Thursday, September 4, 2014

பெரியவா  சூட்டிய  நாமகரணம்:



பெரியவாளிடம் ரொம்ப ஆழ்ந்த பக்தி கொண்ட தம்பதிகள். பெரியவா அனுக்ரகத்தால் ரெட்டை குழந்தைகள் பிறந்தன. பெரியவாளே அக்குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று தீராத ஆவல். இருப்பதோ ஆந்த்ராவில் எங்கோ வடகோடியில் ! அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகளை அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து, இதோ, பெரியவாளின் திருவடி முன் போட்டாயிற்று. மாச வரும்படியோ ரொம்ப சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால், பெரியவாளிடம் இருந்த நம்பிக்கை, பக்தி, ப்ரேமை கடலளவு சொல்லவே முடியாதபடி இருந்தது. பெரியவாளிடம் பெயர் வைக்கச் சொல்லி, எப்படிக் கேட்பது?

பாதங்களின் கீழே குஞ்சுக்கைகளையும், கால்களையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த ரெட்டையை பார்த்தா பெரியவா. "என்ன பேரு?" மெய் சிலிர்த்தது தம்பதிக்கு! நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வந்துவிட்டார்.

"இன்னும் வெக்கலை, பெரியவாதான் எங்களுக்கு எல்லாமே! கர்காச்சார்யார் கிருஷ்ண பலராமனுக்கு பேர் வெச்ச மாதிரி, பெரியவாதான் எங்களோட குரு, அதுனால பெரியவாளே பேர் வெக்கணும்னு ரொம்ப நம்பிக்கையோட, ஆசையோட வந்திருக்கோம்", "அந்த பழக்கமெல்லாம் நின்னு போய் ரொம்ப நாளாறதே." சிரித்தார்.

நின்றுபோன சம்பிரதாயத்தை திரும்ப துவக்கினால், அது தொந்தரவாகவும் ஆகலாம். ஆனால், பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து இவ்வளவு நம்பிக்கையோடு வந்தவர்களை நிர்தாட்சிண்யமாக திருப்பி அனுப்பவும் மனஸ் ஒப்பவில்லை. பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் ! அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.

ஒரு பக்தர் ஸ்ரீமடத்துக்கு காணிக்கையாக ஒரு பசுமாட்டை கொண்டு வந்தார். பெரியவா சைகை பண்ணியதும், வித்யார்த்தி நாராயண சாஸ்த்ரி அந்தப் பசுவை பெரியவா எதிரில் நிறுத்தி, "இதுதான், காணிக்கையா சமர்பிக்கப்பட்ட பசு" என்ற அர்த்தம் தொனிக்க, ஒரே வார்த்தையில் "கோ" [பசு] என்றார். அதே வினாடி, ஒரு அம்மா கூஜாவில் பால் கொண்டு வந்திருந்தார். "கூஜாவில் பால் இருக்கு" என்று அர்த்தம் தொனிக்க "பால்" என்று விண்ணப்பித்தார். பெரியவா சிரித்துக் கொண்டே சிஷ்யரிடம் "ஏண்டா, சாஸ்த்ரிகளும், அந்த அம்மாவும் சொன்ன வார்த்தை ரெண்டையும் சேத்து சொல்லு" என்றார். "கோ.........பால்.....கோபால்" "ஆஹா! ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு! சரி........ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன நாமம் சொல்லுவா?" சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். "கோபாலா கோவிந்தா", "சபாஷ் ! கோவிந்தன் ! கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் ! என்ன இப்போ த்ருப்தியா ? சந்தோஷமா போயிட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ" ஆசிர்வதித்தார். இனி வேறென்ன வேண்டும்?

இந்த குழந்தைகள் கருவிலே திருவுடையவர்கள். ஆம். பிறந்து ஒரு பயனும் இல்லாமல், சத்சங்கம் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைந்துவிட்டு, கடைசி மூச்சு இழுக்கும் போது ஏதோ பூர்வ புண்ய பலன் இருந்து, பகவந்நாமம் சொல்லவோ, கேட்கவோ கிடைக்கப் பெற்றவர்களை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்! இதனால்தான் குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். அங்கே போனால், அது அழும், படுத்தும் என்று சாக்கு சொல்லாமல், குழந்தைகளின் யோகக்ஷேமத்துக்காக அழைத்துப் போகவேண்டும். வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.

No comments:

Post a Comment