Wednesday, October 8, 2014

மௌனமே  மிகச்  சிறந்த  பேச்சு :
                       

     பகவான்   ரமணரை    தரிசிக்க    ரமணாஸ்ரமத்துக்கு  காஷ்மீரிலிருந்து  ஒரு  அன்பர்  வந்திருந்தார். அவர்  தன்னுடன்   தன்   வேலைக்காரனையும்  அழைத்து  வந்திருந்தார்.

             அந்த  வேலைக்காரருக்கு   அவருடைய  தாய்மொழியாகிய  காஷ்மீரி  மொழியைத்தவிர  வேறு  மொழி  தெரியாது.

          ஒரு நாள்  இரவு   அங்கிருந்த  ஹால்  இருளடைந்து  இருந்தது. ஒரே ஒரு
ஹரிக்கேன்  லாந்தர்  விளக்கின்  சிறிய  ஒளி  மட்டும்தான்  இருந்தது.

       காஷ்மீர்   அன்பரின்  வேலைக்காரர்   அப்போது  ரமணரின்  முன்பு  வந்து  நின்று  அவருக்கு  மரியாதை  நிமித்தம்  நமஸ்கரித்தார்.

      அவருக்குத்  தெரிந்த  காஷ்மீரி  மொழியில்   ஏதோ  பேசிக்கொண்டு  இருந்தார் .

      சற்று  நேரம்  கழித்து  அந்த  வேலைக்காரர்  ரமணருக்கு  வணக்கம்  செலுத்திவிட்டு,  அங்கிருந்து  சென்றுவிட்டார்.

     மறுநாள் ,  ரமணரைச்  சந்தித்த  காஷ்மீர்   நண்பர்,  " பகவான் !  தங்களுக்கு  காஷ்மீரி  மொழி  தெரியும்  என்று   என்னிடம்  சொல்லவே  இல்லையே ? " என்று  கேட்டார்.

     ரமணர்,  " இதற்கு  ( தன்னை  .....அது , இது   என்று  ஒருமை அஃறிணையில்.......

  தான்  அழைப்பார்....)     உன்னுடைய  மொழியில்
ஒரு  வார்த்தை  கூட  தெரியாதே ..........என்ன  சொல்கிறாய் ? "  என்றார்.

     அதற்கு  பிறகு  " என்ன  நடந்தது ? " என்று  வினவினார்.

    அப்போது  அந்த  அன்பர்  சொன்னார்.

     "  நேற்று  இரவு  என்னுடைய  வேலைக்காரர்  உங்களிடம்  பல  கேள்விகளை   காஷ்மீரி  மொழியில்  கேட்டிருந்தாராம்.  அவருடைய  கேள்விகளுக்கு  நீங்கள்   காஷ்மீரி  மொழியிலேயே  பதில்  கூறி ,  அவருடைய  சந்தேகங்களைத்   தீர்த்ததாக  அவரே   என்னிடம்  கூறினார். "

      உண்மையான   ஆர்வத்துடன்  பதிலை  எதிர்பார்ப்பவர்களுக்கு  ஞானிகளின்  மௌனம்  கூட  பேசும்  பாஷை  ஆகலாம்   என்பதற்கு  இந்த  நிகழ்ச்சி  ஒரு  சிறந்த  உதாரணமாகும்.

     ஆம் ,  மௌனமே  மிகச்  சிறந்த  பேச்சு.

No comments:

Post a Comment