Friday, September 26, 2014

இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை!


தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள சிறு கிராமம் திருச்செங்காட்டங்குடி. அந்த ஊரில் தான் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரை சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டரும் தன் ஒரே மகன் சீராளனை படையலிட்டு சிவபெருமான் மீண்டும் சீராளனை உயிர்ப்பித்துக் கொடுத்த ஊர்.

சிறுத்தொண்டர் வழியில் தொடர்ந்து ஒரு ஆண்வாரிசு மட்டுமே இன்று வரை தொடர்கிறது. சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த வாரிசுதாரர் பணியின் காரணமாக பெங்களூர் குடியேறிவிட்டார். ஆண்டுதோறும் பிள்ளைக்கறியமுது படைக்கும் பொறுப்பு இவருக்கே உரியது. திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பே ஊர்வெட்டியான் ஒருகட்டு விறகைக் கொண்டு வந்து இவர் வீட்டில் போட்டுச் செல்வான். தொடர்ந்து திருவிழாவின் பொறுப்புகளை இவர் நிறைவேற்ற வேண்டும்.

இனி இதைத் தொடரமுடியாதென்ற முடிவிற்கு வந்து ருத்ராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகளிடம் இந்நிலையைக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் காஞ்சி மஹாப் பெரியவாளிடம் அனுமதி பெற்று வாருங்கள் என அனுப்பினர்.

காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசிக்கக் காத்திருக்கும் வரிசையில் அமர்ந்தார். உள்ளிருந்து வந்த ஊழியர் இவர் பெயரைச் சொல்லியழைத்தார். இவர் கவனமெல்லாம் எப்படி இப்பொறுப்பிலிருந்து விடுபடுவதென்பதிலேயே இருந்ததால் அழைப்பைக் கவனிக்கவில்லை. உள்ளே சென்ற ஊழியர் மீண்டும் வந்து சிறுத்தொண்டரை ஸ்வாமிகள் அழைக்கிறார் என்றதும், பதறிப் போய் எழுந்து உள்ளே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்.

மஹாப்பெரியவாள் மெதுவான குரலில் சொன்னார் “இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை. உன் முன்னோர்கள் மிக்க பயபக்தியுடன் ஆண்டவன் நமது வீட்டிற்கு எழுந்தருளுகிறார் கிடைக்கக் கூடிய பாக்கியமா இது? என்ற பெருமிதத்துடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் பணி யார் செய்ய வேண்டுமோ அவரைத் தான் சிறுத்தொண்டர் வாரிசாக ஸ்வாமி அனுப்புகிறார். அது தான் ஒரு வாரிசாக வரும் ரகஸ்யம். இதை மீற உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எங்கிருந்தாலும் பிள்ளைக்கறியமுது பிரசாதம் திருச்செங்காட்டங்குடியிலுள் உன் வீட்டில் உன்னால் தயாரிக்கப்பட்டு அங்கு எழுந்தருளும் ருத்ராபதீஸ்வரக்குப் படைக்கவே நீ அனுப்பப்பட்டுள்ளாய். மறுக்காமல் இதைத் தொடர்ந்து செய்துவா. க்ஷேமமாய் இருப்பாய்” என்று பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனுப்பினார்.

அப்பணி அக்குடும்பத்தினரால் தொடரப் படுகிறது.

No comments:

Post a Comment