Thursday, September 4, 2014

மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்



பண்டித மதன்மோகன மாளவியா  காசியில்  வரவேற்பை வாசித்தளித்த பிறகு ஸ்வாமிகள் வடமொழியில் அந்த வரவேற்புக்கு உபதேசம் போல் பதிலளித்தார்கள்.

“உள்ளத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அமைதி நிலவுகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு இன்பம் மேலிடுகின்றதென்பது உலக அனுபவம். மன அமைதியின் உயர்நிலையே மேலான புருஷார்த்தமாகும். அமைதி குறையக் குறையத் துன்பமும் வளரும். மனிதர்கள் தங்கள் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சிக்கும் பொழுது, பிறரை அவர்கள் துன்புறுத்தவும் நேருகிறது. இவ்விதம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பங்களை ஒட்டி மற்றவர்களைத் துன்புறுத்த முயலும்பொழுது சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது. அவ்விதம் குழப்பம் நேரும் போதெல்லாம் அதை அடக்கி அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்த அரசாங்க அதிகாரிகள் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க முன்வருகிறார்கள். மக்கள் எல்லோரும் புலன்களைப் பறிக்கும் வெளிவிஷயங்களிலிருந்து தங்கள் மனத்தைத் திருப்பி அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க, எப்பொழுது முற்படுகின்றார்களோ, அப்பொழுது தான் துன்பம் அவர்களை அணுகாமலிருக்கும்.

உலகில் அமைதிக்குக் குறைவு ஏற்படும் பொழுது ராஜநீதி, தண்டனைச்சட்டம், இவைகளின் அமுலும் அதிகரிக்கும். நல்ல கல்வியைப் பயிலும் பயனால் தான் அமைதி சித்திக்கும். அதிலும் சர்வ கலாசாலைகளில் கல்வி கற்பதினாலும், காசி மாநகரத்திலுள்ள ஹிந்து சர்வகலாசாலையில் கல்வி பயிலுவதாலும் மிகவும் உயர்ந்த அமைதியை உங்களிடம் எதிர்பார்க்கலாம். அமைதியை மாணவர்களுக்குள் நிலைக்கச் செய்வதே இங்குள்ள பெரியோர்களின் கடமையாகும். நாட்டில் அமைதி நிலைத்தால் அரசாங்கத்திற்கும், போலீஸ் இலாகாவிற்கும், ராணுவத்திற்கும் ஏற்படும் செலவு ஒருவாறு குறையும்.

No comments:

Post a Comment