எறும்புகளின் சரணாகதி:
பெரியவாளோட வலதுகாலில் எப்படியோ சின்னக் காயம் உண்டாகி லேசான ரத்தக் கசிவு இருந்தது. அதில் ஒரு சொட்டு ரத்தம் மாதுளைமுத்துப் போல் இருந்தது. பெரியவாளோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒரு எறும்பு வந்தது. அந்த காயத்தின் மேல் ஊர்ந்தது. உடனே சங்கேத பாஷை மூலம் செய்தி அனுப்பி, கொஞ்ச நேரத்தில் ஒரு படையே சொந்த பந்தங்களோடு பெரியவாளுடைய சரணத்தில் இருந்த ரத்தக் கசிவை சுவை பார்த்தன. "எறும்புகளை தட்டி விடுங்கோ பெரியவா" என்று சொல்ல முடியுமா? சுற்றி இருந்த சிஷ்யர்களுக்கோ ஒரே அவஸ்தை!
அப்போது பெரியவாளிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடிய ஒரு பக்தர் வந்தார். உடனே அவரிடம் ரகசியமாக எறும்பைக் காட்டினார்கள் சிஷ்யர்கள். "பெரியவா கால்ல எறும்பு மொய்க்கறதே?" என்று பணிவோடு கூறினார் பக்தர்.
ஒரு செகண்ட் அருள் நிறைந்த பார்வை பார்த்தார் பெரியவா. "விபீஷணன் ராமசந்த்ரமூர்த்தியை சரணாகதி பண்ணினான்ன்னு படிக்கறோம். வாயால "சரணாகதி" ன்னு சொன்னான். ஆனா, ராமனோட பாதங்களை இறுகக் கட்டிக்கலை. அப்பிடியிருந்தும் ராமன் ரொம்ப இறக்கப்பட்டு, விபீஷணனுக்கு அடைக்கலம் குடுத்தான். "இப்போ இந்த ராமாயணம் எதுக்கு?" சிஷ்யர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் வந்தது. "இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா! "உடல் வேறு ஆன்மா வேறு" என்பதை கண்கூடாக சிஷ்யர்களுக்கு நிரூபித்தார்.
ரத்த சுவைக்காக அவை அவருடைய பாதங்களில் ஊர்ந்ததையே ஒரு வ்யாஜமாகக் கொண்டு, "சரணாகதி" என்று ஏற்றுக் கொண்ட கருணை பெரியவாளைத் தவிர யாருக்கு வரும்? நம் மேல் ஒரு எறும்பு ஊறினால் கூட, அடுத்த செகண்ட் அது உருத் தெரியாமல் நசுங்கி விடும். நமக்கும் நல்லறிவை தர பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்.
No comments:
Post a Comment