Thursday, September 4, 2014

கீதையில் ஒரு சந்தேகம்:




காசியிலிருந்து ஒரு பண்டிதர் - மகா மகா பண்டிதர் - ஸ்ரீ மடத்துக்கு வந்தார். அவர் அணிந்திருந்த தோடா, மகரகண்டி, சால்வையைப் பார்த்தாலே பிரமிக்க வைப்பதாக இருந்தது. எத்தனையோ வித்வத் சதஸுகளில் பேரறிஞர்களின் விவாத அரங்குகளில் சம்மானமாகப் பெற்றவை அவை.

பெரியவாளை ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்று அவர் மனத்திற்குள் ரகசியத் திட்டம் போட்டுக் கொண்டே வந்தார்.

நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்த அவர், பெரியவா அருகில் சென்று, " பகவத் கீதையில், ஒரு சந்தேகம் ...." என்று இழுத்தார். (முடிந்தால், பெரியவா தீர்த்து வைக்கலாம் என்று சவால் விடும் தோரணையில்.)
பெரியவா, சைகை காட்டி, அவரை உட்காரச் சொன்னார்கள். அவர் உட்கார்ந்ததும் அருகிலிருந்த அணுக்கத் தொண்டர்களைப் பார்த்து, "எல்லோரும் இவரை மூணு பிரதக்ஷிணம் பண்ணுங்கோ" என்று உத்தரவிட்டார்கள்.

எதிர்பாராத உத்தரவு, பண்டிதருக்குக் குழப்பம். தொண்டர்களுக்குத் திகைப்பு !

" பெரியவா ... வந்து ... என்ன ... ஆக்ஞை ... இப்படி ? " என்று நாக்குழறினார் பண்டிதர்.

பெரியவாள் மெல்லச் சொன்னார்கள்:
" பகவத் கீதையில், பதத்துக்குப் பதம் ஆயிரம் சந்தேகம் எனக்கு. உங்களுக்கோ, பகவத் கீதையில் கேவலம் ஒரே ஒரு சந்தேகம் . உங்கள் பாண்டித்யம் என்ன ! ஞானம் என்ன ! அடடாடா !.... அதனால் தான் என் சிஷ்யர்களைப் பிரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன் ... "

பண்டிதருடைய கர்வத்துக்குப் பலமான சம்மட்டி அடி, தலையைத் தூக்கமுடியவில்லை. சிரம் தாழ்த்தி பெரியவாளிடம் ஒரு சந்தேக விளக்கம் கேட்டார்.
பெரியவா ரொம்பப் பொறுமையாக பகவத் பாதாள் பாஷ்யத்தைக் கூறி நீண்ட நேரம் விளக்கம் தந்தார்கள். பண்டிதர் அப்படியே சொக்கிப் போனார். கர்வம் காணாமற் போயிற்று.

"தன்யோஸ்மி" என்று, அஷ்டாங்க நமஸ்காரம் செய்த பண்டிதருக்கு உரிய மரியாதை செய்து கெளரவித்துப் பிரசாதம் வழங்கினார்கள் உம்மாச்சி தாத்தா...

No comments:

Post a Comment