Thursday, September 4, 2014

மீண்டும்  அமைதி வந்தது:


பெரியவாளிடம் ரொம்ப பக்தி கொண்ட குடும்பம். அந்த வீட்டின் தலைவர் தினமும் பீச்சில் நடந்து விட்டு வருவார். ஒருநாள் ஒரு செம்படவன் அவரிடம் ஒரு சங்கைக் கொடுத்தான்

"ஸாமி, மீன் பிடிக்கறப்போ வலைல மாட்டிச்சு. வாங்கிக்கறீங்களா?" என்றான். சங்கு நல்ல பெருஸாக, அழகாக இருந்தது. விலை பேசி வாங்கினார். சங்கு தெய்வீகமானதில்லையா, அதனால், பூஜை ரூமில் பெரியவாளுடைய படத்துக்கு கீழே வைக்கப்பட்டது!

ஆனால், சங்கு வந்ததிலிருந்து ஏனோ யாருக்கும் நிம்மதி இல்லை. காரணம் இல்லாத சண்டை, கோவம், அந்த வீட்டு அம்மாவுக்கோ, இன்னும் ஒரு படி மேலாக, பெரியவாளுடைய படத்திலிருந்து "அந்த சங்கை எடுத்துடு" என்று குரல் வேறு கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒருவேளை தன்னோட மனப்ரம்மையோ? என்று எண்ணினாள். ஒரு வாரம் கழிந்தது. அவளுடைய பிள்ளை அம்மாவிடம் "ஏம்மா! பெரியவா படத்துலேர்ந்து ஏதோ பேச்சுக் குரல் கேக்கலை?" என்று ஆரம்பித்தான். "நோக்குமாடா?" அம்மா வியந்தாள். "அப்பப்போ கேட்பது" என்ற நிலை மாறி, அடிக்கடி குரல் "சங்கை எடுத்துடு" என்று கேட்க ஆரம்பித்தது. இப்போ என்ன பண்ணறது? பெரியவாளோட உத்தரவா? இல்லை, மனக்கலக்கமா? இதற்குள் அவர்கள் இருந்த காலனிக்குள் சில மாணவர்கள் புகுந்து "குண்டர்கள்" மாதிரி நடந்து கொண்டார்கள். சாமான்கள் எல்லாம் சுக்கு நூறாயின! தனியாக மாட்டிக்கொண்ட அவர்களுடைய இளைய பிள்ளை உயிர் பிழைத்ததே தெய்வாதீனம் ! இனிமேலும் தாமதிக்காமல், குடும்பமே காஞ்சிக்கு ஓடியது! "அந்த சங்கை ஆத்ல வெச்சுக்க வேண்டாம், திருவல்லிக்கேணில இருக்கற காமேஸ்வரி கோவிலுக்கு குடுத்துடு" வாக்கமிர்தம் நொந்த உள்ளங்களில் குளிர குளிர பாய்ந்தது. சங்கு வீட்டை விட்டு போச்சு! கொஞ்சநாளாக 'வெளியூர்' போயிருந்த அமைதி மறுபடி வீட்டுக்குள் வந்தது!

No comments:

Post a Comment