Friday, September 5, 2014


கண்ணீரும்  கோபமும் :


அந்த 1957--59 சென்னை விஜயத்தின்போது நுங்கம்பாக்கத்தில் முகாமிட்டிருந்த ஒரு சமயம்.

ஒரு பெண் ஸ்ரீசரணரின் சரணத்தருகே விழுந்து நமஸ்கரித்தவள் நெடுநேரம் எழுந்திருக்கவே இல்லை. அங்க அசைவதிலிருந்து குலுங்கக் குலுங்க அழுகிறாள் என்பது மட்டும் தெரிந்தது.

பெரியவாள் இரக்க இளக்கத்தின் உருவாய் நின்றார்.

ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாது முறையிட்டது ஏறக்குறைய ஏகாந்தமான சூழ்நிலையில். இப்போது இப்பெண் அழுவதோ பக்தர் பலர் கூடிய இடத்தில்.

தரிசனத்துக்கு ஏராளமானவர் காத்திருந்ததால் பெண்மணியை எழுந்திருக்குமாறு சொல்லப் பாரிஷாதர் முன் வந்தார்.

பெரியவாள் சிறிய, ஆனால் வலிய கையசைப்பால் அவரைத் தடுத்தார். மங்கை அடைத்து வைத்த கண்ணீர் அத்தனையும் கொட்டி லேசாவதற்கு அவகாசமளித்தார் போலும்.

ஓரிரு நிமிஷங்களில், ஆம், அவரது அருள் விழிகளிலிருந்துமே அருவி பெருகத்தொடங்கி விட்டது!

பொதுச் சபையில் ஸன்னியாஸத் திலகமான ஒரு ஜகதாசாரியார் கண்ணீர் பெருக்கிக் கொண்டு நிற்கிறார்!

ஜகத்தின் தாப பாபங்களும் தமக்கே என்பதால்!

ஜகத்தில் ஒரு பிரஜையான அப் பெண் அவளது கர்மத்தை அவள் மட்டும் அழுது தீர்க்க முடியாதெனக் கண்டு அதனை ஆலமுண்ட நீலகண்டனான அவருமே ஏற்றிருக்கிறார்! இந்த நீலகண்டனிடமிருந்து பெருகிய கங்கைதான் அந்த அனுதாபக் கண்ணீர்!

அவள் தெளிந்தெழுந்தாள்.

"எல்லாம் நன்னா ஆகும்"---என்று ஆவியார----அவளது ஆவி பறக்கும் ஆவி ஆற---அவர் ஆசி கூற, தன்னம்பிக்கையுடன் புறப்பட்டாள் நொய்ந்து நொடித்து வந்தவள்.

அந்த 'எல்லாம்' என்ன?. திருமணம்தான். வறுமை காரணமாக அவளுக்குக் கல்யாணப் பருவம் தாண்டி ஆண்டு பல ஆகியும் அவளை ஒரு வாழ்க்கைத் துணைவனுடன் சேர்த்து வைக்க இயலவில்லை.

ஒரு ஆடவன் வைதீக தர்ம வழ்வுக்குத் துணை புரிய ஒரு பெண் கூட்டாளியைச் சேர்த்துக்கொள்ளும் உயர் வேள்வியாக நமது சாஸ்திரங்கள் திருமணத்தை அமைத்துத் தந்திருப்பதென்ன? இன்றோ அதை சந்தை விஷயமாக்கி வரதக்ஷிணை சீர்--செனத்தி என்று பேரம் பேசியும், அதோடு ஆடம்பரக் காட்சியாக ஆக்கியும் பெண்ணைப் பெற்றோரின் வயிற்றிலடித்துப் பிடுங்கும் கொடுமை என்ன? நாம் இன்பமாகவே வைத்திருக்க வேண்டிய கன்னிகைகளை உள்ளம் கலங்கி, கண் கலங்கி நிற்க வைக்கும் இந்த ஈன நிலை என்ன?"-----பெரியவாளீன் சிந்தனை தீர்க்கமாக இதிலேயே வேர் விட்டது.

பலகாலமாக இது பற்றி நினைத்து வருந்தியிருப்பவர்தான் அவர்.1926--ல் கானாடுகாத்தானில் அவரைச் சந்தித்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், அந்நாளில் குறிப்பாக பிராமண சமூகம் மட்டுமே வரதக்ஷிணைக் கொடுமையால் உற்றுள்ள பாதிப்பை எடுத்துக் காட்டி, அது நீக்கப் பெரியவாள்தான் வழி காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்ததிலிருந்து அவர் இவ்விஷயத்தில் மிக்க விசாரம் கொண்டுதான் இருந்தார். தமது நெருங்கிய சீடர்களிடம் வரதக்ஷிணை இத்யாதியும், ஓர் அளவுக்கு அதிகமான ஆடம்பரக் கோலாஹலமும் இல்லாமல் சிக்கனத் திருமணம் நடத்துமாறு வலியுறுத்தித்தான் வந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக, பெரும்பாலும் அச் சிஷ்யர்கள் 'வலி'யும் தெரியாமல், 'உறுத்த' லும் இல்லாமல், புராதன சாஸ்திர வழிக்கு முற்றிலும் மாறாக இடைக்காலத்தில் வந்து புகுந்துவிட்ட வரதக்ஷிணை--CUM--டாம்பீகத் திருமண முறையையேதான் தொடர்ந்து வந்தனர்.

இன்று திருமணமாகாது ஏங்கி ஏங்கித் தவித்த ஒரு கன்னிப் பெண்ணே பொதுச் சபையில் கண்ணீர் விட்டு அழுததைக் கண்டதும் பெரியவாளின் உணர்வு தீவிரம் பெற்றது. ஏதோ சில சீடர்களிடம் சொல்வது மாத்திரமின்றிப் பொது மக்கள் அனைவருக்குமே தாம் உள்ளம் திறந்து உறுதியாக உத்திரவிடத்தான் வேண்டும் என்று கருதினார்.

'கண்ணீரும் கோபமும்' என்பதுதானே நம் தலைப்பு? கனிவில் கண்ணீர் பெருக்கிய முனிவர் முனிவு கொண்டு, "எனக்குக் கோவம் வந்துட்டா என்ன ஆறது?" என்று கேட்ட விஷயத்திற்கு இங்கு செல்கிறோம். ஏனெனில் அன்று கண்ணீரே கோபமாயிற்று! கடலிடையே வடவைத் தீ என்பார்களே! அப்படிக் கருணைக் கடலிலிருந்தே கோபத் தீ மூண்டது! தார்மீகக் கோபம் என்பதன் சத்திய வடிவம் அது!

அன்று பொதுப்பிரசங்கத்திலேயே வெடித்தார்!

கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடிய நம் கன்யாக் குழந்தைகள், 'ஆகுமா? ஆகுமா?' என்று அலறிக் கொண்டு கேட்கிற ஹீனஸ்திதிக்கு நாம் சமூஹத்தைக் கொண்டு வந்து விட்டிருப்ப்பது நியாயமா என்று தழல் பறக்கக்கேட்டார். சாஸ்திர சம்ஸ்காரமான விவாஹத்தைப் பொருளாதாரப் பிரச்சினையாக்கிப் பெண்ணுக்கும் அவளைப் பெற்றோருக்கும் தீங்கு செய்வதோடு மட்டும் இது முடியவில்லை என்றும் இதனால் நம் வேத மரபுக்கே மூலஸ்தானம் போன்ற ஸ்திரி தர்மத்தைக் குலைக்கும் மஹா பாபமும் சேர்கிறது என்றும் விண்டு காட்டினார். இனி, பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வரதக்ஷிணை சீர்--செனத்தி கேட்கவே கூடாது என்று கண்டிப்பாக ஆணையிட்டார். மேலும் ஒரு படி சென்றார். திருமண அழைப்பிதழ்களீல் 'காஞ்சி ஜகத்குருவின் ஆசியுடன்' நடப்பதாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளதல்லவா? வரதக்ஷிணை வாங்கும் கல்யாணங்களில் அப்படிப் போட வேண்டாம் என்றார்.

ஆம், அனைத்துயிர்க்கும் ஆசி தரவே வந்த அன்பவதாரர்தாம்!

அதற்கு மேலும் ஒரு படி சென்றார். சாஸ்திர விதிகளை அணுவும் இளக்கப் பிரியப்படாத மரபின் மஹாகாவலர் என்றுதானே சமீப கால மஹான்களிடையே ஸ்ரீசரணர்களூக்கேயான தனிச் சிறப்பு? அப்படிப்பட்டவர் அன்று, தாய் தந்தையர் கருத்துக்கு மாறாக மக்கள் ஒருபோதும் செல்லக் கூடாது என்ற சாஸ்திர விதியையே வலியுறுத்தும் தாம்; மாதா--பிதா--குரு என்றே வசனமிருப்பதால் பெற்றோருக்குப் பின்னரே வரும் குருவான தம் கருத்துக்கும் மேலாகப் பெற்றோர் கருத்தையே மதிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் உள்ள தாம் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மாறுதலாக அபிப்பிராயப்படுவதாகக் கூறினார். அதாவது, பெற்றோர் தம் உத்திரவைக் கேளாவிட்டாலும் கூட வரனாக உள்ள மக்கள் அவர்களது ஆக்ஷேபணைக்குப் பணியாமல், 'வரதக்ஷிணை வாங்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன், இல்லாவிட்டல், கல்யாணம் செய்துகொள்ளாமலேதான் இருப்பேன்' என்று தீர்மானமாகக் கூற வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பின்னரும் நம் 'அழகான' சமூகம், அவர் கூறியபடி அப்படியே திருந்தி விடவில்லை எனினும், நூற்றுக்குப் பத்து--இருபது பேராவது நிச்சயமாக மனமாற்றம் பெறவே செய்தனர். நமது பெரிய மக்கட் தொகையில் அதுவே ஆயிரக்கணக்காக இருக்கும். மஹாபுருஷரொருவரின் தார்மீகக் கோபத்தால் அன்றி வேறெவ்விதத்திலும் சாதிக்கவொண்ணாத சாதனைதான்.

'கோபமுள்ளவிடத்தில் குணமிருக்கும்' என்பார்கள். ஸ்ரீசரணார் விஷயத்திலோ, அனந்த கல்யாண குண நிலயமான அவரிடம் அக்கல்யாண குணங்களில் ஒன்றாகவே கோபமும் இருந்தது. அதனால்தான் பிறரை அது குணப்படுத்திக் குணவான்களாக்க முடிந்தது.

"எனக்குக் கோபம் வந்துட்டா என்ன ஆறது?" என்று அவர் கேட்டதைத் தொடக்கத்தில் பார்த்தோம். அவரது கோபத்தால் பயங்கரமான பாதிப்பு உண்டாகும் என்ற விடை அதில் தொக்கி நிற்கிறது. ஆனால் இங்கோ அவருக்குக் கோபம் வந்ததில் நல்லதுதானே விளைந்திருக்கிறது என்று தோன்றலாம்.

ஆயின் இந்தக் கோபம் உள்ளத்தின் அடியிலும் கோபமாகவே இருந்து அதிலிருந்து வந்ததல்ல. அந்தத் திருவுள்ளத்தின் அடியிலிருந்தது---ஸதா ஸர்வ காலமும் இருந்தது----லோக க்ஷேம சிந்தைதான்; தர்ம வாழ்வு தழைக்க வேண்டும் என்ற ஆசைதான்; சுருங்கச் சொன்னால் அன்புதான்! அதன் ஒரு வெளிப்பாடாகவே கோபக்கீற்றும் சில சமயங்களில் வெடித்தது! ஜல மயமான மேகங்களிலிருந்தே மின்னல் கீற்று வெடிப்பது போல். ஆனால் இந்த மின்னல் மின்சாரமாக உத்பாதம் செய்யாமல் இன்சாரமாகவே உயர்வு அளிக்கும்.

No comments:

Post a Comment