Saturday, September 6, 2014

பல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ மடத்தில் நடைபெற்ற நிகழ்வு இது.

மகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். பல முக்கிய முடிவுகளை அவர் இங்கிருந்து தான் எடுப்பது வழக்கம். பல வி.ஐ.பி.க்களை இங்கு வைத்து சாதிப்பதும் வழக்கம். அவர்கள் அவ்வாறு அமர்ந்திருக்கும்போது சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். ஆனால் பரமாச்சாரியார் மட்டும் எதையும் சட்டை செய்யாமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொசு கடிப்பதர்க்கான ஒரு சிறு தடயத்தை கூட அவர் காட்டமாட்டார்.
அந்தக் கொட்டகையில் உள்ள பசு ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. மடத்தின் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல மொத்தம் ஆறுபேர் வந்திருந்தனர். பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக் குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் துணுக்குற்றனர். இதை எப்படி பெரியவரிடம் போய் சொல்வது. பசுவை அன்னை காமாட்சியின் சொரூபமாகவே பார்த்து வழிபடுபவராயிற்றே அவர். இருப்பினும் இந்த முக்கிய விஷயத்தை அவரிடம் சொல்லத் தானே வேண்டும்? நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.
அமைதியாக கேட்ட அவர் பின்னர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். கீழே ஒரு தன துண்டை விரித்துப் போட்டார் பசுவின் எதிரே அமர்ந்தார். கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அந்த பசுவை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அது பிரசவித்தது. அதன் வயிற்றில் இருந்த அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது. வெளியே வந்த கன்று அதற்கே உரிய துள்ளலுடன் எழுந்து நின்றது. தாய் மடி தேடி சென்றது.
எஸ்…. இறந்து போனது என்று ஆறு டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்த பின் மகான் அவர் பாட்டுக்கு உள்ளே போய்விட்டார்.
அந்த ஆறு டாக்டர்களுக்கும் இதை நம்பமுடியவில்லை. மருத்தவத்தையும் விஞ்சிய அற்புதமல்லவா இது ? அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.
மடத்தின் சிப்பந்திகளுக்கு பரமாச்சாரியாளின் மற்றொரு மகிமையை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியை திரு.சுவாமிநாதன் சொல்லி முடிக்க, மற்றவர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்க நான் கைதட்டியே விட்டேன். அத்தனை பரவசம்.
இறந்து போனதாக சொல்லப்படும் ஒரு கன்று உயிருடன் வெளியே வருகிறது என்பது என்ன சாதாரண விஷயமா?
நன்றி : right mantra.com

No comments:

Post a Comment