Thursday, October 9, 2014

மஹா பெரியவாளின்  உபதேசங்கள் 8:                       
  உணவு 

    லோகத்தில்   சாந்தம்  பரவவேண்டுமென்றால்   நாம்  சாந்தர்களாக  இருக்க வேண்டும் .  இதற்கு   நமது   வாழ்க்கை    முறைகளே    நம்மை   
ஸத்வ  குணமுள்ளவர்களாகப்    பண்ணவேண்டும்.

     ஸாத்வீக  உணவையே   உண்ணவேண்டும்.  புலால்   உணவாக  இல்லாமல்   மரக்கறி  உணவாக  இருக்க  வேண்டும்.

     தன்   உடம்பு  கொழுக்க  வேண்டும்   என்பதற்காக   இன்னொரு  உயிரின்  உடம்பைக்  கொலை  பண்ணித்  திங்கிறவனிடம்  அருள்   எப்படி  உண்டாகும்?  என்கிறார்   திருவள்ளுவர்.
                                                         ***************


      பரம   ஸாத்வீக  உணவானாலும்  கூட   அளவு  மிக  முக்கியம்.

    ஒரு  சாப்பாடு,  ஒரு   பலகாரம்   என்றிருப்பது   நல்லது.  இல்லாவிட்டால்  இரண்டு  சாப்பாடு,  ஒரு   டிபன்   என்று   இப்போது   பெரும்பாலோர்   வைத்துக்  கொண்டிருக்கிற   மாதிரியே  இருந்தாலும்,   ஒவ்வொரு  வேலையும்   மிதமாகச்  சாப்பிடவேண்டும்.

        தினசரி  இரண்டு  சாப்பாடு,  ஒரு  சிற்றுண்டி  என்று  வைத்துக்  கொண்டாலும்,  சனிக்கிழமை,  குருவாரம்,  ஸோமவாரம், ( மாதா , பிதா  இல்லாதவரானால் )  அம்மாவாசை ,  ஏகாதேசி , பிரதோஷம் ,  இன்னும்  அவரவர்   குலதெய்வத்தைப்  பொறுத்து  ஷஷ்டி , கிருத்திகை ,  சதுர்த்தி , பௌர்ணமி   ஆகிய   தினங்களில்   ஒருவேளை   சாப்பாடு , ஒருவேளை  பலகாரம்   என்று   வைத்துக்  கொள்ள  வேண்டும்.

      வைத்திய  சாஸ்திரம் , தர்ம  சாஸ்திரம்   இரண்டின்  பிரகாரமும்  அரை வயிற்றுக்குத்தான்   சாப்பிடணும்.  கால்  வயிற்றுக்குத்  தீர்த்தம்  குடிக்கணும்.  மற்ற   கால்   வயிறு   வாயுவுக்கு   விட்டு  விடணும்.
                                               ***************************

      வியாதிக்கு  மருந்து   மாதிரி,  பசிக்கு   சாப்பாடு  ரொம்ப  அளவாத்தான்  உள்ள   போடணும்.

      அதாவது   பசியைத்   தீர்த்துக்  கொள்ளத்தான்   ஆஹாரமே  தவிர  ருசியைத்   தீர்த்துக்  கொள்ள   அல்ல.

      ஒரு வேளை   சாப்பிடுகிறவன்   யோகி.
        
      இரண்டு  வேளை    சாப்பிடுகிறவன்   போகி.

     மூன்று  வேளை    சாப்பிடுகிறவன்   ரோகி.
 
                                              ***********************

     நல்ல  பதார்த்தம் ,  கெட்ட  பதார்த்தம்   எதுவானாலும்   ஓயாமல்  தின்னும்  பழக்கமாக   பண்ணிக்  கொள்ளக்கூடாது.

       நம்மை,  நம்   கண்ட்ரோலில்  இல்லாமல்  பண் ணித்  தன்  வசப்படுத்திக்  கொள்வதாக   எந்தப்  பதார்த்தத்தையும்   விட்டு  விடக்கூடாது.

     உண்பதில்  நம்   திடச்  சித்தம்   முக்கியம்.

      எங்கேயோ   ஒரு  இடத்திற்குச்  செல்கிறோம்.  அங்கு  அவர்கள்   விலக்கப்பட்ட ,  பதார்த்தம்  எதையோ   உபசாரம்   பண்ணிச்  சாப்பிடச்  சொல்கிறார்கள்.   அந்த  சமயத்தில்   தாக்ஷிண் யத்தாலோ ,  அவர்கள்   தப்பாக  நினைக்கப்   போகிறார்களோ   என்றோ   அதைச்  சாப்பிட்டுவிடக்  கூடாது. பிரின்சிபிளை   விடக்கூடாது .

                                       ****************************

           நம்முடைய   வாய்தான்   ரொம்ப   Over - worked !
   
     
       அமித  போஜனமாக   ஓயாமல்   ஏதாவது   சாப்பாடு,  நொறுக்குத்தீனி, பானம்   என்று    உள்ளே   தள்ளிக்  கொண்டே   இருக்கிறோம்.  எப்போது   பார்த்தாலும்   வெட்டியாக   ஏதாவது   பேசிக்கொண்டே   இருக்கிறோம்.

       இந்த   இரண்டையும்   ரொம்பக்  குறைத்துக்  கொள்ள  வேண்டும்.
" வயிற்றைக்   கட்டி    வாயைக்   கட்டி  "   என்கிறபோது   சாப்பாடு ,  பேச்சு   இரண்டையும்   கட்டுப்படுத்துவதுதான்   தாத்பரியம்.

         சும்மா    சும்மா   சாப்பிடுவது   உடம்புக்கும்   நல்லதில்லை,  ஆத்மாவுக்கும்  நல்லதில்லை .

          ஒரேயடியாகத்   தின்னக்கூடாது.  முழுப்பட்டினியும்   போடக்கூடாது.
கண்ட  வேளைகளில்,  கண்டதை   கண்டபேர்   கையில்   இருந்து   வாங்கித்  தின்னக்கூடாது.

                                            ************************

            போஜனம்   என்பது   உடம்பை   வளர்த்துக்  கொள்ள   மட்டுமல்ல,  உள்ளத்தை   வளர்த்துக்  கொள்வதற்கும்   உதவும்படி   அதைப்  பண்ணிக்  கொள்ள  வேண்டும்.

            நல்லதில்   போகவேண்டும்   என்ற   எண்ணம்  நமக்கு  இருந்தால்,  ஆஹார   விஷயத்தில்   ஜாக்கிரதையாகத்தான்  இருக்க  வேண்டும்.  நாம்  சாப்பிடும்   ஆஹாரம்   சுத்தமானதாக  இருக்க  வேண்டும்.

           ஒன்று,  ஆஹாரமாக  ஆகிற  வஸ்துக்கள்   சுத்தமானதாக   இருக்க  வேண்டும்.   மற்றொன்று   அந்த   ஆஹாரம்  நம்  இலையில்   வந்து   விழுகிற  வரையில்,  அதில்   ஸம்பந்தப்பட்டவர்கள்    சுத்தர்களாக   இருக்க வேண்டும். இதுவே   மிக  முக்கியம்.  இதில்  குணதோஷம்  ஏற்பட  அதிக  வாய்ப்புள்ளது.

          மனசின்   எழுச்சி  ரஜஸ்,  தாழ்ச்சி   தமஸ்,  ஸமநிலை  ஸத்வம்.  கோபதாபமில்லாமல்,  காம  மோகங்களில்லாமல்,  பதட்டப்படாமல்,  அதற்காக  ஒரேயடியாய்    மந்தமாகச்   சோம்பியும்  வழியாமல்,  சாந்தமாகவும்,    பிரியத்துடனும்   இருந்துகொண்டே,  கிரியா சக்தியுடனும்  இருப்பதுதான்   ஸத்வகுணம்,........ஸாத்வீகம்   என்பது.

          ஸத்வகுணத்தை   விருத்தி   செய்யும்படியாக   ஆஹாரம்   இருக்க வேண்டும் .

                                                **************************

                நம்முடைய   ஆஹாரத்தை   ரொட்டியாகவோ ,  கோதுமை  சப்பாத்தியாகவோ   அல்லது   வெறும்   அன்னம் ,  மோர்   என்றோ
"சிம்பிளாக "  வைத்துக்கொண்டு  விட்டால்  சிரமம்  இல்லை.

            வீட்டுக்கு   யாராவது   வந்தாலும்   பாலும்,  பழமும்  கொடுக்கலாம்.

          பத்து,  இருபது   ஸாமான்கள்   வைத்துக்  கொண்டால்தான்   சமையல்  என்று    ஆகியிருப்பதை   மாற்றவேண்டும்.

         வேண்டாத   சிரமங்கள்   இல்லாமல்   லேசான   ரீதியில்  " லைட்டாக " ஆஹாரத்தை   ஆக்கிக்கொள்ள  வேண்டும்.

                                              **************************


             டின்னில்   அடைத்து,  பார்க்க  நீட்டாக   என்னன்னவோ   பானவகைகள்   வந்திருக்கின்றனவோ,   அதிலெல்லாம்   என்ன  என்ன   வஸ்துக்கள்   சேர்ந்திருக்குமோ ?

           கைபடாமல்   மெஷினில்   தானே   பேக்கிங்  செய்துள்ளது   என்பதால்  அது   ஆசாரமானதாகிவிடாது.

           நாமே   அகத்தில்   பார்த்து  அரைத்து   வைத்துக்  கொள்கிற   மாவுகளைப்  போட்டுக்   கஞ்சியாக்கிக்   குடிப்பதுதான்   ஆசாரம்.

         ஸ்தோத்ரங்களையோ ,  பகவன்  நாமாவையோ   சொல்லிக்  கொண்டுதான்   ஒரு   ஸ்திரீ  அரிசி  பொறுக்குவதிலிருந்து,  காய்கறி   நறுக்குவதிலிருந்து   ஆரம்பித்து   அரிசி   களைந்து   உலையில்  போட்டு , அது  பக்குவமாகிப்   பரிமாறுகிற   வரையில்   இந்த  நாம  ஸ்மரணை   தொடர்ந்து  செய்யணும்.

           சாப்பிடுகிறவனும்  " ராம  ராம "  என்றோ " சிவ  சிவ "  என்றோ,
" கோவிந்த   கோவிந்த "  என்று   சொல்லிக்கொண்டே   சாப்பிடணும்.


          இப்படிச்   செய்தால்,  போஜனத்தின்  ஷட்ரஸத்தோடு  -- அறுசுவையோடு   நாமரஸமும்   சேர்ந்து   அதன்   தோஷத்தை  எல்லாம்  போக்கிவிடுமென்று  பெரியவர்கள்   சொல்லி  இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment