Thursday, September 4, 2014

தாயிற் சிறந்த  தயாபரன்:





கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய இரண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள். பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம். ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவிடம் ஒரு கம்பிளியை குடுத்து "இதக் கொண்டு போய் பட்டுப் பாட்டிட்ட குடு" என்றார்.

அன்று நள்ளிரவு, சற்று முன்புதான் கண்ணயர்ந்த பெரியவா, பாலு அண்ணாவை எழுப்பி, "பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?" என்றார்.

தூக்கிவாரிப் போட்டது! ஆஹா! மறந்தே போய்விட்டோமே! " இல்லே பெரியவா......மறந்தே போயிட்டேன்"

"சரி.இப்போவே போயி அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவள்ட்ட குடுத்துட்டு வா"

இந்த நடுராத்ரியிலா? குளிரான குளிர்! எங்கே போய் பாட்டியை தேடுவது? "காலம்பற குடுத்துடறேனே"

தெய்வக் குழந்தை அடம் பிடித்தது. "இல்லே.....இப்பவே குடுத்தாகணும். ராத்ரிலதானே குளிர் ஜாஸ்தி?"

அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஸ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்து கம்பிளியை சேர்த்தார் பாலு அண்ணா. பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.

அதே பாலு அண்ணா ஒருநாள் சம்போட்டி என்ற ஊரில் உள்ள கோவிலின் திறந்த வெளியில் மார்கழி மாசக் குளிரில் சுருண்டு படுத்து, எப்படியோ உறங்கிப் போனார். மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு சால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். சக பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

நாலு நாள் கழித்து, பெரியவா "ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?" என்று கேட்டார்.

"தெரியலே பெரியவா.....வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு. நான் தூங்கிண்டிருந்தேன்" தன் ஊகத்தை சொன்னார்

பெரியவா ஜாடை பாஷையில் "அப்படி இல்லை" என்று காட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்! முகத்தில் திருட்டு சிரிப்பு!

"நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..."

தாயினும் சிறந்த தாயான உம்மாச்சி தாத்தா - இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.

No comments:

Post a Comment