Tuesday, October 7, 2014

மஹா  பெரியவாளின்  உபதேசங்கள் 1:

மன நிறைவு :

                                 அவசியமில்லாமல்  ஏராளமாகச்  சம்பாதிப்பதும்,  அவசியமில்லாமல்  விரயமாகச்  செலவழிப்பதும்,  அல்லது  பூதம்  காத்த  மாதிரி  பாங்கில்  மூட்டை  மூட்டையாய்   போட்டுவைப்பதும்  ரொம்பப்  பிசகு.

                      குறைந்த  வருமானம்  இருந்தாலும்  போதும்  என்ற  மனசோடு  சமாதானம்  செய்து ,  அதில்  கவனத்துடன்  செலவழிக்க  வேண்டும்.

                   பண  விஷயத்தில்  கொடுக்கல் , வாங்கலில்  பெரும்பாலும்  நாம்  கணக்காகவே  இருக்கிறோம்.

               ஆனாலும்,  பணத்தைக்  கொடுத்து  பல  வஸ்துக்களை  வாங்குகிறோமே ,  அவற்றில் தான்,  இத்தனை  வஸ்துக்களே  நமக்குப்   போதும்   என்று  கணக்காக  இருக்கமாட்டேன்  என்கிறோம்.

            நாம்  உயிர்வாழ  இந்த  வஸ்து  அவசியம்தானா ?   என்று  பார்த்துக்  கணக்காகச்  செலவு  செய்வதே  உண்மையில்   " கணக்காய்  இருப்பதாகும்."

          நமக்கு  அது  வேண்டும்,  இது  வேண்டும்   என்று  சதா  அரிப்பு  இருக்கிற  வரையில்  நாம்  தரித்திரர்கள்  தான்.

        இப்போது  கோடிஸ்வரனிலிருந்து   எல்லோருக்கும்  இந்தக்  குறை  இருப்பதால்  எல்லோருமே   தரித்திரர்களாகத்தான்   ஆகி  இருக்கிறோம்.

         ஒரு  லாப  நஷ்ட  வியாபாரமாகக்  கருதாமல் , பிறர்  கஷ்டத்தை  தீர்க்க  நம்மால்  ஆனதைச்  செய்ய  ஆரம்பிக்க  வேண்டும்.

        ஆரம்பித்துவிட்டால்  போதும், அதனால்  பிறத்தியார்  பெறுகிற  பலன்  ஒரு  பக்கத்தில்  இருக்கட்டும் !

        நமக்கே  ஒரு  சித்த  சுத்தியும்,  ஆத்ம  திருப்தியும் ,  சந்தோசமும்  ஏற்பட்டு  அந்த  வழியில்   மேலும்  மேலும்  செல்வோம்.

      அதிகமாகப்  பொருட்களைத்  தேடிப்  போவதால்  வாழ்க்கைத்  தரம்  உயர்ந்துவிடாது. உண்மையில்  வாழ்க்கைத்  தரம்  என்பது  வெளிவஸ்துக்களின்  பெருக்கத்தில்  இல்லை.

      தரமான  வாழ்க்கை  என்பது  போதும்  என்ற  மன  நிறைவோடு  இருப்பதுதான் . 

        மேலும்  மேலும்  பணம்  தரும்  தொழில் ,  மேலும்  மேலும்  வியாதி  தருகின்ற   காரியங்கள்   இவற்றை  விட்டு  விட்டு   நிம்மதியோடு , நிறைவோடு,  அடங்கி  வாழ்வதற்கு  முயற்சி  செய்ய  வேண்டும்.

       மனுஷ்ய  ஜன்மா  பிரயோஜனம்  உள்ளதாக   ஆக  வேண்டுமானால்,  நமக்கு   ஜீவிப்பதற்கு  அத்தியாவசியமாக   எவ்வளவு  தேவையோ,  அதற்கு  மேல்  ஒரு  இம்மி கூட   விரும்பக்கூடாது.  இதுவே  " அபரிக்ரஹம் "  என்னும்   பாவமாகும்.

No comments:

Post a Comment