Friday, September 5, 2014

சர்வஞ்த்துவம் :


எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம சொரூபம் என்பதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாள் என்னும் மகேஸ்வரர் பல சமயங்களில் வெளிப்படுத்தி தன்னை லேசாக அடையாளம் காட்டியிருந்தாலும் மாயையால் நமக்கெல்லாம் அந்த ரகசியத்தை மறைப்பதையே தன் திருவிளையாடலாய் செய்துள்ளார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளை தரிசனம் செய்ய ஒரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். கிராமத்தில் விநாயகர்சிலை திருட்டு போய்விட்டது. அதனால் ஸ்ரீ பெரியவாளிடம் வந்து வேறொரு விக்னேஸ்வரர் சிலையை கேட்டு வங்கிக் கொண்டு போய் அக்கோயிலில் பிரதிஷ்டை செயலாமென்ற விருப்பத்தோடு வந்து நின்றார்கள். எல்லோரும் அப்படியே பிரார்த்தித்தார்கள்

ஸ்ரீ பெரியவா அவர்களிடம் ” உங்க கிராமத்தில் ஏரி இருக்கா ? ” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.

ஒன்றும் புரியாத அவர்கள் ” இருக்குங்க ” என்றார்கள்.

” ஜலம் இருக்கா ? ” என்றார் ஸ்ரீ பெரியவா.

கிராமத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ” பஞ்சாயத்துலே தூர் வாரலே தண்ணி ரொம்ப கொஞ்சமா இருக்கு. ” என்றார்.

” ஏரியிலே நிறைய தண்ணீர் இருந்தா எல்லா ஜனங்களுக்கும் சௌகர்யம் ; கன்று காலிக்களுக்கும் உபயோகப்படுமில்லையா?

சகல ஜீவராசிகளிடம் அன்பு கொண்ட கருணை வடிவாய் ஸ்ரீபெரியவா கேட்டார்.

” ஆமாங்க ” என்றனர் கிராமத்து பெரியவர்கள்.

” முதல்லே ஏரியை ஆழப்படுத்துங்கோ ” என்று சொல்லி அவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார் ஸ்ரீ பெரியவா. அவர்கள் தயங்கி நின்றனர். ஆனால் பிரசாதம் கொடுத்துவிட்டால் ” போய் வாருங்கள் ” என்ற உத்தரவு ஆகிறதென்ற அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.
இது தெரிந்தவுடன் அனைவருக்கும் ஏமாற்றம்.

விநாயகர் சிலை தற்சமயம் கைவசமில்லை என்று ஸ்ரீ பெரியவா சொல்லியிருந்தாலும் சற்று ஆறுதலாயிருக்குமே இப்படி தங்கள் கோரிக்கைக்கு முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஏதோ ஒரு கட்டளையை ஸ்ரீ பெரியவா கூறியனுப்பிவிட்டார் என்ற ஆதங்கம் அவர்களிடம் வெளிப்பட்டது.

மேலும் ஏரியை ஆழப்படுத்துவது அரசாங்கத்தின் வேலை அதை ஏன் நம்மை செய்யச் சொல்லி இப்படி ஸ்ரீ பெரியவா உத்தரவிடவேண்டுமென்ற கேள்வியும் அவர்கள் மனதில் எழுந்து குழப்பியது.

இது பெரிய விவாதமாகவே கிராம ஜனங்கள் மத்தியில் எழுந்து பிரச்சினையாகிவிட்டது. ஆனால் கிராமத்தின் சில முதியவர்கள் பெரியவங்க வாக்கு இது ! இதை செய்யலேன்னா குத்தமாயிடும். நமக்கு கஷ்டம் வரும் ” என்று பயந்தபடி அவ்வேலையை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானமாக கூறிவிட்டனர்.

கிராம மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது. இனியும் தாமதிக்கல்லாகாதென ஏரியை ஆழப்படுத்த ஆயத்தங்களை தொடங்கிவிட்டனர். குறிப்பிட்ட நாளில் மண்வெட்டியும், கடப்பாரையுமாக ஏரிக்குள் இறங்கி வேலையை ஆரம்பித்தனர்.

வேலையை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் ஒரு அதிசயம், கடப்பாரையில் ஏரியின் மண்ணை ஆழபடுத்திய ஒருவனுக்கு “டங்” கென்று சப்தம் கேட்டது.

” அண்ணே ! ஏதோ சப்தம் ” என்று மற்றவர்களை அவன் கூப்பிட்டான். மேலே தோண்டும் போது மிக ஜாக்கிரதையாக அந்த சப்தம் வந்த இடத்தை துழவினார்கள்.ஆகா ! அவர்கள் எதிர்பார்த்த புதையல் !

அங்கே ஒரு பிள்ளையார் நல்ல வேலையாக சிதிலப்படாமல் உட்கார்ந்திருந்தார், அவர் பழமைவாய்ந்த பிள்ளயாராய் காட்சி தந்தார். இருக்கும் இடத்தைவிட்டு எங்கேயோபோய் தேடி அலைந்தீர்களே, நீங்கள் தேடிச் சென்று என்னை யாசித்தவர் எல்லாமுமறிந்த ஞானேஸ்வரர் அல்லவா ! அவருக்கு ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஏரியில் நான் புதைந்திருப்பேன். என்பதை எப்படி அறியமுடிந்தது. என்று நீங்கள் அதிசயப்பீர்கள். ஆனால் அவர் ஏன் தந்தையாய் சாட்சாத் ஈஸ்வரரல்லவா நீங்கள் சரியானவரிடம்தான் போய் என் சிலையை கேட்டு நின்றிருக்கிறீர்கள் என்று அந்த பிள்ளையார் சிலை அவர்களை பார்த்து கேட்பது போல மண்ணிலிருந்து எழுந்தருளினார்.

உற்சாகமும் மகிழ்ச்சியுமாக ஜனங்கள் ஸ்ரீ பெரியவாளின் அருளை நினைத்தபடி தங்கள் வேலையை தொடர்ந்தனர். பிள்ளையாரை காட்டும் வழியாக தங்களுக்கு ஏரியை தூர் வாரும் பொதுப்பணியை மேற்கொள்ள சொல்லி மகான் உத்தரவிட்டுள்ளார் போலும் என்று அந்த சேவையில் முழு மனதோடு ஈடுபட்டு தொடர்ந்தபோது அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு இடத்தில் ” டங் ” கென்று சப்தத்துடன் ஏதோ எச்சரித்தது.

மெதுவாக மண்ணை வாரியபோது அங்கே சிவலிங்கம் ஒன்று அருள்பொழிய வெளிப்பட்டது. அதிசயம் தொடர்ந்தது அருகருகே நந்தி, அம்பாள், முருகன், பலிபீடம், துர்கை என அத்தனை தெய்வச்சிலைகளும் தென்பட்டன. பெரும் குதூகலத்தோடு சாட்சாத் நடமாடும் தெய்வத்திடம் இதை சொல்ல கிராமம்திரண்டு காஞ்சிபுரம் வந்தது.

பக்திபெருக “சாமிகிட்டே ஒரு பிள்ளையார் சிலைதான் கேட்டோம். இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு என்று ஆனந்தமுற்றனர்.

“ஏறிக்கரையிலே ஒரு கீற்றுகொட்டகை போட்டு சிலைகளை வெச்சு, விளக்கேற்றி, பழங்கள் நிவேதனம் செஞ்சுட்டு வாங்க என்று எல்லாமுமறிந்த தெய்வம் உத்தரவிட்டனுப்பினர்

” கோயில் கட்டணுமே ” என்று கிராமமக்கள் ஆதங்கப்பட்டு கேட்டனர்.

“பிள்ளையார் வந்துட்டாரே ! அவர் பார்த்துப்பார் என்று மாயையை விரித்து,

அவர்களிடமிருந்து தான் ஈஸ்வரர் என்பதை மறைக்கும் எத்தனத்தில் விடைகொடுத்தனுப்பினர் நம் உம்மாச்சி தாத்தா !!!

No comments:

Post a Comment