Wednesday, October 15, 2014

தாயினும்  சாலப்  பரிந்தூட்டிய   ஸ்வாமி  பப்பா  ராமதாஸ் :

              சமீபத்தில்  திரு. பாலகுமாரன்   எழுதிய   பகவான்   யோகி ராம்சுரத்குமார்   சரிதம்  என்னும்   புத்தகம்   படிக்க   நேர்ந்தது.  அதில்   யோகிஜி ,   ஸ்வாமி   ராமதாஸினால்   எவ்வாறு    மாற்றப்பட்டார்   எனபது   எம்மை   பல மணி  நேரங்கள்   உலுக்கி எடுத்தன.  எம்முள்   பல   மாற்றங்கள்   நிகழவும்  செய்தன.
              
                இது   உங்களுக்கும்   எங்கேனும்  ஒரு  சந்தர்பத்தில்,  இத்தகைய  மனநிலையில்   பயன்படும்   என்ற   பிரார்த்தனையில் , இங்கு   எம்மை  பாதித்த   பகுதிகளை   தந்துள்ளோம்.   இந்த   நூலைப்   படிப்பதே   ஒரு   நிதித்யாசனம்   ஆகும்.  வாங்கிப்   படிக்க  வேண்டிய   அற்புதமான   புத்தகம்  நண்பர்களே ! புத்தக  விபரம்   கீழே  தரப்பட்டுள்ளது.

                 யோகிஜி ,  மற்றும்  ஸ்வாமி   பப்பா  ராமதாஸ்   இடையே  நிகழ்ந்த   அற்புதமான   நிகழ்வுகள் :



           யோகி  ராம்சுரத்குமார்  இடையறாது   கடவுள்   தேடலில்   ஈடுபட்டு  வந்தார் . கையில்   காசு   வைத்திருப்பதை   முற்றிலுமாக   தவிர்த்து  வந்தார். யார்   எது  கேட்டாலும்  கையிலிருப்பதை   உடனடியாக  கொடுத்து  விடுகின்ற  ஒரு  மனப் பக்குவத்தில்  இருந்தார்.

           கடவுள்   தேடலில்  இருப்போருக்கு  உடமைகள்  என்று   எதுவும்  இல்லை. ஞானிக்கு   எல்லார்  கையும்   தன்   கையே !  எல்லார்   வயிறும்   தன்  வயிறே ! வாசலில்  நின்று   யார்   கையேந்தி   தாயே   பசிக்கிறது   என்று   குரல்  கொடுத்தாலும்   உடனடியாக   தனது   மனைவியை  நோக்கி   அவருக்கு  உணவு   கொடுக்கச்   சொல்வார்.  குழந்தைகளுக்கான   சமைத்த   உணவு  மட்டுமே   உள்ளது   என்றால்,  தனது   உணவான  பாலும் ,   பழமும்   அந்த  யாசகருக்கு   கொடுத்து  விட்டுத்தான்   பட்டினியுடன்   இருப்பார்.

        இது   கடவுள்   தேடலின்   பால்  பிடித்த  நிலையில்   இருப்போருக்கு   கருணை   மிகுந்த  ஒரு  உள்ளமும்,  கனிவு  மிகுந்த  ஒரு   நடவடிக்கையும்   இருக்கும். யோகி  ராம்சுரத்குமார்   நன்கு  கனிந்து   இருந்தார்.

          ஸ்வாமி  ராமதாஸின் , " In the  Quest  of  God " ( கடவுளைத்   தேடி )  புத்தகத்தைப்    படித்தபோது   ஸ்வாமி  ராமதாஸ்  பற்றிய   அவரது   எண்ணம்   முற்றிலும்    மாறிப்போனது.  மிக   நல்ல  பதவியில்   இருந்து ,  அதை  உதறி  வெறும்   காலோடு   பரத  கண்டம்  முழுதும்  சுற்றி ,  பல்வேறு   சங்கடங்களை   எதிர்கொண்டு ,  பல்வேறு   சோதனைகளைத்   தாண்டி   தன்னைப்   புடம்  போட்டுக்  கொண்ட  பிறகே   அவருக்கு   கடவுள்   தரிசனம்  கிடைத்தது   என்பதை   அறிய ,  அவரை   மீண்டும்   தரிசிக்கின்ற   ஆவல்   ஏற்பட்டது.

         அடுத்த   ஒரு   ஆகஸ்ட்  மாதம்   1958 -ம்  வருடம்   ஆனந்தாஸ்ரமம்  வந்தார். அங்கு   தலைமைச்  சீடர்   ஸ்ரீ  சச்சிதானந்த ஸ்வாமி  இருந்தார். அவர்   யோகியை   மிக  நல்ல  முறையில்  போற்றிப்   பாதுகாத்து  வந்தார்.  எனக்கு  தீட்ஷை   தருமாறு   பப்பா   ராமதாஸிடம்   சொல்லுங்கள்  என்று   சச்சிதானந்தரிடம்   வேண்ட,  அதற்கு    காலம்  வரும் ,  அதுவரை   அவரையே   பின்தொடர்ந்து   இரு, நடக்கும்  என்றார்.



         பப்பா   எங்கு   சென்றாலும்   ராம்சுரத்குன்வர்   அவரைப்   பின்தொடர்ந்தார்.  அவருக்காகக்   காத்திருந்தார். ஏதேனும்   ஒரு  நல்ல  சந்தர்ப்பம்   வாய்க்கும்போது  தனக்கு   தீட்ஷை   தரும்படி    கேட்கவேண்டும்   என்று   தவிப்போடு  இருந்தார்.

         பல்வேறு  இடங்களுக்கும்   போன   பிறகும்   பப்பா   ராமதாஸிடம்   வாய் திறந்து   தீட்ஷை   கொடுங்கள்   என்று   கேட்பதற்கு  துணிவு   வரவில்லை. மறுத்து  விடுவாரோ   என்ற   பயம்   இருந்தது.  அப்படிச்   சொல்லிவிட்டால்   மீண்டும்   வீட்டிற்குள்   சென்று   அடையவேண்டுமே   என்ற   கவலை  இருந்தது .

          இந்த   வேட்கைப்   பூரணமாகாமல்   தாம்   மரணமடைந்து   விடுவோமோ என்ற   கவலை  ஏற்பட்டது.  அவர்   தவித்தார்.  குருவை  இடையறாது  பின்தொடர்ந்தார்.  ஒரு   குறிப்பிட்ட   இடத்தில்,  இப்போது  போய்   கேட்டுவிடலாம்    என்ற   ஆவலோடு   இரண்டடி   நெருங்க,

          ஸ்வாமி   பப்பா   ராமதாஸ்   சட்டென்று   திரும்பி   " உனக்கு   தீட்ஷை   அளிக்கும்படி   ராமதாஸைக்   கேட்கப்   போகிறாயா ?   ராமதாஸன்   உனக்கு   தீட்ஷை   அளிக்கவேண்டும்  என்று   விரும்புகிறாயா ? "  என்று   உரத்தக்   குரலில்   கேட்டார்.

         "  ஆம் ! "  என்று   யோகி  ராம்சுரத்குமார்   தலையசைக்க,  அந்த  இடத்திலேயே   " உட்கார் "  என்று  உத்தரவிட்டு,  எதிரில்   உட்கார்ந்து , " நான்  சொல்வதைத்   திருப்பிச்   சொல் "  என்று   கட்டளையிட்டு,

                         "  ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம்  "

என்ற   மந்திரத்தை   உரக்கச்   சொன்னார்.  ஸ்வாமி  ராமதாஸ்   சொன்னபொழுது    அந்த   மந்திரம்,  அந்த   சொற்றொடர்   மிகுந்த  கனத்தோடு  இருந்தது.  ஒரு  சிதறிய   ஒளியோடு,  அடர்த்தியான   பலத்தோடு,  பப்பா   ராமதாஸிடம்   இருந்து   வெளிப்பட்டது.

        வெறும்   வாக்கியமாக  அது  இல்லை.  அதை  தாண்டி   ஒரு  வேகமாக  இருந்தது.  ஒரு  அம்பாக   அது   சீடரின்   நெஞ்சுக்குள்   நுழைந்து,  கத்தி  போல   பாய்ந்தது.  ராம்சுரத்குன்வர்  காது   முழுதும்   அந்த   ஒலியை   வாங்கிக்கொண்டார்.   திரும்பச்  சொன்னார்.


            பப்பா   ராமதாஸ்   தலையில்   கை  வைத்து   ஆசிர்வதித்துவிட்டு   நகர்ந்தார் .



              ராம்சுரத்குன்வருக்கு   எழுந்திருக்க   முடியவில்லை.  உடம்பு   ஆடிற்று. வயிறு   குழைந்தது.  நெஞ்சு   வெடித்து   விடும்  போல   இருந்தது.  தலை   கனத்தது .  கண்கள்  சுழன்றன.  உடம்பில்  உள்ள   வலு   காலின்   வழியாக   தலையில்   இறங்கியது.  தள்ளாட்டமாக  இருந்தார்.

           ஏதோ   சுவரைப்  பிடித்துக்கொண்டு   நின்றார்.  என்ன செய்வது   என்று   தெரியாமல்   சிந்தனை   மொத்தமும்   வடிந்து   கீழே   போக   வெறுமனே  தூணோடு ,  தூணாக,   சுவரோடு   சுவராக  நின்றார்.

         எல்லோரும்   எல்லா   வேலையையும்   பார்த்துக்கொண்டு   இருந்தனர். திக்பிரமை   பிடித்தவர்  போல   ராம்சுரத்குமார்   அந்த   ராம  நாமத்தை   தாங்க  முடியாமல்   கிடந்தார்.  எங்கு   போகிறோம்   என்று  தெரியவில்லை. என்ன   செய்கிறோம்   என்று   தெரியவில்லை.  யாராக   இருக்கிறோம்   என்று   தெரியவில்லை.  யாரைப்   பார்க்கிறோம்   என்றும்   தெரியவில்லை.

        அவர்   ஒரு   காற்றில்   அலைகின்ற  சருகு  போல   ஆசிரமத்திற்கு   அருகே  உள்ள   மலையில்   மெல்ல   அடிவாரத்தில்   போய்   நின்றார்.  ஏதோ   ஒன்று  செய்யவேண்டும்,  என்ன  செய்வது  ?  மலை  ஏறினார்.

           மலையின்   உச்சியில்   ஒரு  கற்பலகை   இருந்தது.  அந்தக்  கற்பலகையில்   அமர்ந்து  கொண்டார்.  சூரியன்   தகித்தான்.  மேல்  வானத்தில்  இறங்கினான்.  அரபிக்  கடல்   தெரிந்தது.  அரபிக்  கடலில்   மெல்ல  மெல்ல   இறங்கினான்.  மங்குகின்ற   சூரியனை ,  பூமியை ,  கடலை   வெறுமனே   பார்த்துக்கொண்டு   இருந்தார்.

          என்னவாக  இருக்கிறோம் ?  ஏன்  இப்படி   இருக்கிறோம் ?,   என்ன   நடக்கிறது,  உள்ளே   ஏன்   இந்த   வெறுமை,  ஏன்   இந்த   தனிமை, என்னாயிற்று   எனக்கு.  உள்ளே   ஏன்   எதுவுமே   இல்லை.  ஏன்  இப்படி  காலியாக   இருக்கிறது  என்று   வெளிறிய   உணர்வு  தோன்றியது.

          அந்தக்   கற்பலகையில்   படுத்தவாறு   வானம்   பார்த்தார். இருட்டியது. நட்சத்திரங்கள்   தெரிந்தன. நட்சத்திரங்கள்   அவரைப்  பார்த்துச்  சிரித்தன. காற்று   வருடியது.  எழுந்து    அமர்ந்தார்.



         ஏதோ , யாரோ   சொல்கிறார்கள்.  என்ன   சொல்கிறார்கள் ?  உற்றுக்  கேட்டார்.  சுற்றிலும்    யாரும்   இல்லை.  யாரும்   எதுவும்  சொல்லவில்லை. மனிதர்களே   இல்லை.  ஆனாலும்   சுற்றிலும்   ஏதோ  கேட்கிறதே !  என்ன  சப்தம்.  சப்தம்   வெளியில்  இருந்து  வரவில்லை.  சப்தம்  உள்ளே  இருந்து   வந்தது.  நெஞ்சடியிலிருந்து  பீறிட்டது.  என்ன  சப்தம்  இது.

         யாரோ   உள்ளிருந்து   உரத்தக்  குரலில்  பேசுகிறார்கள்.   என்ன  பேசுகிறார்கள்.   காது  கொடுத்து   கேட்டார்.  சப்தம்   நெஞ்சிலிருந்து   வந்தது.

                " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "
               
                 " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "

                 " ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம் "


       சப்தம்  பெரிதாயிற்று.  அந்த   சப்தம்   அவரை  நிறைத்தது.  அவரைச்  சுற்றி  இருந்தது.  அவரை   உன்மத்தனாக்கியது.  அந்த  சப்தம்   தாங்காமல்   வாய் விட்டுச்   சிரித்தார்.  அலறினார்.  அழுதார்.  என்ன  செய்வது   என்று   தெரியாமல்   எல்லாமும்   செய்தார்.

          விடிந்த  பொழுது   மலையை  விட்டு   கீழே  இறங்கி   வந்தார்.  கீழே  இறங்கி   வந்து   ஆசிரமத்துக்குள்   நுழைந்தார்.  அந்த  தென்னை  மரத்திற்கு  அருகில்  போய்   "  ராம்  ராம் "  என்று  சொன்னார்.  ஆலமரம்   அருகில்   சென்று   ராம  நாமம்  சொன்னார்.   இங்கே  ஓடினார்.  அங்கே   ஓடினார்.  குதித்து   குதித்து   ராம  நாமம்    சொன்னார்.  உட்கார்ந்து   சொன்னார்.  உரக்கச்  சொன்னார்.




           எல்லார்  கவனத்தையும்   கவரும்படி   சொன்னார்.   தனிமையில்   உட்கார்ந்து  சொன்னார்.   சாப்பிடாமல்  சொன்னார்.  குளிக்காமல்  சொன்னார். அந்த   ஆசிரமத்தின்   எல்லாப்   பகுதிக்கும்   போய்   ராம  நாமம்  சொன்னார்.  ஒரு   ஆசிரமம்  இந்த   உன்மத்தை  தாங்காது     தவித்தது.  அந்த   ஆசிரமம்  இந்த   உன்மத்தை   சரியாக   ஏற்றுக்கொள்ள  வில்லை.

            இது   இந்த   ஆசிரமத்தின்  நியதிகளைக்   கெடுக்கிறது  என்று   அந்த   ஆசிரமம்  உணர்ந்தது.  ஸ்வாமி   சச்சிதானந்தர்   அவரை  சமாதானப்  படுத்தி  உணவு   கொடுக்க  முயன்ற  போது  அவர்  உணவு   எடுத்துக்கொள்ள  வில்லை.  அது   ஆசிரமத்திற்கு   கவலை  கொடுத்தது.  வேறு  ஏதேனும்   தவறாக  நடந்தால்  ஆசிரமம்   அல்லலவா   பொறுப்பாகும். எனவே   அவரை   அங்கிருந்து   வெளியேற்ற   ஆசிரமம்  தீர்மானித்தது.

  சுவாமி   சச்சிதானந்தர்


           உணவே  உட்கொள்ளாமல் ,  சரியாக  உடுத்தாமல்,  உன்மத்தம்  போல  ராம  நாமாவை   சொல்லிக்கொண்டிருப்பவரை   ஆசிரமம்  எப்படி  சுவீகரிக்கும். பல   குடும்பிகள்   வந்து  செல்லும்   இடம்.  எனவே,  அவரை  ஆசிரமத்திலிருந்து   வெளியேற   உத்தரவிட்டது.

           ஆனால்   ராம்சுரத்குன்வர்   எங்கு  போகவும்  விரும்பவில்லை.  குருவின்  காலடியிலேயே   இருக்க  விரும்பினார். பப்பா   ராமதாஸ்   உன்மத்தமாக   இவர்  இருப்பதைப்   பார்த்து   வாய்விட்டு  குதூகலமாக  சிரித்தார்.  நீங்கள்  இங்கு  இருக்க  முடியாது.  எங்கு  போகிறீர்கள் ?  என்று   கேட்க,

            " திருவண்ணாமலை "  என்று   எந்த  யோசிப்பும்  இல்லாது  ராம்சுரத்குன்வர்   பதில்  சொன்னார்.  ஆனால்   அவரால்  குருவின்  அண்மையை   விட்டு  நீங்க   முடியவில்லை. அவர்   ஆசிரமத்திலேயே   அந்த   உன்மத்த   நிலையிலேயே  சுற்றிக்கொண்டு   இருந்தார். ஆசிரமம்  அவரைக்   கண்டித்து ,  வெளியேறும்   படி   கடின   வார்த்தைகளால்  ஏசி ,  பலவந்தமாக   வெளியேற்றப்பட்டார்.

         " என்  அப்பா  ராமதாஸ்  போல   இந்தப்  பிச்சைக்காரனை  நேசித்தவர்  யாரும்  இல்லை. இந்த   பிச்சைக்காரனை   அவர்   நன்கு  அறிவார்.  அவரே  இந்த   பிச்சைக்காரனைக்   கொன்று   போட்டார் ! "  என்று   பிற்பாடு   யோகி  ராம்சுரத்குமார்  கூறியுள்ளார்.

           கடவுள்   தேடல்  என்பது   கடினமான  பாதை.  முட்கள்  நிறைந்த பாதை. மிகுந்த   வலியையும்,  வேதனையும்   தருகின்ற  பாதை.  அவருடைய  மான,  அவமானங்கள்   அங்கு  கிழித்து    சுக்கு  நூறாக்கப் பட்டன. எல்லாம்   தாங்கி  இடையறாது   ராம  நாமம்   சொல்லிக்கொண்டே   அந்த   ஆசிரமத்தை  விட்டு  ராம்சுரத்குன்வர்   வெளியேறினார்.




         ஆனந்தாஸ்ரமத்து  செய்கை   அதாவது   ராம்சுரத்குன்வரை  வெளியே  அனுப்பிய  விதம்   ஒரு   பார்வைக்கு  மிகக்  கடுமையாக   தெரிந்தாலும்,  இன்னொரு   பார்வையில்   அது  மிகச்  சரியான   விஷயம்.  ராம்சுரத்குன்வர்  என்கிற   சாதகர்   குருவின்   தொடலால்,   தீட்ஷையால்  பரவச  நிலைக்கு   தள்ளப்பட்டு   அந்த  பரவச   நிலையில்   உன்மத்தராய்,  காது  கேளாதவராய் ,  செயல்  திறன்  இல்லாதவராய்,  உலக   வாழ்க்கையின்  நியதிக்கு  உட்படாதவராய்   இருந்தார்.

          இந்த   நிலையை   எல்லா   சாதகரும்  தாண்டித்தான்   ஆக   வேண்டும்.


      அப்படித்   தாண்டிய  உன்மத்த   நேரத்தில்   திருவண்ணாமலைக்குப்   போ   என்று   தன்   குரு  சொன்ன   கட்டளையை   சிரமேற்கொண்டு   நடக்கத்  தெரியவில்லை.  அதே  நேரத்தில்   அவரது   உன்மத்தம்   அந்த   ஆசிரமத்திற்கும்   பொருத்தமானதாக   இல்லை.  அவர்   அப்புறப்  படுத்தப்பட்டே   ஆகவேண்டும்.

            ஒரு   பெரிய   மரத்தின்  நிழலின்  கீழ்   ஓர்   ஆலமரம்   வளரமுடியாது.  அந்த   ஆலம்  விதை   ஒரு   வெட்ட  வெளியில்,  கற்பாறைகளுக்கு   நடுவே, சுற்றி   ஒரு  மரம்  கூட   இல்லாத   ஒரு  பொட்டல்  காட்டில்   விழுந்தால்  தான்   நல்லது.  அங்கு  முளைவிட்டு  கிளைத்தெழுந்து   கன்றாகி ,  மரமாகி ,  பெரும்   மரமாய்   வளர்வதற்கு   உண்டான   வாய்ப்புகள்   அதிகம்.

          இன்னொரு  மர   நிழலில்   வளர்ந்தால்,  அது  வெகு  சீக்கிரம்  பட்டுப்போகும்   அல்லது   பெரும்   மரமாக   வளரமுடியாது.  குறுகலாய்  நிற்கும்.



            வீரியம்   மிகுந்த   ராம்சுரத்குன்வரை   அப்புறப்படுத்தினால்  தான்,  அவர்   தனிமையில்   இருந்தால்தான்   இன்னும்   ஒரு   உயர்ந்த   பக்குவமான  நிலையை   அடைய  முடியும்.  நியதிகளுக்கு   உட்பட்ட   ஆசிரம  வாழ்க்கை,  நியதியே   இல்லாது  இடையறாது   கடவுளைத்   தேடுகின்ற,  ஒரே  நியதியில்   இருக்கின்ற    சாதகருக்கு   சரியாக   வராது.

               அது   சாதகரையும்   காயப்படுத்தும்,  சுற்றியுள்ளோருக்கும்   பய உணர்வு  கொடுக்கும்.  இது   மிக  கடினமான   நிலை .  எல்லா   மாஹான் களும்  இந்த   பேரவஸ்தைக்கு   ஆளாகித்   தான்   இருக்கிறார்கள்.

            இது   கடவுள்   தேடலின்   மிக   அற்புதமான   நிலை,  பப்பா   ராமதாஸ்   ஸ்வாமி   இதை   அனுபவித்து,  அமிழ்ந்து,  இந்த   அவஸ்தையைத்   தாண்டி  பிரம்மாண்டமாய்   வளர்ந்ததால்,  யோகி  ராம்சுரத்குமார்  என்கிற  இந்த  சாதகர்   ஆளான   அவஸ்தையைப்   புரிந்துகொண்டு,   இது   பிரம்மாண்டமாய்   வளர   வேண்டிய   ஆலமரம்   என்பதால்   அப்புறப்படுத்தினார்.

               அந்த   நாட்களில்   எல்லாம்  அலைந்த  திரிந்தபோது   யாரேனும்  பேச்சுக்  கொடுத்தால் ,  மிகக்  குறிப்பாக   குடும்ப  விஷயம்  பேசினால் ,  மிக  உரத்த   குரலில்   அவர்களைப்   பார்த்து   ராம்சுரத்குன்வர்   சிரிப்பார்.  அல்லது   அவர்களைப்   பார்த்து   மிக  வேகமாக   ராம   மந்திரம்   சொல்லுவார். இதனால்  ஊர்  மக்கள்   அவரிடம்  பேசத்   தயங்கினார்கள்.  அவரும்   வெளியில்   இஷ்டம்  போல   சுற்றினார்.

            வெளியே   பேச  என்ன  இருக்கிறது ?  உள்ளுக்குள்   புகுந்த  அந்த   அற்புதமான   உணர்வு   உடல்  முழுதும்   பரவிய   பேரன்பு   அலை   எங்கு   நோக்கியும்   கடவுள்   என்ற   இனிமையான   விஷயம்   அவரை  வேறு  எதுவும்  செய்ய  விடவில்லை. உழைக்க   விடவில்லை.  உழைப்பதற்கு   உண்டான  மனம்   இல்லை.

           என்ன   இருக்கிறது   உழைப்பதற்கு ?  எதற்காக   உழைக்க  வேண்டும் ?  இதோ   இருக்கிறதே   கடவுள் தன்மை.  சுற்றிலும்   எல்லா  இடங்களிலும்   நீக்கமற   நிறைந்திருக்கிறதே  என்ற   தவிப்பும்   அவரை   அலைக்கழித்தன.




          குரு   என்பவர்   தாய்போல. ஒரு   தாயின்  கோபம்,  தலைகுட்டு, காது  திருகுதல், கன்னம்  கிள்ளுதல்,  முதுகில்  அடித்தல்,  ஏன்   சூட்டைக்  காய்ச்சி  இழுத்தாலும்   அது   காதலோடும்,  நல்வழிப்படுத்த  வேண்டும்   என்ற   எண்ணத்தோடும்   தான்   இருக்குமே   தவிர   ஒரு  தாயால்  தன்   குழந்தையை  ஒரு  காலும்   தண்டிக்க  முடியாது.

       ஆம் !  ஸ்வாமி   பப்பா   ராமதாஸ்   தாயினும்  சாலப்  பரிந்தூட்டுபவர் !


நன்றி :     திரு. பாலகுமாரன்  அவர்கள்
                   பகவான்   யோகி  ராம்சுரத்குமார்  சரிதம்
                   விசா  பப்ளிகேசன்ஸ் , சென்னை.


No comments:

Post a Comment