Thursday, September 4, 2014

பெரியவா  பண்ணின  தமாஷ்:



பெரியவா தானும் நிறைய தமாஷ் பண்ணுவார், யாராவது பண்ணும் தமாஷையும் நன்றாக ரசிப்பார். ஒருநாள் ஸ்நானம் பண்ணுவதற்காக ஒரு சிக்குப் பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார். அப்போது மேலேயிருந்த கூரையில் இருந்து ஒரு பல்லி, பெரியவா தலை மேல் விழுந்துவிட்டது! சட்டென்று காஷாயத் துணியால் பெரியவா தன் தலையை மூடிக் கொண்டார். அதோடு நில்லாமல் அங்கிருந்த பாரிஷதர்களிடம் "ஒரு ஸ்வாமிகள் சீக்ரம் ஸித்தி அடையப்போறார்!.... அதுக்கப்புறம் பண்ண வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கோடா !..." என்று வேறு சொன்னார்.

தொண்டர்கள் திகைத்தனர்! அப்போது மடத்தில் நாலைந்து ஸ்வாமிகள் இருந்தார்கள்.இதில் எந்த ஸ்வாமிகள் ஸித்தி அடையப் போகிறார்? பெரியவா ஏன் இதை இப்படி முன்கூட்டியே சொல்ல்கிறார்? ஒரே குழம்பாக குழம்பினார்கள்.

ஒரு சன்யாசி ஸித்தி அடைந்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும்......ஒருவரை ஒருவர் பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் பெரியவாளால் அதற்கு மேல் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. மெல்ல தன்னுடைய தலையை போர்த்தியிருந்த காஷாயத்தை நறுவிசாக எடுத்தால்.......பெரியவாளுடைய திருமுடி மேல் தும்பைப் பூ போல், ஜம்மென்று ஒரு பல்லி அசைவற்று கிடந்தது! மெல்ல தலையை குனிந்து ஆட்டியதும், பொத்தென்று கீழே விழுந்து ஓடியது!

ஒரு பாரிஷதர் "பஞ்சாங்கத்துல.... தலை மேல பல்லி விழுந்தா, 'மரணம்'ன்னு பலன் போட்டிருக்கு; இன்னொண்ணுல "கலகம்"ன்னு போட்டிருக்கு...." என்றார்.

"மொதல்ல சொன்ன பலன்தான்! எனக்கு மரணம் சம்பவிக்கப் போறது" என்றார் பெரியவா.

உடனே சமயோசிதமாக ஒரு பாரிஷதர் அழகாக விளக்கம் சொன்னார்......"மரணம்ன்னு எழுதியிருக்கே தவிர, யாருக்குன்னு சொல்லலியே! அதுனால, பல்லிக்குத்தான் மரணம்! அதுவும் பெரியவாளோட தலைல விழுந்து பெரியவாளோட சம்மந்தம் கெடைச்சதுனால, அதுக்கு மோக்ஷந்தான் !..." என்றதும், அவருடைய யுக்தி பூர்வமான பேச்சைக் கேட்டதும் பெரியவா அதை ரொம்ப ரசித்து சிரித்தார்.

இன்னொரு பாரிஷதர், "நம்ம காஞ்சிபுரத்துல பல்லி தோஷமே கெடையாது...ன்னு ஒரு பேச்சு உண்டு! வரதராஜ பெருமாள் கோவில்ல, பல்லியை தர்சனம் பண்ணறதுக்காக டிக்கெட் வாங்கிண்டு கியூவுல நின்னு தவம் கெடந்து பாக்கறா.....அதுனால, மரணம், கலகம் ரெண்டுமே இங்கே பொருந்தாது" என்றதும், பெரியவா சிரித்துக் கொண்டே ஸ்நானம் பண்ண ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment