Saturday, October 11, 2014

இறைவனை   அடைய   விழையும்  தீவிர  தாகம்  உள்ள  சாதகனுக்கு :


       சாதகன்  மிதமாக ( சாத்வீக  உணவு )  உண்டு , அவசியத்திற்குப்   பேசி , எளிமையாக   வாழ வேண்டும். தனி  மனிதர்களைப்   பற்றி  பேசுவதைத்  தவிர்த்தல்  வேண்டும். அதற்குப்  பதிலாக   ராம  நாமத்தை   திரும்பத்  திரும்ப  உச்சரிக்க  வேண்டும். இதுவே  சலனப்படும்  மனதை  அமைதிப்  படுத்தி,  எங்கும்   நிறைந்த  ராமனை  உணர்வதற்கு   தகுதியுடையதாக   மாற்றுதல்  வேண்டும்.


            உற்சாகத்துடன்  இருந்து,  எல்லாக்   கவலைகளையும்,  துக்கங்களையும்  விடுத்து  புனிதமான   ராமனின்   திருவடிகளில்   வீழ்ந்து  நமஸ்கரித்தல்  வேண்டும். ராமன்   அன்பேயாவான்;  ஒளியே  ஆவான்;  பேரின்பமே  ஆவான்.
" ராம் "  என்ற   இனிய  நாமத்தை   இடைவிடாது   திரும்பத்  திரும்ப   உச்சரி.


           உன்னுடைய   எண்ணங்கள் ,  சொற்கள் ,  செயல்கள்  யாவற்றையும்   ராமனுக்கு   அர்ப்பணம்   செய்.  உன்  சித்தத்தை  ராமனின்  சித்தத்திற்கு  உட்படுத்து.  அதனால்   விளையும்   அமைதியிலும்,  பேரானந்த்திலும்  திருப்தியுடன்   வாழ்.


          எந்தவிதமான   தீய   எண்ணமோ,  அல்லது   யாரைப்பற்றிய   விமர்சனமோ   உன்  மனதில்   நுழையாதிருக்கட்டும்.


         ராமனையே   முழுதும்   சார்ந்திரு.  ( எங்கும்,  எல்லாவற்றிலும் )  ராமனை   உணர்ந்து  அடைவதே   வாழ்க்கையின்   குறிக்கோளாக   இருக்கட்டும்.  எல்லா  செயல்களும்   ராமனின்   பெயரால்,  ராமனுக்காக   செய்யப்படட்டும்.  இது  உன்னை   எல்லா  அச்சங்களிலிருந்தும்,  துக்கங்களிலிருந்தும்   விடுவிக்கும்.


         கடந்த  காலம்,  நிகழ்காலம் ,  எதிர்காலம்   மூன்றும்  ராமனின்   கைகளில்  உள்ளது. எனவே   இவற்றைப்  பற்றி  எண்ணாதிரு.  நடப்பவை   அனைத்தும்      ராமனின்   சித்தப்படியே   நடக்கும்.  எனவே  நிகழ்காலம்  முழுதும்   உன் எண்ணம் ,  செயல்   யாவற்றிலும்   ராமனையே   நினைத்திரு.  அதாவது   எல்லாச்   செயல்களையும்   அவனுக்கே   அர்பணித்துவிடு.


          உனது   சித்தத்தை  ராமனின்   சித்தத்திற்கு   உட்படுத்துவது   தான்   குறிக்கோள்.   ராமனுடைய   சித்தத்தை   உன்னுடைய   சித்தமாக   ஆக்கு. எப்போதும்   ராமனுடைய   சிந்தனையிலிருந்து   தனது  மனதை   மாற்றக்கூடாது.

             
            தன்னைச்   சுற்றியுள்ள   பொருட்களையும்,  உயிர்களையும்   ராமனின்  உருவ  வெளிப்பாடுகள்   என்று   உணர  ஒரு  சாதகன்   பயிற்சி   செய்தல்  வேண்டும். இவ்வாறு   எல்லா  உயிரினங்களையும்   இந்த  வகையில்  கருதி,
 (   இவ்வாறு   எதிர்ப்பண்பு   கொண்ட   இரட்டைகளான )  விருப்பு - வெறுப்பு ,  அன்பு  -  துவேஷம்,  நல்லன - தீயன ,  இன்பம் - துன்பம்  போன்ற    இருமைகளைத்   தாண்டி   உயரச்  செல்ல  வேண்டும்.


            உண்மையில்   ராமனைப்  பற்றிய   பேச்சு   தவிர   மற்ற  எல்லாப்   பேச்சுக்களையும்  ( சிறிது   சிறிதாய்  தவிர்க்க  ஆரம்பித்து  பின்பு  )  முழுவதும்    தவிர்க்கவேண்டும்.


            பேசுவதாக   இருந்தால்   எப்போதும்   ராமனைப்  பற்றியே   பேசு.  அவனுடைய  பெருமைகள் ,  அவனுடைய  அன்பு ,  அவனுடைய  சக்தி ,  அவனுடைய   அமைதி  பற்றியதாக   இருக்கட்டும்.

         
            உலகியல்  விஷயங்களில்  ஈடுபடும்  மனிதர்களின்   சங்கத்தை  ஒருபோதும்   விரும்பாதே.  லௌகீகப்  பேச்சைக்   கேட்காதே.   உலகப்பற்றுள்ளவர்கள்    மத்தியில்   இருக்க வேண்டாம். ( எல்லாவற்றிலும் ,  எல்லா   உயிரினத்திலும்   ராமனை  உணர்ந்த  பின்பு   உலகில்   பிரவேசி.  ஏனெனில்   பின்பு   உலகம்  இல்லை,.....   ராமனைத்   தவிர   வேறு  ஒன்றுமில்லை  என்பதை  உணர்ந்துவிடுவாய் !  )


           ராமனிலேயே   வாழ்.  ஒன்று   என்பதே   உண்மை.  அதுதான்   எங்கும்   நிறைந்துள்ள   ராமன்.  உருவங்களால்   பாதிக்கப்படாதே.  எந்தக்  காட்சியாலும்  உருக்கம்   அடையாதே.  நிதானம் ,  உறுதியுடன் ,  சஞ்சலம் ,  சந்தேகம்  அற்று  இரு.  ராமன்   என்ற   உட்குரல்   எப்போதும்   உனக்கு   வழிகாட்டும்.


           ராமனின்   மீது   நம்பிக்கை  வைத்து,  எல்லாவற்றையும்  ராமனுக்காக   தியாகம்  செய்.  எப்போதும்   ராம  நாமாவில்   வாழ்ந்திரு.

       
          ராமன்     மட்டுமே   ஒரே  உண்மை.  எப்பொழுதும்   ராமன்  மீது   தியானம்  செய்.  எல்லா  இடத்திலும்    அவனை   மட்டுமே   பார்.  ராம்   ராம்  ராம்.


                                ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம் ஜெய்  ஜெய்  ராம்  ஓம்

                   

                                                                                                              ----  ஸ்வாமி   ராமதாஸ்



       

No comments:

Post a Comment