Tuesday, October 14, 2014

இல்லறமா ? ...... துறவறமா ? ..........  
எது  பெரிது ?

             ஒரு   அரசன்   தன்   நாட்டிற்கு   வருகின்ற  துறவிகளையெல்லாம்,  "  உயர்ந்தவர்   யார் ? --உலகைத்   துறந்து   துறவியானவனா ?   உலகில்   வாழ்ந்து   தன்   கடமைகளைச்   செய்து   வாழும்  இல்லறத்தானா ? "  என்று  கேட்பது   வழக்கம்.

                       பல  அறிவாளிகளும்   அரசனின்  சந்தேகத்தை   தீர்க்க  முயன்று  அவனைத்   திருப்தி   செய்ய   முடியாமல்  தண்டனை   பெற்றனர். துறவிகளாக  இருந்து   நிரூபிக்க  முடியாமல்  போனால்,  அவர்களை   இல்லறதார்களாக   மாற்றியும் ,  இல்லறத்தார்களாக   இருந்து   நிரூபிக்க  முடியாமல்  போனால்,  அவர்களை   துறவிகளாக  செய்தும்   தண்டித்து  வந்தான்.

                     ஒருநாள்   கடைசியாக     இளந்துறவி  ஒருவர்   அரண்மனைக்கு   வர அவரிடம்   அரசன்  கேட்க ,  அந்தத்  துறவியும்,  "  மன்னா !   அவரவர்  நிலையில்   இருக்கும்போது   இருசாரரும்   சம  அளவில்   உயர்ந்தவர்களே !"  என்றார்.

                அதற்கு   அரசனும்   தனக்கு  நிரூபிக்க வேண்டும்  என்று  கூற ,  தன்னுடன்   வந்து   சில   நாட்கள்  தங்கினால்   தான்   நிரூபிப்பதாக  சொல்லி ,  அரசனைத்   தன்னுடன்   அழைத்துச் சென்றான்.

           துறவியும் ,  அரசனும்   வழியில்   பல   நாடுகளைக்  கடந்து , ஒரு  பெரிய   நாட்டின்   வழியே   சென்றபோது ,  அந்த  நாட்டின்   மன்னனின்   மகளுக்கு   சுயம்வரம்   நடப்பதாக   முறைசறிவிக்கப்பட்டது.

  

          பண்டைய   காலத்தில்   அரசகுமாரிகள்  தங்கள்  கணவனை   சுயம்வரம்   என்ற   நிகழ்ச்சியின்   மூலம்  தேர்ந்தெடுப்பது  மரபாக   இருந்தது. மணப்பெண்ணும்   அறிவு, அழகு ,  செல்வம் ,  பண்பு  கண்டு   தங்களுக்கு   உகந்தவர்களின்   கழுத்தில்   மாலையிட்டு ,  மணப்பாள். இப்போது   சுயம்வரத்தைக்   காண   மன்னனுடன்    இளந்துறவியும்   அரண்மனைக்குச்   சென்று   ஓர்   ஓரமாக  நின்று   நடப்பதை   வேடிக்கைப்   பார்த்தனர்.

           இளவரசியும் ,  மாலையுடன்   வந்தாள்.  இதற்கு  முன்பு   அவளுக்கு  பலமுறை   சுயம்வரம்   நிகழ்ச்சி  நடந்தும்   யாரையும்   பிடிக்கவில்லை.  ஆனால்   இப்போது   அவளுக்கு  மண்டபத்தில்   நுழைந்ததுமே, சூரியனைப்   போன்று   தவச் சுடருடன்   தேஜஸ்வியாக  ஓர்     இளந்துறவியை  உள்ளே   நுழைந்தார்.  அவரைக்    கண்டதும்   மனம்  பறிகொடுத்து   மாலையிட்டுவிட்டாள்.

         சற்றும்   எதிர்பார்க்காத   இளம்துறவி ,  "  இது  முட்டாள்தனம் !  நான்   ஒரு   துறவி ,  எனக்கு   திருமணம்   தேவையில்லை ! "  என்று   மாலையைக்  கழற்றி   எறிந்துவிட்டு ,  அரண்மனையை  விட்டு    சென்று விட்டான்.  இதற்குள்   இளம்துறவியிடம்   அளவற்ற  காதல்கொண்ட    இளவரசி ,  "  ஒன்று   மணந்து  வாழ்தால்   அவருடன்  தான்   வாழ்வு ,  இல்லையேல்   உயிரை   விடவேண்டும் "  என்று   கூறியபடி   இளம்துறவியை   அழைத்துவர   அவரின்  பின்னாலேயே   சென்றாள்.

           அரசனும் ,  இளம்துறவியும்    இவர்களைப்   பின்தொடர்ந்து    சென்றனர். .பல  மைல்கல்  கடந்து   அடர்ந்த   காட்டினுள்   நடந்து    இளந்துறவி   மறைந்துவிட்டார்.  பின்தொடர்ந்த   இளவரசியும்   குழப்பமாகி   செய்வதறியாது    நின்றாள்.  அப்போது   இவர்களைப்   பின்தொடர்ந்த   அரசனும் ,  இளம்துறவியும்   அரசகுமாரியிடம்   சென்று   கவலைப்பட  வேண்டாம் ,   தாங்கள்   அவளுக்கு   உதவுவதாகவும்   கூறினார்.

            இதற்குள்   இருட்டிவிடவே,  அம்மூவரும்   ஒரு  மரத்தின்  அடியில்   அமர்ந்து   ஓய்வு  எடுத்தனர்.  அந்த  மரத்தில்   ஒரு  குருவியும் ,  அதன்  மனைவியும் ,  மூன்று    குஞ்சுகளும்   வாழ்ந்து  வந்தன.

          அந்த   சின்னஞ்சிறு  குருவி  மரத்திற்கு   கீழே  பறந்து  வந்து , அம்மூவரையும்   பார்த்தவிட்டு ,  தன்   மனைவியிடம்   சென்று ,  " அன்பே !  இப்போது   என்னசெய்வது ?  நம்   வீட்டில்  சில   விருந்தினர்   வந்துள்ளனர்.  இது  குளிர்காலம்  வேறு ,  நெருப்புகூட   இல்லையே ! "  என்று   கவலையுடன்   கூறியது .

           பின்னர்   எங்கோ  பறந்து  சென்று,  எரிந்துகொண்டிருந்த   ஒரு  சுள்ளியினை   கொண்டு  வந்து   அம்மூவரின்  முன்பு   போட்டது.  அவர்கள்  மேலும்   சில   சுள்ளியினை   சேர்த்துத்   தீயை   வளர்த்து   குளிர்  காய்ந்தனர்.

           அப்போதும்   அந்தக்  குருவிக்கு   மனநிறைவு   ஏற்படவில்லை.

        மீண்டும்   தன்   மனைவியைப்  பார்த்து , ' அன்பே !  இப்போது   என்ன  செய்வது ?   அவர்கள்   பசியோடு   இருக்கின்றனர் .  அவர்களுக்கு   நம்மால்   எதுவும்   கொடுக்கமுடியவில்லையே !  நாமோ   இல்லறத்தினர் ,  வீடுதேடி   வருபவரின்   பசியைத்  தீர்ப்பது   நமது   கடமை.  அதற்காக  என்னால்  முடிந்ததை   நான்   செய்தே ஆக  வேண்டும்.  என்  உடம்பை   அவர்களுக்கு   உணவாகத்  தருகிறேன். '  என்று   கூறியபடி   அவர்கள்   வள ர்த்திருந்த   நெருப்பில்   பாய்ந்து  மாண்டது.

         அவர்கள்   மூவரும்,  குருவியை  தடுக்க  முயன்றனர் , ஆனால்   அது  வேகமாகப்  பாய்ந்து   விழுந்தது.

             அந்தக்   குருவியின்   மனைவி   தனது  கணவனின்' செயலைக்  கண்டு,  பின்னர் , " இங்கோ   மூன்றுபேர்   இருக்கிறார்கள்.  ஒரு  சிறிய  பறவையின்   உடல்   எப்படி   மூன்று  பேருடைய   பசியைப்  போக்கும் ?  அது  போதாது.  என்   கணவரின்   முயற்சி   வீணாகாமல்  காப்பது   மனைவியாகிய   எனது  கடமை. அவர்களுக்கு   என்  உடலும்   கிடைத்துப்   பசியைப்   போக்கிகொள்ளட்டும் !" என்று   கூறித்   தானும்   தீயில்   விழுந்தது.

            நடந்தவை   அனைத்தையும்   மூன்று  குஞ்சுகளும்  கண்டன.  தங்களது  விருந்தினர்களுக்கு   போதுமான   உணவு   இல்லாததைக்   கண்ட  அவை , " நம்   பெற்றோர்   தங்களால்  முடிந்ததைச்  செய்தார்கள். அப்படியும்   உணவு  போதவில்லை.  பெற்றோரின்   அறப்பணியைத்  தொடர்வது   பிள்ளைகளின்   கடமை.  நமது   உடலும்   அவர்களுக்கு   உணவாகப்  போகட்டும் "  என்று  பேசியபடியே  மூன்றும்   அந்த   நெருப்பிற்குள்   வேகமாக   வீழ்ந்து  இறந்தன.

         நடந்ததைக்   கண்டு   திகைத்த  மூவருக்கும்,  அந்தக்  குருவிகளின்  உடலைத்   தீண்டவும்   மனம்   வரவில்லை.  உண்வு   எதுவும்   இன்றியே   அவர்கள்   துக்கத்துடன்   இரவைக்  கழித்தனர். பொழுது விடிந்ததும்   அரசனும்,  இளம்துறவியும்  அங்கிருந்து   வெளியேற   இளவரசிக்கு   வழிக்காட்டி  அனுப்பிவைத்தனர் . அவளும்  தமது   தந்தையிடம்   அரண்மனைக்குத்  திரும்பினாள்.

      பின்பு ,  நமது   இளம்துறவி  அரசனிடம்,  " மன்னா ! தான்  இருக்குமிடத்தில்  ஒவ்வொருவரும்   உயர்ந்தவர்கள்   என்பதைக்   கண்டு கொண்டாய்   அல்லவா ?   நீ !  இல்லறத்தானாக   வாழவிரும்பினால்   இந்தப்  பறவைகளைப்   போல்  எந்த  வினாடியும்   பிறருக்காக   உன்னைத்   தியாகம்   செய்வதற்குத்   தயாராக   வாழ  வேண்டும் !   துறவியாக  விரும்பினால் ,  உலகைத்  துறந்து   வாழ   விரும்பினால்,  மிக  அழகான  பெண்ணையும் ,  பேரரசையும்  துரும்பென   உதறிச்  சென்ற   அந்த  இளம்துறவியைப்   போல  இரு !"

             


                       இல்லறத்தானாக   விரும்பினால்  உன்  வாழ்வை 
                        
                       மற்றவர்களின்   நன்மைக்காக   ஒரு  பலியாக   அர்பித்துவிடு !

                       துறவு   வாழ்வைத்   தேர்ந்தெடுத்தால்   அழகையோ,  

                       பணத்தையோ,   பதவியையோ   ஏறெடுத்தும்  பார்க்காதே !

                       அவரவர்   நிலையில்   அவரவர்   பெரியவரே.

                       ஆனால்,   ஒருவரின்   கடமை   மற்றவரின்   கடமை   ஆகாது !

                       என்றார்.


நன்றி  ;  விவேகானந்தரின்   விவேகக்   கதைகள் 
                  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடம்,
                 

No comments:

Post a Comment