Friday, October 10, 2014


தாயிற்  சிறந்த  தயாபரன் :


                                                       



        டி. கே . எஸ்.  எனப்படும்  டி . கே.  சுந்தரேஷய்யர்   ரமண  பகவானின்  அத்யந்த   தொண்டர்.  சிறந்த  முமுட்ஷூ  என்று    பகவானாலேயே   கூறப்பட்டவர்.   திருவண்ணமலையில்   பள்ளி  ஆசிரியராக  இருந்தவர், பகவானது   அதி  தீவிர  பக்தர்.  ஆசிரமத்தில்   உணவு   எடுத்துக்கொள்பவர் .

           ஒருமுறை  சின்ன  ஸ்வாமியிடம்   அவருக்கு  ஒரு  பிணக்கு  ஏற்பட்டது. எனவே  ஆசிரம  உணவு  உண்ணாமல்  நாள்முழுதும்   பட்டினி  கிடந்தார்.  மறுநாள்   காலை   கடும்பசி . ஊருக்குள்  போய்   சாப்பிட்டுக்கொள்ளலாம்  என்று  எண்ணினார்.

          அப்போது   சமையல்  கூடத்தில்  இட்லி   வார்த்துக்கொண்டிருந்த   பகவானிடம்   போய் ,  " பள்ளிகூடத்திற்கு   நேரமாகிறது,   போய்  வருகிறேன் !"  என்றார்   பகவானிடம்.

         பகவானோ,  "  இன்றைக்கு   ஞாயிற்றுக்  கிழமை  ஓய் !    இன்றைக்கு   ஏது ஸ்கூல்  ? "  என்றார்.  மாட்டிகொண்ட   டி . கே  . எஸ் ., "  இல்லை,   இன்றைக்கு   ஸ்பெஷல்   கிளாஸ்  ! "   என்றார்.  அவர்   எதற்காகப்   போகிறார்  என்பதை   ஏற்கனவே   தனது   நுண்ணுணர்வால்    உணர்ந்திருந்த   பகவான், " ஸ்பெஷல்   கிளாஸ்   பற்றி   என்னிடமே   கூறுகிறீரா ? " என்று   சிரித்தார்.

         தானே  1896 ம்   ஆண்டு   ஸ்பெஷல்  கிளாஸ்   என்று   சொல்லித்தானே  மதுரையிலிருந்து   திருவண்ணாமலை  வந்தார்.  கொல்லன்   தெருவிலேயே   ஊசி   விற்பனையா ?

         டி .கே . எஸ்சை   உட்காரச்  சொல்லி ,  " இன்று   நான்   ஸ்பெஷல்லா  ஒரு   சாம்பார்   செய்திருக்கேன் ,   முதலில்   நீர்   சாப்பிட்டுப்  பாரும் ! "  என்று  ஓர்  இலையைப்   போட்டு   டி . கே . எஸ்சை   அமர்த்தி ,  அதில்   இட்லி  போட்டு ,  அதனோடு   சாம்பாரைப்   பொழிந்தார்.   "  சாப்பிடும்  ஓய் ! "  என்று   பக்கத்தில்  அமர்ந்து     அன்பாகப்   பேசினார்.

        அப்புறம்   கேட்பானேன் ! ஆயிரம்  சண்டைகள்   வரட்டுமே !  ஆசிரமத்திலிருந்து    போவாரா   டி . கே .  எஸ் .   இதுவல்லவா    பகவானின்  அருள்   விளையாட்டு.

        பகவான்   நம்மை   எப்படி   வழிநடத்துகிறார்.

     ஸ்வபுத்யை   யோஜயந்ததிம்   என்கிறது  ஸ்ம்ருதி .  அவன்  நம்  புத்திக்குள்ளே    பிரவேசித்து   ஆன்மீக   வழியில்   நம்மை   அழைத்துச்  செல்வான்.

                       நிலைதந்த   தாரகனாய்  
                               நியமிக்கும்   இறைவனுமாய்  

  என்று   வேதாந்த   தேசிகன்   கூறுவது  போன்று , தனக்கு   தேவை  இல்லாவிடினும்,  நமக்கு   நிலை   தருவதற்காக   பகவான்   இந்த   விளையாட்டுக்களை   ஆடினார்.  ஆயினும்  அவற்றால்   அவர்   துளியும்   பாதிக்கப்  படவில்லை    என்பதையும்   கண்டோமல்லவா !


நன்றி :  ராமணோதயம்  இதழ்.

மற்றைய   இதழ்கள்   படிக்க  :  www.ramanalayam.org/

No comments:

Post a Comment