Thursday, September 4, 2014

பெரியவாளும்  தத்தாத்ரேயரும்:


தத்தாத்ரேய க்ஷேத்ரத்தில் முகாம். பெரியவா கோவிலுக்கு செல்லும்போது உச்சிக்கால தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. கோவிலில் நல்ல கூட்டம். ஆனாலும், ஏதோ வித்யாசமாக, அமானுஷ்யமாக இருப்பதுபோல் சிஷ்யர்கள் உணர்ந்தார்கள். அங்கே தர்சனத்துக்காக நின்றுகொண்டிருந்தவர்கள் யாருடைய முகத்திலும் தெளிவோ, பக்தியோ, மகிழ்ச்சியோ காணப்படவில்லை! முகத்தை சுளிக்க வைக்கும் ஒரு அந்நியத்தன்மை இருந்தது !

பெரியவா உள்ளே நுழைந்த நேரம், அர்ச்சகர் மணி அடித்து தீபாராதனை காட்ட ஆரம்பித்தாரோ இல்லையோ, அங்கிருந்த பல பேரிடமிருந்து, பலவிதமான ஓலங்கள், அலறல்கள் என்று மிக மிக பயங்கரமான சப்தங்கள் வெடித்தன ! துர்தேவதைகளின் பிடியில் இருப்பவர்கள் அப்படியெல்லாம் சப்தம் போடுவார்களாம் ! சில நாட்கள் அந்த க்ஷேத்ரத்தில் தங்கி தத்தாத்ரேயர் அனுக்ரகத்தால் குணமாகி விடுவார்களாம். இது அந்த க்ஷேத்ரத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கமாம்!

சிஷ்யர்களுக்கு இது தெரியாததால், நடுங்கிப் போய்விட்டார்கள். ஏதாவது "பிசாசு" கட்டுக்கடங்காமல் திமிறிச் சென்று பெரியவாகிட்ட போய் பயமுறுத்தினால்? என்ற கவலை. [கிருஷ்ணன் தெய்வம் என்று பல சந்தர்ப்பங்களில் கண்கூடாக பார்த்தும், யசோதை அவனைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்தவில்லை. தவறு. கிருஷ்ணனுக்கு அம்மாவின் கொஞ்சல், கோபம், கெஞ்சல் எல்லாம் வேண்டியிருந்ததால், அவள் தன்னை தெய்வமாகப் பார்ப்பதை விரும்பவில்லை. ]

பெரியவாளோ கொஞ்சமும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மரச்சொம்பிலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து, கண்டபடி கூத்தாடிக் கொண்டிருந்த பிசாசு கும்பல் மேல் ப்ரோக்ஷணம் பண்ணினார். அவ்வளவுதான் ! அடுத்த வினாடி, எல்லாம் கப்சிப்! எல்லா தேவதை பரிவாரங்களும், சர்வேஸ்வரன் முன் வாயடைத்து பொட்டிப்பாம்பாக அடங்கி விட்டன !

மறுநாள் பக்தர்கள் இல்லாத நேரம் பெரியவா கோவில் கர்ப்பக்ருஹத்துள் சென்றதும், அங்கிருந்த ரஹஸ்யமான இடத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் பாதுகைகள், கிண்டி, மரத்தாலான கடம், பூஜைப் பாத்ரங்கள், மணி, சாளக்ராமம் எல்லாவற்றையும் அர்ச்சகர்கள் எடுத்துக் காட்டினார்கள். அதுவரை, அர்ச்சகர்களை தவிர அப்புனிதமான வஸ்துக்கள் யாருக்கும் காண்பிக்கப் பட்டதில்லையாம் ! பெரியவா அப்பாதுகைகளை சில நிமிஷம் தன் சிரஸில் வைத்துக் கொண்டு, அந்தர்முக த்யானத்தில், சரீர அசைவின்றி அப்படியே நின்றிருந்தார்.

அர்ச்சகர்களோ, "ஆதி சங்கரர் பரம்பரையில் வந்த மஹானுக்கு, வேறொரு சம்பிரதாயத்தை சேர்ந்த தத்தாத்ரேயரிடம் இவ்வளவு பக்தியா! மதிப்பா!" என்று ஆச்சர்யப்பட்டனர்.

பூர்ணாவதாரமான உம்மாச்சி தாத்தா தானே தத்தாத்ரேயர் ?

No comments:

Post a Comment