Thursday, September 4, 2014

பெரியவா  பண்ணின  மத்தியஸ்தம்:




பல வருடங்களுக்கு முன், ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஒரு இளம் வைதீகத் தம்பதி. அந்த இளம் வைதீகருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம். 

வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்தி விட்டு அந்த தம்பதியை நிமிர்ந்து பார்த்தார்.அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. 

பெரியவா உற்சாகத்துடன், "ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன் தானே ? ஆனா...இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா...இப்போ நீ ரகுநாத சாஸ்த்ரிகள் ஆயிட்டே! மதுரை ப்ராந்தியதுலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே" என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தார்.

"இவ ஒன் ஆம்படையாள் (மனைவின்னு) தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி, சுப்ரமணிய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்லறது சரி தானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துண்டு ஒங்க அப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமணிய வாத்தியாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா..சரி..சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்கியமா இருக்கேளோனோ ?"
ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார்.

உடனே ரகுநாத சாஸ்திரிகள், "ரொம்ப சௌக்கியமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே" என்று கை கூப்பிச் சொன்னார்.

பெரியவா விடவில்லை. "நீ சொல்லிப்டே. உன் ஆம்படையா வாயே திறக்கலையே" என்று சிரித்தார்.
உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, "எம் பேரு அலமேலு பெரியவா...சந்தோஷமாத் தான் இருக்கோம்...,சந்தோஷமாத் தான் இருக்கோம்" என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தை கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள்.

"இல்லேம்மா, நீ ஏதோ மன வருத்ததோடு இருக்கேங்கறதை உன் குரல் சொல்லறதே?

என்ன...சொல்லு...சொல்லு" என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா" சமாளித்தாள் அலமேலு.

"இல்லே...இல்லே! உன் குரல் சொல்றதே...நீ ஏதோ வருத்தத்துலே இருக்கேங்கறதை. என்ன விஷயம் சொல்லு" கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள்.

அலமேலு தயக்கியபடியே,"பெரியவா, நா ரொம்ப தெய்வ பக்தி உள்ளவள். பால்யத்தில் இருந்தே சாஸ்திர சம்பிர தாயங்கள்ளே பூரண நம்பிக்கை உண்டு.கல்யாணத்துக்கு முன்னாடி நெறைய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடு, வேண்டியவாளோடு போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் பிடிக்கும்.

இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அது தான் வருத்தம் என்று முடிப்பதற்குள், "ஏன்..ஏன் போக முடியலே ?" என்று இடை மறித்தார் ஸ்வாமிகள்.

அலமேலு தயங்கியபடியே, "விவாஹதுக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்திரை போக முடியாதோலியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத் தானே யாத்ரா பலன் கிடைக்கும் ? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்" என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், "அழப்படாது..அழப்படாது!" என்று சமாதானப் படுத்திவிட்டு, "என்ன ரகுநாத சாஸ்த்ரீகளே, ஆம்படயாளை இப்படி கண் கலங்க விடலாமோ ? நல்ல விஷயம் தானே சொல்லறா ? தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் கூப்பிட்டா போயிட்டு வர வேண்டியது தானே ? அதுல என்ன சிரமம் ?" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.

இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், "அவ சொல்லறதும் ஞாயம் தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை...பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வட தேச க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா. ஆகிற காரியமா அது பெரியவா? "

"ஏன் போயிட்டுத்தான் வாயேன்.ஆம்படயா தானே அன்போட கூப்பிடறா" இது ஸ்வாமிகள்.
உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க,"பெரியவாளுக்கு எல்லாம் தெரியும்.நா வைதீகத்தை வ்ருதியா (தொழிலா) வெச்சுண்டுருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பார்த்துடுண்டு இருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வ்ருதியை விட்டுட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்து பதினஞ்சு நாள் நான் எப்படி இவளோட யாத்திரை போக முடியும் பெரியவா ? நீங்களே சொல்லுங்கோ” என்று முடித்தார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, "ஓஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணி வெக்க சொல்லி கேக்க வந்தேளாக்கும் ?" என்று கூறி விட்டு தொடர்ந்தார், "அலமேலு சொல்லறதும் ஞாயம் தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை போறத்லே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்தாவுடன் (கணவனுடன்) போனத் தான் 'யாத்ரா பலன்' கிட்டும்கறதையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதிலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வருத்தி வைதீகம். மாசம் முப்பது நாளும் ஜோலி சரியா இருக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படயாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்ப ரொம்ப சிரமம். என்ன பண்ணறது ?"

"நீங்க தான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா..."இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிராத்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.

"அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்க்கரதுலே நீ தீவிரமா இருக்கே.அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத் தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்கும்கற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே. வைதீகத்தை தொழிலா வச்சுண்டு இருக்கறதாலே, யாத்ரைக்கு உன் கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்க்றார். ஒரு காரியம் பண்ணுங்கோ..."ஆச்சார்யாள் முடிப்பதற்குள், "அனுக்ரகிக்கணும் பெரியவா" என்றனர் தம்பதி.

ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, "ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குப் கிளம்பினாலும், பொறப்படறதுக்கு முன்னாடி, ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணி பிரார்த்தனை பண்ணு. நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்...ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.

மஹா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோசிதமான இந்த அனுக்ரஹத்தை கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment