்    ஆன்மாவே ,  பிரம்மமே   என்ற   அனுபவத்தில்   இருந்ததால் ,   அவருக்கு   பிரம்மத்தை   தவிர   வேறு   ஒன்றும்   தெரியவில்லை !  எனவே   ஜனகரும் ,  அவருக்கு  சொல்லித்தர   வேண்டியது   எதுவுமில்லை  என்று   அறிந்ததால்   சகல  மரியாதையுடன்    அனுப்பி  வைத்தார்.

தாயும் ஆனவர்:



ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்ணை   அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.

பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.

தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”

அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

"நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்...”

தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.

“கோபாலா! அந்த டின்னேட, எல்லாத்தையும் அந்தப் பொண்கிட்ட கொடுத்திடு...”

டின் இடம் மாறியது.

அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார்.
“அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு...”

ராமுவுக்க்கு பரம் சந்தோஷம்... பெரியவாளே சொல்கிறார்கள் என்று. அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.

தாயும் மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவைப் பார்த்து, “எவ்வள்வு ரூபாய் கொடுத்தே?” என்று பெரியவா கேட்டார்கள்.

பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது.

“பெரியவா சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்த் கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்?’ என்று நினைத்தார்.

“நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது. அதை கொடுத்தேன்...’

“நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே”

“இப்போதெல்லம் டெலிவரிகாக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போனால் கூட மூனு, நாலு ஆயிரம் ஆயிடறது...”

சில நிமிஷங்களுக்கு பின் பெரியவா சொன்னார்... “நீ வெறும் ராமன் இல்லை... தயாள ராமன்...”

“போதும் ! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்...” என்று நெஞ்சுருக்கச் சொன்னார் ராமுஎன்கிற ராமன்...”

உம்மாச்சி தாத்தா சரணம் !!!

Wednesday, October 15, 2014

தாயினும்  சாலப்  பரிந்தூட்டிய   ஸ்வாமி  பப்பா  ராமதாஸ் :

              சமீபத்தில்  திரு. பாலகுமாரன்   எழுதிய   பகவான்   யோகி ராம்சுரத்குமார்   சரிதம்  என்னும்   புத்தகம்   படிக்க   நேர்ந்தது.  அதில்   யோகிஜி ,   ஸ்வாமி   ராமதாஸினால்   எவ்வாறு    மாற்றப்பட்டார்   எனபது   எம்மை   பல மணி  நேரங்கள்   உலுக்கி எடுத்தன.  எம்முள்   பல   மாற்றங்கள்   நிகழவும்  செய்தன.
              
                இது   உங்களுக்கும்   எங்கேனும்  ஒரு  சந்தர்பத்தில்,  இத்தகைய  மனநிலையில்   பயன்படும்   என்ற   பிரார்த்தனையில் , இங்கு   எம்மை  பாதித்த   பகுதிகளை   தந்துள்ளோம்.   இந்த   நூலைப்   படிப்பதே   ஒரு   நிதித்யாசனம்   ஆகும்.  வாங்கிப்   படிக்க  வேண்டிய   அற்புதமான   புத்தகம்  நண்பர்களே ! புத்தக  விபரம்   கீழே  தரப்பட்டுள்ளது.

                 யோகிஜி ,  மற்றும்  ஸ்வாமி   பப்பா  ராமதாஸ்   இடையே  நிகழ்ந்த   அற்புதமான   நிகழ்வுகள் :



           யோகி  ராம்சுரத்குமார்  இடையறாது   கடவுள்   தேடலில்   ஈடுபட்டு  வந்தார் . கையில்   காசு   வைத்திருப்பதை   முற்றிலுமாக   தவிர்த்து  வந்தார். யார்   எது  கேட்டாலும்  கையிலிருப்பதை   உடனடியாக  கொடுத்து  விடுகின்ற  ஒரு  மனப் பக்குவத்தில்  இருந்தார்.

           கடவுள்   தேடலில்  இருப்போருக்கு  உடமைகள்  என்று   எதுவும்  இல்லை. ஞானிக்கு   எல்லார்  கையும்   தன்   கையே !  எல்லார்   வயிறும்   தன்  வயிறே ! வாசலில்  நின்று   யார்   கையேந்தி   தாயே   பசிக்கிறது   என்று   குரல்  கொடுத்தாலும்   உடனடியாக   தனது   மனைவியை  நோக்கி   அவருக்கு  உணவு   கொடுக்கச்   சொல்வார்.  குழந்தைகளுக்கான   சமைத்த   உணவு  மட்டுமே   உள்ளது   என்றால்,  தனது   உணவான  பாலும் ,   பழமும்   அந்த  யாசகருக்கு   கொடுத்து  விட்டுத்தான்   பட்டினியுடன்   இருப்பார்.

        இது   கடவுள்   தேடலின்   பால்  பிடித்த  நிலையில்   இருப்போருக்கு   கருணை   மிகுந்த  ஒரு  உள்ளமும்,  கனிவு  மிகுந்த  ஒரு   நடவடிக்கையும்   இருக்கும். யோகி  ராம்சுரத்குமார்   நன்கு  கனிந்து   இருந்தார்.

          ஸ்வாமி  ராமதாஸின் , " In the  Quest  of  God " ( கடவுளைத்   தேடி )  புத்தகத்தைப்    படித்தபோது   ஸ்வாமி  ராமதாஸ்  பற்றிய   அவரது   எண்ணம்   முற்றிலும்    மாறிப்போனது.  மிக   நல்ல  பதவியில்   இருந்து ,  அதை  உதறி  வெறும்   காலோடு   பரத  கண்டம்  முழுதும்  சுற்றி ,  பல்வேறு   சங்கடங்களை   எதிர்கொண்டு ,  பல்வேறு   சோதனைகளைத்   தாண்டி   தன்னைப்   புடம்  போட்டுக்  கொண்ட  பிறகே   அவருக்கு   கடவுள்   தரிசனம்  கிடைத்தது   என்பதை   அறிய ,  அவரை   மீண்டும்   தரிசிக்கின்ற   ஆவல்   ஏற்பட்டது.

         அடுத்த   ஒரு   ஆகஸ்ட்  மாதம்   1958 -ம்  வருடம்   ஆனந்தாஸ்ரமம்  வந்தார். அங்கு   தலைமைச்  சீடர்   ஸ்ரீ  சச்சிதானந்த ஸ்வாமி  இருந்தார். அவர்   யோகியை   மிக  நல்ல  முறையில்  போற்றிப்   பாதுகாத்து  வந்தார்.  எனக்கு  தீட்ஷை   தருமாறு   பப்பா   ராமதாஸிடம்   சொல்லுங்கள்  என்று   சச்சிதானந்தரிடம்   வேண்ட,  அதற்கு    காலம்  வரும் ,  அதுவரை   அவரையே   பின்தொடர்ந்து   இரு, நடக்கும்  என்றார்.



         பப்பா   எங்கு   சென்றாலும்   ராம்சுரத்குன்வர்   அவரைப்   பின்தொடர்ந்தார்.  அவருக்காகக்   காத்திருந்தார். ஏதேனும்   ஒரு  நல்ல  சந்தர்ப்பம்   வாய்க்கும்போது  தனக்கு   தீட்ஷை   தரும்படி    கேட்கவேண்டும்   என்று   தவிப்போடு  இருந்தார்.

         பல்வேறு  இடங்களுக்கும்   போன   பிறகும்   பப்பா   ராமதாஸிடம்   வாய் திறந்து   தீட்ஷை   கொடுங்கள்   என்று   கேட்பதற்கு  துணிவு   வரவில்லை. மறுத்து  விடுவாரோ   என்ற   பயம்   இருந்தது.  அப்படிச்   சொல்லிவிட்டால்   மீண்டும்   வீட்டிற்குள்   சென்று   அடையவேண்டுமே   என்ற   கவலை  இருந்தது .

          இந்த   வேட்கைப்   பூரணமாகாமல்   தாம்   மரணமடைந்து   விடுவோமோ என்ற   கவலை  ஏற்பட்டது.  அவர்   தவித்தார்.  குருவை  இடையறாது  பின்தொடர்ந்தார்.  ஒரு   குறிப்பிட்ட   இடத்தில்,  இப்போது  போய்   கேட்டுவிடலாம்    என்ற   ஆவலோடு   இரண்டடி   நெருங்க,

          ஸ்வாமி   பப்பா   ராமதாஸ்   சட்டென்று   திரும்பி   " உனக்கு   தீட்ஷை   அளிக்கும்படி   ராமதாஸைக்   கேட்கப்   போகிறாயா ?   ராமதாஸன்   உனக்கு   தீட்ஷை   அளிக்கவேண்டும்  என்று   விரும்புகிறாயா ? "  என்று   உரத்தக்   குரலில்   கேட்டார்.

         "  ஆம் ! "  என்று   யோகி  ராம்சுரத்குமார்   தலையசைக்க,  அந்த  இடத்திலேயே   " உட்கார் "  என்று  உத்தரவிட்டு,  எதிரில்   உட்கார்ந்து , " நான்  சொல்வதைத்   திருப்பிச்   சொல் "  என்று   கட்டளையிட்டு,

                         "  ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம்  "

என்ற   மந்திரத்தை   உரக்கச்   சொன்னார்.  ஸ்வாமி  ராமதாஸ்   சொன்னபொழுது    அந்த   மந்திரம்,  அந்த   சொற்றொடர்   மிகுந்த  கனத்தோடு  இருந்தது.  ஒரு  சிதறிய   ஒளியோடு,  அடர்த்தியான   பலத்தோடு,  பப்பா   ராமதாஸிடம்   இருந்து   வெளிப்பட்டது.

        வெறும்   வாக்கியமாக  அது  இல்லை.  அதை  தாண்டி   ஒரு  வேகமாக  இருந்தது.  ஒரு  அம்பாக   அது   சீடரின்   நெஞ்சுக்குள்   நுழைந்து,  கத்தி  போல   பாய்ந்தது.  ராம்சுரத்குன்வர்  காது   முழுதும்   அந்த   ஒலியை   வாங்கிக்கொண்டார்.   திரும்பச்  சொன்னார்.


            பப்பா   ராமதாஸ்   தலையில்   கை  வைத்து   ஆசிர்வதித்துவிட்டு   நகர்ந்தார் .



              ராம்சுரத்குன்வருக்கு   எழுந்திருக்க   முடியவில்லை.  உடம்பு   ஆடிற்று. வயிறு   குழைந்தது.  நெஞ்சு   வெடித்து   விடும்  போல   இருந்தது.  தலை   கனத்தது .  கண்கள்  சுழன்றன.  உடம்பில்  உள்ள   வலு   காலின்   வழியாக   தலையில்   இறங்கியது.  தள்ளாட்டமாக  இருந்தார்.

           ஏதோ   சுவரைப்  பிடித்துக்கொண்டு   நின்றார்.  என்ன செய்வது   என்று   தெரியாமல்   சிந்தனை   மொத்தமும்   வடிந்து   கீழே   போக   வெறுமனே  தூணோடு ,  தூணாக,   சுவரோடு   சுவராக  நின்றார்.

         எல்லோரும்   எல்லா   வேலையையும்   பார்த்துக்கொண்டு   இருந்தனர். திக்பிரமை   பிடித்தவர்  போல   ராம்சுரத்குமார்   அந்த   ராம  நாமத்தை   தாங்க  முடியாமல்   கிடந்தார்.  எங்கு   போகிறோம்   என்று  தெரியவில்லை. என்ன   செய்கிறோம்   என்று   தெரியவில்லை.  யாராக   இருக்கிறோம்   என்று   தெரியவில்லை.  யாரைப்   பார்க்கிறோம்   என்றும்   தெரியவில்லை.

        அவர்   ஒரு   காற்றில்   அலைகின்ற  சருகு  போல   ஆசிரமத்திற்கு   அருகே  உள்ள   மலையில்   மெல்ல   அடிவாரத்தில்   போய்   நின்றார்.  ஏதோ   ஒன்று  செய்யவேண்டும்,  என்ன  செய்வது  ?  மலை  ஏறினார்.

           மலையின்   உச்சியில்   ஒரு  கற்பலகை   இருந்தது.  அந்தக்  கற்பலகையில்   அமர்ந்து  கொண்டார்.  சூரியன்   தகித்தான்.  மேல்  வானத்தில்  இறங்கினான்.  அரபிக்  கடல்   தெரிந்தது.  அரபிக்  கடலில்   மெல்ல  மெல்ல   இறங்கினான்.  மங்குகின்ற   சூரியனை ,  பூமியை ,  கடலை   வெறுமனே   பார்த்துக்கொண்டு   இருந்தார்.

          என்னவாக  இருக்கிறோம் ?  ஏன்  இப்படி   இருக்கிறோம் ?,   என்ன   நடக்கிறது,  உள்ளே   ஏன்   இந்த   வெறுமை,  ஏன்   இந்த   தனிமை, என்னாயிற்று   எனக்கு.  உள்ளே   ஏன்   எதுவுமே   இல்லை.  ஏன்  இப்படி  காலியாக   இருக்கிறது  என்று   வெளிறிய   உணர்வு  தோன்றியது.

          அந்தக்   கற்பலகையில்   படுத்தவாறு   வானம்   பார்த்தார். இருட்டியது. நட்சத்திரங்கள்   தெரிந்தன. நட்சத்திரங்கள்   அவரைப்  பார்த்துச்  சிரித்தன. காற்று   வருடியது.  எழுந்து    அமர்ந்தார்.



         ஏதோ , யாரோ   சொல்கிறார்கள்.  என்ன   சொல்கிறார்கள் ?  உற்றுக்  கேட்டார்.  சுற்றிலும்    யாரும்   இல்லை.  யாரும்   எதுவும்  சொல்லவில்லை. மனிதர்களே   இல்லை.  ஆனாலும்   சுற்றிலும்   ஏதோ  கேட்கிறதே !  என்ன  சப்தம்.  சப்தம்   வெளியில்  இருந்து  வரவில்லை.  சப்தம்  உள்ளே  இருந்து   வந்தது.  நெஞ்சடியிலிருந்து  பீறிட்டது.  என்ன  சப்தம்  இது.

         யாரோ   உள்ளிருந்து   உரத்தக்  குரலில்  பேசுகிறார்கள்.   என்ன  பேசுகிறார்கள்.   காது  கொடுத்து   கேட்டார்.  சப்தம்   நெஞ்சிலிருந்து   வந்தது.

                " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "
               
                 " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "

                 " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "


       சப்தம்  பெரிதாயிற்று.  அந்த   சப்தம்   அவரை  நிறைத்தது.  அவரைச்  சுற்றி  இருந்தது.  அவரை   உன்மத்தனாக்கியது.  அந்த  சப்தம்   தாங்காமல்   வாய் விட்டுச்   சிரித்தார்.  அலறினார்.  அழுதார்.  என்ன  செய்வது   என்று   தெரியாமல்   எல்லாமும்   செய்தார்.

          விடிந்த  பொழுது   மலையை  விட்டு   கீழே  இறங்கி   வந்தார்.  கீழே  இறங்கி   வந்து   ஆசிரமத்துக்குள்   நுழைந்தார்.  அந்த  தென்னை  மரத்திற்கு  அருகில்  போய்   "  ராம்  ராம் "  என்று  சொன்னார்.  ஆலமரம்   அருகில்   சென்று   ராம  நாமம்  சொன்னார்.   இங்கே  ஓடினார்.  அங்கே   ஓடினார்.  குதித்து   குதித்து   ராம  நாமம்    சொன்னார்.  உட்கார்ந்து   சொன்னார்.  உரக்கச்  சொன்னார்.




           எல்லார்  கவனத்தையும்   கவரும்படி   சொன்னார்.   தனிமையில்   உட்கார்ந்து  சொன்னார்.   சாப்பிடாமல்  சொன்னார்.  குளிக்காமல்  சொன்னார். அந்த   ஆசிரமத்தின்   எல்லாப்   பகுதிக்கும்   போய்   ராம  நாமம்  சொன்னார்.  ஒரு   ஆசிரமம்  இந்த   உன்மத்தை  தாங்காது     தவித்தது.  அந்த   ஆசிரமம்  இந்த   உன்மத்தை   சரியாக   ஏற்றுக்கொள்ள  வில்லை.

            இது   இந்த   ஆசிரமத்தின்  நியதிகளைக்   கெடுக்கிறது  என்று   அந்த   ஆசிரமம்  உணர்ந்தது.  ஸ்வாமி   சச்சிதானந்தர்   அவரை  சமாதானப்  படுத்தி  உணவு   கொடுக்க  முயன்ற  போது  அவர்  உணவு   எடுத்துக்கொள்ள  வில்லை.  அது   ஆசிரமத்திற்கு   கவலை  கொடுத்தது.  வேறு  ஏதேனும்   தவறாக  நடந்தால்  ஆசிரமம்   அல்லலவா   பொறுப்பாகும். எனவே   அவரை   அங்கிருந்து   வெளியேற்ற   ஆசிரமம்  தீர்மானித்தது.

  சுவாமி   சச்சிதானந்தர்


           உணவே  உட்கொள்ளாமல் ,  சரியாக  உடுத்தாமல்,  உன்மத்தம்  போல  ராம  நாமாவை   சொல்லிக்கொண்டிருப்பவரை   ஆசிரமம்  எப்படி  சுவீகரிக்கும். பல   குடும்பிகள்   வந்து  செல்லும்   இடம்.  எனவே,  அவரை  ஆசிரமத்திலிருந்து   வெளியேற   உத்தரவிட்டது.

           ஆனால்   ராம்சுரத்குன்வர்   எங்கு  போகவும்  விரும்பவில்லை.  குருவின்  காலடியிலேயே   இருக்க  விரும்பினார். பப்பா   ராமதாஸ்   உன்மத்தமாக   இவர்  இருப்பதைப்   பார்த்து   வாய்விட்டு  குதூகலமாக  சிரித்தார்.  நீங்கள்  இங்கு  இருக்க  முடியாது.  எங்கு  போகிறீர்கள் ?  என்று   கேட்க,

            " திருவண்ணாமலை "  என்று   எந்த  யோசிப்பும்  இல்லாது  ராம்சுரத்குன்வர்   பதில்  சொன்னார்.  ஆனால்   அவரால்  குருவின்  அண்மையை   விட்டு  நீங்க   முடியவில்லை. அவர்   ஆசிரமத்திலேயே   அந்த   உன்மத்த   நிலையிலேயே  சுற்றிக்கொண்டு   இருந்தார். ஆசிரமம்  அவரைக்   கண்டித்து ,  வெளியேறும்   படி   கடின   வார்த்தைகளால்  ஏசி ,  பலவந்தமாக   வெளியேற்றப்பட்டார்.

         " என்  அப்பா  ராமதாஸ்  போல   இந்தப்  பிச்சைக்காரனை  நேசித்தவர்  யாரும்  இல்லை. இந்த   பிச்சைக்காரனை   அவர்   நன்கு  அறிவார்.  அவரே  இந்த   பிச்சைக்காரனைக்   கொன்று   போட்டார் ! "  என்று   பிற்பாடு   யோகி  ராம்சுரத்குமார்  கூறியுள்ளார்.

           கடவுள்   தேடல்  என்பது   கடினமான  பாதை.  முட்கள்  நிறைந்த பாதை. மிகுந்த   வலியையும்,  வேதனையும்   தருகின்ற  பாதை.  அவருடைய  மான,  அவமானங்கள்   அங்கு  கிழித்து    சுக்கு  நூறாக்கப் பட்டன. எல்லாம்   தாங்கி  இடையறாது   ராம  நாமம்   சொல்லிக்கொண்டே   அந்த   ஆசிரமத்தை  விட்டு  ராம்சுரத்குன்வர்   வெளியேறினார்.




         ஆனந்தாஸ்ரமத்து  செய்கை   அதாவது   ராம்சுரத்குன்வரை  வெளியே  அனுப்பிய  விதம்   ஒரு   பார்வைக்கு  மிகக்  கடுமையாக   தெரிந்தாலும்,  இன்னொரு   பார்வையில்   அது  மிகச்  சரியான   விஷயம்.  ராம்சுரத்குன்வர்  என்கிற   சாதகர்   குருவின்   தொடலால்,   தீட்ஷையால்  பரவச  நிலைக்கு   தள்ளப்பட்டு   அந்த  பரவச   நிலையில்   உன்மத்தராய்,  காது  கேளாதவராய் ,  செயல்  திறன்  இல்லாதவராய்,  உலக   வாழ்க்கையின்  நியதிக்கு  உட்படாதவராய்   இருந்தார்.

          இந்த   நிலையை   எல்லா   சாதகரும்  தாண்டித்தான்   ஆக   வேண்டும்.


      அப்படித்   தாண்டிய  உன்மத்த   நேரத்தில்   திருவண்ணாமலைக்குப்   போ   என்று   தன்   குரு  சொன்ன   கட்டளையை   சிரமேற்கொண்டு   நடக்கத்  தெரியவில்லை.  அதே  நேரத்தில்   அவரது   உன்மத்தம்   அந்த   ஆசிரமத்திற்கும்   பொருத்தமானதாக   இல்லை.  அவர்   அப்புறப்  படுத்தப்பட்டே   ஆகவேண்டும்.

            ஒரு   பெரிய   மரத்தின்  நிழலின்  கீழ்   ஓர்   ஆலமரம்   வளரமுடியாது.  அந்த   ஆலம்  விதை   ஒரு   வெட்ட  வெளியில்,  கற்பாறைகளுக்கு   நடுவே, சுற்றி   ஒரு  மரம்  கூட   இல்லாத   ஒரு  பொட்டல்  காட்டில்   விழுந்தால்  தான்   நல்லது.  அங்கு  முளைவிட்டு  கிளைத்தெழுந்து   கன்றாகி ,  மரமாகி ,  பெரும்   மரமாய்   வளர்வதற்கு   உண்டான   வாய்ப்புகள்   அதிகம்.

          இன்னொரு  மர   நிழலில்   வளர்ந்தால்,  அது  வெகு  சீக்கிரம்  பட்டுப்போகும்   அல்லது   பெரும்   மரமாக   வளரமுடியாது.  குறுகலாய்  நிற்கும்.



            வீரியம்   மிகுந்த   ராம்சுரத்குன்வரை   அப்புறப்படுத்தினால்  தான்,  அவர்   தனிமையில்   இருந்தால்தான்   இன்னும்   ஒரு   உயர்ந்த   பக்குவமான  நிலையை   அடைய  முடியும்.  நியதிகளுக்கு   உட்பட்ட   ஆசிரம  வாழ்க்கை,  நியதியே   இல்லாது  இடையறாது   கடவுளைத்   தேடுகின்ற,  ஒரே  நியதியில்   இருக்கின்ற    சாதகருக்கு   சரியாக   வராது.

               அது   சாதகரையும்   காயப்படுத்தும்,  சுற்றியுள்ளோருக்கும்   பய உணர்வு  கொடுக்கும்.  இது   மிக  கடினமான   நிலை .  எல்லா   மாஹான் களும்  இந்த   பேரவஸ்தைக்கு   ஆளாகித்   தான்   இருக்கிறார்கள்.

            இது   கடவுள்   தேடலின்   மிக   அற்புதமான   நிலை,  பப்பா   ராமதாஸ்   ஸ்வாமி   இதை   அனுபவித்து,  அமிழ்ந்து,  இந்த   அவஸ்தையைத்   தாண்டி  பிரம்மாண்டமாய்   வளர்ந்ததால்,  யோகி  ராம்சுரத்குமார்  என்கிற  இந்த  சாதகர்   ஆளான   அவஸ்தையைப்   புரிந்துகொண்டு,   இது   பிரம்மாண்டமாய்   வளர   வேண்டிய   ஆலமரம்   என்பதால்   அப்புறப்படுத்தினார்.

               அந்த   நாட்களில்   எல்லாம்  அலைந்த  திரிந்தபோது   யாரேனும்  பேச்சுக்  கொடுத்தால் ,  மிகக்  குறிப்பாக   குடும்ப  விஷயம்  பேசினால் ,  மிக  உரத்த   குரலில்   அவர்களைப்   பார்த்து   ராம்சுரத்குன்வர்   சிரிப்பார்.  அல்லது   அவர்களைப்   பார்த்து   மிக  வேகமாக   ராம   மந்திரம்   சொல்லுவார். இதனால்  ஊர்  மக்கள்   அவரிடம்  பேசத்   தயங்கினார்கள்.  அவரும்   வெளியில்   இஷ்டம்  போல   சுற்றினார்.

            வெளியே   பேச  என்ன  இருக்கிறது ?  உள்ளுக்குள்   புகுந்த  அந்த   அற்புதமான   உணர்வு   உடல்  முழுதும்   பரவிய   பேரன்பு   அலை   எங்கு   நோக்கியும்   கடவுள்   என்ற   இனிமையான   விஷயம்   அவரை  வேறு  எதுவும்  செய்ய  விடவில்லை. உழைக்க   விடவில்லை.  உழைப்பதற்கு   உண்டான  மனம்   இல்லை.

           என்ன   இருக்கிறது   உழைப்பதற்கு ?  எதற்காக   உழைக்க  வேண்டும் ?  இதோ   இருக்கிறதே   கடவுள் தன்மை.  சுற்றிலும்   எல்லா  இடங்களிலும்   நீக்கமற   நிறைந்திருக்கிறதே  என்ற   தவிப்பும்   அவரை   அலைக்கழித்தன.




          குரு   என்பவர்   தாய்போல. ஒரு   தாயின்  கோபம்,  தலைகுட்டு, காது  திருகுதல், கன்னம்  கிள்ளுதல்,  முதுகில்  அடித்தல்,  ஏன்   சூட்டைக்  காய்ச்சி  இழுத்தாலும்   அது   காதலோடும்,  நல்வழிப்படுத்த  வேண்டும்   என்ற   எண்ணத்தோடும்   தான்   இருக்குமே   தவிர   ஒரு  தாயால்  தன்   குழந்தையை  ஒரு  காலும்   தண்டிக்க  முடியாது.

       ஆம் !  ஸ்வாமி   பப்பா   ராமதாஸ்   தாயினும்  சாலப்  பரிந்தூட்டுபவர் !


நன்றி :     திரு. பாலகுமாரன்  அவர்கள்
                   பகவான்   யோகி  ராம்சுரத்குமார்  சரிதம்
                   விசா  பப்ளிகேசன்ஸ் , சென்னை.