Monday, October 6, 2014



அடியவருக்காக  கண்ணன்  ஆடிய  நாடகம் :



                  தக்க நேரத்தில் உதவியோரை, 'கடவுளைப் போல் வந்து உதவினீர்கள்...' என்போம். 'தெய்வம்    மனுஷ்ய ரூபனே' என்று, ஞான நுால்கள் கூறுகின்றன. அதற்கு ஏற்றாற் போல் நடந்த வரலாற்றுச் சம்பவம் இது:

         திரிலோசன தாசர் என்ற பொற்கொல்லர், மிகப் பிரபலமாக விளங்கியவர். இவர் கண்ணன் மேல் பக்தி கொண்டு, நாம கீர்த்தனை பாடுவோரை உபசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு நாள், அவரிடம் நவாப்,'தாசரே... என் மகளின் திருமணத்திற்கு ஒரு நவரத்தின மாலை செய்ய வேண்டும்; ஏழு நாட்களுக்குள் அந்த மாலை வேண்டும்...' என்றார்.


நவாப்பின் உத்தரவுப்படி பொன்னும், நவரத்தினங்களும் பெற்று தாசர் வீடு திரும்பினார்.
அச்சமயம், வீட்டிற்கு, பாகவத கோஷ்டியினர் பெரும் கூட்டமாக வந்தனர். அவர்களை கண்டதும், மகிழ்ச்சியுடன், அவர்களை உபசரிப்பதிலும், நாம சங்கீர்த்தனம் செய்வதிலுமே நாட்களை கடத்தினார் தாசர். பாகவதர்கள் விடைபெற்றுச் செல்லவும், நவாப்பின் வீரர்கள் வரவும் சரியாக இருந்தது.




'திரிலோசனரே... இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன; அதற்குள் நவரத்தின மாலை வராவிட்டால், அரச தண்டனைக்கு ஆளாக நேரிடுவீர்...' என, எச்சரித்து சென்றனர்.
பாகவத உபசரிப்பில், நவாப்பின் உத்தரவை மறந்து போயிருந்தார் தாசர். 


        மாலை செய்ய குறைந்தது, நான்கு நாட்களாவது ஆகும். அதனால், நவாப்பின் தண்டனைக்கு பயந்து, யாருக்கும் சொல்லாமல் காட்டிற்கு போய் கண்ணனிடம் முறையிடத் துவங்கி, அங்கேயே தங்கி விட்டார். 



தாசரைப் போலவே உருமாறி, அவரின் வீட்டிற்கு போனார் பகவான். அன்று இரவுக்குள் நவரத்தின மாலையை செய்து முடித்து, மறுநாள் அரசவைக்கு சென்று, மாலையை கொடுத்தார். அதைப்பார்த்த நவாப், அதன் கலை நயத்தில் வியந்து, பொன் முடிப்புடன், மரியாதைகள் பல செய்து, ராஜ மரியாதையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


வீட்டில், ஒரு பாகவத கோஷ்டியினர் அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு சமாராதனை செய்து முடித்து, அவர்கள் புறப்பட்டதும், கையில் பலகாரங்களுடன் காட்டை நோக்கி நடந்தார் கண்ணன். 



வேறொரு அடியவராக உருமாறி, தாசரின் முன் நின்று, 'ஐயா... திரிலோசன தாசர் வீட்டில் நடந்த சமாராதனையிலிருந்து இந்த பலகாரங்களை கொண்டு வந்தேன்; சாப்பிடுங்கள்...' என்றார்.


தாசர் திடுக்கிட்டு, 'நான் இங்கு இருக்கும் போது, என் வீட்டில் சமாராதனையா...' என்று நினைத்து குழம்பியபடியே வீடு திரும்பினார். அங்கிருந்த சமாராதனை கோலாகலங்களைப் பார்த்ததும், தாசருக்கு ஒன்றும் புரியவில்லை; மனைவியை கேட்டார்.


அவள், 'என்ன இப்படிக் கேட்கிறீர்கள்... நீங்கள் தானே நவாப்பிடம் நவரத்தின மாலையை கொடுத்து விட்டு வந்து, இப்படியெல்லாம் செய்தீர்கள்...' என்று விரிவாக சொன்னாள்.
தாசருக்கு மெய் சிலிர்த்தது. 'கண்ணா... என்னை காப்பாற்ற என் வடிவிலேயே வந்து அருள் செய்த உனக்கு, என்ன கைமாறு செய்வேன்...' என்று கைகளை குவித்தார்.


தெய்வம் தன் அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை.



பி.என்.பரசுராமன்             நன்றி : வாரமலர் 

No comments:

Post a Comment