Friday, September 5, 2014

இதுதான்  உண்மையான  பக்தி:சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”

அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! அன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

No comments:

Post a Comment