Friday, September 5, 2014

முடிந்தவரை  தப்பு பண்ணாம, பொய்  பேசாம  இரு :

பரம சாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவா முன் நெருஞ்சான் கிடையாக விழுந்தார். பேச முயன்றார். தொண்டை அடைத்துக் கொண்டது, சமாளித்து சொல்லத் தொடங்கினார்.

”நான் ஒன்னுமே செய்யலே… இகத்துக்கும் வழி செய்யலே..சம்பாத்தியம் கிடையாது. பரத்துக்கும் ஒன்னும் பண்ணலே. கோயில் குளத்துக்கும் போனதேயில்லை. சந்தியாவந்தனம் கூடப் பண்ணினதில்லை. இப்போ நினைச்சாலே பயமாயிருக்கு...”

பெரியவா சொன்னார்கள்:

“ஆறு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலே போய்த் தங்கு. எத்தனையோ வீடு, சும்மா பூட்டி வெச்சிருக்கா. ஒரு வீட்டை புடிச்சு, நன்னா பராமரிக்கிறேன்னு சொல்லு.

“தினமும் ஆற்றில் ஸ்நானம் செய்து ஸ்ஹஸ்ர காயத்ரி ஜபம் பண்ணு. இது பரத்துக்கு.

“அந்த கிராமத்திலுள்ள போஸ்டாபீஸிலே போய் உட்கார்ந்த்துக்கோ. லெட்டர் எழுதத் தெரியாதவா, மணியார்டர் பாரம் எழுதத் தெரியாதவா, ரெஜிஸ்டர்-சேவிங்க்ஸ் செய்யத் தெரியாதவா நிறையப் பேர் வருவா. நீ எழுதிக் கொடு. அவா எதாவது கொடுப்பா. அது போறும், இகத்துக்கு…

“கூடியவரை தப்புப் பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்த அளவு மெளன விரதம் இருந்துண்டு வா…”

வந்த அடியார்க்கு ரொம்பவும் திருப்தி. தன்னால் செய்யமுடியாத பரிகாரங்களை செய்யச் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மறைந்தது.

பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தத் தெரியும்; எம்.ஏ. வகுப்புப் பாடமும் எடுக்கத் தெரியும்.

No comments:

Post a Comment