தர்மவான்கள்:
பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வர்ஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?
மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.
“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.
ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால் ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு! “எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார். ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.
“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்ன்னு நெனைக்கிறார குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்.
ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.
No comments:
Post a Comment