Friday, September 5, 2014

அருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்

உபகாரம் என்றால் பிறத்தியாருக்கு செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரை கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே. மனஸ் என்ற ஒன்றை கெகாடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே. இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்காலாமா?
மனஸை நல்லதிலேயே செலுத்தி பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரை பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான ஸ்வய நலத்தை விட்டு இந்த பெரிய ஸ்வயநலத்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.
இப்படி செய்வதற்கு பரநலப் பணிகளே ரொம்பவும் ஸஹாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை - இவன் மனஸ் சுத்தமாக இருந்தால் தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது. பலன் தருகிறது. பரோபகாரத்தால் தான் இவன் மனஸே சுத்தமாக தொடங்குகிறது என்றால் முரண் மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவருக்கு மனஸ் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும்.
மனஸ் லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய ஸெளக்யத்தையே நினைத்து அது திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு தான் இருக்கும். அப்போது "ஐயோ, இது திருந்த வேண்டுமே!' என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி உண்டு.

இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போது ஓடுகிற மனஸை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது என்கிறார்களே, அப்படி பரோபகாரப் பணி மனஸை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பண்ண அந்த சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகி கொண்டு சக்தியோடு பலன் தர ஆம்பிக்கிறது. இப்படி பரோபகராமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்து கொண்டு பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா ஸ்வாமிகள்

நன்றி : www.periyava.org

No comments:

Post a Comment