Friday, September 5, 2014

பெரியவா  ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால் :



மஹானிடம் அளவற்ற பக்தி கொண்டவர் கடம் வித்வான் சுபாஷ் சந்திரன். தனக்கு எல்லாமே அந்த மஹான் தான் என்று நினைப்பவர் – தீபாவளி தினத்தன்று, குமுட்டி அடுப்பில் கிளறிய திரட்டுப்பாலை, ஆசையோடு மஹானிடம் கொடுக்க நினைத்தார்.

வெறும் நெல் பொரியையும், வாழைக்காய் மாவையும் பிட்க்ஷையாக ஒரு கைப்பிடி அளவே தினமும் ஏற்று சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் சர்வேஸ்வரரான மஹா பெரியவா, தன் திரட்டுப் பாலை ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் சுபாஷ் சந்திரனின் சந்தேகம்.
”ஏண்டா நீ ஆசையா பண்ணிண்டு வந்திருக்கே. இதைப் பெரியவா கட்டாயம் ஏத்துப்பா!” என்று அவருக்குத் தைரியம் சொன்னது யார் தெரியுமா? பெரியவாளைக் கடவுளாகப் பூஜிக்கும் பிரதோஷம் மாமா தான். மாமா சொல்லிவிட்டால் அது நிச்சயம் நடக்கும் என்று கடம் வித்வானும் நம்பினார். எவ்வளவோ பக்தர்கள் பழங்கள், மாலைகளோடு வரிசைக் கிரமமாக காத்துக் கொண்டு இருந்தனர். கடம் வித்வானின் நம்பிக்கை சற்றே சரிந்தது. பெரியவாளிடம் கைங்கர்யம் செய்யும் ஒருவர், “ இந்தக் கூட்டத்தில் இது சாத்தியமா என்ன? பெரியவா சந்நிதிக்கு நேரே வச்சுட்டு வேண்டிண்டு போங்க” என்று சொல்ல, கடம் வித்வான் மிகவும் மனம் தளர்ந்து விட்டார். ஆனால் மனதில் நம்பிக்கை கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணம் பிரதோஷம் மாமாவின் வார்த்தைகள்.

அதனால் சற்று கூட்டத்தை விட்டு நகர்ந்து திட்டு போன்ற ஒரு இடத்தில், கையில் கொண்டு வந்திருந்த பாத்திரத்தோடு உட்கார்ந்து விட்டார் கடம் வித்வான். அந்த சமயத்தில் மஹான், கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டு அதைப் படித்துக் கொண்டு இருந்தார். பக்தர்கள் அவரைத் தரிசித்தபடியே நகர்ந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அதே நிலை. கடம் வித்வான் மனத்தில் விரக்தி தோன்ற ஆரம்பித்தது.
”அவர் ஏத்துப்பார்” என்கிற பிரதோஷம் மாமாவின் குரல் மட்டும் அவரது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

திடீரென்று புத்தகத்திலிருந்த தன் முகத்தை அகற்றிய மஹான், வேறெங்கும் பார்க்காமல், நேராக கடம் வித்வானைப் பார்த்தார்.
ஜாடையில் அவரைத் தன் அருகில் வருமாறு அழைத்தார். கடம் வித்வான் இரண்டே எட்டில் மஹானின் அருகில் போய் நின்றார். அவர் கையில் இருந்த பாத்திரத்தை குழந்தை பாவத்தோடு தன் கையில் வாங்கிக் கொண்டார் மஹான். பிறகு தன் பக்தர் அன்பால் திரட்டிக்கொண்டு வந்த திரட்டுப்பாலை, முற்றும் துறந்த நிலையைத் துறந்தவராய் தீபாவளி பட்க்ஷணமாக தன் திருக்கரத்தாலேயே பாத்திரத்திலிருந்து எடுத்து உருட்டி வாயில் போட்டுக் கொண்டார்.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியால் சுபாஷ் சந்திரன் திக்கு முக்காடித் தான் போனார்.

பிரதோஷம் மாமா எவ்வளவு துல்லியமாக பகவானைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சி ஒரு பக்கம்…. வாழ்நாளில் யாருக்குமே சுலபத்தில் கிடைக்காத பேறு அல்லவா இது?

No comments:

Post a Comment