மஹா பெரியவாளின் உபதேசங்கள் 4:
தியானம்
மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமல் இருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்வதே வாழ்க்கையின் முக்கிய, முதலான காரியம் என்று கருத வேண்டும்.
உறுதியான சங்கல்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.
ஐஸ்வரியம் வந்தாலும், தரித்ரம் வந்தாலும்; கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும் ; ஆரோக்கியம் இருந்தாலும், வியாதி வந்தாலும் ; எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.
******************
வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌதீக நாகரிகத்தை விட்டுவிட்டு , தேவைகளைக் குறைத்துக்கொண்டால் யாருமே இப்படி ஆச்சாரங்களை விட்டுவிட்டுப் பணத்துக்காக பறக்க வேண்டியதில்லை.
பணத்துக்காக பறக்காதபோது பகவத் ஸ்மரணைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்.
வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னாலே உண்டாகும்.
*******************
காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்று ஒவ்வொரு காலத்திலும் 12 காயத்ரியாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலமும் சாந்தம் உண்டாகிற காலம். காயத்ரி மந்த்ரமும் இதுதான்.
ஓம் பூர் புவஸ்ஸு வ :
ஓம் தத் ஸவிதுர்வ ரேண்யம்:
பர்கோ தேவஸ்ய தீமஹி !
தியோ யோந; ப்ரசோத யாத்!
யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தச் சுடருடைய மேலான ஒளியைத் தியானிப்போமாக, என்பது இதன் அர்த்தம்.
காயத்ரீ என்றால் " எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது " எனபது அர்த்தம்.
கானம் பண்ணுவது என்றால் இங்கே பாடுவதில்லை, பிரேமையுடனும் , பக்தியுடனும் உச்சரிப்பது என்று அர்த்தம்.
யார் தன்னை பயபக்தியுடனும், பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும்.
No comments:
Post a Comment